பாரிய கைத்தொழில் பேட்டைகளை உள்ளடக்கிய சிறப்பு வலயம் ஒன்றை பல பில்லியன் டொலர்கள் பெறுமதியில் உருவாக்குவதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை மீட்டுத் தருமாறு கோரி திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் வாழ் மக்கள் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்முதலீட்டுத் திட்டத்துக்காக சிறிலங்கா அரசாங்கமானது தமது நிலங்களை சட்டரீதியற்ற வகையில் கையகப்படுத்தியுள்ளதாக இந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மே 17, 2012 திகதியிடப்பட்ட 1758/26 எனும் இலக்கத்தையுடைய வர்த்தமானி அறிவித்தலில், சம்பூர் பிரதேசத்திலுள்ள நிலங்கள் 'பாரிய கைத்தொழிற் பேட்டைகளை உருவாக்குவதற்கான சிறப்பு வலயத்துக்காக' ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2006ல் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இப்பகுதி வாழ் மக்கள் இடம்பெயர்ந்திருந்ததாகவும், இப்பாரிய அபிவிருத்தி திட்டத்தால் இந்தப் பகுதியைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாது தடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மதியாபரணன் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்தமானது நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், 30 மே 2007 திகதியிடப்பட்டு 1499/25 எனும் இலக்கத்தில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 2006ல் இடம்பெயர்ந்த சம்பூர் வாழ் மக்கள் அவர்களது இடங்களில் மீளக்குடியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டனர்.
"பாரிய அபிவிருத்தி திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வலயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலமானது சம்பூர் வாழ் மக்களுக்கு சொந்தமானதாகும். இங்கு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இடம்பெயர்ந்த மக்களின் சொந்த நிலங்களில் இவ்வாறான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படக் கூடாது. இத்திட்டத்திற்காக பிறிதொரு புதிய இடத்தை தேர்வு செய்யுமாறு நாம் கோரிநிற்கிறோம். யுத்தத்தின் காரணமாக இந்த மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வேறிடங்களில் வாழ்கின்றனர். அவர்கள் மீளத் திரும்புவதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும்" என நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
பாரிய கைத்தொழிற் பேட்டைகளைக் கொண்ட சிறப்பு வலயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் பொதுமக்களுக்குச் சொந்தமானவை என்பதை சிறிலங்கா கேற்வே தொழிற்துறை தலைவரும், இத்திட்ட நடைமுறைப்படுத்தலுக்கான தலைவருமான பிரபாத் நாணயக்கார ஏற்கமறுத்துள்ளார்.
"இந்நிலமானது சிறிலங்கா அரசுக்குச் சொந்தமானதாகும். இதனை சிறிலங்கா முதலீட்டுச் சபை குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் நாங்கள் இக்காணிகளை முதலீட்டு சபையிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளோம். இந்நிலங்கள் தமக்குச் சொந்தமானவை எனக் கூறும் மக்கள் நீதிமன்றில் போலியான காணி உறுதிகளை சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்பில் எமது சட்டவாளர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்" என பிரபாத் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றச்சாட்டை சுமந்திரன் நிராகரித்துள்ளார். "இவை 100 ஆண்டுகளுக்கு முன்னர் திகதியிடப்பட்ட உண்மையான காணி உறுதிகளாகும்" என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விவாதம் ஒக்ரோபர் 21,2011 அன்று சிறிலங்கா நாடாளுமன்றில் இடம்பெற்றது.
அப்போது நிலக்கரி மின்சக்தித் திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஆனால் சம்பூர் பிரதேச மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்துள்ளார். "இத்திட்டத்துக்கு தேவைப்படாத காணிகள் மீளவழங்கப்பட்டு, மக்கள் குடியேற்றப்படுவர்" என சிறிலங்கா பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பதிலளித்துள்ளார்.
"மின்சக்தி ஆலை அமைக்கப்படும் இடத்திலிருந்து தொலைவிலுள்ள காணிகள் கூட மக்களிடம் கையளிக்கப்படவில்லை. இவை சிறிலங்கா முதலீட்டு சபையின் கட்டுப்பாட்டின் கீழிருப்பதால் இக்காணிகளில் மக்கள் குடியேறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் பதிலளிப்பதற்கு சிறிலங்கா முதலீட்டுச் சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்னாண்டோ மறுத்துவிட்டார். "இந்நிலங்கள் கடந்த காலத்தில் விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டாலும் கூட, இவ்வாறான முதலீட்டுத் திட்டங்களை எமது நாட்டுக்குள் உள்ளீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்த வேண்டும். இவ் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் 20,000 இற்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொள்ள முடியும். இது உள்ளுர் மக்களின் வாழ்வாதரத்தை முன்னேற்ற உதவும்" எனவும் நாணயக்கார தெரிவித்துள்ளார்.
"சிறப்பு வலயத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கத்தால் நட்டஈடு வழங்கப்பட்டது. சில புதிய வீட்டுத் திட்டங்களும் இப்பிரதேச வாழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இங்கே மகிழ்வாக வாழ்கின்றனர்" எனவும் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். வரும் திங்களன்று இவ்வழக்கானது உயர் நீதிமன்றில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொழியாக்கம் : நித்தியபாரதி
0 கருத்துரைகள் :
Post a Comment