சென்னைக்கு மாற்றப்பட்ட டெசோ தடம் புரண்டுவிட்டது


1985-ஆம் ஆண்டில் டெசோ என்கிற தமிழீழ ஆதரவு அமைப்பை உருவாக்கினார் கலைஞர் கருணாநிதி. வீரமணி மற்றும் நெடுமாறன் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்த அமைப்பில் அவர்களுக்கு அறியப்படுத்தாமலேயே அவ் அமைப்பை கலைத்தார் கலைஞர். தமிழீழ ஆதரவு நிலை இந்தியாவில் உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் செயற்படாமல் இருந்த டெசோ சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை அழித்துவிட்டதாக கூறிய பின்னர் மீண்டும் டேசோவை உயிர்ப்பித்தார் கலைஞர்.

ஈழம் பெறுவதே டேசோவின் கொள்கையென்று கொக்கரித்த கலைஞர் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் தனது வழமையான இரட்டை வேடத்தை அரங்கேற்றிவிட்டார். தனது பிறந்த தின வைபவத்தில் ஈழத்தை அடைந்த மறுகணமே தனது உயிர் பிரிந்தால் சிறந்ததென்று கூறி உலகத்தமிழினத்தின் ஆதரவைப் பெற முயன்ற கலைஞர், மீண்டும் தனது வழமையான நாடகத்தையே ஆட ஆரம்பித்துள்ளார்.

ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று விழுப்புரத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்ட டெசோ மாநாடு பின்னர் ஆகஸ்ட் 12-ஆம் நாளுக்கு பின்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  நடத்துவதாக திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது.  இப்படியாக தெளிவற்ற நிலையில் இயங்கும் அமைப்பு எவ்வாறு தமிழீழத்தை பெற்றுத்தரும் என்பதே அனைவர் மனைகளிலும் எழும் வினா.

தமிழின விரோதி சிவசங்கர் மேனன் சிறிலங்கா சென்று நாடு திரும்பியவுடன் விழுப்புரத்தில் 5-ஆம் தேதியன்று நடத்தப்படுவதாக இருந்த நிகழ்வு சென்னையில் 12-ஆம் நாளன்று நடத்தப்படுவதாக கலைஞரினால் அறிவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சரும், ஈழத் தமிழருக்கு தமிழீழம் கிடைத்துவிடக் கூடாதென்று கங்கணம் கட்டி நிற்கும் சிதம்பரம் திடீரென கலைஞரை சந்தித்த கையுடன் கலைஞரும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று தினந்தோறும் கடந்த சமீப மாதங்களாக கூறிவந்தவர் ஈழக் கோரிக்கையை பின் தள்ளிவைப்பதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கொலைகையே கலைஞரின் கொள்கை

தனித் தமிழீழம் கோரி தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை காங்கிரஸ் கட்சி ஆதரிக்காதென்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் சமீபத்தில் கூறினார். அவர் மேலும் கூறுகையில், “இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தமிழீழம் நிரந்தரத் தீர்வு அல்ல. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு அவசியத் தேவை என்பது அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் மருத்துவம்தான். அதைத்தான் மத்திய அரசு செய்கிறது" என்றார் ஞானதேசிகன். 

இறைமையுள்ள தனித் தமிழீழ தேசம் அமைவது தொடர்பாக இந்தியாவின் உள்துறை அமைச்சகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டதுடன், விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் உத்தரவை பிறப்பித்துள்ளது. இப்படியான நிலையில் தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை கைவிடுமாறு வலியுறுத்தியதாகவும், கட்டாயம் நடத்த வேண்டுமென்றால் தனித் தமிழீழத்துக்கு வலிமையாக குரல் கொடுக்காமல் மென்மையாக வெளிப்படுத்துமாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டதாகக் இந்தியப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத பரிதாப நிலையில் தனது இறுதிக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைஞர். மத்திய காங்கிரஸ் அரசின் கட்டளைகளை கலைஞர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் பல இன்னல்களை கலைஞர் குடும்பமும், அவருடைய அடிவருடிகளும் எதிர்கொள்வார்கள் என்கிற பயம் கலைஞரிடம் இருக்கிறது.  ஊழல் குற்றச்சாட்டுக்கள் போன்ற பல்வேறு சமுகத்தினால் ஏற்றுக்கொள்ள இயலாத செயல்களை செய்த காரணத்தினால் அவற்றினை மூடி மறைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கலைஞருக்கு அவசியம் தேவை. 

சோனியா காந்தி என்ன செய்ய வேண்டுமென்று கட்டளையிடுகிறாரோ அவற்றுக்கெல்லாம் பணிந்தே போகவேண்டிய நிலையில் இருக்கிறார் கலைஞர்.  மீறி செயற்பட்டால் கூண்டோடு சிறைசெல்ல வேண்டிய நிலைக்கு கலைஞருக்கும் அவருடைய ஆட்களுக்கும் நேரிடும். மீண்டும் ஆட்சியை பிடிக்கிறாரோ இல்லையோ அனைத்து குற்றச்சாட்டுக்களிலுமிருந்து விடுபட்டு இதுகாலம் வரை சேர்த்து வைத்துள்ள பல கோடி சொத்துக்களை தக்கவைத்துக் கொள்ளவே கலைஞர் அரும்பாடு பட்டுக்கொண்டு இருக்கிறார். பெரியாரை பல காலங்களுக்கு முன்னரே குழிதோண்டிப் புதைத்துவிட்டார் கலைஞர். தானே அண்ணாவின் அன்பான ஒரே தம்பியென்று இதுநாள் வரை கூறிவரும் கலைஞர் நிச்சயம் அண்ணாவின் கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடுகளை சோனியாவின் காலடியில் அடகு வைத்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒவ்வொரு செயலுக்கும் தகுந்த காரணம் வைத்திருக்கும் கலைஞர்

ஞானதேசிகன், சுப்ரமணிய சுவாமி மற்றும் மறைந்த வாழப்பாடி இராமமூர்த்தி போன்றவர்கள் விடுதலைப்புலிகளுக்கும்இ  தமிழீழத்துக்கும் எதிராக தொடர்ந்தும் வெளிப்படையாக குரல் கொடுத்ததுடன், தமிழ் மக்களின் எதிர்ப்புக்களை சந்தித்தே அரசியல் நடத்தினார்கள்.  கலைஞரோ இன்று ஒன்றைக் கூறிவிட்டு அதற்கு பலமான ஆதரவு கிடைத்துவிட்டால் உடனையே மென்மேலும் அதிகமாக கூறுவதும், எதிர்ப்பு வெளிவந்தால் கூறியதற்கு உடனையே காரணத்தைக் கண்டுபிடித்து தான் கூறியதற்கு வேறு காரணம் உள்ளதென்ற தொனியில் பேசுவதுமே கலைஞரின் வழக்கமாக இருந்து வருகிறது. 

அரசியல் என்பது “எதனைச் செய்ய எண்ணுகிறமோ அதனைக் கட்சிதமாக செய்து முடிப்பதே சிறந்த அரசியல் என்பது அரசியல் விஞ்ஜானத்தின் கருத்து. அதற்காக கட்சி மாறுவதும், கொள்கைகளை மாற்றுவதும், மக்களை விலைக்கி வாங்கி வாக்குகளை பெறுவதும் கட்சிதமாக வேலையை செய்து முடிப்பது என்பது பொருள் அல்ல.  கால நீரோட்டத்தின் நாடித் துடிப்புக்களை உள்வாங்கி அரசியல் செய்வதே சிறந்த அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சிறப்பு. அவ்வகையில், கலைஞரும் சிறந்த அரசியல்வாதி தான். தனது குடும்ப மற்றும் கட்சியின் அழிவை விரும்பாத கலைஞர் சோனியாவின் காலடியில் கிடக்கிறார். எத்தனை இலட்சம் தமிழர்கள் செத்தாலும் பரவாயில்லை, தனது இருப்பு எவ்விதத்திலும் அழிந்துவிடக் கூடாதென்பதில் சிறப்பாக செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.

கலைஞர் போன்ற புற்றுநோய்களை பாவப்பட்ட தமிழ்ச் சாதி ஐந்து தடவை முதலமைச்சராக்கி இந்தியாவின் பத்து பணக்கார்களுக்குள் இவருடைய குடும்பத்தினர் முன்னணியில் திகழ வழிவகுத்துது தமிழினம் செய்த பாவமே.  தனது பத்திரிகைகளில் வேலை பார்த்த அப்பாவி ஊழியர்களை சாகும்படி கட்டளையிட்டுவிட்டு, அவர்களுடைய சாவில் இன்னொரு தொலைக்காட்சியை ஆரம்பித்த புண்ணியவானே கலைஞர். நிச்சயமாக கலைஞர் சிறந்த அரசியல்வாதிதான். ஒரு சிறுபிள்ளைகூட அறிந்துகொள்ளக் கூடிய செயலை எட்டுக் கோடி தமிழர்கள் நம்பாதபடி நாடகத்தை நடத்தி மக்களை முட்டாள்கள் ஆக்கியவர் நிச்சயமாக சிறந்த அறிவாளிதான். 

கலைஞர் மட்டும் மேற்கு நாடுகளில் வாழ்ந்திருந்தால் சூரியனுக்கே விண்வெளி ஊடகத்தை வெற்றிகரமாக அனுப்பியிருப்பார். ஏன் பல கிரகங்களையே சொந்தமாக்கியிருப்பார். இப்படிப்பட்ட சாதனையாளர்களுக்கு நிச்சயம் ஆஸ்கார் விருது வழங்கிக் கவுரவிப்பதே சிறப்பாக அமையும்.  அதுவே ஆஸ்கார் விருதுக்கே பெருமையாக இருக்கும். எவ்வித மறதியும் இன்றி 89-வயதிலும் பிசுபிசுக்காத பேச்சுவலிமையும்,உடனேயே சிந்தித்து பதில் கூறும் வலிமையையும் கலைஞருக்கு இன்றும் இருப்பதே கலைஞரின் குடும்பத்தினர் செய்த பாக்கியமாக கருத வேண்டும். 

தனது குடும்பங்களின் வளர்ச்சிகளுக்காக பாடுபட்ட கலைஞர் தமிழினத்தை மனிதக் கேடயமாகவே இதுநாள் வரை வைத்திருந்தார். இருண்ட யுகத்தில் வாழ்ந்த மக்களுக்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சொன்னதையும், சொல்லாததையும் செய்தார். கலைஞரோ புறமுதுகில் குத்தும் வேலைகளேயே செய்தார். எழியவர்களின் வாழ்வுக்கு விளக்கேற்றப் போவதாக கூறிய கலைஞர் அவர்களுடைய இருண்ட வாழ்வில் வெளிச்சமேற்றுவதற்குப் பதில் அகண்டுவிரிந்த இருண்ட பாதாளத்துக்குள்ளேயே அவர்களை தள்ளினார் கலைஞர். அவருடைய ஈழ விடுதலைக் கனவும் அது போன்றதே. அடுத்த நூறு வருடங்களில்கூட வெளிச்சத்துக்கு வரமுடியாத அகண்ட நெடிய பாதாள குழிக்குள்ளேயே தள்ளும் வேலையில் இறங்கியுள்ளார் கலைஞர். யார் செய்த பாவமோ கலைஞர் போன்றவர்களுக்குப் பின்னால் இன்றும் தமிழர்களில் கணிசமானவர்கள் அணி திரளும் நிலையே நிலவுகிறது.
அனலை நிதிஸ் ச. குமாரன்
nithiskumaaran@yahoo.com
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment