என்றுமே மறக்க முடியாத ஜூலை 83


சிங்களவர் கலவரம் செய்வது புதிய ஒரு விடயம் அன்று. அன்று ஸ்ரீ லங்கா என்ற நாடு, இலங்கை என்று அழைக்கப்பட்ட காலம் தொட்டே  சிங்களவர்களின் கலவரம் நிலை கொண்டிருந்தது கண்கூடு. ஆரம்ப காலத்தில் பௌத்த மத வளர்ச்சியில் நாட்டம் கொண்ட பௌத்த மத தீவிரவாத பிக்குமார், சிங்கள வெறியையும் பௌத்த மத மேம்பாட்டையும் வளர்க்க தம்மாலான சகல முயற்சிகளையும் எடுத்தனர். அன்று பௌத்த மத வரலாற்றையும் சிங்கள  இனத்தின் ஆரம்பத்தையும் மஹா நாமா என்ற பௌத்த பிக்கு பாளி மொழியில் எழுதினார். அவர் எழுதிய வரலாற்று நூலே மஹாவம்சம் என்று அழைக்கப்படுகிறது. இந் நூல் ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டது. 


புத்த பிரானின் பிறப்பு நிர்வாண நிலை பற்றி எழுதிய இந்த நூலாசிரியர் பௌத்த மதம் பரவியது பற்றி எழுதும் போது  பொய் ,புனை சுருட்டு, கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். அன்றைய காலத்தில் புத்த பிரான் மூன்று முறை இலங்கைத் தீவுக்கு வந்தார் என்றும் எழுதியுள்ளார். மூடர்களாகவும் மிலேச்சர்களாகவும் வாழ்ந்த தமிழர்களை வென்று பௌத்த மதத்தை நிலைநாட்டினர் என்றும் பெருமையுடன்  குறிப்பிட்டுள்ளதனைக் காணமுடிகிறது. 

தமிழ் விரோதக் கொள்கைகளைப் பரப்பிய முதல் மனிதன் மஹா நாமாவேயாவார், இவரது மஹாவம்சமே எல்லாத் தமிழ் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆதார நூலாக அமைந்துள்ளது. 

இந்த நாடு புத்தபிரானால் ஆசிர் வாதிக்கப்பட்ட நாடு என்ற சிந்தாந்தம் மஹாவம்சத்தில் தான் முதலில் வித்திடப்பட்டது. அதையடுத்து துட்டகைமுனுவுக்கும் எல்லாள சிங்கன் என்ற அநுராதபுரத்திலிருந்து ஆண்ட தமிழ் மன்னனுக்குமிடையில் நடைபெற்ற யுத்தம் என்றும்  வர்ணிக்கப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கிடையிலான யுத்தம் இன விரோத யுத்தமாக வெற்றிகரமாக சித்திரிக்கப்படுகிறது. 

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்தோன்றிய சிங்கள அரசியல் வாதிகள் இந்த இனவாத பாதையிலேயே இனக் கலவரங்களை ஏற்படுத்தி தமிழர்களை அழித் தொழிக்க முற்பட்ட வரலாறே  1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்கள். 

இதில் மிகக் கொடியது. 1983 ஜூலை இனக் கலவரம். இக் கலவரம் நடைபெற்று 29  ஆண்டுகள்  கழிந்த நிலையிலும்  அந்தக் கொடூர நிகழ்வுகள் மக்கள் மனதைவிட்டு அகலவில்லை. 

தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழ் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் அழித்து திட்டமிட்ட குண்டர்களினால் ஆயுதப் படைகளின் துணையுடன் கொடூரத்தனமாக நடத்திய இனக் கலவரம். மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த நாடு  2000 இற்கும் மேற்பட்ட  தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த தீ எரிப்பிலும் வாகனங்களில் சென்ற தமிழர்களை இனங் கண்டு அடித்துக் கொல்லுவதற்கு ஆனந்தா கல்லூரி, மாணவர்கள் ஈடுபட்டது வெளிப்படையான காட்சி. 

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 13 இராணுவத்தினரை விடுதலைப் புலிகளினால் உயிர் இழக்க நேர்ந்த சம்பவத்தை காரணமாக வைத்துக் கொண்டு அரசினால் ஏற்கனவே திட்டமிட்ட இனக் கொலை அரங்கேற்றப்பட்டது. மக்கள் வதைக்க வதைக்க தீயீட்டுக் கொளுத்திய கோரக் காட்சியை நேரில் கண்டவர். ஆயிரக்கணக்கானோர். பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அகதிமுகாமிலும் ஏனைய பல அகதிகள் முகாமிலும் அகதிகளாக  தஞ்சமடைந்து அவலப்பட்ட காட்சியை நேரில் பார்த்ததோடு அகதிமுகாம் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அநாகரிமான முறையில் தாக்கப்பட்டு உடைமைகளையும் உறவுகளையும் இழந்து துயரத்தோடு தஞ்சம் புகுந்திருந்த 2000 இற்கும் மேற்பட்டோரை நேரில் கலந்துரையாடி திரட்டிய தகவல்களை அகதிகளின் சோக வரலாறு என்று ஒரு நூலாகக் லண்டனில் வெளியிட்டேன். அந் நூலில் இடம்பெற்ற உண்மையான  சம்பவமே எமது மக்கள் அரசியல் தஞ்சம் கோர ஆவணமாக  அமைந்தது. 

இனக் கலவரம் நடைபெற்று 25 ஆவது ஆண்டு நினைவாக நான் வெளியிட்ட ஆடூச்ஞிடு ஒதடூதூ 83  ஐணஞீடிஞுtட்ஞுtண்   ஜுலை 83 இனக் கலவரம் குற்றச்சாட்டுகள் என்ற பெயரில் ஆங்கிலம் தமிழ் ஆகிய மொழிகளில் 500 பக்கத்தில் வெளிவந்த நூலில் கறை படிந்த கறுப்பு ஜுலை இனக் கலவரத்தின் சோக வரலாற்றுகள் ஆதாரத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நூல் பிரித்தானியா கனடா, மலேசியா, ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில்  வெளியிடப்பட்டது. இலங்கையில் இந் நூல் இன்னமும் வெளியிடப்படவில்லை.  அதற்கான காரணங்களை சொல்லாமலே விளங்கிக் கொள்வீர்கள். 

இந்  நூலைப் படித்த பேராசிரியர் சுய. வீரபாண்டியன் வெளியிட்ட கருத்துகள்; 

1956 ஆம் ஆண்டு தொடங்கியே தமிழர்கள் மீதான ஒடுக்கு முறை அங்கு கட்டவிழ்த்து  விடப்பட்டுள்ள தெனினும் 1983 ஆம் ஆண்டு வன்முறையோடு எதனையும் ஒப்பிட முடியாது. ஈழ மக்களுக்கு நடந்த கொடுமைகளோடு மட்டுமன்றி உலககெங்கும் நடந்த கொடுமைகளோடு கூட அதனை ஒப்பிட  இயலாது. 

வெலிக்கடைச் சிறையில்  குட்டி மணிக்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதையை  நம்மால் முழுமையாகப்  படிக்க முடியவில்லை. என்னதான்  இனவெறி , மத வெறி இருந்த போதிலும் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் வயிற்றில் கத்தியைக் செருகும் காட்டுமிராண்டித்தனம் இன்று வரை நாம் கதைகளில் கூடப் படித்திராத நிகழ்ச்சி,கற்பனைக்கு எட்டாத அத்தனை சித்திரவதைகளும் ஈ ழ மக்களுக்கு நடந்தேறியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். 

சிவநேசச் செல்வன் முன்னாள் ஆசிரியர் தினக்குரல் . அவரது பார்வையில்; 

இனவாதத்தின் கோரத் தாண்டவத்தினை இந் நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் காண்கிறீர்கள். ஒவ்வொரு சம்பவமும் மீண்டும் இரத்தக் கொதிப்பை ஏற்படுத்துகிறது. சில சோக நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் போது அவற்றை மனதில்  இருந்து அகற்றுவது கடினமான காரியம் ஆகி விடுகிறது. 

ஸ்ரீ லங்கா வெலிக்கடைச் சிறைப் படுகொலையும் புத்தரின் காலடியில் வீரத் தமிழ் இளைஞர்களின்  செங்குருதி 1983  ஜுலையில் ஸ்ரீ லங்கா வில்  உள்ள வெலிக்கடைச் சிறைச் சாலையில் பூட்டப்பட்ட அறைகளில் ஈழ விடுதலைப் போராளிகள் கோழைத் தனமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிங்கள இனவாதப் படுகொலையின் மற்றொரு மைல் கல்லாகும். காட்டுமிராண்டித் தனமான இச் சம்பவம் நாகரிக  உலகில் சிங்கள மக்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளது.  புத்தபெருமான் போதித்த அன்பு, கருணை, கொல்லாமைக் கோட்பாடுகளுக்கு விரோதமான இச் செயலையிட்டு ஒவ்வொரு உண்மையான பௌத்தனும் வெட்கித் தலைகுனிய வேண்டும். சிங்கள  மக்களின் எல்லா மட்டங்களிலும் தமிழர் விரோத உணர்வு எவ்வளவு தூரத்திற்கு ஊட்டப்பட்டுள்ளது என்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியது. 

சுமார் 29  ஆண்டுகளுக்குப் பின்னரும் இதே போன்ற கொடுர கொலை வவுனியா  சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டிருந்த தமிழர் சிறைக் கைதிக்கு ஏற்பட்டிருக்கிறது. வவுனியா , நெளுக்குளத்தைச் சேர்ந்த நிமலரூபன்  கொலைக்கும் குட்டி மணி போன்ற 52 தமிழ்க் கைதிகள் 1983  இல் வெலிக் கடைச் சிறைச்சாலையில் கொலை செய்யப்பட்டதற்கும் வித்தியாசமே கிடையாது.  சிங்கள பௌத்த இனவாத அரசின் இனக் கொலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமாயின் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் வெற்றி பெற்று தமிழ்ப் பிரதேசத்தில் தமிழ் பேசும் மக்களின் ஆட்சி அமைய வேண்டும். அதன் மூலம் தமிழர்களின் சுய பாதுகாப்பை பெற்று தமிழ் பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் கௌரவத்துடனும் சுய கௌரவத்துடனும் வாழ வழிவகுக்கும்.


ஐ.தி.சம்பந்தன் 
நன்றி - தினக்குரல்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment