தமிழ் ஈழம் இன்றைக்கே வேண்டும் அதற்காக ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று சொன்னால் தமிழர்கள் அழிவுக்குக் காரணமாக இருக்கிறார்கள் என்று சொல்வார்கள், சிந்தித்துச் செயற்படலாம் என்று சொன்னால் ஆகா பார்த்தீர்களா, தமிழ் ஈழக் கொள்கையை விட்டு விட்டார் என்று சொல்வார்கள். இலங்கைப் பிரச்சினை “ ரெசோ” மாநாடு தனி ஈழ விவகாரத்தில் “ புலி வாலைப் பிடித்த கதையாய் விட்டு விலக முடியாமல் தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்த வேதனை இது.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. தமிழர்களை காக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடாத நிலையில் இப்போது எதற்காக“ ரெசோ” மாநாடு நடத்துகிறார் என்று ஈழ ஆதரவுக் கட்சிகள், தமிழர் அமைப்புக்கள் ஓரணியில் நின்று எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றன. மறுபுறம் தனி ஈழம் , பிரிவினை குறித்துப் பேசினால் என்ற மத்திய அரசின் எச்சரிக்கையால் “ ரெசோ மாநாட்டில் தீர்மானம் கூடப் போடமாட்டோம் என்பதோடு தமிழ் ஈழ ஆதரவு அமைப்பின் (ரெசோ) மாநாட்டை “ இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை மாநாடு “ என்ற பெயர் மாற்ற வேண்டிய கட்டாய நிலை .
இந்த நிலையில் தான் தி.மு.க. தலைவர் “ நான் என்ன செய்வேன்” என்ற வேதனையை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். “குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போல, “ரெசோ” மாநாட்டை நடத்தியே தீர வேண்டும் எனக் கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார் கருணாநிதி. மாநாட்டு வரவேற்புக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ராதா கிருஷ்ணன், வட மாநில தலைவர்களான சரத்பவார், பருக் அப்துல்லா, மம்தா, சரத் யாதவ் எனப் பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தனி ஈழம் விவகாரத்தில் கருணாநிதியின் திடீர் மனமாற்றம் அன்பழகன் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகளுக்கும் ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆகியோருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் அழுத்தம் காரணமாகவே “ தமிழ் ஈழம் இதுவரை எனது நிறைவேறாத கனவு என்று நான் அன்று சொன்னதை எப்போதும் சொல்வேன். இப்போதும் சொல்கிறேன்” என்ற அடுத்த அறிக்கையை வெளியிட்டதாகக் கூறுகிறது தி.மு.க. வட்டாரம். கருணாநிதியின் பிடிவாதத்தின் விளைவாக மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டிய பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விட்டதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் மத்தியில் புலம்பல் கேட்கத் தொடங்கியுள்ளது. மாயண்ணன் வர்றேன்னாரு.. மாப்பிளை மச்சக்காளை வர்றேன்னாரு.. என்று வட மாநிலத் தலைவர்கள், இலங்கை எம்.பி.க்கள் என “ரெசோ” (?) மாநாட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களின் பட்டியலை கருணாநிதி வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே, இந்த மாநாட்டிற்கு எதிராக கச்சை கட்டிக் கொண்டு நிற்கும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள், வைகோ போன்றவர்கள் இப்போது பட்டியலில் உள்ளவர்களையெல்லாம் மாநாட்டைப் புறக்கணிக்குமாறு வற்புறுத்தத் தொடங்கியுள்ளதால் தி.மு.க. தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. கருணாநிதி அறிவித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள இலங்கை எம். பி.க்கள் சம்பந்தன், மாநாட்டிற்குக் கால அவகாசம் இருக்கின்றது அதில் கலந்து கொள்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். என்று தெரிவித்துள்ளது. அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.
மாநாட்டு வரவேற்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் உள்ள தமிழர் அமைப்புகளை அணுகியபோது அவர்களுக்குக் கிடைத்த “ வரவேற்பு” வெளியில் சொல்ல முடியாததாக இருந்ததாகக் கூறுகின்றனர். விபரம் அறிந்தவர்கள் என்ன மாநாடு என்று தெரியாமல் ஒப்புக் கொண்ட வடமாநிலத் தலைவர்களையும் , பார்ப்போம், யோசிப்போம் என்று சொன்னவர்களையும் பட்டியலாக வெளியிட்டு விட்டு தற்போது அவர்களை அழைத்து வருவதற்காக தவியாய்த் தவிக்கின்றது என்கின்றனர். தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சியினர் மாநாடு நெருங்க நெருங்க அடுத்தடுத்து நடக்கும் காட்சிகள் திருப்பங்களையும், திகைப்பையும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புத் தொடர்கிறது.
“ ரெசோ” மாநாட்டு விவகாரத்தில் மத்திய அரசே நேரடியாக களமிறங்கிய நிலையில் நடக்கும் மோதலை வேடிக்கை பார்க்கலாம் என்று நினைக்கிறது அ.தி.மு.க. தலைமை, மாநாட்டுக்கு தடை விதித்து அதன் மூலம் தி.மு.க அனுதாபம் தேடிக் கொள்ள வாய்ப்புத் தந்துவிடக் கூடாது என்று எண்ணும் அ.திமு.க. அமைதி காக்கிறது. அதே நேரத்தில் மாநாட்டில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகப் பதிவு செய்து தேவைப்படும் நடவடிக்கைகளை முடக்கி விடவும் திட்டமிட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment