தனியாகவோ, கூட்டாகவோ கருத்துகளை வெளியிட முடியாத ஒரு இக்கட்டு நிலையில் வடக்கு மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கான சுதந்திரமான கருத்துரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இங்கு ஜனநாயக அரசியல் நிலைநிறுத்தப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டினிஸிடம் முறையிட்டார் யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தர நாயகம் ஆண்டகை. இதுவரை காலமும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பற்றீசியா புட்டினிஸ் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்துக்கு மாற்றலாகிச் செல்கிறார். இதற்கு முன்னதாக அவர் நேற்று யாழ்ப்பாணம் வருகைதந்தார். யாழ். ஆயர் இல்லத்தில் நேற்றுக்காலை ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையைச் சந்தித்து உரையாடினார் அமெரிக்கத் தூதுவர்.
குடநாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆயரின் கருத்துகளைக் கேட்பதில் அமெரிக்கத் தூதுவர் அதிக அக்கறை காட்டினார்.
தூதுவரிடம் யாழ். ஆயர் சுட்டிக்காட்டிய விடயங்கள் வருமாறு:
போர் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆயினும் வடக்கில் தனியாகவோ, கூட்டாகவோ மக்கள் கருத்துக்களை வெளியிட முடியாத நிலை இன்றும் தொடர்கிறது. இந்தநிலையைச் சகித்துக் கொண்டே மக்கள் தமது வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கு ஜனநாயக அரசியல் நடைபெறுகின்றதா என்ற கேள்வியும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. மக்கள் பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் அவர்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளது. எனவே இங்கு பொருளாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் பட்சத்தில் ஏனைய பல பிரச்சினைகளில் இருந்து விலகி வாழக் கூடிய நிலை ஏற்படலாம். அரசியல் ரீதியாகவும் இதில் பல நன்மைகளை அனைவரும் அடையலாம்.
வடக்கில் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவது, தனிநபர்களின், அதிகாரிகளின் வாழ்விடங்கள் தாக்கப்படுவது ஆகிய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே உள்ளன. இவை மக்கள் மனதில் கடும் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளன. இங்கு இராணுவப் பிரசன்னம் பிரச்சினைக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது. வீதிகள் முக்கிய இடங்ளில் இருந்து படையினர் அகற்றப்பட்டாலும் அவர்களது பிரசன்னம் மக்களுக்கு இடையூறாகவே இருக்கிறது.
வலி.வடக்கில் சில பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாகவே உள்ளன. இவை மீள்குடியேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமலேயே உள்ளனர்.
இது தவிர பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பின்தங்கிய மாணவர்களின் கல்வியில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தப் பிரச்சிகைகள் குறித்தும் அதிக அக்கறை செலுத்தப்பட வேண்டியது அவசியமானதாகும். என்று சுட்டிக்காட்டினார்.
யாழ்.ஆயர் தெரிவித்த விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்வதாகத் தூதுவர் அங்கு குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துரைகள் :
Post a Comment