காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக மாறும் ........?

இனக் கலவரத்தை உண்டு பண்ணுமாநில அபகரிப்பு
உயிர்வாழ இடம்தேடி அலையும் தமிழ் மக்கள், இடப் பெயர்வின் போது தாங்கள் வாழ்ந்த நிலத்தினை மீட்கமுடியாமல் தவிக்கின்றனர். சிறுகச் சிறுக வியர்வை சிந்தி இன்றும் உழைத்த உழைப்பில் வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்டு அநாதரவாகக் கைவிடப்பட்ட தமிழர்களுக்கு கைகொடுக்க எவர் வருவார். தமிழர் அரசியல் பேசும் உலகம், தமிழர் விடயத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பார்வையில் தமிழர் பிரச்சினையை என்னவென்று பார்க்கிறார்கள். ஒன்றுமே செய்யமுடியாமல் இருப்பதால்தான் நில அபகரிப்புத் தொடர்கிறது. இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகிறது. இந்தக் காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டும் தடுப்பதற்கான எந்த முயற்சியையும் அரசு மேற்கொள்ள வில்லை என்பது கவலைக்கிடமான விடயமாகும். 


விடுதலைப்புலிகள் நில மீட்புக்காகவே போராட்டத்தினை நடத்தியவர்கள். போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் தமிழர் நிலங்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது. இப்பொழுது தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனித்திருக்கும் நிலையில் சிங்கள அரச படைகள் நில அபகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நில அபகரிப்பின் மூலம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் படையினர் தமது முகாம் விஸ்தரிப்புக்கும் பயன்படுத்துகின்றனர். காலப்போக்கில் இந்த நில அபகரிப்பில் பறிபோன நிலங்களை மீட்க முடியாமல் தமிழர்கள் நிர்க்கதியாக நிற்பார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. பறிபோன நிலங்களை மீட்பதற்கான எந்த முயற்சியும் இன்றி தமிழர்கள் மேலதிகமாக உள்ள நிலங்களையும் பறிகொடுக்கவுள்ளனர். தாம் வாழ சிறுதுண்டு நிலம் இல்லாமல் கஷ்டப்படும் தமிழ் மக்களுக்கு சிறு துண்டு நிலத்தினை வழங்க மறுக்கும் அரசு எப்படி தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கப் போகிறது என்பது கேள்விக்குறியே. 



திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் தமிழ் பேசும் விவசாயிகளுக்குச் சொந்தமான வயற்காணிகளைப் தமது இஷ்ரப்படி கையகப்படுத்தி அவற்றின் ஊடாகப் புதிய வீதியொன்றை விமானப்படையினர் அமைத்து வருகின்றனர். திருகோணமலை பிரதான வீதியுடன் இணைக்கும் வகையில் இந்த புதிய வீதி அமைப்புப் பணி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக பொதுமக்களின் பெருமளவு வயற்காணிகளை எந்தவித சட்டநடைமுறைமைகளுமற்ற முறையில் கையகப்படுத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வயல் உரிமையாளர்களுக்கு உரிய அறிவித்தல் எதுவும் தரப்படவில்லை. அவர்களின் கருத்துக்கள் செவிமடுக்கப்படவில்லை. காணி சுவீகரிப்புக்கான சட்ட நடவடிக்கைகளோ நஷ்டஈடு வழங்கல் ஏற்பாடுகளோ மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இவ்வாறு வயற்காணிகளுக்கு நடுவே மண்நிரப்பி வீதியை அமைத்தால் பெருமளவு வயற்காணிகள் வெள்ளம் தேங்கி அழியும் நிலை உருவாகும். சுற்றுச் சூழல் சட்டவிதிகளும் பின்பற்றப்படாமல் நடவடிக்கைகள் அதிகாரிகளினால் தமது இஷ்ரப்படி முன்னெடுக்கப்படுகின்றன. 



அம்பாறை மாவட்டத்தில் கடற்படையினரும் விசேட அதிரடிப் படையினரும் சேர்ந்து சட்டவிரோதமாக பொதுமக்களின் காணியை சுவீகரிக்கின்றனர். விவசாயிகளுக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கும் உரிய இந்தக் காணிகள் இராணுவக் கிராமம் ஒன்று "கடற்படைத் தளத்மொன்று' ஹோட்டல் ஒன்று அமைப்பதற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிலைமையால் அந்தப் பிரதேசத்தில் விவசாயத்தினை ஜீவனோபாயத் தொழிலாக மேற்கொண்டு வரும் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி செய்தியாளர் மாநாடு ஒன்றினை கூட்டி கருத்தொன்றினையும் வெளியிட்டுள்ளது. ஆனாலும் படையினரின் நில அபகரிப்பைத் தடுக்க முடியாது இருப்பது, இலங்கை அரசியல் வரலாற்றில் எப்போதுமே இடம்பெறாத ஒரு செயற்பாடாகும். அரச காணிகள் என்று தெரிவித்து கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கிக் கொண்டு தனியார் காணிகளையும் கையகப்படுத்தும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபடும் படையினர்' மீண்டும் இலங்கையில் ஒரு இனக்கலவரத்தை உண்டு பண்ண முயற்சிக்கிறார்களா? என்ற எண்ணமே தமிழ் பேசும் மக்களிடையே தோன்றியுள்ளது. 



காலப்போக்கில் இந்த விடயம் தொடர்பில் காத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் நிலங்களை அபகரிக்கும் படையினர் சிங்கள மக்களின் ஒரு சிறுதுண்டு நிலத்தினைக்கூட கையகப்படுத்த விரும்பவில்லை. இதனால் இன ரீதியான பாகுபாடு மக்களிடையே தோன்றக் கூடிய ஏதுவான காரணியாக நில அபகரிப்பு அமையப் போகிறது என்பது கவலைதரும் விடயமாகும். இந்த நில அபகரிப்புத் தொடர்பில் இலங்கை அரசு எந்தவிதமான நடவடிக்கைளையும் மேற்கொள்ளாது பார்த்துக் கொண்டிருப்பது இலங்கைக்குள் இருநாடு இருப்பது போன்றதான எண்ணப்பாட்டை வெளிக்காட்டி இருக்கிறது. 



இலங்கையில் 1800களின் மத்தியிலும் கடைக்கூற்றிலும் பௌத்த மறுமலர்ச்சி அந்நியமானவற்றிற்கு எதிர்ப்பு என்ற போர்வையில் சிங்கள பௌத்த பேரின வாதமாக உருவெடுத்தது. இதனை வளர்த்தெடுத்தவர்கள் "இலங்கை மண்ணின் மைந்தர்கள் சிங்கள பௌத்தர்களே எனவும் மற்றையோர் தம்மை ஒடுக்கவந்தவர்கள் என்றும் பிரகடனப்படுத்தினர். இன்றுவரை பேரினவாதம் அதே கொள்கையுடன் இருப்பதால்தான் தமிழர்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கான ஒரு நடவடிக்கையாக நில அபகரிப்பினை மேற்கொண்டுள்ளது. இந்தக் கொள்கை வெளிப்பாடு தமிழர் எதிர்ப்பாகப் பின்னர் பரிணமித்திருந்தது. இந்த எதிர்ப்பு 1915 ஆம் ஆண்டில் வன்முறையாகச் செயல் வடிவம் எடுத்தது. அன்று தமது ஏகாதிபத்திய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என இனங்கண்டு கொண்ட ஆங்கிலேயர்கள் மிகவும் கொடுமையான வகையில் கலவரத்தை அடக்கினர். சிங்களத் தலைவர்கள் சிறையிடப்பட்டனர். 



சிங்களத் தலைவர்களுக்காக அன்று சேர்.பொன் இராமநாதன் வாதாடி அவர்களது விடுதலையைப் பெற்றுக்கொடுத்தார். என்பது தமிழனின் பெரும் தன்மையை வெளிப்படுத்தி இருந்தது. ஆனால் இன்றைய சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுப்பதற்கு முன்வரவில்லை. சிங்கள பௌத்த தேசியவாதிகள் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்துகொண்டனர். இந்தச் சமரச ஏற்பாட்டின் ஆணி வேராகச் செயல்பட்டவர் சேர்.பொன். இரா மநாதன். இந்த நம்பிக்கை இன்றும் சிங்களவர் மத்தியில் நிலவுவது துரதிஷ்டவசமான உண்மையாகும். இந்த நிலைமையே சிங்களவர் மனதில் இன்றும் மூன்று தசாப்த போர் நடந்து முடிவடைந்தும் மாறாமல் இருக்கிறது என்பது வேதனை தரும் விடயமாகும். அன்று தமிழ் பேசும் மக்கள் தம்பலகாமம் பொத்தனையில் 4000 ஆயிரம் ஏக்கர் காணியில் விவசாயத்தைச் செய்துவந்தனர். கந்தளாய்க் குடியேற்றம் ஏற்படுத்தப்பட்ட போது 1954 ஆம் ஆண்டு இந்த இடங்களில் வாழ்ந்து வந்த தமிழ் பேசும் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு சிங்களவர் குடியேற்றப்பட்டனர். 1967 ஆம் ஆண்டு வண்ணாத்திப்பாலம், கற்குழி, வன்னாறு ஆகிய பகுதிகளிலும் இதுவே நடைபெற்றது. மேலும் பௌத்த கலாசாரம் புனரமைப்பு என்ற போர்வையிலும் நில அபகரிப்பு நடந்தேறிவருகிறது. 



பௌத்த மத கலாசார புனரமைப்பு என்பது அப்பட்டமான பௌத்த சிங்கள பேரினவாதத்தின் ஓர் தந்திரமேயாகும். சிதைவுச் சின்னங்களை சூழவரவுள்ள பிரதேசங்களின் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. பொய்யான சரித்திரச்சான்று கலந்து கற்பனையில் உதித்த பௌத்த மத சிதைவுகளும் தோற்றுவிக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுகின்றன. சொந்த மண்ணிலே தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு தமிழ் பேசும் மக்கள் துரத்தப்பட்டு அகதிகள் ஆக்கப்பட்டுள்ளனர். இதேபோன்ற நிகழ்வுதான் ஜோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த பாலஸ் தீனியர்களுக்கும் ஏற்பட்டது. நிலப்பறிப்பு ஒடுக்குமுறையின் ஒரு வடிவம். வடக்குத் தமிழர்களை அரசியல் அந்தஸ்த்தை இழக்க வைப்பதற்கும் ஒட்டாண்டிகளாக்குவதற்கும் இந்த வடிவம் சிங்களத் தலைமைகளால் மேற்கொள்ளப்படுகிறது. 



நில அபகரிப்பு தொடர்ந்துகொண்டே இருக்குமாயின் மறுபடியும் இலங்கையில் இனக் கலவரத்தினை எதிர்பார்க்க முடியும். மூன்று தசாப்த போரில் பல உயிர், சொத்து இழப்புக்களை எதிர்கொண்ட இலங்கையில் மீண்டும் இப்படியான ஒரு நிலைமை வருமாயின் எஞ்சியிருப்பவர்களே காணாமல் போகும் நிலைமை ஏற்படும். ஆகவே தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பினை மேற் கொள்ளும் சிங்கள அரசு சிந்தித்து செயற்படுமாயின் இலங்கையில் மீண்டும் ஓர் இனக்கலவரத்தினை ஏற்படாமல் தடுக்கமுடியும். இல்லாதுபோயின் நில அபகரிப்பு நில மீட்புக்கான போராட்டமாக உருவெடுத்து அது காலப்போக்கில் ஆயுதப் போராட்டமாக மாறும் என்பது வரலாறு தந்த பாடம். மூன்று தசாப்த போர் இதன் விளைவினாலே ஏற்பட்டது என்பது எவராலும் மறுக்க முடியாது. எனவே கடந்த கால துன்ப நிகழ்வுகளை நினை வில் கொண்டு மீண்டும் இலங்கையில் ஒரு ஆயுதப் போராட்டத்தினை உருவாக்காமல் தடுப்பதற்கு இந்த நில அபகரிப்புக்கு ஒரு முடிவினை அரசு கொண்டுவர வேண்டும்.


நன்றி - உதயன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment