ஆட்சியில் சமபாகத்தை தர முடியாவிடின் 5 கிராமங்களையாவது வழங்குங்கள் அதுவும் இயலாது என்றால் 5 வீடுகளையாவது தாருங்கள் என்று பாண்டவர்கள், கிருஷ்ண பரமாத்மாவை தூது அனுப்பி துரியோதனாதியர்களான கௌரவர்களுடன் கேட்ட போது , ஊசி நிலமும் தர மாட்டோம் என்று கௌரவர்கள் உறுதியாகக் கூறி கிருஷ்ணனை திருப்பி அனுப்பி விட்டதாக இந்துக்களின் இதிகாசமான மகா பாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் தங்களைத் தாமே நிர்வகிக்கக் கூடிய மாகாண சுயாட்சி உரிமையையாவது வழங்குங்கள் என்று அந்த மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்து வரும் கோரிக்கையும் 5 ஊர்களையாவது தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் உரிமையை வழங்க வேண்டுமென்ற தொனியிலேயே இருக்கின்றது.
அதாவது காணி, பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கியமான விவகாரங்களை கொழும்பு மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்து இன நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காணுமாறு வலியுறுத்தி வருகின்றது. ஆனால் இந்தக் கோரிக்கைகளுக்கு பிரிவினைவாதச் சாயத்தை சிறப்பான முறையில் மெருகூட்டி நிராகரிக்கும் போக்கே ஆளும் தரப்பிடம் அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. பொலிஸ் அதிகாரம் ஒரு போதும் வழங்கப்பட போவதில்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அதே சமயம் வட மாகாண சபைக்கான தேர்தலை 2013 செப்டெம்பரிலேயே நடத்தப் போவதாகவும் அதற்கான வேலைத் திட்டங்களை படிப்படியாக மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆயுள் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் செப்டெம்பரில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வட மாகாண சபைக்கு தேர்தலை நடத்துவதற்குப் புதிய வாக்காளர் இடாப்பில் தங்கியிருக்க வேண்டியிருப்பதாலேயே வடக்குத் தேர்தலுக்கு காலதாமதம் ஏற்படுகின்றது என்பது அரசாங்கத் தலைவரின் நிலைப்பாடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த காரணத்தை உடனடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்திருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் , பாராளுமன்றத் தேர்தல் , உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தியிருக்கும் நிலையில் வட மாகாண சபைக்கான தேர்தலை மட்டும் நடத்துவதற்கு வாக்காளர் இடாப்பை காரணம் காட்டுவதை நகைப்புக்கிடமான விடயமென்று தமிழ்க் கூட்டமைப்பின் சிரேஷ்ட எம்.பி.க்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கும் அதே சமயம் அங்கு தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண நிர்வாகத்தை கைப்பற்றி விடும் என்றும் அதனால் ஏற்கனவே வடக்கில் கையகப் படுத்தப்பட்டிருக்கும் தனியார் நிலங்கள் தொடர்பாக சங்கடமான நிலைமை ஏற்படும் என்பதால் வட மாகாண சபைக்கு தேர்தலை அரசு நடத்தாமல் இழுத்தடிக்கிறது என்பதும் சுரேஷின் வாதமாக காணப்படுகிறது.
அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் என்பன ஏற்கனவே சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 24 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அவை ஒரு போதுமே அமுல்படுத்தப்படவில்லை என்பது அதாவது அவற்றை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கங்கள் மறுத்து வருகின்றன என்பது புதியதொரு விடயமல்ல.
யாவற்றுக்கும் மேலாக அரசியல் தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் இருப்பதாக எப்போதுமே ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்கள் கூறிவருகின்ற போதிலும் அது தொடர்பாக ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பதில்லை. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதற்கு தயார் என்று அறிவித்திருந்த ஜனாதிபதி இப்போது அந்த “அப்பால் செல்வது’ என்பது பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையான செனட் சபையே என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செனட் சபையானது இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட முதலாவது அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட்டிருந்து பின்னர் 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது இல்லாமல் செய்யப்பட்ட தொன்றேயாகும்.
இந்தத் தீர்வு விடயங்கள் யாவற்றுக்குமே சர்வதேச நிவாரணியாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவே இருப்பதாகவும் அதனூடாகவே எந்தவொரு தீர்வும் வெளிவர வேண்டும் என்றும் ஜனாதிபதியும் அரசாங்கமும் கூறிவருகின்ற போதிலும் பல தசாப்தங்களாக எத்தனையோ உடன்படிக்கைகள், ஆணைக் குழுக்கள், பாராளுமன்றக் குழுக்கள் என்பனவற்றை பார்த்து விட்டோம் எவையுமே ஆக்கபூர்வமான பெறுபேறுகளை ஏற்படுத்தியிருக்காத நிலையில் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் பெறுபேறு தொடர்பாகவும் நம்பிக்கையில்லை என்று தமிழ்க் கூட்டமைப்பு கூறிவருகிறது. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களின் மைத்துனரான கிருஷ்ணரின் பாத்திரத்தை இந்தியா வகிக்கிறதா? அல்லது தமிழகத்திலுள்ள ம.தி.மு.க. , விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க.,நாம் தமிழர் அமைப்பு போன்றவற்றின் பார்வையிலுள்ள துரியோதனாதியர்களின் சகுனி மாமன் பாத்திரத்தை கொண்டுள்ளதா என்பது ஒரு புறமிருக்க இலங்கைத் தமிழ் மக்களின் கண்களுக்கு குறிப்பாக தமிழ்க் கூட்டமைப்பின் பார்வையில் இந்தியா இப்போதும் கிருஷ்ண பரமாத்மாவாகவே நோக்கப்படுவது வெளிப்படையானதாகும்.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் 6 ஆவது தடவையாக கொழும்புக்கு வருகை தந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் , ஜனாதிபதியுடனும் அவரின் இரு சகோதரர்களுடனும் நடத்திய பேச்சு வார்த்தையின் போது தரப்பட்ட உறுதி மொழிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லாவிடில் எம் மீது குறை சொல்லாதீர்கள் என்று கருத்துப்பட கடும் தொனியில் கூறியிருந்ததாக தமிழ்க் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருக்கிறார். தீர்வொன்றைக் காண்பதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்கவில்லையென அரசாங்கம் கூறி வருகின்றபோதும் இராஜதந்திர நகர்வுகளின் உள் விடயங்கள் யாவற்றையும் வெளியில் கசிய விட முடியாது என்றும் சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். நியாய பூர்வமான தீர்வை வழங்குமாறு இந்தியா உட்பட சர்வதேச சமூகத்தால் அழுத்தம் கொடுக்க முடியுமே தவிர தீர்வை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சார்ந்ததாகும். ஆனால் அதற்கான சாதகமான சமிக்ஞைகள் எதுவும் இதுவரை அரசாங்கத்திடமிருந்து வெளி வரவில்லை என்பதே யதார்த்தம்.
நன்றி - தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment