நாளை ஜூலை மாதம் 23 ஆம் நாள். 1983 ஆம் ஆண்டில் இன்றையைப் போன்ற ஒரு நாளில் வடபகுதி எங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து தமிழ் இளைஞர்களை வேட்டையாடியும் கைது செய்தும் சித்திரவதைகளை மேற்கொண்டும் தமிழ் இளம் பெண்களை பாலியல் வக்கிரகங்களுக்கு உட்படுத்தியும் வெறியாட்டம் போட்டு வந்த இராணுவத்தினரைக் கட்டுப்படுத்தும் முகமாக திருநெல்வேலியில் வைத்து படையினரின் தொடரணி மீது விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டனர்.
1977 இல் ஆட்சிப்பீடமேறிய சில நாள்களிலேயே போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் எனச் சவால் விட்டு ஒருபெரும் இன அழிப்புக் கலவரத்துக்கு தார்மிகத் தலைமையேற்று வழிநடத்தி குருதி குடித்தும் தாகமடங்காத முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, 13 இராணுவத்தினரின் இறப்பைச் சரியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.
போரில் இறக்கும் படையினரின் சடலங்களை வீடுகளுக்கு அனுப்புவதே வழமை. ஆனால் 13 படையினரின் சடலங்களையும் கொழும்பு கனத்தை மயானத்தில் எரிக்க முடிவெடுக்கப்படுகிறது. தொலைதூரக் கிராமங்களிலிருந்து படையினரின் உறவினர்களும் ஊரவர்களும் கொழும்புக்குக் கொண்டு வரப்படுகின்றனர். நாட்டின் பல பாகங்களிலுமுள்ள காடையர்களும் கொழும்பில் குவிக்கப்படுகின்றனர்.
பெற்றோல் கொள்கலன்களும் கைக்குண்டுகளும் வாள்கள் இரும்புக் கம்பிகளும் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. பிரேதங்கள் எரிந்து முடியுமுன்பே பொறள்ளவில் உள்ள தமிழ்க் கடைகளும் வீடுகளும் எரியத் தொடங்குகின்றன. தமிழர் என்று காணப்படும் அனைவரும் வெட்டியும் அடித்தும் எரித்தும் கொல்லப்படுகின்றனர். கொழும்பு வீடுகள் தமிழர் இரத்தத்தில் செந்நிற நதிகளாகின்றன. கழிவு வாய்க்கால்களில் தமிழரின் தலைகள், கைகள், கால்கள் மிதந்து போகின்றன. கொழும்பில் ஆரம்பித்த இந்தக் கொலை வெறியாட்டம் தென்னிலங்கை முழுவதும் பரவி தமிழரை விரட்டி விரட்டிக் கொன்று குவிக்கிறது.
அதேவேளையில் கொழும்பு வெலிக்கடைச் சிறைக்கு ஏற்கனவே நன்கு திட்டமிடப்பட்ட கொலைவெறியாட்டம் அரங்கேற்றப்படுகிறது. குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 கைதிகள் அடித்தும் வெட்டியும் கோரமான முறையில் சிங்களக் கைதிகளால் சிறைக்காவலரின் உதவியுடன் கொல்லப்படுகின்றனர்.
தனக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, தான் இறந்த பின்பு தனது கண்களை ஒரு தமிழனுக்குக் கொடுக்க வேண்டும் எனவும் தான் அதன் மூலம் மலரப்போகும் தமிழீழத்தைப் பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டி சிறைச்சாலை புத்தர் சிலையின் முன் வீசப்படுகிறது. அவர்களின் ஆணுறுப்புகள் வெட்டியெறியப்படுகின்றன. இறந்த உடல்கள்கூட சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்றன.
கொலைவெறியாட்டம் அத்துடன் நிற்கவில்லை. 27 ஆம் நாள் மீண்டும் 22 தமிழ் கைதிகள் கோரமாகக் கொல்லப்படுகின்றனர். பூட்டிய இரும்புக் கதவுகளுக்குப் பின்னால் அரசின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது சிங்களக் கைதிகளாலும் சிறைக் காவலர்களாலும் நடத்தப்பட்ட பெருங்கொலை வெறியாட்டம் உலக அரங்கில் இலங்கை அரசின் அநாகரிக இன அழிப்பு நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி அதற்காக இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளோ அல்லது அதிகார பீடங்களோ மனம் வருந்தவுமில்லை. மன்னிப்புக் கேட்கவுமில்லை. ஆனால் அதேவிதமான அதிலும் மோசமான இனஅழிப்பு நடவடிக்கைகளைப் பெருமையுடன் தொடர்ந்து வருகின்றனர். தங்கள் குரூரமான அசிங்கமான இனப்படுகொலை முகங்களை அழகானவை எனச் சாதித்து வருகின்றனர்.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு எவ்விதத்திலும் குறைவுபடாத விதத்தில் 2012 ஜூலை மாதத்திலும் பூட்டிய சிறைக்கதவுகளின் பின்னால் தமிழ்க் கைதிகள் மீதான ஓர் இனப்படுகொலைத் தாண்டவத்தை அரங்கேற்றி தாமே உலகின் உயர்ந்த மனிதாபிமான விரோதிகள் என உலகின் முன் பிரகடனம் செய்துள்ளனர் இலங்கைச் சிறை அதிகாரிகள்.
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் எவ்வித காரணமும் இன்றி வேறு சிறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து அங்குள்ள 30 தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அதையடுத்து மூன்று சிறைச்சாலை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் எனச் சிறை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. அதில் எவ்வளவுதூரம் உண்மை உண்டு என்பது சந்தேகமே.
ஏனெனில் அங்கு என்ன நடக்கிறது என்பதை சிறைச்சாலை அதிகாரிகள் சொல்வதிலிருந்து தான் அறிய வேண்டும். உள்ளே நடப்பவற்றை அறிய வேறு எந்த வழியும் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி பணயக் கைதிகளை மீட்பது என்ற போர்வையில் சிறை அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கைதிகள் மேல் மிருகத்தனமான தாக்குதலை நடத்தி அவர்களை அனுராதபுரம் சிறைக்குக் கொண்டு சென்றனர். பின்பு அவர்கள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டனர் என்று தகவல்கள் வெளிவந்தன.
தாக்குதலுக்கு உட்பட்ட நிமலரூபன் என்ற கைதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இறந்திருந்தார். இன்னுமொரு கைதி டிலக்சன் இன்னமும் கோமா நிலையில் உள்ளார். நிமலரூபனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டவில்லை. கோமா நிலையில் உள்ள கைதியையும் பார்வையிடப் பிறர் அனுமதிக்கப்படவில்லை. ஏனைய கைதிகளும் படுகாயங்களுடன் மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதாவது 1983 ஆடியில் அரங்கேற்றப்பட்ட ஒரு சிறைச்சாலை இனப்படுகொலை 2012 ஜூன் கடைசியில் தொடக்கப்பட்டு ஜூலையில் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிட்டுக் கொல்லப்படும் கைதிகளை உறவினரிடம் ஒப்படைப்பதில்லை.
சிறை மயானத்திலேயே புதைப்பதுண்டு. இலங்கையில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலம் தொட்டு இப்படி ஒரு மரபு உண்டு. ஆனால் தற்சமயம் உள்ள ஆட்சியாளர்களோ எந்தவொரு தண்டனையும் எந்தவொரு நீதிமன்றத்தாலும் விதிக்கப்படாதவர்களைத் தமது விருப்பப்படி கொன்றுவிட்டு சிறை மயானத்திலேயே புதைக்கும் புதிய ஜனநாயக வழியைக்கைக்கொள்ள முயற்சிக்கின்றது.
அதாவது தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்படும்போது சட்டம், நீதி, மரபு என அனைத்துமே புறமொதுக்கப்படுகின்றன. மனித உரிமை மீறல் நிர்வாணமாக நின்று கைகொட்டிச் சிரிக்கிறது. 1983 இல் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த சிறைச்சாலை இனப்படுகொலை மரபு 2012 ஜூலையில்தான் மீண்டும் பின்பற்றப்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. இடையில்கூட இம்மரபு மறக்கப்படாமல் பின்பற்றப்பட்டு வருகிறது.
மறக்கப்படமுடியாத சிறைப்படுகொலைகளில் "பிந்துலுவௌ' இளைஞர் புனர்வாழ்வு முகாமில் இடம்பெற்ற படுகொலைகளும் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தவர்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் விசாரணை என்ற பேரில் கொடிய சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டும் பின் அவர்கள் மீது வழக்குகள் தொடுக்க எவ்வித ஆதாரமுமற்ற நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்வதற்காக பிந்துனுவௌ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
ஒருநாள் இரவு அந்த முகாமுக்குள் கத்தி, பொல்லு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் புகுந்த சிங்களக் காடையர்கள் சிறைச்சாலை அதிகாரிகளுடன் இணைந்து பெரும் கொலை வெறித் தாண்டவம் நடத்தினர். அந்த வெறியாட்டத்தில் 24 இளைஞர்கள் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் பல இளைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மனித உரிமை நிறுவனங்களின் தொடர்ச்சியான கண்டனங்களை அடுத்து சிலர் கைது செய்து விசாரிக்கப்பட்டு அவர்கள் மேல் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆசிரியர் உட்பட மூவருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
ஆனால் மேன்முறையீட்டில் இவர்கள் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இன்றுவரை சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவுமில்லை தண்டிக்கப்படவுமில்லை. அக்கோவைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
இவைமட்டுமல்ல, உயர்ந்த மதில்களையும் பெரும் இரும்புக் கதவுகளையும் கொண்ட சமூகத்திலிருந்து முற்றாகவே பிரிக்கப்பட்ட இலங்கைச் சிறைக் கூடங்களில் தமிழ்க் கைதிகளுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளில் வெளிவந்தவை ஏராளம். வெளிவராதவை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
வெலிக்கடை, மகஸீன், களுத்துறை, பூசா, அனுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு போன்ற சிறைக்கூடங்களில் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டிக்கவோ அல்லது தம்மை நியாயபூர்வமாக நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கும் படியோ அல்லது தம்மை விடுவிக்கும்படியோ கோரி உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்துவதுண்டு.
அதற்கு எவ்வித நியாயபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் விடுவதும் பல நாள் கழிந்த பின்பு அவர்களை அடித்து நொருக்கி மருத்துவமனையில் போட்டுவிட்டு அவர்களிடம் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாகச் செய்தி வெளியிடுவது சிறைச்சாலைகளின் வழமையான நிகழ்ச்சி நிரலாகும்.
ஒரு சிறைச்சாலைக்கு ஒரு கைதி இரண்டு விதங்களில் அனுப்பப்படுகின்றான். ஒன்று விசாரணை முடியும்வரை அவன் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள விளக்கமறியல் கைதி. மற்றது ஒருவன் குற்றம் காணப்பட்டு குறிப்பிட்ட தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் தண்டனைக் கைதி.
ஒரு விளக்கமறியல் கைதியை அடிப்பதோ கொல்வதோ, நீதிமன்றத்தின் பொறுப்பில் இருக்கும் ஒருவர் மீது கை வைத்து நீதிமன்ற அதிகாரத்தை உதாசீனம் செய்வதாகும். தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதிக்கு நீதிமன்றத் தண்டனையை விட வேறு தண்டனை வழங்க சிறைச்சாலைக்கு அதிகாரம் இல்லை.
எனவே கைதிகள் சிறைச்சாலையில் கொல்லப்படுகின்றார்கள், அடித்து நொருக்கப்படுகிறார்கள் என்றால் அங்கு நீதிமன்றம் உதாசீனம் செய்யப்படுகிறது. அப்படியான நிலையில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக ஏன் சிறைச்சாலை அதிகாரிகள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.இப்படியான நடவடிக்கைகள் இயல்பாகவே ஜனநாயகம் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட செய்தியை பிரகடனம் செய்கின்றனவல்லவா?
இயற்கையாக வருடமொருமுறைதான் ஆடிமாதம் வரும். இலங்கைச் சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் படுகொலை செய்யப்படும் விடயத்தில் ஆடிகள் அடிக்கடி வருகின்றன. இன அழிப்பு மேலோங்கி நிற்கும் வரை இன்னும் இன்னும் வரும். நீதியும் சட்டமும் நீண்ட துயிலில் ஆழ்ந்துவிடும்.
நன்றி- உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment