அடிமைப்பட்ட ஒரு சமுதாயத்தின் விடுதலைக்காக ஒரு தனி மனிதன் சாகத் துணிவானாயின் அந்தச் சமுதாயம் விடுதலை பெற்று வாழும். இந்த வார்த்தைகளை உதிர்ந்தவர் இந்திய தேசத்தின் அஹிம்சாவாதி என்று போற்றப்படும் அண்ணல் காந்தி அவர்கள்.
இந்த வார்த்தைகளுக்கு செயல் வடிவம் கொடுத்து, சமுதாயத்தின் வாழ்விற்காக வீரகாவியமானவர்களை இன்றைய தினம் புலம் பெயர் தேசம் எங்கும் வாழ்த்தி வணங்குகின்றனர். தடைகள் வருகின்ற வேளைகளில் அதனை தகர்த்தெறிகின்ற இந்த வீரர்களை மூன்றாண்டுகளுக்கு முன்னரும் ஈழமண் வணங்கியிருந்தது.
இரண்டாவது உலகமாகா யுத்தத்தில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது மட்டுமே எம்மில் பலருக்கு தெரிந்த விடயம். ஆனால் அமெரிக்காவின் அணு குண்டு வீச்சின் பின்னால் ஜப்பானியர்களின் தற்கொடை தாக்குதல் இருந்தது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஜப்பான் விமானப் படையின் வல்லமையுடன் இருக்கின்ற அதே வேளையில், அமெரிக்கா கடற்படை வலிமையுடன் இருந்தது. ஜப்பான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை தகர்க்க, அமெரிக்காவின் போர்க் கப்பல் மீது, விமானத்திலிருந்து ஜப்பானிய வீரன் குதித்து தன்னுயிரை மாய்த்து அமெரிக்காவின் போர்க் கப்பலை சிதறடித்தான்.
இதுவே அமெரிக்காவின் சினத்துக்கு காரணமாயிருந்தது. தன்னுயிரைத் துச்சமென மதித்துப் போராடத் தொடங்கிய ஜப்பானியர்களை அடக்குவதற்கு அணுகுண்டே ஒரே வழி என்று தீர்மானித்தது அமெரிக்கா.
இந்தத் தற்கொடைத் தாக்குதல் ஒரு நாட்டின் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த வழியிலே இலங்கையின் ஈழப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்கொடை கொலை தாக்குதல்களை முன்னெடுத்திருந்தனர்.
1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் யாழ். மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக" ஒப்ரேஷன் லிபிரேஷன்' இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. அந்தக் காலம் இளசுகள் வீதியில் திரிவதற்கே பயங்கரமான காலப்பகுதியாக இருந்தது. அந்தளவு தூரத்துக்கு இராணுவம் அந்தப் பகுதியை தனது அடக்குமுறைகளுக்குள் உட்படுத்தியிருந்தது.
ஜூலை மாதம் 5 ஆம் திகதி 1987 ஆம் ஆண்டு. மரபு வழி இராணுவமாக விடுதலைப் புலிகள் இயங்கிக் கொண்டிருந்த காலம். வடமராட்சியின் பெரும் பகுதியை இராணுவம் தின்று விட்டிருந்தது. நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் பெரும் எடுப்பில் இராணுவம் முகாமிட்டிருந்தது.
அன்றைய நாள் மாலை 6 மணியை தாண்டிய சில மணித்துளிகளில், யாழ்ப்பாணமே அதிருகின்ற வகையில் பெரும் வெடியோசை. இராணுவ முகாமில் தவறுதலாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற வதந்தி ஊர் மனைகள் முழுவதும் பரவியது.
ஆனால் மறுநாள் உலகுக்கு ஒரு புதிய செய்தியுடன் உண்மை வெளி வந்தது. விடுதலைப் புலிகள் மரபு வழி இராணுவமாக பரிணமித்துக் கொண்டிருக்கின்ற அதே வேளையில், ஜப்பானிய இராணுவத்தினரின் தாக்குதலுக்கு நிகராக தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட மில்லர், தனது உயிரை இந்த ஈழ மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்து நெல்லியடி இராணுவ முகாமை தகர்த்தெறிந்திருந்தார். அன்று தொடங்கியது இந்தக் காரிருள் புலிகளின் (கரும்புலிகளின்) வேட்டை. விடுதலைப் போராட்டம் பல இடங்களில் இந்தத் தற்கொடையாளர்களின் உயிரால் எழுச்சி பெற்றிருக்கின்றது. இந்த எழுச்சியே இலங்கை அரசை பல சந்தர்ப்பங்களில் கிலி கொள்ள வைத்திருக்கின்றது.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்தினுள் புகுந்து வேட்டையாடியது மட்டுமல்ல, அநுராதபுரம் விமானப்படைத் தாக்குதல், தரைப்படைத் தற்கொலை தாக்குதல், கடற்படைத் தற்கொலைத் தாக்குதல் என்று பரிணமித்த இந்தத் தாக்குதல்கள், இறுதியில் விமானப்படை தற்கொடைத் தாக்குதல் வரை என்று விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டிருந்தன.
இனத்தின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொடைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட அதே காலப் பகுதிகளில், சர்வதேச அரங்கில் வேறு சில அமைப்புகளும் இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தனர். அவர்களது இலக்குகள் வேறு மாதிரியானவையாக இருந்தன. குறிப்பாகப் பலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பும், அல்குவைதா போன்ற அமைப்புக்களும் இந்த வகையான தற்கொடை யுக்திகளை கையாண்டன.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் இராணுவத்தினர் மீதே தற்கொடைத் தாக்குதல்களை நடத்தி தமது தடைகளைத் தகர்த்தெறிந்தார்கள். சில வேளைகளில் தவறிய இலக்குகள் மக்களைப் பாதித்திருந்தன. ஆனால் ஹமாஸ், அல்குவைதா போன்ற அமைப்புக்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதனையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன.
இதுவே சர்வதேச அரங்கில் தற்கொடைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாகப் பார்க்கும் நிலையை உருவாக்கியிருந்தது. ஹமாஸ், அல்குவைதா அமைப்புகளின் தவறான தாக்குதல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் நியாயமான தாக்குதல்களையும் சிதைத்திருந்தன. எல்லா விடயத்திலும் தொப்பி பிரட்டும் இலங்கை அரசுக்கு சர்வதேசத்தின் இந்தப் பார்வை தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்குவதற்குச் சாதகமாகியது.
இறுதிப் போரிலும் இந்த உயிர்க் கொடையாளர்களினது பங்கு கணிசமானதாக இருந்தது. ஆனாலும் அனைத்து மௌனிப்புக்களுடனும் தற்கொடையாளர்களின் நினைவும் மௌனிக்கப்பட்டாயிற்று. ஒரு இனத்தின் விடுதலையின் அடையாளமாக இருந்தவர்கள் கால அடுக்குகளில் மறக்கப்படுவது துயரமான உண்மையே. ஆனாலும் புலம்பெயர் தேசங்களில் சில நினைவு முணுமுணுப்புக்கள் கேட்கின்றன. அது எஞ்சியிருக்கும தமிழர் வரலாற்றை இட்டு நிரப்பக் கூடும்.
நன்றி - உதயன்
0 கருத்துரைகள் :
Post a Comment