ஜனநாயகத்தின் ஏனைய மூன்று தூண்களையும் சர்வாதிகாரம் "பருத்த முருங்கினால்'' பிரதியீடு செய்கின்றபோது, தனித்த மிடுக்குடன் தாங்கிப் போற்றிய பெருமை உலக வரலாறுகளில், ஊடகங்களுக்கேயுண்டு. "செய்தி சொல்லிகளின்'' செவிகள் கேட்பவற்றையும், கண்கள் காண்பவற்றையும் ஆழ்ந்தறிந்து மெய்யுணர்ந்து உண்மை கெடாமல் உரைப்பதே, ஊடக தர்மம்! உலக சாசனங்களின் எல்லா உரிமையாவணங்களையும் கெடுத்து வைத்துள்ள கெட்ட கூட்டங்களினால் முப்பொழுதும் சூழப்பட்ட இந்தத் தீவில் தகவல் அறியும் உரிமைகளுக்கு மட்டும் மாலை மரியாதையா கிடைக்கும்? எப்பொழுதும் போலவே ஒடுக்கப்பட்டவனின் கண்ணீரை, வீழ்ந்து கிடப்பவனின் மெய்நீரை, சாகத்துடிப்பவனின் செந்நீரை அடுத்தவனிடம் சேராமல் தடுத்தொடுக்கும் செய்கைகளுக்கு பஞ்சமா பாதங்களையும் வழித்துணையாகச் சேர்த்து இருட்டில் நடக்கத் தயங்காத கோழைகளை ஈழம் ஏலவே கண்டுள்ளது.
அச்சூடகங்களின் இரும்பியந்திரங்களை அடித்து நொறுக்குவதில் தொடங்கி, பேனாக்காரர்களின் வீடு புகுந்து உயிர் பறிப்பது வரை, பிணந்தின்னும் சாஸ்திரங்களை தன் பின்னால் திரிபவர்களிடம் போதித்துப் பெருமை கொண்டது பேயரசு. விற்பனைக்கான பிரதிகளை தீயிடுவது, பத்திரிகை அலுவலகங்களினுள் குண்டெறிவது, வானொலி ஒலிபரப்புக் கோபுரங்களை விமானத் தாக்குதல்களால் நிர்மூலமாக்குவது, கேபிள் ரீ.விகளில் குறிப்பிட்ட அலைவரிசைகளை நிறுத்தி வைப்பது என பல்லூடகங்கள் மீதிலும், தன் ஆலகாலப்பற்களை ஆழப்பதித்த ஐக்கிய ஜனநாயக ஷோசலிசக் குடியரசின் வெற்றிப்பக்கங்கள் எண்ணிலடங்காதவை.
அனைத்திலும் அற்பமாக, தனக்கு வேண்டாத உண்மைகளை வெளிவிடும் மூலங்கள் என்று இனங்கண்டு கொண்ட எழுதுமைப் போராளிகளை, அவர்களது குடும்பப் பின்னணிகளையோ, இனச்சூழலையோ, வாழ்வாதாரத்தையோ சற்றும் கணக்கில் கொள்ளாது, உயிர் பறிக்கும் உச்சக் கொடூரத்தையும் சலசலப்புகளுக்கு அஞ்சாத பனங்காட்டு நரியின் குடும்பத் தைரியத்தின்படி கையிலெடுக்கத் தவறவில்லை.
ஈழத் தமிழனது தேசவிடுதலைப் போராட்டம் உலகளாவியதாக உணர்த்தப்பட்டதில், தீவுக்கு வெளியேயான இயங்கு மையங்களைக் கொண்ட பல்லூடகங்களிடம் பெரிய கடமைப்பொறுப்பு கைவசமிருந்தது.
அன்றைய நாள்களின் பி.பி.ஸி, வெரித்தாஸ், ரி.பி.ஸி போன்றவைகளின் இரைச்சலுடன் கூடிய செய்திக்கணங்களை செவிமடுப்பதற்காக, கிளுவந்தடிகளில் கட்டிய கம்பி உணர்கொம்புகள், பெரும்பாலான வீடுகளில் மாறுவேடங்களில் மறைந்திருந்தன.
"புலிகளின் குரல்' ஒலிபரப்பினை வீதியில் ரோந்துபோன ஆமிக்காரனின் காதுகள் வரை கேட்கச் செய்தவர்களின் இரு செவித்துவாரங்களிலும் பேனாக்களை உட்செலுத்தி அடித்துச் செவிடாக்கியதான செய்திகளை ""கர்ணபரம்பரைக் கதைகளாக'' அறிந்து உடல் கூசியிருக்கின்றது. கூடவே கூடத்து வானொலியின் நெளிந்த மின்கலங்கள் திடீரென காணாமலும் போயிருக்கின்றன முன்னெச்சரிக்கையுடன்.
பாதுகாப்பு நிதிக்குஅரச படைகளின் போராயுத உதவிகளுக்காக பரிசுத் தொகையை சமர்ப்பிப்பதாக கூறிய "அர்ஜூன ரணதுங்க' தலைமையிலான இலங்கை அணியின் வெற்றித் தருணங்களை, தென்மராட்சியில் வைத்து, "டைனமோ'வை சுற்றி சின்ன ரி.வியில் பார்த்துச் சிலாகித்திருக்கின்றோம். தலைமேலே விழும் குண்டுகளுக்கும், பாதிவழியில் உயிர் பறிக்கும் ஏவுகணைகளுக்கும் அனுசரணையாளர்கள் இவர்கள் என்று தெரிந்ததன் பின்னாலும் ஐந்து "ஓவர்களுக்கு' ஒருமுறை ஆள்மாறி சைக்கிள் மிதித்து, இறுதிப் போட்டியில் எல்லைக்கோட்டைப் பந்து தொட்டபோது "அப்படி' எழுந்திருக்க மாட்டேனோ என்னவோ, இப்படித் தோற்போமென்று தெரிந்திருந்தால்? ஆனாலும், அதேபோன்றதொரு இறுதிப் போட்டியில் இலங்கை அணி போராடிக் கொண்டிருந்த 2007 ஆம் ஆண்டின் இரவுப் பொழுதொன்றிலும் வான்படைத் தமிழ் வீரர்கள், கொழும்பின் பெருந்திரைகளின் முன்னால் கூடியிருந்த ரசிக வெறியர்களை ஒட்டுமொத்த மின்னொளியையும் அணைத்து, அலறியோடச் செய்ததையும், அடி வயிற்றில் புளி கரைத்து அபிஷேகித்ததையும் காலம் செய்த ஊழிப் பழிவாங்கலாக ஆரவாரித்ததில் தப்பேதுமில்லை. ""வாழ்க்கை ஒரு வட்டம்டா'' என்று இளைய தளபதி சொன்னதைப் போல, வாழ்க்கை மட்டுமல்ல, "வளையல்', "வட்டிலப்பம்', "வடை' போன்றவைகளோடு வரலாறு கூட வட்டந்தான் என்பதை நெஞ்சுயர்த்தி நினைவூன்றிக் கொள்வோமாக.
"குன்றுகளிலேறி வென்று நின்றவர்கள் குனிந்து கவிழ்வதும், குறிகளின் கீழாய் குழைந்து தோற்றவர்கள் நிமிர்ந்து எழுவதும்' வெறுமனே சினிமாக் காட்சிகள் மட்டுமல்லாது காலப்பெருஞ்சில்லின் நிஜந்தொடும் புள்ளிகளே.
தொழில்நுட்ப யுகத்தின் தொகையான வளர்ச்சி மாற்றங்களினால் "குறுகத்தறித்த' உலகினுள், இன அழிப்பின் இறுதி அறுவடை நாள்களின் விளைபலனை, பேரினவாதிகள் தமக்குச் சாதகமாக்க தலைமேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். வெறிதாகிப்போன செம்மொழித் தமிழினத்தின் ஆயுதபலத்தின் மேல் தமக்கிருந்த வலிதான காழ்ப்புணர்ச்சியை, நடைபிணங்களாக ஓமந்தை முற்றத்தில் அபயம் கேட்டு ஒதுங்கிய அப்பாவிகளிடம் ஏவி விட்டு கைகொட்டிச் சிரித்தது பேரினவாதம்.
வணங்காத வன்னி மண்ணின் புகைசூழ் பொழுதுகளில் சீருடைப் பேய்கள் ஆடிக்களித்த வெற்றுடல் வெறி நாடகங்கள் உலகின் அகலத்திரைகளில் இனபேதமில்லாது எல்லாக் கண்களிலும் நீர் வழிந்தோட வைக்கும் சாட்சியாகிப் போகும் என்பதைச் சற்றும் யூகிக்காத கெட்டிக்காரர்களின், "மனிதாபிமான மீட்புப் போர்' குறித்த புளுகுகள், இலங்கையை முழு உலகும் எட்டிப்பார்க்கும் கேவலத்தினுள் வீழ்த்தின.
போர்க்குற்ற காணொலிகளும், இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றடையும் சாட்சிகளும், புகைப்படங்களும்தான், உலகரங்கில் இலங்கை பற்றிய இழுக்காறு அணையுடைத்துப் பாயக் காரணமென்று பலமாக நம்பிய, நம்புகின்ற ஆட்சியாளர்கள் இன்று வரைக்கும் தம் ஆக்கிரமிப்புக் கொள்கையினால் அவலங்களுக்குள்ளாகிப்போன தேசிய இனத்தை ஆசுவாசப்படுத்தவோ, தற்காலிக தீர்வுகளையாவது முன்வைக்கவோ பேச்சளவில்கூட, முன்வராமலிருப்பது யாராலும் கேள்விக்குட்படுத்த முடியாத இன்னுமொரு "நிறைவேற்றதிகாரம்' என்று உறுதிபட நம்புகின்றார்கள்.
உலகத் தமிழர்களின் தோள்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட தேசிய விடுதலைப் போரின் "தடையறத் தாக்கும்' தன்மை, பேரினவாதிகளின் தன்நம்பிக்கையில் தெரிந்தே விழுந்த பெருங்கல். அஞ்சலோட்டத் தடத்தில் கைமாறினாலும் வேகம் மாறாமல் பயணிக்கும் "தனியரசு' என்கின்ற செவ்வர்ணக் கோலின் விரைவுக்கு எதிராக, எதையாவது தற்குறித்தனமாக முன்னெடுத்துத் தடுத்துவிட வேண்டும் என்கின்ற அழுக்காற்றை அழுந்தச் சுமக்கின்றார்கள் எம் எதிரிகள்.
உலகின் பல்தேசங்களிலும் தமது கோரிக்கையின் நியாயங் களை எடுத்தியம்பியபடி தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஆதாரம் பிசகாமல் அடித்துச் சொல்லியபடி, தமக்கான எதிர்காலத் தேவையினை சட்டபூர்வமான போராட்டங்கள் மூலம் முரசறைந்தபடி "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்' வளரும் தீவுக்கு வெளியேயான ஈழத் தமிழரிடம் இருந்து இலங்கை வாசிகளை தொடர்பாடல் ரீதியில் தனிமைப்படுத்துவதன் மூலம், "சிங்களத்தீர்வு' என்கின்ற மத்தியானக் கனவை வலுப்படுத்த முயலும், இலங்கையின் ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிரூபிப்பது "அவசரக்காரருக்கு புத்தி மத்திமம்' என்பதை மட்டுமே.
எகிப்திய மக்கள் போராட்டங்களின்போது தத்தமது அன்றாடக் கடமைகளையும் துறந்து வீதிகளே கதியென நிரவிக்கிடந்த மக்கள் கூட்டம், தமக்கான உலக அறைகூவலை வலுப்படுத்துவதற்காக இணையவழி ஊடகங்களை பெரிதும் பயன்படுத்தினர்.
மக்கள் சக்தி என்கின்ற மாபெரும் திரட்சியினால் ஏறத்தாழ ஆட்சி கவிழும் நிலைக்கு வந்துவிட்ட தீவிரத்தினை தனது தேசத்தினரும் தவறான முன்னுதாரணமாக கையிலெடுத்துவிடக்கூடாதென்கின்ற எச்சரிக்கை, சீனாவின் ஆட்சியாளர்களை பலமாக யோசிக்க வைத்தது. விளைவு "எகிப்து' என்கின்ற சொல்லினை இணையத்தின் பயனீட்டுச் சொல்லாக பயன்படுத்த முடியாதபடி சீன இணையத்தளங்கள் அதிகாரபூர்வமாக முடக்கப்பட்டன. இதற்கான தொழில்நுட்ப சூட்சுமங்களுக்கும் எதிர்காலத்தில் இதேபோன்று தாம் விரும்பாதவற்றை மக்களும் பெற்றுவிடாதபடி தடுக்கும் மென்பொருள்களும் பெருமளவிலான பொருள் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டன.
அதே யுக்தியை தனது "லேட்டஸ்ட்' நண்பனான சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த அடுத்த நொடியே இலங்கையில் வெகு சொற்பமாக மீதமிருந்த ஊடக சுதந்திரத்திற்கான கல்லறை மணியோசையும் எழுப்பப்பட்டது. சர்வதேச தமிழர்களினால் இயக்கப்படுகின்ற தமிழ் இணையத் தளங்களும், அரச எதிர்ப்பு கொள்கைகளையுடைய சிங்கள இணையத் தளங்களுமாக இணையச் செய்திகளை இலங்கை மக்களுக்கு விநியோகிப்பதை பரீட்சார்த்தமாக தடுப்பதில் வெற்றி கண்டதாக கொக்கரித்துக் கொண்டது அரச ஊடகத்துறை. "நாளைய வரலாறாகும் இன்றைய செய்திகளை' நான்கு சுவர்களுக்குள் அடக்குவதன் மூலம், அடுத்து வரும் நாள்களில் தமது இனவாத நிகழ்ச்சி நிரலுக்கேற்ப தமிழின ஒடுக்கலுக்கான திட்டங்களை உராய்வின்றி முன்னகர்த்தவும் முன்னோடித்தது.
பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைக்கென இணைய சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி பெருமளவான இளைஞர்களின் அபிமானத்தை வென்று ஆட்சியைப் பிடித்தது போல தொழில்நுட்ப நுண்வளர்ச்சிகளை நன்நோக்கங்களையிட்டு பயன்படுத்தாமல் அரை நூற்றாண்டுக்கு மேலாக வெவ்வேறு ஆயுதங்களை பிரயோகித்தும் அடங்காத இனமொன்றின் வீழ்ச்சியை விரும்பியதாக மறைவெண்ணத்தில் பரிசீலிப்பதும், பயன்படுத்துவதும் சர்வதேச அரங்கில் சரிந்த தன் செல்வாக்கை நிமிர்த்தும் ஆழ் கிணற்றில் "சாண் ஏற முழம் சறுக்கிய'தாகவே முடியும்.
தடுத்து விட்டோம்! முடக்கி விட்டோம்!! என்று வெற்றிக் குறிகளுடன் கொடுப்புக்குள் சிரித்து முடித்த மூன்றாம் நாள் முன்னிரவிலேயே, வேறொரு புதிய பயனீட்டுச் சொல் மூலம் சில தளங்கள் இலங்கைக்குள்ளான இணையத் திரைகளிலும் மெல்லத் துளிர்ந்திருந்தது, எம் நம்பிக்கைகளைப் போல. "நீங்கள் குகைகளில் கடிபட்டுக் கொண்டிருந்தபோதே, இஞ்ச கோயிலும் கோபுரமும் கட்டி கும்பாபிஷேகத்துக்காக சண்டையும் பிடிச்சவங்கள் நாங்கள் எங்களுக்கேவா?'' தமிழேன்டா!!
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment