மக்களின் நலன்களுக்காகத் தன்னை அர்ப்பணித்து செயற்படும் ஒரு புரட்சிவாதி, வாழ்நாளின் போது பயங்கரவாதி எனவும் மனிதாபிமானம் அற்றவர் எனவும், கொலைவெறியன் எனவும் பிற்போக்கு வாதிகளால் அவதூறு செய்யப்படுகிறான். ஆனால் அவன் இறந்த பின்பு அதே பிற்போக்கு சக்திகள் அவனை யேசுவைப் போல், புத்தரைப் போல் ஒரு மகான் எனப் போற்றி அந்தப் புரட்சியாளனின் பெயரையும் மக்கள் மத்தியில் அவனுக்குள்ள செல்வாக்கையும் பாவித்துத் தங்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு ஒரு கவசமாகப் பாவிக்கின்றனர். ஆனால் இத்தகைய ஏமாற்றுகள் தற்காலிகமானவையே என்பதை அவர்களுக்கு மக்கள் விரைவிலேயே உணர்த்தி விடுவதுண்டு.
இது சோவியத் யூனியன் புரட்சியைத் தலைமையேற்று வழிநடத்தி கொடிய ஜார் மன்னனின் சர்வாதிகார, ஆட்சியை வீழ்த்தி ஒரு பொதுவுடமை நாட்டை உருவாக்கிய மாமேதை லெனின் அவர்கள் வெளியிட்ட கருத்தாகும்.
இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கியூபா பயணத்தின் போது உலகின் மிகச் சிறந்த புரட்சித் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் சேகுவேராவின் மனைவியையும் மகனையும் சந்தித்து மிக நெருக்கமான முறையில் உரையாடினார் என்ற செய்தி வெளிவந்த போது மாமேதை லெனின் அவர்களின் மேற்கண்ட கருத்து மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டதை உணர முடிந்தது.
தோழர் சேகுவேராவைப் போன்றே தனது மக்களின் விடுதலைக்கான அர்ப்பண உணர்வுடன் ஒரு பெரிய தியாக வாழ்வை வளர்த்துக் கொண்டு போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும், அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பையும் நயவஞ்சக நடவடிக்கைகள் மூலம் தோற்கடித்தது மட்டுமன்றி, அதற்காக இன்றுவரை பெருமை பேசி வரும் மஹிந்த ராஜபக்ஷ சேகுவேராவின் உறவினரைச் சந்தித்து மரியாதை செலுத்தினார் என்றால் அது எத்தகைய ஒரு பெரிய ஏமாற்று என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
போரின் இறுதி நாள்களில் நாற்பதினாயிரம் தமிழ் மக்களை நரவேட்டையாடிய இரத்தக் கறை இன்னும் கைகளில் காய்ந்து விடாத நிலையில் ஒரு உலகப் புரட்சித் தலைவனின் மனைவியின் கரங்களை அதே கரங்களால் குலுக்குகிறார் என்றால் எவ்வளவு ஒரு அபத்தமான காட்சி என்பதைப் புரட்சியாளர்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள்.
ஆர்ஜென்ரீனா உலகிலேயே மிக உயர்ந்த பிரதேசங்களில் அமைந்த நாடுகளில் ஒன்று. தகரமும், தாமிரமும் அந்த நாட்டுக்கு இயற்கை வழங்கிய கொடை. அந்த நாட்டு மக்கள் உயிரைப் பணயம் வைத்து சுரங்கங்களில் தோண்டி எடுக்கும் இந்தக் கனிமங்களால் பெரும் இலாபமீட்டுவது ஐரோப்பிய அமெரிக்க நிறுவனங்களே. ஆனால் கடுமையாக உழைக்கும் அந்த நாட்டு மக்களுக்குக் கிடைப்பதெல்லாம் வறுமையும், பசியும், பற்றாக்குறைகளும் தான். உடலையே விறைக்க வைக்கும் கடும் குளிர் நிலவும் அந்த நாட்டில் ஒரு பெண் 40 வயதிலேயே 70 வயதுத் தோற்றத்தை அடைந்து விடுவாள். அந்த நாட்டு மக்களின் சராசரி வயது 50 தான்.
இந்த ஆர்ஜென்ரீனா நாட்டில்தான் சேகுவேரா பிறந்தார். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அவர் மருத்துவக் கல்வி பயின்றார். ஆனால் தன் நாட்டு மக்களின் வறுமையும் துயரங்களும் அந்நிய நாட்டினரின் இரக்கமற்ற சுரண்டலும் அவருக்குள் ஒரு புரட்சிவாதி உருவாவதை அவருக்கு உணர்த்தின.
எனவே, மருத்துவப் படிப்பை இடைநிறுத்தி விட்டு லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கால் நடையாகவும், மிதிவண்டியிலும், பொது வாகனங்களிலும் என அவரின் பயணம் தொடர்ந்தது.
பிரேஸிலின் கோப்பியும், ஆர்ஜென்ரீனாவின் கனிமங்களும், கியூபாவின் கரும்பும், மெக்ஸிக்கோ, வெனிசுலா ஆகிய நாடுகளின் எண்ணெய் வளமும் அந்தந்த நாட்டு மக்களின் உதிரத்துடன் கலந்து அந்நிய நாடுகளால் உறிஞ்சப்படுவதைக் கண்டார்.
அந்தந்த நாடுகளின் அரசுகளும் அரசுத் தலைவர்களும் அந்நிய நாடுகளின் தரகர்களாக விளங்கி, தங்கள் நாட்டு மக்களை வாட்டுவதைக் கண்டு கொதித்தார். இவையெல்லாம் முழு லத்தீன் அமெரிக்க நாடுகளுமே விடுவிக்கப்பட வேண்டும் என்ற உத்வேகத்தை அவரில் மூட்டின.
எனவே இவர் இந்தப் பயணங்களின் போது பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளின் புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியவுடன் பல போராட்டங்களிலும் பங்கு கொண்டார். அதன் காரணமாக அவர் பிறேசில் நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் ஒரு சிறைக்காவலரின் உதவியுடன் தப்பிய இவர் மெக்சிக்கோ சென்றடைந்தார்.
அங்கு கியூபா புரட்சித் தலைவர் பிடல் காஸ்ரோவைச் சந்தித்த இவர் கியூபா புரட்சிப்படையில் இணைந்தார். ஒரு படையணியின் தளபதியாக அந்தப் படையணியுடன் மெக்சிக்கோவிலிருந்து ஒரு கப்பலில் புறப்பட்டு கியூபா மண்ணில் இறங்குகிறார். அங்கு தரையிறங்கும் போதே இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்கின்றனர்.
இறுதியில் பிடல்காஸ்ரோ தலைமையில் சர்வாதிகாரி பட்டிஸ்லோ வீழ்த்தப்பட்டு கியூபாவில் மக்களாட்சி மலர்கிறது. அதில் ஒரு அமைச்சராகிறார்.
ஆனால் அவர் அத்துடன் அமைதியடையவில்லை. மெக்சிக்கோ, பொலிவியா போன்ற நாடுகளுக்குப் புரட்சியை விரிவாக்கும் முகமாக கியூபாவை விட்டு வெளியேறுகிறார்.
பொலிவியாவில் அவரும் அவரது தோழர்களும் ஒரு தாக்குதலுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு துரோகியின் காட்டிக் கொடுப்பில் கைது செய்யப்படுகிறார். பின்பு சுட்டுக் கொல்லப்படுகிறார்.
இவ்வாறு லத்தீன் அமெரிக்க மக்களின் மேல் அதிகாரபீடங்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளும், அதனால் அவர்கள் அனுபவித்த வறுமை, நோய், மரணம் போன்ற துயரங்களும் தோழர் சேகுவேராவை எவ்வாறு ஒரு புரட்சிவாதியாக மாற்றியதோ அவ்வாறே 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் பிரபாகரனைச் சிறு வயதிலேயே தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகச் சிந்திக்கத் தூண்டியது. தொடர்ந்து தமிழ் மக்கள் மேல் ஆயுதப்படையினராலும், சிங்கள அதிகார பீடங்களாலும் மேற்கொள்ளப்பட்ட ஆயுத வன்முறைகள் அவரை ஆயுதப் போராட்டத்தில் இறங்க நிர்ப்பந்தித்தன. தனி நாடு ஒன்று மட்டுமே தமிழ் மக்களுக்கு நியாயமான நிரந்தரமான தீர்வை வழங்க முடியும் என உணர வைத்தன.
எனவே, விடுதலைப்புலிகள் இயக்கம் வேகமாக வளர்ச்சி பெற்று, விடுதலைப் பிரதேசங்களை உருவாக்குமளவுக்குப் பலம் பெற்றது. எனினும் இலங்கை ஆட்சியாளர்களின் அழுத்தத்தின் பேரில் அமெரிக்கா முதலில் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகப் பிரகடனம் செய்து தடை செய்தது. அதை அடுத்துப் பல மேற்கு நாடுகள் தடை செய்தன.
சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்று விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசு, பயங்கரவாதத்தை அழித்துவிட்டதாகத் தம்பட்டமடித்தது. மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரையில் பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் இன்றுவரை பயங்கரவாதிகள்.
சேகுவேரா உயிருடன் இருந்த காலத்தில் அவரை அமெரிக்காவும் ஏனைய மேலாதிக்க சக்திகளும் பயங்கரவாதிகள் என்றனர்.
ஒரு போர் வெறியன் என்றனர். மனிதாபிமானம் அற்றவன் என்றனர். ஆனால் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது லத்தீன் அமெரிக்க மக்களின் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்குத் தான். எனினும் அவரை வேட்டையாட அனைத்து வழிகளையும் பிரயோகித்தனர்.
மஹிந்த ராஜபக்ஷ அரசும் சேகுவேராவின் எதிரிகள் கையாண்ட அத்தனை வழிமுறைகளையும் பிரபாகரனுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் எதிராகக் கையாண்டார். சேகுவேராவும் பிரபாகரனும் மக்களின் விடுதலை என்ற பேரில் ஒரே புரட்சிகர பாதையில் பயணம் செய்தனர். சேகுவேராவின் எதிரிகளும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியும் மக்கள் விரோதப் பாதையில் நடந்தன.
சேகுவேராவைக் கொன்றவர்களின் இலட்சியத்தையே இன்று வரை தனது இலட்சியமாகக் கொண்டு இயங்கும் மஹிந்த ராஜபக்ஷ அவரின் மனைவியையும் மகளையும் சந்தித்தார் என்றால் ஆச்சரியம் எதுவுமில்லை. சே என்ற அந்த மாபெரும் புரட்சிவாதியின் நிழலில் பதுங்கி நின்று, அதன் கீழ் தன் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குக் கடைவிரிக்கும் தந்திரம் தான் அது. சேகுவேராவை மதிப்பவன், அணிசேரா நாடுகளின் நண்பன் போன்ற வேஷங்கள் இப்போது மஹிந்தவின் மனித குல விரோத நடவடிக்கைகளுக்கான தண்டனைகளிலிருந்து தப்பத் தேவைப்படுகின்றன.
ஆனால் சேகுவேராவின் மனைவி மஹிந்த ராஜபக்ஷவிடம் சே பற்றிய இரு நூல்களை வழங்கியதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அதைப்படித்துப் பார்த்தால், மஹிந்த சேயின் விரோதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கூட அந்த நூல்கள் வழங்கப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment