இந்திய இலங்கை ஒப்பந்தம் வெற்றியா தோல்வியா? கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன


இலங்கையில் தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக எதிர்கொண்ட பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும் அந்த ஒப்பந்தம் வெற்றியா அல்லது தோல்வியா என்கிற கேள்விகள் இன்றும் தொடருகின்றன.
எனினும் அந்த ஒப்பந்தம் இன்றளவும் இந்தியாவின் மிகப்பெரிய ராஜந்திர தோல்வி என்றே விமர்சிக்கப்படுகிறது.
இந்தியாவின் முன்னெடுப்பில் உருவாகி, ராஜீவ் காந்தி-ஜெ ஆர் ஜெயவர்தன ஆகியோரிடையில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதை நடைமுறைபடுத்த எத்தரப்பும் முழுமையாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டு இன்னும் உள்ளது.

"புலிகளும் பிரேமசாசவும் ஒத்துழைக்கவில்லை"

தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் இலங்கைத் தரப்பில் அதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதே போல தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமனதை அடுத்து தமிழகத்திலும், புதுடில்லியிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்தியத் தரப்பால், அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த, இலங்கை மீது போதிய அழுத்தங்களை கொடுக்க முடியவில்லை என்று கூறுகிறார், இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வு பிரிவுக்கு தலைவராக இருந்த கர்ணல் ஹரிஹரன்.

13 ஆவது திருத்தச் சட்டம்

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதை தவிர பெரும்பாலும் அந்த ஒப்பந்தம் தோல்வியே அடைந்தது என்றும் ஹரிஹரன் கூறுகிறார்.
எனினும் அந்த ஒப்பந்தம் இறந்து போகவில்லை என்றும், அப்படி அது இறந்து போகவும் முடியாது என்றும் கூறும் சம்பந்தர், இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்துவது இந்தியாவின் கடமை என்றும்,அதிலிருந்து இந்தியா தவறக் கூடாது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்தியா விடுதலைப் புலிகளைசுலபமாக வழிக்கு கொண்டுவந்து விடமுடியும் எனக் கருதியது என்றும், அந்தக் கணிப்பீடு தவறாகச் சென்றதும், ஒப்பந்தம் செயலிழந்து போனதற்கு ஒரு முக்கிய காரணம் எனவும் ஹரிஹரன் கூறுகிறார்.
இந்தியாவின் புலனாய்வு அமைப்புகள் புதுடில்லிக்கு சரியான கணிப்பீடுகளை வழங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியா என்ன செய்யப் போகிறது?

13 ஆவது அரசியல் சாசனத் திருத்தம் மட்டுமே முழுமையான அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்தை அளிக்காது என்றும், அந்தக் கருத்தில் இப்போதும் எந்த மாறுதலும் இல்லை என்றும் சம்பந்தர் கூறுகிறார்.
எனினும் இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், அதற்கு மேலே சென்று அதிகாரப் பகிர்வை அளிப்பதாகக் கூறும் இலங்கை அரசு அதை மனப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் ஆதரவு அளிக்கும் எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

பி பி சி 
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment