வரலாறு என்பது நாம் கடந்து வந்த பாதையில் விட்ட தவறுகளைச் சீர்செய்து கொள்ளவும் தொடர்ந்து தவறுகள் செய்யாமலிருக்கவும் வழிகாட்டும் பாடமாகும். இந்த வகையிலே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக சமூகம் சார்ந்த சமூகத்தின் உரிமையை, இருப்பை, பெருமையை நிலைநாட்டும் அரசியல் வரலாற்றுப் பாடத்தை நாம் கற்று நன்கு புரிந்து கொண்டு செயற்படுவது அவசியமாகும்.
நலிந்த நிலையிலுள்ள நம் மினத்தின், நம்நாட்டின் சீரமைப்புக்கு நமது சிந்தனையில் மாற்றம் ஏற்பட வேண்டும். தவறுகள் கண்டறியப்பட்டு திருத்தப்பட வேண்டும். அதுவே நாகரிமும் கூட. வரலாற்றிலிருந்து கற்ற பாடங்களில் விட்ட தவறுகளை இனங்கண்டு திருத்தி உரிய வழியில் பயணிப்பதே அறிவு பூர்வமானது. ஆக்கபூர்வமானது. இந் நிலையிலே தமிழ் மக்கள் வளமான நிம்மதியான வாழ்வுக்கு தமிழ் மக்கள் மத்தியிலே பல்கிப் பெருகியுள்ள அரசியல் தொழிற்சங்க மற்றும் சமூக அமைப்புகளின் பங்கு முக்கியமானது.
நம்மை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியில் பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமைகள் எவை என்பதையும் எமக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகள் எவை என்பதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள் உண்டென்று தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், தொழிற்சங்க, சமய, சமூக அமைப்புகள் யாவும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவ்வாறு கூறியும் வருகின்றன. ஆனால், அவை எவை? அவற்றைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் எவை என்பதை மட்டும் எவரும் கூறுவதுமில்லை. அவற்றைப் பெரிதுபடுத்துவதுமில்லை. இவை தம்மத்தியிலே பல்வேறு வகையான போட்டிகளில் ஈடுபட்டு சமுதாயத் தேவைகளை இரண்டாமிடத்திற்குத் தள்ளி விடுவதையே செய்கின்றன. சமுதாயப் பிளவுகளால் உரிமைக் கோரிக்கை மழுங்கடிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், தேவைகள் சரியான முறையில் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளனவா என்றால் அதற்கான பதிலை உறுதியுடன் கூறும் ஆற்றல் சமூக வழிகாட்டிகளென்றும் நம்மிடையே வலம் வருபவர்கள், வாக்குக் கேட்பவர்கள் எவரிடமும் இல்லை. இதுவே உண்மை நிலை. யதார்த்தநிலை.
தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க மீட்கவென்று திடீர், திடீரென்று பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகள் தோன்றி வருகின்றன. வீரவசனம் பேசுகின்றன. அறிக்கைகள் விடுக்கின்றன. ஏற்கனவே இருப்பவர்களுக்குச் சமூகத் தேவைகள்தொடர்பான அறிவோ, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றலோ இல்லையா என்ற வினா சிந்திக்கும் ஆற்றல் கொண்ட சீர்தூக்கும் அறிவு கொண்ட ஒவ்வொருவர் மத்தியிலும் இயல்பாக ஏற்பட வேண்டும்.
இலங்கையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது அரசியலிலாகட்டும் தொழிற்சங்க ரீதியிலாகட்டும் பல்கிப் பெருகிய அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் கொண்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் விளங்குகின்றது. நம்மத்தியிலே புதிய, புதிய அரசியல் , தொழிற்சங்க அமைப்புகள் முளைவிடுவதால் சமுதாய நலன் பலமடையுமா, பாதிக்கப்படுமா என்பது தொடர்பில் அவதானிக்க வேண்டும். அரசியல்வாதிகளே சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்றார்களேயன்றி சமூகத்திலுள்ள புத்திஜீவிகளோ, ஆய்வாளர்களோ, தனவந்தர்களோ சமயப் பிரமுகர்களோ, சமூக சேவையாளர்களோ வேறு எவருமோ அல்ல. ஒரு நாட்டின் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்ட அரசியல் புனிதமாக இருத்தல் வேண்டும். புனிதப்பட வேண்டும். புனிதப்படுத்தப்பட வேண்டும்.
முன்னாளில் நாட்டின் அரசாட்சியைக் கொண்டு நடத்திய மன்னர்களை இறைவனுக்கு அடுத்து வைத்துப் போற்றிய மரபின் உரிமையாளர்கள் நாம். நீதி நெறி தவறாது சுய இலாபம் நோக்காது மக்கள் பணியே மகேசன் பணி அதாவது இறைபணியென்று வாழ்ந்த அரசாட்சி செய்த இனம் தமிழினம். நமது இந்து சமய புராண இதிகாசங்களிலும் அரசாட்சியின் சிறப்பு ஆளும் முறைமை என்பன தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தமிழர் வரலாற்றிலும் இந்து சமய வரலாற்றிலும் தர்மநெறி தவறா அரசாட்சியின் மாண்பு உலகுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எப்படியும் ஆளலாம் என்றில்லாமல் இப்படித்தான் ஆள வேண்டும் என்ற வரைவிலக்கணத்தை உலகிற்கு வழங்கிய பரம்பரையினர் நாம்.
இவற்றை மனதில் கொண்டு நம்மவர்கள் அரசியல் நடத்துவது ஆள முனைவது பொருத்தமானது. பொறுப்பானதும் கூட. அன்று அரச பரம்பரை அற்றுவிட்ட நிலையில் பட்டத்து யானை ஆளத் தகுதியான வரைத் தேடிவந்து மாலையிட்டு அரச கட்டிலேற்றியதும் வரலாறாயுள்ளது.
இன்று ஜனநாயக நாட்டில் எல்லோரும் மன்னர்கள் என்றாகிவிட்ட நிலையில் எல்லோருமே அரசாளத் தகுதி கொண்டவர்களாகக் கொள்ளப்படுகின்றனர். தம்மைத் தாமே மன்னர்களென்று மக்கள் முன்வருகின்றனர். அன்று யானை மாலைபோட்டு தகுதியான வரை தெரிவு செய்தது போலன்றி மக்கள் தாம் நினைத்தவர்களைத் தெரிவு செய்வது ஜனநாயகம் என்று கூறப்படுகின்றது. அன்றையது முடியாட்சி. இன்றையது மக்களாட்சி.
புனிதமான அரசியல், சமூக நலனுக்கு ஒற்றுமைப்பாட்டுக்கு மேன்மைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய அரசியல் சமூகப் பிளவுகளுக்கும் பின்னடைவுக்கும் வழிகோலும் அலங்கோலம் காணப்படுகின்றது. இலாப நட்டங்களைத் தனிப்பட்ட ரீதியில் நோக்காது சமூக ரீதியில் நோக்கும் உத்தம பண்பு உருவாக வேண்டும். அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும் என்பதுவும் நமது நம்பிக்கை, சமூகத்தில் நாட்டில் பிளவுகளை வேதனைகளை கொடுமைகளை, துரோகங்களை செய்பவர்களுக்கு நிச்சயம் தெய்வத்தின் தண்டனை வந்தே தீரும்.
எது எவ்வாறாயினும் சமூகத்தின் நன்மைக்காகவென்றும் உரிமைக்காக வென்றும் குரலெழுப்பவும் பாடுபடவும் என்று அரசியல்களத்தில் குதித்துள்ள நம்மவர்கள், தமிழர்கள் பொதுப்பிரச்சினையில் ஏன் சமூகத்தின் ஒருமித்த குரகலாக ஓரணியில் இணைந்து செயற்பட முடியாது? செயற்பட முடியாது தடுப்பது எது? சிந்திக்க வேண்டும்.
ஏன் தனித்து நின்றும் குழுக்களமைத்தும் செயற்பட வேண்டும்? நம்மைநாமே பொறுப்புடன் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது. தமிழ் மக்கள் அரசியலிலிருந்து அரசியல் சிந்தனையிலிருந்து பொறுப்பின்றி தூர விலகி நிற்பதால் பாதிப்பு தமிழருக்கே. நம்மை வழிநடத்த வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளவர்களை, அவர்களது பின்னணியை வரலாற்றை தெளிவுபடுத்திக் கொள்ளாமல் இருப்பது அரசியல் அறிவீனம். மக்களே அரசியல் களமிறங்கியுள்ளவர்களுக்கு எஜமான்கள். மக்களே அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். அதுவே ஜனநாயகம். மக்களாட்சி மக்களின் மனச் சாட்சியே மக்களாட்சி. மாறின் அது காட்டாட்சி.
தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். உரிமைகள் மறுக்கப்பட்டும் பறிக்கப்பட்டுமுள்ளன. இவை மறுக்கவோ, மறைக்கவோ முடியாதவை. இவை தொடர்பாகச் சமூகத்திற்குத் தலைமை தாங்கப் புறப்பட்டுள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டும். செயற்பட வேண்டும். புரிந்துகொள்ள வேண்டும்.
மக்களுக்கு நன்மை செய்யவே, மக்களது உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வை வளப்படுத்தவே சமூகத்திற்குத் தலைமை தாங்கி வழிநடத்த முன்வருவோர் முன்வந்துள்ளனரேயன்றி சுயநலநோக்கு கொண்டவர்கள் என்று கருதுவது மகாதவறாகும். மக்களின் பிரச்சினைகளை உணராது அரசியல் செய்வோர் மலிந்துவிட்டனர். மக்கள் பிரச்சினையை உணர்ந்தவர்கள் அருகிவிட்டனர் என்ற அவச் சொல் அற்ற அரசியல் நடத்தப்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
பதவி, பட்டம் பணம், வாகனம், வீடுவாசல் உள்ளிட்ட சுகபோகங்களை அரசியல் செய்வோர் பெறுவதால் மட்டும் குறிப்பிட்ட சமூகம் உயர்வடைந்து விடாது. உரிமைகளைப் பெற்றுவிடாது. பொது நோக்கு வேண்டும். ஒன்றபட்ட சிந்தனை வேண்டும். தனிப்பட்ட அரசியல் கொள்கை வேறுபாடுகளுக்கப்பாலிருந்து சிந்திக்க வேண்டும். இந்நிலையிலே நம்மவர் முன் உள்ள பொறுப்புகள் எவை? சிந்திப்போம்.
நாகரிக உலகின் உயிர் மூச்சான மொழியுரிமை எமக்கு உண்டா? சிந்திக்க வேண்டும். நமது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத்துடனான தொடர்புகளையும் தமிழ் மொழியில் ஆற்றிக் கொள்வதே மொழியுரிமை, சட்டத்தின் மூலம் தமிழ் மொழிக்குரிய உரிமை வழங்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், நடைமுறைப்படுத்தப்படுகின்றதா? இது பற்றி அதாவது மொழியுரிமையைப் பாதுகாக்க, உறுதிப்படுத்த அண்மைக் காலமாக நம்மத்தியிலே உலாவரும் எந்தவொரு அரசியல் தலைவரும் குரல் கொடுக்கவில்லை. கவனம் செலுத்தவில்லை.
நாட்டின் அரசியல் கட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமையை உரிய படி நடைமுறைப்படுத்தும் படி எவருமே அதிகார பீடத்துடன் தொடர்புகொள்ளவில்லை. கோரிக்கை வைத்ததாகவும் தெரியவில்லை. உண்மை நிலை இதுவாகவேயுள்ளது. இது நம்மினம் செய்த பாவம். காலக்கேடு அல்லவா? வேறு எப்படி எமது ஆதங்கத்தை வெளிப்படுத்துவது?
சர்வதேச மட்டத்தில் போட்டியிடக் கூடியதாக இலங்கையின் கல்வி வளர்ச்சி கண்டு வருகின்றது. நமது நிலையோ பரிதாபத்திற்குரியதாயுள்ளது. தமிழ்க் கல்வி தமிழர் கல்வி தொடர்பாக நமது அரசியல் தலைவர்கள் எவராவது அண்மைக் காலத்தில் காத்திரமாகக் குரல் கொடுத்ததாயில்லை. கொடுப்பார்கள் என்று நம்பக்கூடியதாயும் எதுவும் தோன்றவில்லை.
தமிழ் மொழி மூலக் கல்வி குறிப்பாகத் தமிழர் கல்வி தேசிய ரீதியில் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கியேயுள்ளது. கல்வி நிலை தொடர்பில் கவனம் செலுத்தாதவர்கள் எவ்வாறு சமூகத் தலைவர்கள் என்ற பட்டியலில் இடம்பெறமுடியும்?
தேசிய ரீதியில் அரசுத் துறையில் தமிழர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிட்டுவதில்லை. இதேபோன்று வங்கிகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்றவற்றின் நிலையுமுள்ளது. சிற்×ழியர் நியமனங்கள் கூட உரியபடி கிட்டுவதில்லை என்பதற்குத் தமிழ்ப் பாடசாலைகளுக்கான சிற்றுழியர்களாக வேற்று இனத்தவரே நியமிக்கப்பட்டு வருவது சான்றாகவுள்ளது.
பெருந்தோட்ட அலுவலகங்களில் கூட தமிழர்களுக்கு மாதாந்தச் சம்பளம் பெறும் பதவிகள் கிட்டுவதில்லை. வெளியாருக்கே நியமனங்கள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் பெருந்தோட்டத் துறைசார் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல், தொழிற்சங்கத்தினர் கவனம் செலுத்தவில்லை. தொழில் வாய்ப்பை இழந்த நிலை அதாவது புறக்கணிப்புக்குள்ளாகும் நிலை தமிழர்களுக்குள்ளது என்பது நம்மவர்களுக்குப் புலப்படுவதாகவும் தெரியவில்லை.
நாட்டில் எங்கோ ஒரு மூலையிலாவது ஏதாவது இனவெறிப்பயங்கரவாதத்தால் தமிழர்கள் பாதிக்கப்படுவது வழக்கமாயுள்ளது. இது தொடர்பில் கவனம் செலுத்தி உரியவர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதா? அறிக்கை விடுவதுடன் அடங்கிவிட்டால் துன்பங்கள் தீருமா?
இதேபோல் அடிப்படை உரிமைகள், தேவைகள் பல நிறைவேற்றப்படவிருந்தும் அவற்றைப் புறந்தள்ளித் தமிழ் மக்களின் ஒற்றுமையைச் சிதைப்பதும் வாக்குகளைக் கூறுபோட்டு அரசியல் ரீதியில் சக்தியிழக்கச் செய்வதுமே நம்மவர்களின் அரசியல் விளையாட்டாக உள்ளமையைப் புத்தியுள்ளவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை. தன் அரசியல் எதிரிக்கு அதாவது தன் அரசியல் போட்டியாளரான தன் சமூகத்தவன் அரசியல் அதிகாரத்தைப் பெறக்கூடாது. இழக்க வேண்டும். அழிய வேண்டும் என்ற போக்கும் நோக்கும் மேலோங்கிய நிலையில் நமது தமிழ்ச் சமூகம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இது நடைமுறையில் காணப்படும் யதார்த்தம். உண்மை நிலை.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் நமது அரசியல் வாதிகள் சிந்திக்க வேண்டும். தமது செயற்பாடுகளால் சமூகத்தின் ஒற்றுமை பேணப்படுகின்றதா? மேன்மைப்படுத்தப்படுகின்றதா? அல்லது காவு கொடுக்கப்படுகின்றதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் இந்நாட்டின் சிறுபான்மையினத்தவர்கள். நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தியற்றவர்கள். அதனால், தமக்குரிய உரிமைகளைத் தெரிந்துகொள்வதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்கும் சமூக ஒற்றுமை அவசியமானது. அதை அரசியல் செய்வோர் கெடுத்துவிடக்கூடாது.
“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற பழமொழியும் பஞ்ச தந்திரக் கதைகளிலொன்றாகிய சிங்கமும் எருமைகளும் என்ற கதையும் நமக்க வழி காட்டுபவையாக சிந்தனையைத் தூண்டுபவையாக இருத்தல் வேண்டும். அவை நமக்குப் புத்திபுகட்டும் தத்துவங்களாய் அமைந்துள்ளன.
நம்மத்தியிலே நிலவும் போட்டி அரசியல், தொழிற் சங்க விளையாட்டுக்கள் பூனைக்குக் கொண்டாட்டம் எலிக்குத் திண்டாட்டம் என்பது போல் எலியின் நிலைக்கு நம்மைத் தள்ளி வேடிக்கை பார்க்க வைத்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதும் நம்மத்தியிலே பல காலம் வழங்கிவரும் அறிவு தரும் கூற்று. தமிழர்கள் கூறுபட்டால் தமிழர்கள் பயன் பெறுவார்களா? பயனை இழப்பார்களா? சிந்திக்க வேண்டியது நம்மவர் பொறுப்பு. சிந்திக்க மறுத்தால் மறந்தால் வேதனையைக் காட்டி அணைக்க வேண்டி வருவதும் தவிர்க்க முடியாததாகும். இதை எவராலும் தடுக்க முடியாது.
உரிமைக்கு இணைந்து குரல் கொடுப்போம். உறவுக்க துணிந்து கைகொடுப்போம். சமுதாய நலன் கருதிப் பேதங்களை மறப்போம். ஒன்றுபட்டுச் செயற்படுவோம் என்ற அரசியல் பக்குவம், தன்னலம் கடந்த நாகரிக சிந்தனை நம்மத்தியிலே, நம்மவர் மத்தியிலே வலுப்பெற வேண்டும். அப்போது தான் நமக்கு மீட்சி.
த.மனோகரன்
0 கருத்துரைகள் :
Post a Comment