முன்னாள் போராளிகளை வாழ விடுங்கள்


முன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக் கொடுக்காமல், ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இவர்கள் வாழ்வில் எப்போது விடிவு எற்படும்? புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வாழ்வு இன்றும் விடுதலை இல்லாமல் நாளாந்தம் அச்ச உணர்வுடனேயே நகர்கின்றது. இவர்களின் இயல்பு வாழ்வு விடயத்தில் அரசு அக்கறைகொள்வதாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தி வருகிறது.
 ஆனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தமது வாழ்வில் நரக வேதனையை அனுபவித்து வருகின்றனர். முன்னாள் போராளிகளை வீதிகளில் சந்திக்கும்போது அவர்களின் முகத்தில் அச்ச உணர்வு பீடித்திருப்பதைப் பார்க்க முடிகிறது. 
அவர்களுடன் உரையாடும் போது தமது வாழ்வோடு ஒட்டிய பிரச்சினையைக்கூட வெளியே சொல்லமுடியாத அவலத்தில் இருப்பது தெரிகிறது. அந்தளவுக்கு முன்னாள் போராளிகள் விடயத்தில் துளியளவு அக்கறையும் எடுக்காத அரசு, எப்படி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவப் போகின்றது? இப்போதுமுன்னாள் போராளிகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
  
மூன்று தசாப்த போர் முடிவடைந்து மூன்று வருடங்களாகியும் இன்னும் முன்னாள் போராளிகளின் வாழ்வில் சோதனைகள் தொடர்ந்து கொண்டிருப்பது வேதனை தரும் விடயமாகும். 
இறுதிக்கட்டப் போரில் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியே வந்தும் இயல்பு வாழ்வை குலைக்கும் நோக்கில் மர்மநபர்களால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் அவர்களிடத்தே பெரும் பயப்பீதியை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் நாள்களைக் கழித்து வருகின்றனர். 
நட்டாங்கண்டல், வன்னிவிளாங்குளம், பாண்டியன் குளம் போன்ற பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்பநபர்கள் முன்னாள் போராளிகளின் பட்டியல் ஒன்றை வைத்துக்கொண்டு ஊர் மக்களிடம் அவர்களின் இருப்பிடங்களை விசாரிக்கிறார்கள் அவர்களின் இருப்பிடங்களுக்குச் சென்ற மர்ம நபர்கள் அவர்களை விசாரணைக்காக குறித்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அங்கு கடும் தொனியில் அவர்களை விசாரித்தபின் உடல் ரீதியான தாக்குதல்களிலும் மர்மநபர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் "உங்களை நாங்கள் விசாரித்தது. பற்றி ஒருவரிடமும் முறையிடக்கூடாது. அவ்வாறு முறையிட்டால் மீண்டும் தடுப்பு முகாமிற்கு செல்ல நேரிடும்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரே முன்னாள் போராளிகள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் போராளிகளின் மீதான இத்தகைய நடவடிக்கையில் கொழும்பில் இருந்து வந்துள்ள விசேட புலனாய்வுப் பிரிவொன்றே ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. 
இந்தச் சம்பவமானது முன்னாள் போராளிகளின் இயல்பு வாழ்வில் இடியாக விழுந்துள்ளது. 
இதன் காரணமாகவே முன்னாள் போராளிகள் ஒவ்வொருவரின் மனதிலும் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற துடிப்பு காணப்படுகிறது. அச்ச உணர்வு பீடித்திருக்கும் இடங்களில் வாழ்வதற்கு எவருக்குத்தான் துணிவு வரும். இயல்பு வாழ்வில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் முன்னாள் போராளிகள் போர் மேகம் இல்லாத சூழலில் வாழ விரும்புகின்றார்கள். 
இவர்கள் விடயத்தில் அரசு முழுக்கவனம் எடுத்து இப்படிப்பட்ட அச்சம் நிறைந்த சூழலினை இல்லாமல் செய்து நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்திக் கொடுக்குமா? 
முன்னாள் போராளிகளுக்கான இயல்பு வாழ்வுக்கான வழியினை ஏற்படுத்திக்கொடுக்காமல் மீண்டும் அவர்கள் மீது ஏற்படுத்தப்படும் வன்முறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கான உந்துதலை ஏற்படுத்தி விடுகிறது.
ஆயுதம் தூக்கிய ஒரே காரணத்துக்காக மேலும் மேலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வில் எப்போது விடிவு எற்படும் என அவர்களின் பெற்றோர்கள் கேட்டவண்ணம் இருக்கின்றனர். 
பயம் கொள்வது ஒரு மனிதனின் வாழ்வினை இல்லாமல் செய்துவிடும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிஞர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். அவர்கள் படித்ததில் வைத்து சொன்னார்களோ அல்லது அனுபவத்தில்தான் சொன்னார்களோ அது எமக்குத் தெரியாது. ஆனால் அதுதான் உண்மை முன்னாள் போராளிகளின் வாழ்வில் இப்போது பயம் பீடித்திருக்கிறது. 
இந்தப் பயத்தினை இவர்களிடமிருந்து இல்லாமல் செய்வதற்கு எவர்தான் முன்வருவார்களோ என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். தமது புனர்வாழ்வு முகாம் அடையாள அட்டையையே படையினர் எதற்காக திருப்பி வாங்குகின்றனர் என்று கூட தெரியாத நிலைமையில் கண்டிப்பாக இவர்கள் பயம் கொள்வது நியாயமானதாகும்.
தமிழர்கள் வாழும் பகுதிகள் எல்லாம் படையினர் அகலக்கால் விரித்து இருக்கின்றனர். தடுக்கிவிழும் இடமெல்லாம் படையினரின் முகாம்கள்தான் இருக்கின்றன. இப்படியாக இருந்தும் முன்னாள் போராளிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. இனந்தெரியாதவர்கள் கூட தங்களை அச்சுறுத்துவதாக முன்னாள் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
இறுதிக்கட்டப் போரில் பல முன்னாள் போராளிகள் படையினரால் சித்திரவதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை சனல்4 வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வீடியோ காட்சிகளை பார்த்த முன்னாள் போராளிகள் தமக்கும் ஏதாவது இடம்பெற்றுவிடுமோ என்று அஞ்சியிருக்கும் போது மர்மநபர்கள் அவர்களை அச்சுறுத்துவது அவர்கள் மத்தியில் பயப்பீதியை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. 
இந்த பயப் பீதியானது எதிர்வரும் காலங்களில் அவர்கள் உள நோய்த்தாக்கத்திற்கு உள்ளாவதை தடுக்க முடியாத நிலமையாக மாறிவிடும். போர்க்குற்றச் சாட்டுக்களின் விசாரணைகள் முடிவுறாத சூழலில் மீண்டும் முன்னாள் போராளிகளை மர்ம நபர்கள் அச்சுறுத்தி வருவது தொடர்பான இந்தக் குற்றச்சாட்டும் படையினர் மீதே வந்து விழப்போகிறது.
தமிழர் விடயத்தில் இலங்கை அரசு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமந்து வருகிறது, இனியும் சுமக்கப்போகிறது என்பது இப்பொழுது இடம்பெறும் சம்பவங்களில் இருந்து தெரிகிறது. முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுபெற்று வெளியே வந்து இயல்பு வாழ்வுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது இப்படிப்பட்ட அச்சுறுத்தும் செயற்பாடுகள் அவர்களின் குடும்பங்களுக்கு மீண்டும் மீளமுடியாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வன்னிப் பகுதியில் இடம்பெறும் தீய சம்பவங்கள் முழுமையாக  வெளியுலகுக்கு தெரியாமல் அங்கேயே அடங்கிப் போகின்றன. மீளக்குடியமர்ந்த மக்கள் தமது வாழ்வினை நகர்த்த முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மீளக்குடியமர்ந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களின் நிலை அதைவிட பரிதாபகரமானது.
 இரவு நேரங்களில் தெருவிலே வாகனச் சத்தம்  கேட்டு அவர்களின் தூக்கம் கலைந்த நாள்களை எண்ண முடியாது. புதிய முகங்களைப் பார்க்கின்ற போதும் அவர்களிடம் ஒரு பயப்பீதி ஏற்படுகின்றது. ஒவ்வொரு நாளும் நரக வாழ்வினை நகர்த்திச் செல்லும் முன்னாள் போராளிகளில் சிலர் இறுதியில் தற்கொலையையும் தெரிவு செய்துள்ளனர்.
இப்படியாக இவர்கள் வாழ்வில் சோதனை அதிகரித்துக்கொண்டே செல்கிறதேயொழிய குறைவதற்கு வாய்ப்பேதும் இல்லாமல் இருக்கிறது. முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் தொகையான நிதியை அரசு ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதியால் பேராளிகள் பெற்ற பயன் என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை  இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வெளிநாடுகளில் இருந்தும் நிதி கிடைக்கின்றன. அவற்றாலும் கிடைக்கும் பயன் என்ன என்பது தெரியவரவில்லை. 
முன்னர் போரினை காரணம் காட்டி வெளிநாடுகளில் இருந்து நிதியினை வசூலித்த இலங்கை அரசு, இப்பொழுது முன்னாள் போராளிகளின் பெயரில் வெளிநாடுகளிடம் இருந்து நிதியினை வசூல் செய்கிறது. இலங்கை அரசுக்கு என்றைக்குமே வெளிநாடுகளிடமிருந்து நிதியினைப் பெறுவதற்கு தமிழர்கள்தான் தேவைப்படுகின்றனர். ஆனால் அந்த நிதி தமிழர்களுக்கு ஒரு போதுமே உதவப்போவதில்லை என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரிகிறது. பகடைக் காய்களாக தமிழர்களைப் பயன்படுத்தும் சிங்கள அரசு அந்த மக்களின் அத்தியாவசிய தேவைகளில் சிறுதுளி அளவைக் கூட நிறைவேற்றப் பின்னடிக்கிறது. 
முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்தில் எந்தவிதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும் இலங்கை அரசு அவர்களை அச்சுறுத்துபவர்களையாவது தடுக்கும் வழியினை ஏற்படுத்திக்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னி மண் பாதுகாப்புள்ள ஒரு சுதந்திரமான இடமாக இருந்தது. 
போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்தும் வன்னி மண் பழைய நிலைக்கு வரமுடியாமல் தவிக்கிறது. அழுத்தங்கள் பிரயோகிக்கும் இடத்தில் விடுதலைக்கான தேடல் இருக்கும். இதுதான் உலக வரலாறு. அந்த அழுத்தங்களில் ஏற்படும் மனக்காயங்கள் எந்த மருந்தினைப் போட்டாலும் ஆறாது. கூடிக்கொண்டே செல்லும் அழுத்தங்களில் இருந்து ஒன்று மட்டுமே தெரிகிறது. அதாவது இலங்கையில் தமிழர்கள் ஒரு போதுமே நிம்மதியாக வாழமுடியாது என்பதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஆயுதம் தூக்கி போராடிய காலங்களில் இருந்த துணிவு பாதுகாப்பு இப்போது இல்லாமல் இருக்கிறது. மீண்டும் அதே நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் போலும். போரினால் சுகபோகம் அனுபவித்த தலைமைக்கு என்றைக்குமே அமைதியைப் பிடிக்காது.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment