விடுதலைப்புலிகள் மீதான தடை : இந்திய அரசின் நிலைப்பாடுதான் என்ன?


தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இவ்வாறு செய்தி மற்றும் அரசியல் ஆய்வுகளுக்கான EurasiaReview என்னும் இணையத்தளத்தில் ஆய்வாளர் J Jeganaathan எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் 1991ல் முதன் முதலாக இந்திய அரசாங்கமானது தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்தது. 

"தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் இந்திய தேசியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாலும், புலிகள் தொடர்ந்தும் இந்திய எதிர்ப்புணர்வைக் கொண்டுள்ளதாலும் இது ஒரு 'சட்ட ரீதியற்ற அமைப்பாக' உள்ளதாலும் புலிகள் அமைப்பால் திடீர் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் நீட்டிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என இந்திய உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. 
சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு இந்திய உயர் மட்ட அரசியற் தலைவர்களும், இராஜதந்திரிகளுமே பொறுப்பாளிகள் என்ற கருத்துப்பட இணையங்கள் ஊடாக ஆக்கங்களைப் பிரசுரித்து சிறிலங்காத் தமிழர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்புணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும்; நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் செயற்படுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. 

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மீதான தடையை மேலும் நீட்டிப்பது என இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது இரு அடிப்படைக் கேள்விகளை எழுப்பியுள்ளது. 

அதாவது தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் தடை நீட்டிப்புக்கான அடிப்படைக் காரணம் என்ன? இதன் மூலம் ஏற்படவல்ல உள்ளக, இருதரப்பு மற்றும் அனைத்துலக ரீதியான தாக்கங்கள் எவை? என்பனவே அவ்விரு வினாக்களுமாகும். 

'நல்ல சாத்தானுக்குள்' குடிகொண்டுள்ள 'பேயானது' இந்திய பாதுகாப்புக்கு தற்போதும் அச்சுறுத்தலை விளைவிப்பதாக கருதியே இந்திய அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது. 

புலிகள் அமைப்பானது நீண்ட காலமாக இந்திய இறையாண்மைக்கும், பிராந்திய ஒருமைக்கும் தீங்குவிளைவிக்கவில்லை. புலிகள் அமைப்பின் அனைத்துலக கிளையானது தற்போது வித்தியாசமான கட்டமைப்புடன் செயற்படுகின்ற போதிலும் கூட அதன் தலைமைத்துவத்தின் ஆளுமைக் குறைபாடு காரணமாக இதனால் தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தை மிக இலகுவாக கவர்ந்து கொள்ள முடியாது. 

இந்திய அரசாங்கமானது புலிகள் அமைப்பின் அனைத்துலக வலைப்பின்னல் தொடர்பில் கவனம் செலுத்தினால், உண்மையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு மீதான தடை கேள்விக்குரியதாகலாம். ஏனெனில் தற்போது புலிகளின் அனைத்துலக வலையமைப்பு வேறுபட்ட பெயருடன் செயற்பட்டு வருகின்றது. 

சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், தமிழ்நாட்டில் செயற்படும் புலி ஆதரவுக் கட்டமைப்பை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. இதனால் புலி ஆதரவு அமைப்புக்கள் மீதான குற்றச்சாட்டும் வலிதற்றதாகிறது. 

தமிழ்நாட்டில் செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள், இதற்கு முன்னர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தின் கைகளில் அகப்படாமல் மிக வெற்றிகரமாக தப்பித்துக்கொண்டன. இந்த முறைமை தொடர்ந்தும் நடைமுறையிலிருந்தால், யுத்தமானது மிகக் குறுகிய காலத்தில் நிறைவுக்கு கொண்டுவரப்பட முடியாது. அண்மைக்காலத்தில், தமிழ்நாட்டில் மாவோயிஸ்ட்டுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புலிகள் அமைப்பு மீதான இந்திய அரசாங்கத்தின் தடைநீடிப்பானது எதனை நோக்காகக் கொண்டுள்ளது? புலிகள் தொடர்பான வழக்குகள் முடிவடையும் வரை, இந்தியப் பாதுகாப்புக்கு புலிகள் மீதான தடை அவசியமானதாக காணப்படுகிறது. இந்தியாவின் உள்ளக ரீதியாக நோக்கில், இத்தடையானது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தொடர்பான வழக்கு விசாரணையில் நீதியை எட்டி, அதனுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை இனங்கண்டு, தண்டனை வழங்குவதற்கு உதவுகின்றது. 

இத்தடை காரணமாக புலிகள் அமைப்பானது தனக்கான வளங்களை பெற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுகளையும் பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவின் அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் புலிகள் அமைப்பு தலையிடாததன் பின்னர், தற்போது புலிகள் அமைப்பு மீதான தடையானது அத்தியாவசியமற்ற ஒன்றாக மட்டுமல்ல, எதிர் விளைவையும் ஏற்படுத்தாது. 

இத்தடை நீட்டிப்பானது பிரபாகரனின் கொலை அறிவித்தல் மீது பல்வேறு வதந்திகளை ஏற்படுத்துவதுடன், புலிகள் அமைப்பு மீள்எழுகை கொள்கின்ற செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. 

புலிகள் மீதான தடை நீட்டிப்பானது சட்ட ரீதியற்ற செயற்பாடுகள் சட்டத்தின் கீழ் இந்திய எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிருப்தியை உண்டுபண்ணுவதுடன், இந்திய அரசாங்கம் தற்போது இந்நீட்டிப்பின் மூலம் அரசியலைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்கின்ற நிலையை உருவாக்கும். புலிகள் அமைப்பால் இந்திய தேசிய பாதுகாப்புக்கு மிகப் பலமான அச்சுறுத்தல் காணப்படவில்லை என்பது தெளிவான விடயமாகும். இந்நிலையில் தடை நீட்டிப்பானது இந்திய அரசியலில் சாத்தியமான உந்துதலை ஏற்படுத்தும் எனக் கருதமுடியாது. 

தமிழ்நாட்டு அரசியலை தமிழ்த் தேசியவாதம் மற்றும் மொழிசார் அடையாளங்களிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒரேதளத்தில் நின்று செயற்படாவிட்டாலும் கூட, சிறிலங்காத் தமிழர் விவகாரம் தமிழ்நாட்டில் செயற்படும் அனைத்துக் கட்சிகளினதும் பொதுவான நிகழ்ச்சி நிரலாக காணப்படுகின்றது. 

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், சிறிலங்காத் தமிழர்களின் சமூக-அரசியல் பிரச்சினை தொடர்பாக உரத்துப் பேசுகின்ற போதிலும் கூட, தமிழ்நாட்டின் அகதிமுகாங்களில் வாழும் இதே சிறிலங்காத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையாகும். இதுவே சிறிலங்காத் தமிழர் விவகாரம் தொடர்பான தமிழ்நாட்டு அரசியலின் உண்மை நிலைப்பாடாகும். 

தமிழீழ ஆதரவாளர் அமைப்புக்கு [TESO] மீண்டும் புத்துயிரளிப்பது தொடர்பாக இந்திய ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திட்டமிட்ட போது, புலிகள் மீதான தடை நீட்டிப்பு தொடர்பான தகவலும் வெளிவந்தது. 

சென்னையிலுள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி பெற்றுவரும் சிறிலங்கா இராணுவ வீரர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்புமாறு கோரி தற்போது தமிழ்நாட்டை ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர், இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். 

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகமோ அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமோ, தமிழீழ விடுதலைப் புலிகளையோ அல்லது அதன் தலைவர்களையோ ஆதரிக்கும் கட்சிகளல்ல. இவ்விரு கட்சிகளும் சிறிலங்காத் தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை மனிதாபிமானத் தளத்தில் நின்று ஆதரிக்கின்றன. அத்துடன் மிகக் கொடிய சிறிலங்கா அரசாங்கத்தை இவை எதிர்த்து நிற்கின்றன. 

சிறிலங்காத் தமிழர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியலை இந்திய மத்திய அரசானது தவறாக விளங்கிவைத்துள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும், அதன் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் மீது சுமத்தப்பட்ட மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் இந்திய மத்திய அரசானது போதியளவில் கவனம் செலுத்தவில்லை என்பதன் பெறுபேறாகவே தற்போது தமிழ்நாட்டு தமிழ் மக்கள், சிறிலங்காத் தமிழ் மக்களின் பிரச்சினையை ஆதரித்து ஒன்றுதிரண்டுள்ளனர். 

சிறிலங்கா இராணுவப் படைகளால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பல்வேறு படுகொலைகள் மற்றும் ஏனைய யுத்த கால மீறல்களை தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து ஓரணியில் திரண்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் இந்திய தேசியவாதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தேர்தல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆனால் அதேவேளையில், சிறிலங்கா விவகாரம் மட்டுமல்ல, முல்லைப்பெரியார் அணை விவகாரம், காவேரி நீர் வழங்கல் விவகாரம் மற்றும் கூடங்குள விவகாரம் போன்றவை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மாறுபட்ட, நீதியற்ற முறையில் நடந்து கொள்வதை இந்திய தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்து நிற்பதுடன், இவ்வாறான விடயங்களில் நீதி வேண்டி ஒத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment