வடக்கில் படைகளைக் குறைக்க வேண்டும், நிலஅபகரிப்பை நிறுத்த வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த விவகாரம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்திருப்பது தான். வடக்கில் தேவைக்கும் அதிகமான படையினர் நிலை கொண்டுள்ளதாகவும், போர் முடிந்து விட்டதால் படையினரை அங்கிருந்து குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்படுவது அதிகமாகியுள்ளது. உள்நாட்டில் மட்டுமன்றி, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் போன்ற நாடுகளும் கூட இதற்கு ஆதரவாகவே குரல் கொடுக்கின்றன. இதன்காரணமாக இலங்கை அரசாங்கம் பெரிதும் குழம்பத் தொடங்கியுள்ளது.
வடக்கில் தேவைக்கும் அதிகமான படையினர் நிலை கொண்டுள்ளனர் என்றும், அங்கு நாட்டின் ஏனைய பகுதிகளைப் போன்றே இயல்புநிலை உருவாக்கப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டதற்காக பிரிட்டன் தூதுவர் ஜோன் ரன்கின் அரச தரப்பின் கடும் கண்டனங்களுக்கு உள்ளானார். உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று சிங்களத் தேசியவாதிகளிடம் இருந்து அழுத்தங்கள் எழுந்தன. அரசாங்கத்திலும் அந்தக் கருத்து வலுவாகவே காணப்பட்டது. ஆனால் அவர் மீது அரசாங்கம் பெரிதாக எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
முதலாவது - அந்தச் சர்ச்சை வெடித்த அடுத்த சில நாட்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ லண்டனுக்கு மேற்கொள்ளவிருந்த பயணம்.
இரண்டாவது – அடுத்த ஆண்டில் இலங்கையில் நடக்கப் போகும் கொமன்வெல்த் உச்சிமாநாடு. கொமன்வெல்த் மாநாட்டின் கதாநாயகனே பிரிட்டன் தான். கனடா இந்த மாநாட்டைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரித்துள்ள நிலையில், பிரிட்டனும் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து வலுவாக இருந்து வருகிறது. இந்தநிலையில், பிரிட்டன் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றினால், கதை கந்தலாகி விடும். இதற்காவே வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மூலம் நிலைமையைச் சமாளித்துக் கொண்டார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ. அதுமட்டுமன்றி, மகாராணியின் வைரவிழா நிகழ்வில் பங்கேற்க லண்டனுக்குப் புறப்படுவதற்கு முதல் நாள், விளையாட்டு நிகழ்வு ஒன்றில் பிரிட்டன் தூதுவரை தன்னருகே அமர்த்தி, அவருடன் பேசி விவகாரத்தை சுமுகமாக அமுக்கி விட்டார் ஜனாதிபதி. அந்த விவகாரம் பிரச்சினையாகாமல் தவிர்க்கப்பட்ட போதும், வடக்கில் படையினரைக் குறைக்க வேண்டும் என்ற பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் நிலைப்பாடு மட்டும் மாற்றம் அடையவில்லை. அதுபோலவே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் காணவில்லை.
வடக்கில் ஏற்கனவே படைகளை குறைத்து விட்டதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. அவ்வாறு கூறப்படும் புள்ளிவிபரங்களில் தான் ஏகப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. கடந்தவாரம் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, ஏசியன் ரிபியூனுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 2007இல் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, யாழ். குடாநாட்டில், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிசார் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் சற்றுக் குறைவான படையினர் நிலை கொண்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். தற்போது 15 ஆயிரம் இராணுவத்தினரே அங்கு நிலை கொண்டுள்ளதாகவும், கடற்படை, விமானப்படையினரையும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரம் ஆயுதப்படையினரே யாழ். குடாநாட்டில் நிலை கொண்டுள்ளதாகவும் ஒரு புள்ளிவிபரத்தை கூறியுள்ளார். அதேவேளை, யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவோ, குடாநாட்டில் 15,600 படையினரே நிலை கொண்டுள்ளதாக கணக்கு காட்டுகிறார். ஆனால், யாழ்.படைகளின் தலைமையகத்தினால் இயக்கப்படும் சிவில் இராணுவ இணைப்பு அலுவலகத்தின் இணையத்தில் யாழ்ப்பாணத்தில் 35 ஆயிரம் படையினர் நிலை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில், ஜெனிவாவில் ஐ.நா கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் வடக்கில் 60 வீத படையினர் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே, இராணுவப் பேச்சாளரின் புள்ளிவிபரம் வெளியான மறுநாள், கடந்த புதன்கிழமை இராணுவத் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கொடுத்த புள்ளிவிபரம் முற்றிலும் முரணானதாக இருந்தது. யாழ்.குடாநாட்டில் 10 ஆயிரம் படையினரே உள்ளதாக அவர் கணக்கு காட்டியுள்ளார். இப்படியாக இந்தப் படைக்குறைப்பு விவகாரத்தில் குழப்பமான – முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வெளியிட்டு அரசதரப்பு குழப்பி வருகிறது. இவை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால், அரசதரப்பு சொல்லும் எதுவுமே பொருத்தமான புள்ளிவிபரமாகத் தெரியவில்லை. அப்படியானால் இந்தப் படைக்குறைப்பு விவகாரத்தின் பின்னால் உள்ள உண்மையான நிலவரம் தான் என்ன என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கத் தரப்பிலுள்ளவர்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெளிவாக ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. அதாவது வடக்கு படைவிலக்கம் என்ற விவகாரத்தை யாழ்.குடாநாட்டுக்குள் மட்டுப்படுத்திச் சுட்டிக் காட்டும் உத்தியே அதுவாகும்.
வடக்கு என்பது வட மாகாணத்தைச் சுட்டுகிறதே தவிர, யாழ்ப்பாணக் குடாநாட்டை மட்டுமல்ல. ஆனால் அரசதரப்பு எப்போதுமே, வடக்குப் படைக்குறைப்பு பற்றி கூறும் கணக்குகள் எல்லாமே, யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குரியவை தான். போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவத்தின் 28 பற்றாலியன்களை வடக்கில் இருந்து வெளியேற்றி, கிழக்கு மற்றும் தெற்கில் நிறுத்தியுள்ளதாக கடந்தவாரம் தியத்தலாவவில் நடந்த செயலமர்வில் கூறியிருந்தார் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. இந்த பற்றாலியன்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து அகற்றப்பட்டவை தான். ஏனென்றால், 2007இல், அங்கு 50 ஆயிரம் படையினர் நிலை கொண்டிருந்ததாக இராணுவப் பேச்சாளர் கூறியிருந்தார். இதன்படி பார்க்கும்போது, வடக்கின் ஏனைய பகுதிகளில் படைக்குறைப்பு இடம்பெறவேயில்லை என்பது உறுதியாகிறது.
உண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ளதை விட, சனத்தொகை அடிப்படையில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சியில் தான் அதிக செறிவுடன் படையினர் நிலைகொண்டுள்ளனர். அங்குள்ள சனத்தொகையின் அடிப்படையில் இராணுவத்தினரின் விதிதாசாரத்தைக் கணக்கிட்டால், அது மலைப்பை ஏற்படுத்தும். உதாரணத்துக்கு, வெறும் 92 ஆயிரம் பேரைக் கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில், இராணுவத்தின் மூன்று டிவிசன்கள் நிலை கொண்டுள்ளன. ஒரு டிவிசனில் குறைந்தது 8 ஆயிரம் படையினர் என்று கணக்கிட்டால், மொத்தம் 24 ஆயிரம் படையினராவது அங்கு நிலைகொண்டுள்ளது உறுதியாகிறது. இதன்படி 4 பொதுமக்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற விகிதத்தில் படைச்செறிவு உள்ளது. வன்னிப் பெருநிலப்பரப்பின் பரந்துபட்ட புவியியல் அமைப்பு இந்தப் படைக்குவிப்பை பெரிதாக வெளியே காண்பிக்கவில்லை. அதேவேளை, யாழ்.குடாநாட்டின் குறைந்த நிலப்பரப்பு இதைப் பெரியளவில் காட்டுகிறது.
ஒட்டுமொத்த வடக்கின் படைக்குறைப்பே வலியுறுத்தப்படுகிறதேயன்றி, யாழ்.குடாநாட்டின் படைக்குறைப்பு தனித்து வலியுறுத்தப்படவில்லை. அத்துடன் வடக்கின், படைக்குறைப்பு பற்றிய புள்ளிவிபரங்களை வெளியிடும்போது, தனியே இராணுவம் பற்றிய கணக்குகளே சொல்லப்படுகின்றன. அதைவிட கடற்படையினரும் அங்கு ஆயிரக்கணக்கில் உள்ளனர். பாரிய கடற்படைத்தளங்களும் உள்ளன. பலாலியில் விமானப்படையின் பாரிய தளம் உள்ளது. விசேட அதிரடிப்படையும் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்த - ஆயுதப்படையினர் என்று தற்போது 18 ஆயிரம் பேர் தான் உள்ளனர் என்கிறார் இராணுவப் பேச்சாளர். இது நம்பற்குரிய கணக்காகத் தெரியவில்லை. ஏனென்றால், இராணுவத் தளபதி 10 ஆயிரம் படையினர் தான் உள்ளனர் என்கிறார். இப்படியான குழப்பமான புள்ளிவிபரங்களின் மூலம் அரசாங்கம் வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தங்களுக்கு எவ்வாறு தீர்வு காணப் போகிறதோ தெரியவில்லை. உண்மையான படைக்குறைப்பு என்பது, பொதுமக்களின் இயல்புவாழ்வில் இருந்து படையினரை விலகி நிற்கி வைப்பது தான். அதை அரசாங்கம் உடனடியாகச் செய்யப் போவதில்லை. ஏனென்றால், பொதுமக்களுடன் இணைந்ததான ஒரு பாதுகாப்புக் கட்டமைப்பைத் தான் அரசாங்கம் வடக்கில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால், புள்ளிவிபரங்களின் மூலம் அரசாங்கம் கொடுக்கும் தகவல்கள் எப்போதுமே குழப்பத்தை உண்டாக்கும் ஒன்றாகவே இருக்குமே தவிர, உண்மைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் கபில் இன்போ தமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment