வல்லரசாகும் இந்தியாவின் குறிக்கோளுக்கு அதன் அயல்நாட்டில் இருந்தே தற்போது புதிய சவால் ஏற்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இந்தியா எடுக்கும் முயற்சிகள் குறித்து தனது மனக்கசப்பை திருப்தியற்ற நிலையை ஆத்திரத்தை இலங்கை மெல்லக்கசிய விடுகின்றது.
ஒரு மட்டத்தில், இரு தரப்பு உறவுகளைக்கூடத் தொடர வேண்டாம் என்று மறுக்கும் அளவுக்கு கொழும்பு மீது இந்தியா இலங்கை மீது அழுத்தங்களைக் குவிக்கிறது. ஜூன் மாதக் கடைசியில் கொழும்பு வந்து திரும்பிய இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இந்த விடயத்தை கொழும்பு அதிகாரத் தரப்புக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்.
இலங்கை மீது செல்வாக்குச் செலுத்தக் கூடிய அயல்நாடு என்பதையும் தாண்டி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் உலக மனித உரிமைகள் மீளாய்வு குழுவிலும் உறுப்பினராக இருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து இந்த குழு அடுத்த நவம்பர் மாதம் நடக்க இருக்கும் தனது கூட்டத்தில் ஆராயவுள்ளது. எனவே இந்தியாவுக்கு வளைந்து கொடுக்காமல் திமிர இலங்கையால் முடியாது. கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கை மீதான தீர்மானத்தை டில்லி ஆதரித்திருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மற்றொரு கட்டத்தில், கொழும்பு மீதான இந்தியாவின் இராஜதந்திர அழுத்தம் மிகப் பலவீனமானது. மஹிந்த அரசைப் பொறுத்த வரையில், ஈழப் போரை 3 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்குக் கொண்டு வந்ததே அது செய்த பெரிய சாதனை.
நாட்டின் பொருளாதாரம் படு பாதாளத்தில் வீழ்கின்றபோதும் அரசின் ஆட்சித் திறன் சரிகின்றபோதும் சிங்களவர்களின் இரட்சகர் மீட்பர் மஹிந்தவே என்று காட்டும் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் தொடர்கின்றன.
இலங்கை அரசமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் அத்துடன் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் இந்தியா கொடுக்கும் அழுத்தங்களுக்கான பதிலடியாக மாற்றாக இந்த சிங்களவர்களின் மீட்பர் நிகழ்ச்சித் திட்டம் ஓடுகிறது என்பது மிகத் தெளிவு.
இந்தியாவின் இந்த வலியுறுத்தல்கள் தொடர்பில் தனது பொறுப்பை கடமைப்பாட்டை தாண்டி இலங்கை அரசு நகரவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்துதல் மற்றும் உண்மையான நல்லிணக்க முயற்சிகள் கூட ஏற்றுக்கொள்ள முடியாத வேகத்திலேயே அங்கு நகர்கின்றன.
இதற்கும் மேலாக, கடந்த இரண்டு வருடங்களில் இந்தியா தானாக வழங்கிய உதவிகள் 350 மில்லியன் டொலர் பொருள் உதவி மற்றும் 500 மில்லியன் டொலர் கடன் தமிழர்களிடம் கூட இந்தியா பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை.
கொழும்பு அரசு தமது நிலங்களைத் திட்டமிட்டுப் பறித்து வருவதாகவும் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதாகவும் தமிழர் தாயகத்தில் இராணுவம் அளவுக்கதிகமாக இருப்பதாகவும் தமிழர்களுக்கான இந்திய வீட்டுத் திட்டம் போன்றன சோம் பேறித்தனத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தியாவின் "அழுத்தம் கொடுக்கும் உத்தி' சிங்களவர்களிடம் வெறுப்பை கிளப்பியுள்ளது என்பதை மிக வெளிப்படையான உண்மை. ஜூலை 8 ஆம் திகதிய "சண்டே டைம்ஸ்' ஆசிரியர் தலையங்கம் இதற்குச் சிறந்த உதாரணம்.
"அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை அதற்கு மேலாகவும் (13 பிளஸ்) சென்று நடைமுறைப்படுத்துவோம் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிக்குள் இலங்கை அரசு மாட்டிக் கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. சண்டைக் களத்தில் புலிகளைத் தோற்கடிப்பதற்கான ஆதரவைப் பெறுவதற்காகவே ஆரம்பத்தில் இந்த வாக்குறுதியை இந்தியாவுக்கு வழங்கியதாகவும் ஆனால், எலும்புத்துண்டைக் கௌவி வைத்திருக்கும் நாய் அதை விட்டுக் கொடுக்காததுபோல் இந்தியர்கள் இப்போது என்னை அசைய விடுகிறார்களில்லை என்றும் அவர் கூறுகிறார்'' இப்படி அந்த ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தனது தெற்கு எல்லையில் எப்போதும் மூழ்கிப் போகாத விமானந் தாங்கிக் கப்பல் ஒன்றை வைத்திருப்பதைப் போல் இலங்கை மண்ணில் இந்தியாவுக்கான நிலத் தொடர்பற்ற மாகாணம் ஒன்றைக் கொண்டிருப்பதற்காகவே வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுகின்றது.
இலங்கைப் பிரச்சினை குறித்து கவலைப்படுவதற்கு இந்தியாவுக்கு நியாயமான காரணங்கள் உள்ளன. இலங்கையில் இந்தியாவின் விம்பம் எப்படிப்பட்டது என்பதைக் காட்ட அங்கு கருத்துக் கணிப்புக்கள் எதுவும் நடத்தப்பட்டதில்லை.
ஆனால், பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அவற்றின் வாசகர்கள் எழுதும் கடிதங்களில் இருந்து பார்க்கின்றபோதும் இணையத் தளங்களில் எழுதப்படுபவற்றைப் பார்க்கின்றபோதும் இந்தியா பற்றிய சிங்கள, தமிழ் மக்களின் எண்ணங்களுக்கும் அமெரிக்கா பற்றிய பாகிஸ்தான் மக்களின் எண்ணங்களுக்கும் இடையில் பெரும் வேறுபாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
இலங்கையில் தமிழர்களுக்கான தனது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு செயல்திறனுள்ள முறையைத் தேர்ந்தெடுப்பதில் இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சினை தனித்துவமானது. நல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வுக்கான அரசின் அணுகுமுறை எதிர்மறையானதாக பாதகமானதாக இருக்கையில் நாட்டின் முக்கியமான எதிர்த் தரப்புக்கள்கூட மாற்று ஒன்றை (Alternative) முன்வைக்க முடியாது என்பது மிகத்தெளிவாகிறது.
இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவின் விடயத்தையே இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். சிறையில் இருந்து வெளியே வந்ததுமே எதிர்த் தரப்புக்களின் தலைமை என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டு ராஜபக்ஷ அரசுக்கு எதிராக இலங்கையில் ஒரு "அரபு எழுச்சி'க்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற அவரது நிலைப்பாடு ராஜபக்ஷ அரசைவிடக் கொடுமையானது.
அதைவிட போரில் மனித உரிமைகள் மீறப்படவில்லை என்ற செய்தியை அழுத்தம் திருத்தமாக உலகுக்கு எடுத்துச் சொல்லவில்லை என்று பொன்சேகா குற்றஞ்சாட்டுகிறார்.
மேனன் கொழும்பு வந்து திரும்பியதும் தனது இராஜதந்திரிகள் எல்லோரையும் அழைத்து மாநாடு நடத்தினார் ராஜபக்ஷ. "இராஜதந்திர நடவடிக்கையில் மாற்றங்கள்' என்று தலைப்பிடப்பட்ட அந்த மாநாட்டில், ""இலங்கையின் தேவைகளுக்கு மற்றவர்களை இசையச் செய்யும் வகையில்'' இராஜதந்திரிகள் தமது நடவடிக்கைகளில் வேகத்தைக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதிலிருந்து வெளிப்படையாகத் தெரிவது கொழும்பு "மாறவேயில்லை'' என்ற செய்தி உலகுக்கு அழுத்தமாகச் சொல்லப்படுகின்றது என்பதே. புதுடில்லையப் பொறுத்தவரையில் இலங்கை அரசுடன் உறவுகளை நீடிக்கக்கூடிய கொள்கையைக் கொண்டிருப்பதைவிட மாற்றுத் தெரிவு எதுவும் அதற்கு இருக்க முடியாது.
இலங்கைக்காக சிறப்புத் தூதுவர் ஒருவரை நியமிக்கும் யோசனையை பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனைக்கு அப்பாற்பட்டதொரு மோசமான சிந்தனையாக இருக்க முடியாது.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment