வலிமைமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழிப்பதில்.....?

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சாதகமான வாய்ப்புக்கள் இந்தியாவுக்கு இருந்தும் சிவ்சங்கர் மேனன் இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது இந்தியா இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது''. இது ஏற்கனவே ஒரு அனுபவத்தைப் பலமுறை சந்தித்துப் பழகிப் போன ஒருவர் மீண்டும் அதே அனுபவத்துக்கு முகம் கொடுக்க வேண்டி வரும்போது கலவரம் அடைவதில்லை என்பதை விளக்கும் வகையிலான தமிழ்ப்பழமொழி.


இவ்வாறே இலங்கைத் தமிழ் மக்கள் கடந்த மூன்று வருடங்களாக எத்தனையோ சலசலப்புக்களை மட்டுமன்றி கிலுகிலுப்புக்களையும் கண்டு வருகின்றனர். "நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது'' என்ற கோடாங்கியின் அதிகாலை கூவல்களைப் போன்ற சில அரசியல்வாதிகளதும் சில ஊடகங்களதும் ஆருடங்களையும் பொருட்படுத்தாத அளவுக்கு அனுபவங்கள் பாடங்களைப் புகட்டி வருகின்றன.


ஒவ்வொரு முறையும் இந்திய அரச பிரதிநிதிகள் இங்கு வருகை மேற்கொள்ளும் போது சலசலப்புகளும் கோடாங்கிக் கூவல்களும் நிறையவே காதில் விழும். அவர்கள் திரும்பிய பின்பு அத்தனை பரபரப்புகளும் ஒன்றிரண்டு அறிக்கைகளில் அடங்கிவிடும். அவற்றில் சில விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டதாக எதிர்பார்ப்புக்கள் முற்றாக அழிந்துவிடாமல் மென்மையாகக் நழுவிவிடப்படும்.


இனப்பிரச்சினைத் தீர்வு வண்டி பள்ளத்திலிருந்து ஒரு அடி கூட முன் செல்ல மறுத்து அப்படியே நிலை கொண்டிருக்கும். இவ்வாறு அண்மையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன் இலங்கைக்கு வருகை மேற்கொண்ட போது சில சலசலப்புகள் ஏற்பட்டன. கோடாங்கிகளும் உறுமி மேளத்தைத் தட்டி நல்ல காலம் பிறக்கப் போகும் செய்தியை ஓங்கி ஒலிக்கச் செய்தனர்.


அவரும் இங்கு வந்து ஒரு நாள் தங்கி விருந்துண்டு ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலர் உட்பட அரச தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் பேசினார். வழமையான சடங்குகள்தான் இவை. திருப்திகரமாக அவை அரங்கேற்றப்பட்டன.


எனினும் அவர் இலங்கையில் நின்றிருந்தபோது தெரிவித்த ஒரு கருத்து மிக முக்கியமானதாகும். அந்தக் கருத்து கூத்தாடிகளாலும், கோடாங்கிகளாலும் பெரிதுபடுத்தப்படாவிட்டாலும் கூட தமிழ் மக்களைப் பொறுத்தவரை அது ஒரு பெரும் செய்தியைச் சொல்லியுள்ளது.


அதாவது இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இந்தியா, இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை வழங்க முடியுமேயொழிய அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என்பதுதான் அது.


அருகருகே உள்ள இரு ஜனநாயக நாடுகள் என்ற வகையில் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு அழுத்தங்களைக் கொடுக்கக் கூடாது என்பது உண்மைதான். அதை எவரும் மறுத்துவிடமுடியாது.


ஆனால் அந்த மரபு சீர்குலையாமலே இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு விரிவான காரணம் உண்டு என்பதை மறந்துவிட்டோ அல்லது மறைத்துவிட்டோ இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.


இலங்கையின் அரசியல்அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், 1987 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டது.


இன்றுவரை இந்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. எனவே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு உரிமை உண்டு. ஏனெனில் இது இலங்கைத் தமிழர் பிரச்சினை என்ற எல்லையைக் கடந்து இவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கை இந்திய உறவு தொடர்பான பிரச்சினையாகிவிட்டது. 


இந்த இலங்கை  இந்திய ஒப்பந்தத்தை மஹிந்த அரசு நிராகரிக்குமானால் கச்சதீவை இலங்கையிடம் கையளித்த இந்திராகாந்தி  ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தையும் இந்தியா நிராகரிக்க முடியும். அதற்கான நியாயங்கள் நிறையவே உள்ளன.


இப்படியாக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய சாதகமான வாய்ப்புக்கள் இந்தியாவுக்கு இருந்தும் சிவ்சங்கர் மேனன் இப்படியான ஒரு கருத்தை வெளியிட்டிருப்பது இந்தியா  இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறையற்ற போக்கையே வெளிப்படுத்துகிறது.


ஆனால் சிவ்சங்கர் மேனன் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய பின்பு வெளியிட்ட கருத்துக்களையும் எவரும் நிராகரித்துவிட முடியாது. அதாவது இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்திலோ மீள்குடியமர்வு நடவடிக்கைகளிலோ மீள்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவோ, வடக்குக் கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தைக் குறைப்பதிலோ இலங்கை அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.


இதுவரை இலங்கைக்கு வந்து திரும்பிய இந்திய அரச  பிரதிநிதிகள் இலங்கை அரசு கொடுக்கும் வாக்குறுதிகளைத் திரும்பிக் கூறும் கிளிப் பிள்ளைகளாகவே செயற்பட்டு வந்தனர். ஆனால் சிவ்சங்கர் மேனன்  இலங்கை அரசின் ஏமாற்றுகளுக்குள் மூழ்கிவிடாமல் யதார்த்தத்தின் அடிப்படையில் ஒரு விமர்சனப் பார்வையை முன்வைத்துள்ளார். இது முன் எப்பொழுதையும் விட ஒரு ஆரோக்கியமான நிலைமை என்பதை எவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


ஆனால் அவர் இலங்கையில் வெளியிட்ட கருத்துக்கள் இந்த நியாய பூர்வமான விமர்சனத்தின் பயனை மழுங்கடித்துவிட்டது. அதாவது இந்தியாவில் இலங்கை அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய அவர் ஏற்கனவே இலங்கையில் வைத்து அந்தத் தவறுகளைத் திருத்தும்படி இந்தியா அழுத்தம் கொடுக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார். எப்படியிருந்த போதிலும் இலங்கை அரசு தொடர்பான அவரின் விமர்சனம் சர்வதேச அரங்கில் சில பலாபலன்களை ஏற்படுத்தும் என நம்பலாம். 


அதிலும் வடக்குக் கிழக்கில் காணிப் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லையென அவர் தெரிவித்த கருத்து இன்று வடக்கில் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் நடத்தும் போராட்டத்துக்கு ஒரு உந்துசக்தியாக அமையும். அது மட்டுமன்றி அவரின் கருத்து எமது போராட்டத்தின் நியாயங்களை சர்வதேசத்துக்கும் உணர்த்தும்.


அவ்வகையில் அவரின் பயணம் எமக்கும் சில சாதகமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளது. ஆனால் இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் எல்லை எது என அவர் இலங்கையில் வெளியிட்ட கருத்து மூலம் தெரிவித்துவிட்டார். எனினும் நான் அந்த எல்லையை ஏற்றுக்கொண்டு இலவு காத்த கிளியாக ஏங்கி நிற்கப் போகிறோமா அல்லது இந்த எல்லை விஸ்தரிக்கப்படுமளவுக்கு எமது வழிமுறைகளை முன்கொண்டு செல்லப் போகிறோமா என்பதுதான் கேள்வி.


அதேவேளையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க சிவ்சங்கர்மேனன் வருகையின் பின் வெளியிட்ட ஒரு கருத்து மிகவும் முக்கியமானதாகும். அதாவது இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக் கட்டத்தில் பல நாடுகள் போர் நிறுத்தம் மேற்கொள்ள  வேண்டும் என அழுத்த கொடுத்ததாகவும் இந்தியா மட்டும் அந்த விடயத்தில் மௌனம் சாதித்தது மட்டுமன்றி போரில் வெற்றிபெற சகல உதவிகளையும் வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.


தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் வலிமைமிக்க சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழிப்பதில் இந்தியாவின் பங்கு ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்திருந்தது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் வலிமைமிக்க ஆயுதப் போராட்ட சக்தியை அழிப்பதில் முன்னின்ற இந்தியாவுக்குத் தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மிகக் கடப்பாடு உண்டு. அப்படி அந்தக் கடமையை இந்தியா மறுதலிக்குமாக இருந்தால் இந்தியா விடுதலைப் புலிகளை மட்டுமன்றி முழுத் தமிழ் மக்களையுமே எதிரிகளாகக் கணிக்கிறது என அர்த்தமாகிவிடும்.


ஆனால் தமிழ் மக்கள் அன்றும் இன்றும் என்றும் இந்தியாவை தமது நட்பு நாடாகவே ஏற்றுள்ளனர். இன்றுவரை ஜனநாயக வழியிலான தமிழ் தலைமைகள் இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர். எல்லாவற்றிலும் தமிழகத் தமிழ் மக்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்குத் தமது உறுதியான ஆதரவை வழங்கி வருகின்றனர்.


இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அதன் மூல வடிவத்தில் நடைமுறைப்படுத்தும்படி அழுத்தம் கொடுப்பதற்கான உரிமை இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்வரை உண்டு. இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும்படி கோருவது எவ்விதத்திலும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகாது. 


அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் பலமாக விளங்கிய விடுதலைப் புலிகளை அழிப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தமையால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நியாயமான கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு. எனவே சிவ்சங்கர் மேனன் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்ற வாதம் எல்லை மீறப்பட வேண்டும். எமது தமிழ் தலைமைகளும் அந்த வகையிலேயே   இந்தியாவுடனான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment