சமவுடமை கூட்டணியானது தமிழ் மக்கள் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு ஆதரவளிக்கின்றது. "சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் அடக்கியாளப்படுகின்றனர் என்பதை சமவுடமை கூட்டணியானது இனங்கண்டுள்ளது. இவ்வாறு அடக்கப்பட்டு வாழும் தமிழ் மக்கள் அவர்களுக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்வதில் சமவுடமை கூட்டணியானது தனது ஆதரவை வழங்குகின்றது" என இதன் தேசிய கருத்தரங்கில் எடுக்கப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் மக்கள் ஐக்கிய சிறிலங்காவுக்குள் வாழ விரும்புகிறார்களா? அல்லது சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்று தமிழர்கள் தமது பாரம்பரிய வாழிடங்களான நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் தமக்கான சுதந்திர தமிழர் தேசமொன்றை உருவாக்க விரும்புகின்றார்களா? அல்லது இரண்டுமில்லாது நடுநிலையான இணைப்பாட்சி நிர்வாகம் போன்ற வேறுவகையான தன்னாட்சி உரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றார்களா? இவற்றில் எத்தெரிவையும் தமிழ் மக்கள் தாமாகவே தெரிவுசெய்வதற்கான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையாகும்".
"சிறிலங்காவானது தொடர்ந்தும் தனிநாடாக இருக்கலாம் அல்லது தமிழர் பிரதேசங்கள் பிரிந்து செல்லலாம். ஆனால் எதுஎவ்வாறிருந்தாலும், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் தமிழர்கள், முஸ்லீம்கள் மற்றும் சிங்களப் பிரதேசங்களில் வாழும் சிறுபான்மையினரின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இதேபோன்று தமிழ் பிரதேசங்களில் வாழும் முஸ்லீம் மற்றும் சிங்களவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்"
இவ்வாறான சிறுபான்மையினரின் அரசியல், மத, மொழி சார் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என சமவுடமை கூட்டணி கோரிக்கை விடுக்கின்றது. தமிழ் மக்கள் தாம் வாழும் சிறிலங்காத் தீவிலிருந்து பிரிந்து சென்று அவர்களுக்கான சொந்த நாடொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு சமவுடமை கூட்டணியானது, ரஷ்யப் புரட்சியின் போது கைக்கொள்ளப்பட்ட லெனின் கோட்பாட்டை ஒத்த ஒரு ஆதரவை வழங்கி நிற்கின்றோம்.
பல்வேறு தேசியங்களைச் சேர்ந்தவர்கள் இணைப்பாட்சி நிர்வாகத்தின் கீழ் ஒன்றாக வாழ்வதற்குரிய நிலைப்பாட்டை லெனின் உருவாக்கியிருந்தார். ரஷ்யப் புரட்சி முடிந்ததன் பின்னர், ரஸ்யப் பேரரசின் ஒருபகுதியாக காணப்பட்ட சமவுடமை சோவியத் குடியரசின் கீழ் பல்வேறு தேசியங்களைச் சேர்ந்த மக்களும் இணைந்து கொண்டனர்.
இதேபோன்று சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு இணைப்பாட்சி நிர்வாக கட்டமைப்பின் கீழ் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
தாம் வாழ்வதற்கான தெரிவை தமிழ் மக்கள் மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியாவில் வாழும் சமவுடமைவாதிகள் பல்வேறு ஆண்டுகளாக தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என ஆதரித்து தமது பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1983களில் சமவுடமை தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக செயற்பட்டேன். இது பின்னர் ஜனநாயக சமவுடமை கட்சி எனப் பெயர் மாற்றப்பட்டது. 1983ல் சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகளை நாம் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தோம். இதற்காக விக்ரோரியா இலங்கை தமிழ் சங்கத்துடன் இணைந்து நாம் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டோம்.
2001ல் சமவுடமை கூட்டணி உருவாக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது செயற்பாடுகளும் தொடரப்பட்டன. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு பரப்புரைகளை மெற்கொண்டுள்ளோம். இதில் green Left Weekly என்கின்ற செயற்பாடும் உள்ளடங்குகின்றது. அவுஸ்திரேலிய தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளோம். அத்துடன் தமிழ் செயற்பாட்டாளர்களை குறிவைத்து அமுல்படுத்தப்பட்டுள்ள 'பயங்கரவாத எதிர்ப்புச்' சட்டங்களையும் நாம் எதிர்த்து நிற்கின்றோம்.
1950 மற்றும் 60களில் சிறிலங்காவில் வாழ்ந்த தமிழ் மக்கள் தமக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்டங்களை அமைதி வழிமுறையில் எதிர்த்து நின்றனர். அதாவது 1956ல் உருவாக்கப்பட் சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழி என்கின்ற சட்டம் மற்றும் கல்வி, அரசாங்க தொழில் வாய்ப்புக்களில் தமிழ் மக்களைப் பாரட்சப்படுத்தி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் போன்றவற்றை எதிர்த்து தமிழர்கள் அமைதி வழிமுறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
இவ்வாறு தமிழ் மக்களால் அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை சிறிலங்கா இராணுவத்தினரும் காவற்துறையினரும் வன்முறைகள் மூலம் எதிர்த்து நின்றனர். அத்துடன் அரசியல்வாதிகள் மற்றும் பௌத்த பிக்குகளால் ஆதரவளிக்கப்பட்ட சிங்களக் காடையர்கள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டனர்.
1956 தொடக்கம் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. 1983 கறுப்பு யூலை இனக்கலவரத்தின் போது, 3000 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறான விளைவுகளால், பெரும்பாலான தமிழ் மக்கள் தனிநாடு வேண்டுமென தீர்மானித்தனர்.
மே 1976, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது தனித் தமிழ் தாய்நாடு கோரி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
யூலை 1977, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியானது சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டதுடன், தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட போது, தமிழர் பிரதேசங்களில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது.
அமைதி வழிமுறையிலான ஆர்ப்பாட்டங்களும், தேர்தல் பரப்புரைகளும் பயனற்றது எனக் கருதிய தமிழ் இளையோர் குழு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. இது தமிழ் தாய்நாட்டை சட்டரீதியற்ற முறையில் பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவ் ஆயுதப் போராட்டத்துக்காக பல்வேறு தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மிகப் பலம் பொருந்திய அமைப்பாக காணப்பட்டது.
விடுதலைப் புலிகள் ஆயுதம் தூக்கிப் போராடியது பிழை என நான் கூறவில்லை. ஆனால் இரக்கமற்ற சிறிலங்கா அரசுக்கு எதிராக புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட யுத்த முறைமை நேர்மையற்றதாக காணப்பட்டது. இது முக்கிய சில தரப்புக்களை ஓரங்கட்ட வழிகோலியது. சிங்கள மக்களுக்கு எதிராக புலிகள் அமைப்பின் சில இராணுவ நடவடிக்கைகள் அமைந்திருந்தன. சில வன்முறைகள் ஏனைய தமிழ்க் குழுக்களுக்கு எதிராகவும், வேறு சில முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட இச்சந்தர்ப்பத்தை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
எவ்வாறெனினும், சிறிலங்காவில் மோதல் ஏற்படுவதற்கான மிகப் பிரதான பங்காளியாக சிறிலங்கா அரசே உள்ளது. இதன் இனத்துவேச கொள்கைகள் யுத்தம் ஏற்பட வழிவகுத்தன. சிறிலங்கா அரசின் இராணுவப் படைகள் தமிழ்ப் பொதுமக்கள் மீது பல்வேறு இனப்படுகொலைகளை மேற்கொண்டன.
எண்ணுக்கணக்கற்ற குறிப்பாக பல பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பாலான தமிழ் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் துரத்தப்பட்டனர். இந்த யுத்தமானது 30 ஆண்டுகளாக தொடர்ந்தது. நீண்ட காலமாக விடுதலைப் புலிகள் சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களை தமது ஆளுகையின் கீழ் வைத்திருந்தனர். இங்கு புலிகளின் நிழல் அரசாங்கம் செயற்பட்டது. பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டன. 2002ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. தமிழர் சுய நிர்ணய உரிமையை நோக்கி முன்னெடுக்கப்படும் எந்தவொரு நகர்வுகளையும் சிறிலங்கா பேரினவாதிகள் எதிர்த்து நின்றனர்.
உண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தின் கை யுத்தத்தில் ஓங்கியிருந்தது. 2009 மே, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து இடங்களும் சிறிலங்கா இராணுவத்தால் கைப்பற்றப்பட்டன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அகப்பட்டுக் கொண்ட தமிழ் பொதுமக்கள் மீது சிறிலங்காவின் கடல், தரை மற்றும் வான் படைகள் ஒருசேர மேற்கொண்ட தாக்குதல்களில் ஒருசில வாரங்களில் 40,000 வரையான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகின் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுக் கொண்ட சிறிலங்கா அரசாங்கம் புலிகளுடனான யுத்தத்தில் வெற்றி பெற்றுக் கொண்டது. அமெரிக்காவானது, ஆயுதங்கள், தளபாடங்கள் மற்றும் பயிற்சி உள்ளடங்கலாக பல்வேறு உதவிகளை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது. அத்துடன் கண்காணிப்பு செய்மதிகளின் மூலம் புலிகளின் வழங்கற் பாதைகள் தொடர்பாகவும் அமெரிக்காவானது சிறிலங்காவுக்கு தகவலை வழங்கியிருந்தது.
புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வான்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தனது வான்கலங்களை வழங்கியிருந்தது. அத்துடன் புலிகளின் கப்பல்களை மூழ்கடிப்பதற்கான கப்பல் சேவைகளையும் இஸ்ரேல் வழங்கியிருந்தது. பிரிட்டன், இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், மற்றும் வேறு சில நாடுகளும் சிறிலங்கா இராணுவப் படைகளுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கியிருந்தன.
இந்தவிடயத்தில் புலிகளுக்கு எந்தவொரு வெளித்தரப்பும் உதவிவழங்கவில்லை. புலம்பெயர் தமிழ் மக்கள் தவிர வேறெவரது உதவிகளும் இவர்களுக்கு கிடைக்கவில்லை. கியுபா, வெனிசுலா, பொலிவியா போன்ற நாடுகள் கூட புலிகளுக்கு உதவ முன்வரவில்லை. இவை இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எந்தவொரு உதவிகளை வழங்காவிட்டாலும் கூட, அரசியல் தளத்தில் சில உதவிகளை வழங்கின. புலிகள் அமைப்பானது 'பயங்கரவாத அமைப்பு' என இந்நாடுகள் கருதிக்கொண்டன. தவிர, தேசிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையின் காரணமாகவே ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டனர் என்ற உண்மையை இந்நாடுகள் அங்கீகரிக்கத் தவறிவிட்டன.
தற்போது, யுத்தம் முடிவுற்ற பின்னர் சிறிலங்காத் தீவின் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ளன. இத்தமிழர் வாழ் பிரதேசங்களில் இராணுவ முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன்மேற்குக் கரையில் யூதக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டது போன்று, தமிழ் மக்களுக்குச் சொந்தமான இடங்களில் தற்போது சிங்களக் குடியேற்றங்கள் விரிவாக்கப்படுகின்றன. மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் தனியார் முதலீட்டுக்காக ஒதுக்கப்படுகின்றன.
தற்போதும் தமிழ் மக்கள் முகாங்களில் வாழ்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியவில்லை. இவர்களது நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் தம்வசம் கொண்டுள்ளதுடன், சிங்களக் குடியேற்றங்களும் அமைக்கப்படுகின்றன. தமிழ் அரசியல் கைதிகள் தற்போதும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காவில் காணாமற் போதல்களும், படுகொலைகளும் அரங்கேறிக் கொண்டேயிருக்கின்றன. இந்து ஆலயங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது சேதமாக்கப்படுகின்றன.
தமிழ் மக்கள் வாழிடங்களில் அடக்குமுறைகள் அதிகம் காணப்படுகின்றன.
சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள், இராணுவத்தின் வசமுள்ள தமது நிலங்களை மீட்பதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அத்துடன் புலம்பெயர் தமிழ் மக்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர். அண்மையில் பிரித்தானிய மகாராணியாரின் வைரவிழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து அங்கு வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
தமிழர்கள் தாமே தனித்து நின்று போராடி வெல்ல முடியாது. அவர்களுக்கு கூட்டணிகள் தேவை. கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் புலிகள் தோற்றுவிட்டனர். அவர்களால் அதில் வெற்றிகொள்ள முடியவில்லை.
முஸ்லீம் மக்கள், சிறிலங்கா பேரினவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் முஸ்லீம் மற்றும் தமிழ் மக்கள் தமது உரிமைகளை வெள்றெடுப்பதற்காக ஒன்றுசேர வேண்டும். சிறிலங்காவின் தென்பகுதியில், தமிழ் மக்களின் உரிமைகளை ஆதரித்து குரல் கொடுக்கும் சிங்கள சமவுடமை அமைப்புக்களுடன் தமிழ் மக்கள் தொடர்பைப் பேணிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்துலக மட்டத்தில் சிறிலங்காவின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக விழிப்புணர்வுக் கருத்துக்களை வழங்குவதற்கான செயற்பாடுகளைத் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். அரசியற் கைதிகள் விடுவிக்கப்படல், தமிழர் வாழிடங்களில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டுள்ள சிங்கள இராணுவப் படைகள் வெளியேற்றப்படல், இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படுதல் போன்றவற்றை முதன்மைப்படுத்தி விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் சுயநிர்ணயத்துடன் வாழ்வதனை அனுமதிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்புடன் கருத்துவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். இவ்வாறான கருத்து வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் தனித்த நாடொன்றில் வாழ விரும்புகிறார்களா அல்லது ஐக்கிய சிறிலங்காவுக்குள் வாழ விரும்புகிறார்களா அல்லது சுயாட்சி, இணைப்பாட்சிபோன்ற மூன்றாவது தெரிவை விரும்புகிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
யுத்த மீறல்கள் தொடர்பில் அனைத்துலக, சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும் என தமிழர்கள் வலியுறுத்துகின்றனர். ஐ.நா கண்காணிப்புடன் சிறிலங்காவில் கருத்துவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்ம் என்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது ஆதரவை வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அத்துடன் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் விடுவிக்கப்படுவதை அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதையும் சமவுடமை கூட்டணி வேண்டிநிற்கின்றது.
கடந்த யூன் 26 அன்று மெல்பேர்னில் இடம்பெற்ற Socialist Allianceசந்திப்பில் இதன் மெல்பேர்ன் கிளை உறுப்பினரான Chris Slee வழங்கிய உரையைத் தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. Green Left Weekly வெளியிட்டுள்ள இக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
0 கருத்துரைகள் :
Post a Comment