தமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலையும் கருத்து ரீதியாக எதிர்கொண்டு பதில் கூறாமல், அவரது பிறப்பை இனங்கண்டு, அவரை ‘கன்னடர்’ எனத் தூற்றுகின்றனர்.
பெரியாரை மட்டுமின்றி, தமிழினத் துரோகிகளாக விளங்கும் கருணாநிதி, தங்கபாலு உள்ளிட்ட பலரையும் ‘தெலுங்கர்கள்’ எனத் தூற்றி, அவர்கள் செய்த துரோகங்கள் அனைத்தும் அவர்களது பிறப்பினால் மட்டுமே வருவது போலப் பேசுகின்றனர். ‘தமிழ்ச்’ சாதியில் பிறந்த ப.சிதம்பரம், பா.ம.க. இராமதாசு, தனியரசு, தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் தமிழராய்ப் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே என்ன செய்து கிழித்துவிட்டனர் என அவர்கள் யாரும் அலசி ஆராய முற்படுவதில்லை.
ஒருவரின் நடைமுறைச் செயல்பாடுகளில் உள்ள தமிழினத் துரோகச் செயல்களைப் பட்டியலிட்டு விமர்சிக்காமல், அவர் பிறந்த சாதி எது என ஆராய்ச்சி செய்து தூற்றுகின்ற ‘மனுதர்மப்’ போக்கு சிலரால் முன்வைக்கப்படுகிறது. மனுதர்மப் பார்வையுடன் பேசித் திரியும் இப்போக்காளர்களை, தமிழ்த்தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்துபவர்கள் உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருக்க முடியும்.
ஏனெனில், ஆரியப் பார்ப்பனிய மனுதர்மத்தையும், சாதியையும், அதன் இன்றைய கருத்தியல் வடிவமான இந்தியத் தேசியத்தையும் தன் பிறப்பிலேயே மறுதலிப்பது தான் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல் ஆகும். தமிழ்–தமிழினம் என பேசிக் கொண்டு திரிபவர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியர்கள் என பொதுமைப்படுத்தி அடையாளப்படுத்தத் தொடங்கினால், தமிழினத் துரோகி கருணாநிதியைக் கூட எளிதில் “தமிழ்த்தேசியர்” என அடையாளப்படுத்தி விடலாம்.
ஆக, வெறும் மொழிப்பற்றையும், இனப்பற்றையும், ஒரு விடுதலைக் கருத்தியலாகக் கருதுவது முற்றிலும் தவறானது. தமிழ்த் தேசியம் என்ற விடுதலைக் கருத்தியல் வெறும் மொழி - இனப் பற்று கொள்வதை மட்டும் கொண்டதல்ல. மாறாக, முழுமையான மொழி – இன விடுதலைக்குப் பாடுபட மக்களை அணிதிரட்ட முன்வைக்கப்படும் கருத்தியலே தமிழ்த் தேசியம் ஆகும்.
திராவிடக் கருத்தியலை கடுமையாக எதிர்க்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியாரின் சமூகப் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், அவரது தவறான கருத்துகளை சுட்டிக் காட்டி திறனாய்வு செய்கின்றது. இந்தி எதிர்ப்பை மேற்கொண்ட பெரியார், தமிழகத்தில் தமிழை முதன்மைப்படுத்துவதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை முதன்மைப்படுத்தினார். பகுத்தறிவுவாதம் என்ற பெயரில், தமிழர்களின் மரபார்ந்த அறிவியலையும், அறத்தையும் கொச்சைப்படுத்தி மேற்கத்தியவாதத்தை முன்வைத்து செயல்பட்டார். இவ்வாறு பெரியாரின் செயல்பாடுகள் மீது திறனாய்வுகளை முன்வைக்கும் நாம், ஒருபோதும் பெரியாரைக் 'கன்னடர்' என பிறப்பு அடிப்படையில் ஆய்ந்து, இத்திறனாய்வுகளை முன்வைப்பதில்லை.
வரலாற்றுப் போக்கி்ல் தமிழகத்தில், அயல் இனத்தாரின் படையெடுப்பால் பல்வேறு அயல் இனத்தவர்கள் குடியமர்த்தப்பட்டது உண்மையே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இக்குடியேற்றத்தால், இங்கு வசிக்கத் தொடங்கிய அயல் இனத்தார் பல்வேறு சமூகங்களாக, தமிழ்ச் சமூகத்தில் தம்மை இணைத்துக் கொண்டனர்.
தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை வீட்டு மொழியாகக் கொண்டும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாகவும் ஏற்றுக் கொண்டவர்கள் இவர்கள். பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் இவ்வகைச் சமூகத்தினர், தங்களது தாயகத்துடன் முற்றிலும் தொடர்பை இழந்து, தமிழகத்தைத் தம் தாயகமாக ஏற்றுக் கொண்டவர்கள்.
அதேபோல், தம் வழிபாட்டு மொழியாக உருது, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், முகமதியர், கிறித்துவர்களை 'கவனத்துடன்' கையாள வேண்டுமென்கிறது நாம் தமிழர் கட்சியின் ஆவணம். இது இந்துத்துவத்திற்கு நெருக்கமானப் போக்காகும். ஈழ விடுதலையை வலியுறுத்துவது, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொள்வது, முகமதியர்கள் மற்றும் கிறித்துவர்களை சந்தேகப் பட்டியலில் வைப்பது ஆகிய நாம் தமிழர் கட்சியின் மூன்று செயல்திட்டங்களை மட்டும் நாம் இணைத்துப் பார்த்தால், இம்மூன்றையும் தங்களது செயல்திட்டமாக ஏற்றுக் கொண்டு ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டுள்ள, இந்திய மற்றும் இந்துத்துவ வெறியர்களின் கூடாரமான இந்து மக்கள் கட்சிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் குறைவான வேறுபாடுகளையே நாம் காண முடியும்.
நாம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியல், எம்மதத்தவரையும் விலக்கி வைப்பதாகவோ, சந்தேகப் பட்டியலில் வைப்பதாகவோ இயங்கும் கருத்தியல் அல்ல. அனைத்து மதத்தவரையும் உள்ளடக்கிய தமிழ்த் தேசிய இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத் தரும் கருத்தியலே ஆகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த பல போராட்டங்களிலும், இவ்வாறு போலித் தமிழ்த் தேசியர்களால் வேறுபடுத்திப் பார்க்கப்படும் சமூகத்தினர் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர். வீட்டில் தெலுங்கு பேசினாலும், தமிழைத் தம் வாழ்வியல் மொழியாக ஏற்றுக் கொண்ட ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர்களின் அமைப்பான ஆதித்தமிழர் பேரவையினர், ஈழ விடுதலையை முன்வைத்துப் போராடுகின்றனர். பல முசுலிம் மற்றும் கிறித்தவ மத அமைப்புகள் இலங்கையில் போர் நிறுத்தம் கோரி போராடியிருக்கின்றன. அதேபோல, தெலுங்கு நாயுடு, நாயக்கர் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் இன்றும் தமிழர் உரிமை பேசும் பல்வேறு அமைப்புகளில் உறுப்பு வகிக்கின்றனர்.
இச்சமூக மக்களின் பங்களிப்புகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை அரவணைத்து, தமிழ்த் தேச விடுதலை என்ற உயரிய இலட்சியத்தின்பால் அவர்களை அணிதிரட்ட வேண்டியதே உண்மையான தமிழ்த் தேசியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் அச்சமூக மக்களையும், இயக்கங்களையும் அவர்களது பிறப்பு வழி சாதியைக் கண்டுபிடித்து, அதன் காரணமாகவே அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது தமிழ்த் தேசிய விடுதலைக்கு எதிரானது.
தம் வீட்டு மொழியாக அயல் மொழியைக் கொண்டிருந்தாலும், சமூக மொழியாக தாய்தமிழை ஏற்றுக் கொண்ட இச்சமூக மக்களை ஒட்டுமொத்தமாக ‘வடுகர்’ எனக் குறிப்பிட்டு, அவர்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எதிர்க்க வேண்டும் என்ற கருத்தை அறிஞர் குணா முதலில் முன்வைத்தார். தமிழ்ச் சமூகத்தின் வானியல் அறிவு குறித்த பல சீரிய ஆய்வுகளை முன்வைத்த, அறிஞர் குணாவின் இப்பார்வை தவறானது. ஒரு தேசிய இனத்தின் தாயகப்பகுதியில் பல நூற்றாண்டுகளாக தங்கி, அம்மக்களோடு பிணைந்த உளவியலையும், வாழ்வியலையும் பெற்ற மக்களை முழுவதுமாக வெளியேற்றுவது பாசிசமே ஆகும்.
இப்பாசிசக் கருத்தை ஏற்றுக் கொண்ட தமிழர் களம், நாம் தமிழர் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகளும், “எழுகதிர்” அருகோபாலன் போன்ற சிலரும் தான் “தமிழ்த் தேசியம்“ என்ற பெயரில் இத்தவறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஆரியத்தின் தென்னாட்டுக் கிளையான திராவிடத்தை மட்டுமே இவர்கள் குறிவைத்து சாடுகிறார்களே ஒழிய, தமிழர்களின் முதன்மையான எதிரியான ஆரியப் பார்ப்பனிய இந்தியத் தேசியத்தை விட்டுவிடுகிறார்கள்.
‘தமிழனை தமிழனே ஆள வேண்டும்’ என்று கூறும் இவர்கள், தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் தம்மை அமர வைக்கக் கோருகிறார்கள். இந்திய அரசுக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிப் பதவியான தமிழக முதல்வர் பதவியில், ‘தமிழ்ச் சாதியில்’ பிறந்த இவர்களை அமர்த்தக் கோரும் பதவி அரசியலைத் தான் இவர்கள், ஏதோ இனவிடுதலை அரசியல் போல் முன்வைத்து படம் காட்டுகிறார்கள். இதற்குப் பதில், அப்பட்டமாக, “எங்களை முதல்வராக்குங்கள்” என தே.மு.தி.க., ம.தி.மு.க., போன்ற தேர்தல் கட்சிகளைப் போல் இவர்கள் பரப்புரை செய்யலாம். அதைவிடுத்து, தமிழர் - தமிழ்த் தேசியம் என பேசுவதெல்லாம் வெறும் ஓட்டுகளுக்காகவே ஆகும்.
தமிழ்நாட்டு முதல்வர் பதவியில், “மானத்தமிழன்” அமர்ந்தாலும், மார்வாடி அமர்ந்தாலும் அதன் விளைவாக தமிழ் இனத்திற்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. தமிழீழச் சொந்தங்களை அழித்தொழிக்கும் இலங்கைப் போரை நிறுத்த வேண்டுமென கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தக் கோரும் தீர்மானம், இலங்கை மீது பொருளியல் தடை கோரும் தீர்மானம் என ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு இந்திய அரசின் குப்பைத் தொட்டிக்குள் விழுந்த தீர்மானங்களைப் போல, அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து வெறும் தீர்மானங்கள் மட்டுமே போடுவதைத்தான் தமிழக சட்டமன்றம் செய்ய முடியுமே தவிர, ஒருக்காலும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர முடியாது.
பெ.தி.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் “திராவிடம்” என்ற தவறான சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டாலும், நடைமுறையில் அவர்கள் தமிழீழ விடுதலைக்கும் தமிழக உரிமைகளுக்கும் செய்த பங்களிப்புகளையும் நாம் மதிக்க வேண்டும். அவர்களது தவறான கருத்தியலின் காரணமாக, அவர்களது உண்மையான ஈகங்கள் பெருமையிழப்பதை நாம் தோழமை உணர்வுடன் சுட்டிக்காட்ட வேண்டும். பெரியாரின் ‘திராவிட’ கருத்தியலை ஏற்றுக் கொள்ளும் இவ்வமைப்பினர், அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு என்ற இலக்கை தங்களது வேலைத் திட்டமாக இன்னும் ஏன் அறிவித்துச் செயல்படவில்லை என்பதும் நமது கேள்வியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, தமிழ் – தமிழினம் என முழங்கி செயல்படும் அமைப்புகள் மற்றும் உணர்வாளர்களின் தத்துவ அடித்தளத்தையும், நடைமுறை வேலைத் திட்டங்களையும் தான் நாம் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர்களது பிறப்புவழிச் சாதியை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துத் தூற்றுவது மனுதர்மப் போக்கே ஆகும். இதுவே, இப்போலித் தமிழ்த் தேசியர்களுக்கு பெரும் வேலையாகி விட்டது.
சாதியை முன்வைத்து வெளியிடப்படும், இவ்வகை பதவி சுகம் தேடும் போலித் தமிழ்த் தேசியவாதிகளின் கருத்துகளை, உண்மையான “தமிழ்த் தேசியம்” எனக் கூறி, தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களும், இந்தியத் தேசிய வெறியர்களும் உள்நோக்கத்துடன் வெளியிட்டு அவதூறு செய்து மகிழ்கிறார்கள்.
திராவிடத்திற்கு மாற்றாக, தமிழ்த் தேசியக் கருத்தியலின் வலிமையை கருத்தியல் ரீதியாக எடுத்துரைக்க வேண்டுமே தவிர, தமிழ்ச் சமூகத்தின் இழிவான சாதியை வைத்து அதை நிறுவக் கூடாது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, 1956ஆம் ஆண்டு இந்திய அரசால், மொழிவழி மாநிலமாக தமிழகம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்திற்குள் குடியேறி, பொருளியல் – பண்பாட்டு ஆதிக்கங்கள் புரியும், தெலுங்கர்கள், மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள் உள்ளிட்ட அனைத்து அயல் இனத்தாரையும் வெளியேற்ற வேண்டும் எனக் கோருகிறது. தற்போது, தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் குடியேறி வரும் வடவர்களையும், மலையாளிகளையும் வெளியேற்றக் கோருவதும் இந்த அடிப்படையில் தான்.
தமிழீழத் தாயகப்பகுதிகளில் சிங்களவரைக் குடியேற்றி, தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயலும் சிங்கள அரசின் இனவெறியைக் கண்டிக்கும் அதே அடிப்படையில் தான், த.தே.பொ.க., தமிழ்நாட்டுத் தமிழர்களை சிறுபான்மையாக்கும் விகிதத்தில் மிகை எண்ணிக்கையில் குடியேறும் வடவர்கள், மலையாளிகள் உள்ளிட்ட அயல் இனத்தாரை வெளியேற்றக் கோருகிறது. திராவிட இயக்கமான ம.தி.மு.க., போன்ற அரசியல் கட்சிகள் சிங்களக் குடியேற்றத்தைக் கண்டிக்கின்றனவே தவிர, தமிழகத்தில் மலையாளிகளையும், வடவர்களையும் வெளியேற்றக் கூடாது என்பதையும் நாம் விமர்சிக்கிறோம்.
தமிழகத்தில் மிகை எண்ணிக்கையில் உள்ள அயல் இனத்தாரை வெளியேற்றுகின்ற அதே வேளையில், தமிழக எல்லையோரங்களில் உள்ள பிற தேசிய இன மக்கள் மொழிச் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு, அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் நாம் கூறுகிறோம்.
இது உலகெங்கும் இன்றைக்கும் உள்ள 'விசா நடைமுறையைப் போன்றதாகும். ஆனால், அறிஞர் குணா பாதையில், தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வந்து குடியேறி, தமிழ் மக்களாக வாழுகின்ற சமூகத்தினரை வெளியேற்றவது என்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாத பாசிசத் தன்மையுடன் முன்வைக்கப்படும் திட்டமாகும். ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் முழுவதுமாக ஒரே இனம் தான் வாழ வேண்டும் என்ற இனத்தூய்மையாக்கல் கொள்கை ஒருக்காலும் சாத்தியம் ஆகாது.
ஏனெனில், ஒரு தேசிய இனத் தாயகத்தின் எல்லைப் பகுதிகளில், அண்டைத் தேசிய இன மக்கள் குடியேறுவதும், பிறநாட்டினர் சிறு அளவில் குடியேறுவதும் இன்றைய நடைமுறையில் தவிர்க்க இயலாது. ஆனால், ஒரு தேசிய இனத்தின் தாயகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவே, பிற தேசிய இன மக்கள் குடியேறலாமேத் தவிர, அத்தேசிய இன மக்களை விட அதிகளவிலான பிற தேசிய இன மக்கள் குடியேறக் கூடாது என கட்டுப்பாடு விதிப்பது பாசிசமாகாது. இந்த அளவுகோல் வேறுபாடுகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிங்கள ஆதிக்கத்திலிருந்து முற்றிலுமாக விடுவித்துக் கொள்ள வேண்டுமென தமிழீழ மக்களைத் திரட்ட, தமிழீழத் தமிழர்களால் வழங்கப்படுகின்ற கருத்தியலே, அவர்களால் ‘தமிழ்த் தேசியம்’ என முன்வைக்கப்படுகிறது. அதே போல், இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ள தமிழ்நாடு தம்மை விடுவித்துக் கொண்டு தனித் தமிழ்த் தேசமாக மலர வேண்டும் என்பதே தமிழகத்தில் ‘தமிழ்த் தேசியம்’ ஆக இருக்க முடியும்.
ஆனால், இந்திய அரசியலமைப்பையும், இறையாண்மையையும் ஏற்றுக் கொண்டு நடைபெறும் தேர்தல்களில் பங்கேற்பதும், தமிழ் இனத்தை இந்திய அரசுக்குக் காட்டிக் கொடுக்கும் மசோதா மன்றமாகத் திகழும் தமிழக சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவதும் தான் ‘தமிழ்த் தேசியம்’ என நாம் தமிழர் கட்சி, தமிழர் களம், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சியினர் பேசுகின்றனர்.
தேர்தல் அரசியல் மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியம் என்ன இடஒதுக்கீடு போன்ற சீர்திருத்தக் கொள்கையா என்று கூட இவர்கள் சிந்திப்பதில்லை. ‘அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு’ எனப் பேசி தேர்தல்களில் பங்கேற்று மக்களை ஏய்த்த தி.மு.க.வின் வழித்தோன்றல்களாகவே இவர்கள் மக்களிடம் தென்படுவார்கள். ம.தி.மு.க., பா.ம.க., கொ.மு.க., விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், நாம் தமிழர் கட்சி, தமிழர் களம் என எத்துணை அமைப்புகள் வந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல.
தேர்தல்களில் வெற்றி பெற்று பதவிகள் பெறலாம், தமிழ்ச் சமூகத்திற்கு சில கூடுதல் உரிமைகளைக் கூடப் பெற்றுத் தரலாம் என்றாலும், ஒருபோதும் தமிழ்த் தேசிய விடுதலையைப் பெற்றுத் தர முடியாது. ஏனெனில், தமிழ்த் தேசியம் என்பது நாம் கேட்டுப் பெற வேண்டிய சலுகையல்ல; அது ஒர் தேசிய இனத்தின் விடுதலை இலக்கு. அதனை மக்கள் எழுச்சிப் போராட்டங்களே பெற்றுத் தரும், அதில் தேர்தல் கட்சிகளுக்கு இடமில்லை.
(கட்டுரையாளர் க.அருணபாரதி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர்)
நன்றி - கீற்று
0 கருத்துரைகள் :
Post a Comment