"கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை இதயசுத்தியுடன் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைளை எடுத்தலே உண்மையான மீளிணக்கப்பாடு. 'சுயநிர்ணயம்' என்பது பெரும்பான்மை இனத்தின் உரிமைகளுக்கு கெடுதல் விளைவித்தல் எனப் பொருள்படாது". இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பை தளமாகக்கொண்ட Lakbima News இணையத்தளத்திற்காக Sulochana Ramiah Mohan கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி: அண்மையில் மாத்தறையில் இடம்பெற்ற ‘Platform for Freedom’ என்கின்ற நிகழ்வில் நீங்கள் கலந்துகொண்டு உரையாற்றினீர்கள். அதில் இதுவே தமிழ் அரசியல்வாதி ஒருவர் சிறிலங்காவின் தெற்கில் இடம்பெறும் நிகழ்வில் உரையாற்றுகின்ற முதலாவது சந்தர்ப்பம் எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். சிறிலங்காவில் வாழும் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு 50:50 என்ற அடிப்படையில் அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்களா? இல்லாவிட்டால், அதன் கருத்து என்ன?
பதில்: மாத்தறையில் இடம்பெறும் நிகழ்வில், வடக்கிலிருந்து கலந்துகொள்கின்ற முதலாவது தமிழ் அரசியல்வாதியாக எனக்கு இச்சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாக நான் அறிமுகம் செய்திருந்தேன். இத்தகவல் முற்றிலும் சரியானதா என்பது தொடர்பாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர், இவ்வாறானதொரு சம்பவம் தற்போது தான் முதன்முதலாக இடம்பெறுவதை என்னால் நினைவுபடுத்திக் கொள்ளமுடிகிறது. இந்தக் கருத்துக்கும் 50:50 என்கின்ற கருத்துக்கும் இடையில் எவ்விதமான தொடர்பு காணப்படுகின்றது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.
கேள்வி: தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் வாழ விரும்புகிறார்கள் என நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். அத்துடன் இது சிறிலங்காவின் பெரும்பான்மை சிங்கள மக்களின் உரிமைகளுக்கு தீங்கு விளைவிப்பதை நோக்காகக் கொண்டிருக்கவில்லை எனவும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். 'சுயநிர்ணயம்' என்பதன் கருத்து என்ன? அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளாலும் 'ஈழம்' தொடர்பாகப் பேசுகின்ற பெரும்பாலானவர்களாலும் பயன்படுத்தப்படுகின்ற 'சுயநிர்ணயம்' என்பதை நீங்களும் பயன்படுத்தியுள்ளதால், அவர்களால் பேசப்பட்ட அதே கருத்தை நீங்களும் கூறுகிறீர்களா? தற்போது நாட்டில் சமாதானம் நிலவுகின்றது. இந்நிலையில் 'சுயநிர்ணயம்' என்பது தொடர்பாக தங்களின் கருத்து என்ன?
பதில்: சுயநிர்ணயம் என்பது சுயநிர்ணயம் தான். இதில் அதற்கு குறைவானது அல்லது கூடியது என்கின்ற எந்த வேறுபாடுகளும் கிடையாது. 'சுயநிர்ணயம்' என்பது உண்மையில் எந்தக் கருத்தைக் கொண்டுள்ளதோ அதை வலியுறுத்தியே நானும் இவ்வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளேன். சிலர் 'சுயநிர்ணயம்' என்பதன் அர்த்தத்தை குறைத்து, இழிவாக கூறியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தளவில் சுயநிர்ணயம் என்பது கொண்டிருக்க வேண்டிய வலுவான, ஆழமான கருத்தையே நானும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
கேள்வி: முழு உலகத்தையும் குழப்பத்துக்கு உள்ளாக்கிய நிறவெறிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட தென்னாபிரிக்க மக்களைப் போலல்லாது, சிறிலங்காவில் வாழும் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் அமைதியான, சமாதான வாழ்வை வாழ்கின்றனர். ஏனைய பெரும்பாலான நாடுகள் போன்று சிறிலங்காவில் உள்ள பல்வேறு இனத்தவர்களும் ஒற்றுமையுடனும், கௌரவத்துடனும் வாழவில்லையா?
பதில்: சுயநிர்ணயம் என்பது அனைத்துலகச் சட்டத்தின் கலைச் சொல்லாகும். ஐ.நா மற்றும் மனித உரிமை அமைப்புக்களின் சாசனங்கள் 'சுயநிர்ணயம்' என்கின்ற அடிப்படைக் கோட்பாட்டைத் தழுவியே வரையப்பட்டன. எல்லா மக்களும் சுயநிர்ணயத்துடன் வாழமுடியும். இந்நிலையில் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட முடியாததாகும். அடக்கப்படும் மக்கள் உலகெங்கும் வாழ்கின்றனர். ஆனால் குறிப்பிட்ட சில சூழ்நிலையை பிறிதொன்றுடன் ஒப்பிட்டு, அதை விட சிறந்தது எனக் கூறமுடியாது. சட்டத்தால் வரையறுக்கப்பட்டது போன்று சிறிலங்காவில் வாழும் அனைத்து இன மக்களும் சமத்துவத்துடன் அல்லது கௌரவத்துடன் வாழவில்லை.
கேள்வி: இணைப்பாட்சி, வெளிப்படைத்தன்மை போன்றன சிறிலங்காவில் மட்டும் வேண்டப்படாத வார்த்தைகளாக உள்ளன என நீங்கள் கூறுகின்றீர்கள். அமெரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் மக்கள் சமூகத்தவர்கள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படவில்லை என்பது தங்களது கருத்தாகும். இந்தவகையில், இணைப்பாட்சி என்பது ஏனைய நாடுகளில் வரவேற்கப்படுகின்ற ஒன்றாக காணப்படுகின்றது. இதனை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
பதில்: ஆம், நான் ஏற்றுக்கொள்கிறேன். உண்மையில் இணைப்பாட்சி ஒன்று நடைமுறையிலிருந்தால், நாட்டில் வாழும் ஒரு சமூகத்தவர்கள் மற்றைய சமூகத்தவர்களை அழிக்கின்ற நிலை குறைவடையும். அதாவது சமூகத்தவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அரிதாக காணப்படும். நாங்கள் இணைப்பாட்சி கட்டமைப்பை ஏற்றுக்கொண்டால், நாங்களும் அமெரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் மக்களைப் போல் வாழமுடியும்.
கேள்வி: கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையானது நாட்டில் வாழும் இரு இனத்தவர்களுக்கிடையில் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதை பிரதான நோக்காகக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் நீங்கள் இவ்வறிக்கை தொடர்பாக கூறும்போது, கடந்தகாலத்தை கிளறுவது போன்று கருத்துக்களை முன்வைத்திருந்தீர்கள். உண்மையில், கடந்த கால வடுவானது நிகழ்காலத்தை அல்லது எதிர்காலத்தை ஒருபோதும் ஆற்றுப்படுத்த முடியாது. நீங்கள் இதனை நிராகரிக்கிறீர்களா? சில கெட்ட சம்பவங்களும், பாரிய தவறுகள் இடம்பெற்றது என்பது முற்றிலும் உண்மையாகும். ஆனால் நீங்கள் கடந்த காலத்தை மீண்டும் கிளறினால், நாட்டில் முன்னெடுக்கப்படும் மீளிணக்கப்பாட்டு முயற்சிகளில் தடைகள் ஏற்படும்.
பதில்: கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொருத்தமான, சரியான, நிறைவான விசாரணை முன்னெடுக்கப்படாவிட்டால், நாட்டில் உண்மையான, நேர்மையான மீளிணக்கப்பாட்டைத் தோற்றுவிக்க முடியாது. போரில் காணாமற் போன தனது மகனைத் தேடிக்கொண்டிருக்கின்ற தாயிடம் அவரது மகனை மறந்து 'இணங்கிப்' போகுமாறு உங்களால் கூறமுடியாது.
கேள்வி: பிரிவினைவாதத்தை கோரிநிற்பவர்களில் நீங்களும் ஒருவர் எனப் பலர் கூறுகின்றனர். தேசிய கீதத்தைக் கூட தமிழிலும் இசைக்க வேண்டும் என நீங்கள் கோரியிருந்தீர்கள். ஏற்கனவே நீளமான தேசிய கீதத்தை மீண்டும் தமிழிலும் இசைப்பதன் மூலம், நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்கள் மத்தியிலும் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நீங்கள் கருதுகிறீர்கள்? சிங்களவர்கள் சிங்களத்தில் தேசிய கீதத்தை இசைப்பது போன்று தமிழர்கள் இதனைத் தமிழ் மொழியில் இசைப்பதற்கான உரிமை வழங்கப்பட வேண்டும் என நீங்கள் கேட்பது பலவீனமான முயற்சியாக இருக்கவில்லையா?
பதில்: ஒவ்வொரு பற்றைக்கும் பின்னால் பேயுள்ளது எனக் கூறுவார்கள். அதேபோன்று பாரபட்சமான மனநிலையைக் கொண்டவர்கள் இவ்வாறான கீழ்த்தரமான சிந்தனையையும் கொண்டுள்ளனர். இரு மொழிகளில் தேசிய கீதத்தை இசைப்பதன் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தலாம் என நான் ஒருபோதும் கூறவில்லை. இது கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஒரு குறியீடாக காணப்படுகின்றது என்பதை மட்டுமே நான் தெரிவித்திருந்தேன். ஆனால் இதுபோன்ற குறியீட்டு பரிந்துரைகளைக் கூட சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.
கேள்வி: நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் சில நகைப்புக்கிடமானவையாக காணப்படுவதாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அறிவித்திருந்தமை தொடர்பான தங்களது கருத்து என்ன? இதில் சிறிலங்காவின் தேசிய கீதம் தமிழிலும் இசைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளடங்குகின்றது. ஒரு தேசிய கீதத்திலிருந்து தமிழ் மக்களுக்கு எதை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொடுக்க விரும்புகிறீர்கள்?
பதில்: தமிழ் மொழி மூல தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என ஏற்கனவே அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கோத்தாபய ராஜபக்சவின் பார்வையில் இது நகைப்புக்கிடமானதாக காணப்படுகிறது. இந்நிலையில் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்றைக் கூட தமிழ் மக்களுக்காக நிறைவேற்ற விரும்பாத சிறிலங்கா அரசாங்கம் வேறெந்த பரிந்துரைகளையும் நிறைவேற்றமாட்டாது என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: தமிழ் மாணவர்கள் தமிழில் தேசியகீதத்தை இசைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு சிங்களத்தில் பாடுமாறு கேட்கப்பட்டதாக கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?
பதில்: பாடசாலை மாணவர்கள் தமிழில் தேசிய கீதத்தை இசைத்துக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற சிறிலங்காப் படையினர் அதனை நிறுத்தி, தொடர்ந்து சிங்களத்தில் இசைக்குமாறு கட்டளையிட்டிருந்தனர்.
கேள்வி: பெரும்பான்மையினத்துடன் 'சமமாக' வாழ்வதன் மூலம் மட்டுமே சிறுபான்மை இனத்தவர் தமக்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: இவ்வினாவானது இந்த நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினை தொடர்பில் முற்றிலும் தவறான விளக்கப்பாட்டைக் கொண்டிருப்பதையே சுட்டிக்காட்டுகின்றது.
கேள்வி: இந்த நாட்டில் சில சிங்கள பேரினவாத மனோபாவத்தைக் கொண்ட அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களைப் போல உங்களையும் கருதமுடியுமா? நீங்கள் அவர்களில் ஒருவரா? நீங்கள் தெற்கில் வாழும் மக்களுடன் பேச விரும்புவதாகவும், பெரும்பான்மை மக்களை மதிப்பதாகவும் அவர்களின் உயர் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பில் நீங்கள் வியப்படைவதாகவும் உங்களது உரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். நாட்டில் அமைதியாக, ஒற்றுமையாக வாழ்வதை விரும்புகின்ற ஒருவராக நீங்கள் இருக்கமுடியாதா?
பதில்: முதலாவதாக, நான் சிங்கள பேரினவாத அரசியல்வாதி இல்லை என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லது நான் எவ்வித பேரினவாத அடக்குமுறை கருத்துக்கும் ஆட்பட்டிருக்கவில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று சுயநிர்ணய உரிமை என்பது ஒவ்வொரு மக்களினதும் அடிப்படை உரிமையாகும். பல்வேறு இனத்து மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதன் மூலம் நாட்டில் ஒற்றுமையை நிலைநிறுத்த முடியாது.
கேள்வி: கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் உண்மையில்லையா? இதன் விசாரணைகளிலும் குற்றச்சாட்டுக்களிலும் உண்மையிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையானது சிறிலங்கா அரசாங்கத்திடம் குறிப்பிட்டிருந்தது. கடந்த காலத்தை விட தற்போது மீளிணக்கப்பாடு என்பது தேவைப்பாடனதாக இருக்கின்றதா?
பதில்: கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புக்களை உண்மையான, நேர்மையான முறையில் விசாரித்து தீர்வு காண்பதே உண்மையான மீளிணக்கப்பாடாகும்.
கேள்வி: தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் அரசியலும் போதியளவில் யதார்த்தமான, மிதவாத, அறிவார்ந்த நிலையிலுள்ளனர் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: ஆம் நிச்சயமாக,
கேள்வி: சிறிலங்காத் தீவானது சிங்கள தேசமாக உள்ளதாகவும், இங்கு தமிழ் அரசியலுக்கு சமமான இடம் வழங்கப்பட வேண்டும் எனவும் நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்: சிறிலங்காவானது தனியொரு சமூகத்தவர் வாழும் தேசமல்ல. இங்கு பல்லின சமூகத்தவர்கள் வாழ்கின்றனர். இந்த உண்மையை நாம் உணர்ந்து கொண்டு, இதற்கேற்ப எமது நாட்டின் ஆட்சி முறைமையை மாற்றம் செய்யாது விட்டால், தேசிய பிரச்சினையை ஒருபோதும் தீர்த்துக் கொள்ள முடியாது.
புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment