பலாலி விமானப்படைத் தளம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றின் விஸ்தரிப்புக் கருதி அவற்றைச் சுற்றியுள்ள காணிகளை அரசு சுவீகரிக்கும் என யாழ். மாவட்டப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்த பிரிட்டன் தூதுவர் ஜோன் ராப்கீனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே தளபதி ஹத்துருசிங்க இப்படிக் கூறியிருந்தார் என்று பலாலி பாதுகாப்பு இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
பலாலி விமானப் படைத்தளத்தைச் சுற்றியுள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தியத்தலாவ இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இலங்கை ராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் யாழ். மாவட்டப் படைத்தளபதி பிரிட்டன் தூதுவரிடம் இப்படித் தெரிவித்துள்ளார்.
பலாலி விமானப் படைத்தளம், காங்கேசன் துறைமுகம் ஆகியவற்றைச் சுற்றி அரச காணிகள் எவையும் இல்லை என அரச அதிகாரிகள் ஏற்கனவே உறுதிப் படுத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில் மேற்படி பகுதிகளின் விஸ்தரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது இந்த இரு இடங்களிலும் விஸ்தரிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்காக இவற்றைச் சுற்றியுள்ள காணிகளைப் பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகம் சுவீகரிக்கும் என மஹிந்த ஹத்துருசிங்க பிரிட்டன் தூதுவரிடம் கூறியுள்ளார்.
தூதுவருடனான பேச்சின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ். குடாநாட்டு மக்களின் காணிகளைச் சுவீகரித்து அவற்றில் இராணுவ முகாம்களை அமைக்கும் நோக்கம் எமக்கு இல்லை. போரின் போது தனியார் காணிகளில் முகாம்களை அமைத்த படையினர் தற்போது மீண்டும் அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகின்றது. தற்போது இங்குள்ள படையினர் மக்களின் நலன்புரி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கே உதவியளித்து வருகின்றனர்.
இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் போன்று தேசிய பாதுகாப்புக்கு படையினர் கட்டாயம் தேவை. அவ்வாறு தேவைப்படும் படையினரே இங்குள்ளனர். அவர்களும் எதிர்காலத்தில் குறைக்கப்படக்கூடும்.
எப்படியிருந்த போதிலும் 1980 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட நிலைமை மீண்டும் உருவாக இராணுவம் ஒருபோதும் இடமளிக்க மாட்டாது என்று கூறினார்.
கடந்த திங்கட்கிழமை காலை பலாலி படைத் தலைமையகத்தில் பிரிட்டன் தூதுவருக்கும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதிக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது யாழ். மாவட்டத்தில் படையினரின் செயற்பாடுகள் குறித்து தூதுவர் இராணுவத் தளபதியிடம் விரிவாகக் கேட்டறிந்துள்ளார். இதன்போதே இந்தக் காணி சுவீகரிப்புத் திட்டம் குறித்து ஹத்துருசிங்க தூதுவரிடம் விளக்கியுள்ளார்.
இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 30 வருட காலமாகச் சொந்த இடங்களுக்குத் திரும்பமுடியாத நிலையில் உள்ளனர். தமது பகுதிகள் எப்போது விடுவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் மீள்குடியமர்வை எதிர்பார்த்து அவர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இராணுவத் தளபதி இவ்வாறு தெரிவித்திருக்கின்றமை அப்பகுதி மக்கள் சொந்த இடம் திரும்பமுடியாத நிலையையே உண்டுபண்ணும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள் :
Post a Comment