புலிபோல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது ஏன்? இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவின் எந்தப்பகுதியிலும் பயிற்சியளிக்கக் கூடாது. உடனடியாக அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு குமுறியுள்ளார் தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா. மேலும், இலங்கைப் படையினருக்கு பயிற்சி வழங்கும் விவகாரம் தொடர்பில் தமிழினத்தை இலங்கை அரசு அழிக்கக் காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் நடவடிக்கைகள் "உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்' என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகின்றன என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு ஒட்டுமொத்த தமிழர்களின் கடும் எதிர்ப்பையடுத்தும் எனது கடும் கண்டனத்தையடுத்தும், இலங்கை விமானப் படையினக்கு அளிக்கப்படும் தொழில்நுட்பப் பயிற்சியை சென்னையில் உள்ள தாம்பரம் விமானப்படை நிலையத்திலிருந்து பெங்களூரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்ற தகவல் வந்தவுடன், இலங்கைப் படையினர் எவருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசை வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், தமிழினத் தலைவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு தமிழினத்தை இலங்கை அரசு அழிக்க காரணமாக இருந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியோ, மத்திய அமைச்சர் பதவிகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில், இலங்கை இராணுவத்திற்கு தமிழகத்திலே பயிற்சி அளிக்காமல், வேறு மாநிலங்களிலே பயிற்சி அளித்தால்... என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அப்படி பயிற்சி அளிக்க முன்வந்தால் அப்போது பார்ப்போம் என்று தமிழ் உணர்வே இல்லாமலும் நழுவலாகவும் பேசியிருக்கிறார்.
இதன்மூலம் தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் கபட நாடகங்கள் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் கருணாநிதி. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இந்த நடவடிக்கைகள் உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம் என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகின்றன.
தமிழ் இனத்தின் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், தான் தாங்கிப் பிடித்திருக்கும் மத்திய அரசை வற்புறுத்தி, பயிற்சிக்காக இந்தியா வந்திருக்கும் இலங்கை விமானப் படையினரை உடனடியாகத் திருப்பியனுப்ப வலியுறுத்தி இருக்க வேண்டும். ஆனால் தனக்கும், தன் குடும்பத்திற்கும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் மத்திய அரசை மிரட்டி சாதிக்கும் திறமை படைத்த கருணாநிதி, இலங்கைத் தமிழர் நலனுக்காக அவ்வாறு செயற்படாதது அவரைப் பற்றி அறிந்த எவருக்கும் வியப்பை ஏற்படுத்தாது.
புலிபோல் பாய வேண்டிய இந்தியப் பேரரசு சுண்டெலி போல் இலங்கை அரசிடம் பணிந்து செல்வது வருந்தத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, இலங்கை விமானப் படையினரை உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இப்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment