கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவதற்கு இலங்கை அரசு இன்னமும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத மேற்குலக இராஜதந்திரியொருவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனைகளைப் பெறும் எல்லைக்குள்ளேயே அரசு நின்றுகொண்டிருக்கிறது என்றும், அதற்கும் அப்பால் சென்று பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் விடயத்தில் அது அசமந்தப்போக்கைக் கடைப் பிடித்துவருகின்றது என்றும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான அணுவிஞ்ஞானி அப்துல் கலாமை அழைத்து வந்து இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்து, மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்தினாலும் அதில் நம்பத்தகுந்த முன்னேற்றம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகின்றது.
அத்துடன், 13ஆவது அரசமைப்பு அமுலாக்கம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் ஆகியன ஆணைக்குழுவின் பரிந்துரைகளுள் முக்கியமானவையாக இருந்தாலும், இவற்றை அமுல்படுத்துவதற்கு அரசு முன்வரத் தயங்குகின்றது எனச் சுட்டிக்காட்டும் உள்நாட்டு அரசியல் ஆய்வாளர்கள், தீர்வை நோக்கிப் பயணிக்கவேண்டிய தருணத்தில் அரசு காலத்தை இழுத்தடிக்கும் கைங்கரியத்தைப் பின்பற்றிவருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் ஆணைக்குழுவின் விதப்புரைகளை விரைந்து அமுல்படுத்துமாறே பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இது விடயத்தில் அரசு அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை என்றே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமன்றி, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த இலங்கை அரசு முன்வராமையானது, அதற்கு நவம்பரில் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை மீளாய்வுக் கூட்டத்தொடரில் பாரிய நெருக்கடியாக அமையுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை மூன்று கட்டங்களாகப் பிரித்து அவற்றைப் படிப்படியாக நிறைவேற்றுவோம் என்றும், அறிக்கையிலுள்ள அனைத்து விதப்புரைகளையும் அமுல்படுத்த முடியாது என்றும் அரசதரப்பு கூறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment