வவுனியா சிறையில் வைத்துக் கொல்லப்பட்ட வவுனியா நெலுக்குளத்தைச் சேர்ந்த நிமலரூபனின் பெயரை உச்சரிக்கும் போது ஊடகவியலாளர் நிர்மலராஜனின் நினைவும் கூடவே தொடர்கிறது. பெயர்களுக்குள்ள ஒற்றுமையையும் தாண்டி கொல்லப்பட்ட சூழலில் உள்ள ஒற்றுமை மீள்நினைவுக்குட்படுத்துதற்குரியது.
இன்னமுமாக 1986 ம் ஆண்டு காலப் பகுதிகளில் திருக்கோணமலைப் பிரதேசத்தில் அமைந்த மூதூர் நகரில் மாபெரும் சமாதான கூட்டமொன்றை பாதுகாப்புப் படையினர் தமது பாசறையினுள் ஒழுங்குபடுத்தி இருந்தனர். இதற்கான அழைப்பை பலபகுதிகளில் இருந்த தமிழர்களுக்கும் விடுத்திருந்த போதும் நம்பிக்கையீனத்தால் பலர் சமூகமளிக்கவில்லை.
இருப்பினும் சம்பூரைச் சேர்ந்த அதிபர் குழந்தைவேலு ஒரு விசப்பரீட்சையாகக் கருதி கலந்துகொண்டிருந்தார். ஆனால் அவர் இன்றுவரை திரும்பவில்லை. அவரது மனைவியும் குடும்பமும் பாதுகாப்புப் படையினரின் முகாம் வாசலில் நின்று ஓலமிட்ட காட்சி கண்ணீரோடு இன்றுவரை நினைக்கப்பட வேண்டியது.
அதே காலப்பகுதியில் சம்பூரைச் சேர்ந்த செல்லக்குட்டி அதிபர்(புண்ணியமூர்த்தி), கங்குவேலியைச் சேர்ந்த ப.நோ.கூ. சங்க முகாமையாளர் ஜீவரத்தினம், இ.போ.ச ஊழியர் மகாலிங்கம், யாழ். காரைநகரை சேர்ந்த இ.போ.ச (மூதூர்)பொறியிலாளர் பரமகுரு, சம்பூரைச் சேர்ந்த முதற் பொறியியலாளர் விநாயகமூர்த்தி, மணல்ச்சேனையச் சேர்ந்த அதிபர் துரைநாயகம், மூதூர் வைத்தியசாலையைச் சேர்ந்த ரவீந்திரன் போன்ற பல தகுதிவாய்ந்த அரச ஊழியர்கள் நடுத்தெருவில் வைத்து பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் பலர் அறிய படையினரால் கடத்திச் செல்லப் பட்டு கொலை செய்யப்பட்டதும் குறித்துவைக்கப்படவேண்டிய சில குறிப்புகள்.
ஈழத்திலே தமிழருக்கெதிரான முழு அளவிலான வன்முறை கட்டவிழ்ப்பு பாதுகாப்புப் படையினராலும், பாதுகாப்புப் படையினரின் பாசறைக்குள்ளும் நடைபெற்றதென்பது ஒரு வரலாறு. போகம்பர சிறைச்சாலை, மகசின் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, பிந்துனதேனிய சிறைச்சாலைகளில் நடந்த தமிழர்களுக்கெதிரான படுகொலைகள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது.
உலக வரலாற்றில் ஒரு விசித்திரம் என்னவென்றால் சட்டத்தையும், நீதியையும் கொண்டு பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புப் படையினர் இவற்றை மதிக்காமல் சட்டத்தின் பாதுகாவலர்களான அவர்களே இந்த ‘கடப்பளித்தனத்தை’ புரிவதாகும். இலங்கைத் தமிழர் இன்றுவரை பயப்படுவது இலங்கைப் பாதுகாப்புப் படையிருக்குத் தான் என்பதை சர்வதேச சமூகம் உணர்தல் வேண்டும்.
இந்த மணித்துளி வரலாற்றுக் குறிப்புகள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு புதியதல்ல. தற்பொழுது தலைவர் சம்பந்தணினால் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட நிமலரூபனின் உடலம் கிடைப்பதற்கு நியாயம் அரிது. இருப்பினும் பாராட்டுதற்குரியது. அதேவேளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதென்பது நகைப்பிற்குரியது.
ஏனெனில் இந்த கொடூர மரணத்தை எந்த தாமதமுமின்றி இலங்கையில் செத்துவிட்ட நீதிக்கெதிராக ஒரு கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். இன்னமும் காலம் போகவில்லை. தங்கள் உறவுகளை இழந்து தனித்தனி குடும்பங்களாக முகாமுக்கு முன்னால் நின்று ஓலமிட்ட வரலாறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நிமலரூபன் கொல்லப்பட்ட சிறை முகாமுக்கு முன்னால் தமிழ்தேசியக் கூட்டமைப்பு உடனடியாக ஏற்பாடு செய்தல் வேண்டும்.
தசக்கிரீவன்
0 கருத்துரைகள் :
Post a Comment