அடுத்த மாதம் 5-ஆம் தேதியன்று விழுப்புரத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்ட ‘தமிழ் ஈழ ஆதரவு (டெசோ)’ மாநாட்டை அடுத்த மாதம் 12-ஆம் தேதி சென்னையில் நடத்த தி.மு.க. தலைவர் கலைஞர் முடிவு செய்து பல அறிக்கைகளையும் தொடர்ந்தும் விட்டுக்கொண்டு இருக்கிறார். பிற நாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் பலர் கலந்து கொள்ள இருப்பதனால், சென்னையை தெரிவு செய்துள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா கொங்குநாட்டில் ஓய்வெடுக்கும் காரணத்தினால் சென்னை வசதியாக இருக்குமென்று தி.மு.க. கருதியுள்ளது போலும்.
இன்னொரு நாட்டுக்கு எதிராக போராட்டங்கள் செய்யும் போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயலாற்றினாலே வெற்றியளிக்கும். இந்தியாவின் இறைமைக்கு உட்பட்டு வாழும் தமிழகத்தின் மக்கள் இந்திய மத்திய அரசு எடுக்கும் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு தான் செயற்பட வேண்டும் என்பது சர்வதேச இராஜதந்திர நியதி. இந்திய மத்திய அரசு தமிழகத்தின் உணர்வுகளுக்கு எள்ளளவேனும் மதிப்பளிக்கவில்லை.
சிங்கள வான்படையினருக்கு தாம்பரத்தில் வைத்து பயிற்சி அளிக்கிறது இந்திய மத்திய அரசு. தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட குரலில் கண்டனக் குரலை எழுப்பியதும் தமிழகத்திலிருந்து வெளியேற்றி பிறிதொரு இந்தியாவின் மாநிலத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசு எவ்வகையிலும் செவிசாய்க்கவில்லை என்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இப்படியான நாட்டில் வாழும் தமிழக மக்கள் ஓன்றுபட்டு ஒரே குரலில் போராடினால்த்தான் வெற்றி அடைய முடியும்.
கலைஞரின் அரசியல் விளையாட்டில் ஈழத் தமிழினம்
அரசன் ஆண்டாலென்ன ஆண்டி ஆண்டாலென்ன மக்களுக்கு நல்லது நடந்தாலே போதும் என்பது பழமொழி. ஆட்சியிலிருந்த காலத்தில் ஈழத் தமிழினம் அழிவதைப் பார்த்து இராஜதந்திர விளையாட்டுக்களை ஆடிய கலைஞர் இப்போது ஆட்சியில் இல்லாத காலத்தில் அரசியல் விளையாட்டை ஆடத் தொடங்கியுள்ளார். இவருடைய அரசியல் விளையாட்டு 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இருப்பினும், தமிழினக் காவலர் என்று இவருடைய கட்சிக்காரர்கள் நம்பியிருந்த வேளையில் தமிழினம் அழிவதை தடுத்து நிறுத்த தவறிய காரணத்தினால் மக்களின் ஆதரவை சமீபத்தில் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் இழக்க நேரிட்டது.
எந்தக் காரணங்களுக்காக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனதோ, அதே காரணங்களை முன்வைத்து தமது கடந்த காலச் செயற்பாடுகளை நியாயப்படுத்த பல்வேறுபட்ட அரசியல் கோமாளித்தனத்தை கலைஞர் செய்தே வந்துள்ளார். இவருடைய விளையாட்டில் அகப்பட்டுள்ளது ஈழத் தமிழினமே. ஏற்கனவே சிங்கள ஏகாதிபத்திய தேசத்தினால் தமிழர்கள் தமது இருப்பை இழந்து வருகிறார்கள். கலைஞர் மரணிப்பதற்கு முன்னதாகவே ஈழத் தமிழினம் அழிந்து போய்விடும் நிலையே ஈழத்தில் நிலவுகிறது. இப்படிப்பட்ட வேளையில் பல அறிக்கைகளை விட்டு தமிழக மற்றும் உலகத் தமிழர்களின் ஆதரவைப் பெற கலைஞர் முயற்சிகளை முன்னெடுக்கிறார்.
விழுப்புரத்தில் நடத்த திட்டமிடப்பட்ட டெசோ மாநாட்டை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடத்த முடிவு செய்துள்ளதாக தி.மு.க அறிவித்துள்ளது. மாநாட்டில் சிறிலங்கா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் மற்றும் இந்தியாவின்; பிற மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். முக்கிய மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துள்ளது தி.மு.க. கலந்து கொள்பவர்களின் வசதிகளுக்காகவே தான் இம்மாநாடு சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று காரணம் கூறியுள்ளது தி.மு.க.
மாநாட்டின் வரவேற்புக் குழுவில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, ஏ.வ.வேலு, ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, காஷ்மீரைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேதகு வங்க முதல்வர் மம்தா, மத்திய அமைச்சர் சரத்பவார், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உட்பட பல ஈழக் கோட்பாட்டுக்கு ஆதரவான இயக்கங்களின் பிரதிநிதிகளையும் அழைத்துள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இவர்களை வைத்து கலைஞர் கடந்த காலங்களில் ஈழத் தமிழினத்திற்கு செய்த பாவங்களை துடைக்க முயல்கிறார் கலைஞர் போலும்.
தமிழர்களின் அவலங்களை அலசும் கலைஞர்
பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் கொலை செய்ய உதவியாக இருந்த மத்திய அரசுக்கு தூணாக நின்று சோனியாவின் பின்னால் அணிவகுத்து நின்ற கலைஞரும் அவருடைய கட்சியின் அமைச்சர்களும் தற்போது திடீரென்று தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது அவருடைய அரசியல் தந்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. தமிழீழத்துக்கு ஆதரவான நிலையை இந்தியாவில் மீண்டும் ஏற்படுத்த வேண்டிய நிலை அன்று கலைஞர் போன்ற அறிஞர்களுக்கு தேவைப்பட்டது. விடுதலைப்புலிகள் இல்லாத காலத்தில் இந்தியாவில் மீண்டும் ஈழத்திற்கான விதையை விதைப்பதன் மூலமாக தமிழீழ தனியரசை இந்தியாவின் ஆதரவுடன் பெறலாம் என்பது உண்மையாக இருப்பினும் இழப்பைக் குறைத்து பலனை மேலோங்கச் செய்வதே கெட்டித்தனம். இதனைச் செய்ய தவறினார் கலைஞர் என்பதே கண்டனத்துக்குரியது.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனமாக்கிய பின்னரே பல்லாயிரம் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இப்படியான சம்பவத்தை இந்திய நடுவன் அரசின் ஒத்தாசையுடன் கலைஞரினால் தடுத்திருக்க முடியும். வயதாகிப் போன காரணத்தினால் சில மணித்தியாலங்களுக்குள்ளேயே உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டிய தர்மசங்கட நிலைக்கு கலைஞர் தள்ளப்பட்டார் என்பதே உண்மை. தள்ளாடும் வயதிலும் காலை ஐந்து மணிக்கு எழும்பி உடற் பயிற்சியை மேற்கொள்ளும் கலைஞர் நிச்சயம் தான் சாவதை விரும்பமாட்டார்.
இப்படிப்பட்ட கலைஞர் தற்போது சிறிலங்காவில் இடம்பெறும் தமிழர் விரோதச் செயற்பாடுகளை பட்டியலிட்டு பேசிவருகிறார். சமீபத்தில் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கேள்வி: 2013-ம் ஆண்டு செப்டம்பரில் இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சொல்லியிருக்கிறாரே?”
“பதில்: ஆனால் தேர்தல் நடைமுறைகள் என்று வாக்காளர் பட்டியல்கள் புதுப்பிக்கப்பட வேண்டுமென்றெல்லாம் சொல்லியிருப்பதில் ஏதோ உள்ளார்ந்த அர்த்தம் இருப்பதாக தெரிகிறது. தேர்தல் நடத்துவதுகூட பிறகு இருக்கட்டும். இலங்கை வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர், கடந்த மாதம் பூசா முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதை எதிர்த்த மற்ற விடுதலைப்புலிகள்; பூசா முகாமுக்கு மாற்றப்பட்டவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கே மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர். இதை மறுத்த சிறை அதிகாரிகள், மூன்று விடுதலைப்புலிகளை ஒரே அறையில் தள்ளி பூட்டிவிட்டனர். இதனால் வவுனியா சிறையில் கடந்த மாதம் 30-ந் தேதி கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த 201 கைதிகளும், அனுராதபுரத்தில் உள்ள சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் தமிழ் கைதிகள் பலர் காயமடைந்துள்ளதோடு, கணேசன் நிமலரூபன் என்பவர் இறந்து விட்டார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.”
“நிமலரூபன் உடலை பெற்றுக்கொண்ட அவரது பெற்றோர், தங்கள் மகன் உடலை வவுனியாவில் தகனம் செய்யப்போவதாக கூறினர். ஆனால் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் அதற்கு கூட அனுமதி மறுத்து கொழும்புக்கு அருகே உள்ள சுடுகாட்டில் நிமலரூபனின் உடலை தகனம் செய்துவிட்டார்களாம். நிமலரூபனின் உடல் முழுக்க ரத்தம் படிந்திருந்ததாகவும், அவருடன் காயம் அடைந்த மற்றொரு கைதி கோமா நிலையில் மருத்துவமனையிலே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்ணின் மைந்தனுக்கு மரணத்தில்கூட மண் உரிமை மறுக்கப்பட்டது, மாபாதகம் அல்லவா? இதற்கெல்லாம் ஓர் விடிவு காண வேண்டும் என்பதற்காகத்தான் ‘டெசோ’ மாநாடு நடைபெறுகிறது” என்று தனது பதிலில் தெரிவித்துள்ளார் கலைஞர்.
திரைக்கதை எழுதி பல்லாயிரம் கோடிகளைச் சம்பாதித்த கலைஞருக்கா மக்களைக் கவரும் கதைகளை எழுத முடியாது. இவருடைய கதைகளுக்கு நிச்சயம் தமிழகத்தில் வரவேற்பு இருக்கிறதா, இல்லையா என்பதனை அறிய ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். யார் போடும் வேடங்களினாலும் மக்களுக்கு நீதி கிடைத்தால் வரவேற்கத்தக்கதே.
அனலை நிதிஸ் ச. குமாரன்
0 கருத்துரைகள் :
Post a Comment