மஞ்சள் அங்கிகளால் மறைக்கப்படும் சமூக பயங்கரவாதம்

தமிழ் மக்கள் மீதும் அரசுக்கு எதிராகச் செயற்படும் நேர்மையான சக்திகள் மீதும் வன்கொடுமைகளையும் கொலைகளையும் நடத்த ஏவிவிடப்பட்ட பாதாள உலகக் கோஷ்டியினரும் புத்த பிக்குகளும் இப்போது தென்னிலங்கையிலும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டப் புறப்பட்டு விட்டனர். அரசின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இவர்கள் இப்போது அரசுக்கே தலையிடியாகிவிட்ட நிலையில் ஒரு சிலராவது கைது செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.


 1917ஆம் ஆண்டில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சி வீழ்த்தப்பட்டு விடுதலை பெற்ற சோவியத் யூனியன், மாமேதை லெனின் தலைமையில் உருவாக்கப்பட்டது. தொழிலாளி, விவசாயி மக்களால் உருவாக்கப்பட்ட சமவுரிமை ஆட்சி அதிகாரத்தை ஒழித்துக்கட்ட, புரட்சி எதிர்ப்பாளர்கள் நடத்திய உள்நாட்டுப் போர்கள் ஏறக்குறைய மூன்று வருடங்கள் தொடர்ந்தன.
 
 எனினும் சோவியத் செஞ்சேனையும் மக்களும் தங்கள் விடாப்பிடியான உறுதியான அர்ப்பணிப்புகளுடன் கூடிய வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர். 
 
போர்களில் தோற்கடிக்கப்பட்ட பிற்போக்கு சக்திகள் மலைப் பிரதேசங்களிலும் நாடுகளிலும் பதுங்கியிருந்தவாறு இரவுவேளைகளில் கிராமங்களுக்குள் புகுந்து கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் போன்ற பயங்கரங்களை மேற்கொண்டனர். வயல் நிலங்களையும், மேய்ச்சல் புல்வெளிகளையும் எரியூட்டி மக்களை வறுமையில் தள்ள முயன்றனர்.
 
இந்த நடவடிக்கைகளின் அடிப்படையைச் சரியாகப் புரிந்து கொண்ட லெனின் சமூக பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுமாறு மக்களை அறைகூவி அழைத்தார். பெண்களுக்கும் ஆயுதம் வழங்கி தற்காப்புப் போராட்டங்களில் ஈடுபடத் தூண்டினார். சோவியத் செஞ்சேனை மக்களுடன் இணைந்து போராடியது.
 
ஒரு சில மாதங்களில் சமூக பயங்கரவாதம் வேரோடு அழிக்கப்பட்டது. கொலை, கொள்ளை, வன்புணர்வு, பொருளாதார அழிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட சமூகப் பயங்கரவாதிகளில் ஒரு பகுதியினர் அழிக்கப்பட்டனர்; ஏனையோர் சரணடைந்தனர்.இத்தகைய வன்முறை சார்ந்த சமூக விரோதச் செயல்களையே சமூகப் பயங்கரவாதம் என லெனின் அழைத்தார்.
 
இலங்கையிலும் பயங்கரவாதம் பற்றி நிறையவே பேசப்பட்டது. இன்றும் பேசப்பட்டு வருகிறது. இங்கு 30 ஆண்டுகளாகப் பயங்கரவாதம் நிலவியதாகவும் அது இப்போது ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் இனி அதைத் தலையெடுக்க விடப் போவதில்லை எனவும் அரச தரப்பில் கூறப்படுகிறது.
 
 அதாவது தமிழ் மக்கள் தமக்கு மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் அரச பயங்காரவாதத்துக்கும் எதிராக நடத்திய போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டது. இந்தியா, சீனா உட்பட வல்லரசு நாடுகளின் உதவியுடன் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போர் தோற்கடிக்கப்பட்டது.
 
இந்தப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரசு கொடிய பயங்கரவாதத்தை அழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்தவாறே அரச பயங்கரவாதத்தைச் சுதந்திரமாகக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
 
இந்த அரச பயங்கரவாதத்தின் அனுசரணையுடன் தமிழ் மக்கள் மீது சமூக பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. கொலை, கொள்ளை, வன்புணர்வு, ஆள்கடத்தல், கப்பம் கோரல், ஊடகங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, நில அபகரிப்பு என தமிழ் மக்கள் மீதான சமூகப் பயங்கரவாதம் சுதந்திரமாகவே அரங்கேற்றப்பட்டது. இவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. அப்படித் தவிர்க்க முடியாமல் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தாலும் அவை இழுத்தடிப்புக்கள் காரணமாகப் பூசி மெழுகப்பட்டு விடும்.
 
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை அரங்கேற்றும் முகமாக சுதந்திரமாக உலவவிடப்பட்ட சமூக பயங்கரவாதம் இப்போது சிங்கள மக்கள் மேலும் பாய ஆரம்பித்துள்ளது. தமிழ் மக்கள் மீதும் அரசுக்கு எதிராகச் செயற்படும் நேர்மையான சக்திகள் மீதும் வன்கொடுமைகளையும் கொலைகளையும் நடத்த ஏவிவிடப்பட்ட பாதாள உலகக் கோஷ்டியினரும் புத்த பிக்குகளும் இப்போது தென்னிலங்கையிலும் தங்கள் கைவண்ணத்தைக் காட்டப் புறப்பட்டு விட்டனர். அரசின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இவர்கள் இப்போது அரசுக்கே தலையிடியாகிவிட்ட நிலையில் ஒரு சிலராவது கைது செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது.
 
அதிலும் மஞ்சள்  அங்கிகளை அணிந்து கொண்டு சமூகப் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலரைக் கைது செய்ய  வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிவிட்டது.
 
மஞ்சள் அங்கி அணிந்த பௌத்த பிக்குகளை மகான்களாகவும் புனிதர்களாகவுமே சிங்கள மக்கள் கருதி வருகின்றனர். அவர்கள் சாதாரண மக்களுக்குரிய சகல ஆசாபாசங்களையும் துறந்து சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்காகத் தங்களையே அர்ப்பணித்த உத்தமசீலர்களாகப் போற்றப்படுகின்றனர். உலக இன்ப, துன்பங்களில் ஆழ்ந்துபோய்விடாமல் இருப்பதற்காகத் திருமணமே செய்யாமல் வாழ்பவர்கள், அதன் காரணமாகவே சங்கங்கள் அமைத்து அன்பு, கருணை, தூய்மை என்ற அடிப்படையில் பௌத்த தர்மத்தைப் பரப்புபவர்கள்.
 
ஆனால் பெரும்பான்மையான பௌத்த பிக்குகளைப் பார்க்கும்போது இந்தக் கொள்கைகளை அவர்கள் எப்போதோ நிராகரித்துவிட்டார்கள் என்பது புரியவரும். புத்தபெருமான் அரச போகத்தைத் துறந்து அரச மரத்தடியில் அமர்ந்து ஞானம்பெற்றார். இவர்களோ அரச மரத்துக்கு தங்கவேலி போட்டு நிறைவு செய்துவிட்டு அரசாட்சியில் பங்காளிகளாகிவிட்டனர். முற்றும் துறந்த இவர்கள் மதவிகாரைக்காகவும் ஆடம்பர வாகனங்களுக்காகவும் ஒருவர் ஆடையை ஒருவர் பிடித்திழுக்குமளவுக்கு நிலை தாழ்ந்துவிட்டனர். 
 
இனவன் முறைகளிலும் பள்ளிவாசல்களை இடிப்பதிலும் தமிழ் ஆலய வளாகங்களில் புத்தர் சிலைகளை நிறுவுவதிலும் தலைமை தாங்கி கடையர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித பேதமும் இல்லை என்பதை நிறுவி வருகின்றனர்.
 
இதே சமூக பயங்கரவாதக் கரங்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் தொல்லை தரத் தவறவில்லை. பௌத்த சிலைகளைத் திருடி விற்பது, புதையல் அகழ்வது என இவர்களின் அடாவடித்தனங்கள் எப்படியெல்லாமோ உயர்வடைந்து வருகிறது.
 
அண்மையில் கொலை, கொள்ளை, வன்புணர்வு போதைபொருள் வர்த்தகம் என்பன தொடர்பாகத் தென்னிலங்கையைச் சேர்ந்த சங்கநாயக்கர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டதை அடுத்து காலிச் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
 
 அதன் பின்பு சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து காலி சிறைச்சாலைக்குள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அங்கு 44 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன. 
 
அதில் மேற்குறிப்பிட்ட பிக்குவிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசி மிகவும் சக்தி வாய்ந்த 3 ஜி வகையைச் சேர்ந்ததாகும். பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்கள் சிறையில் இருந்தவாறே கொலை, கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற சமூக பயங்கரவாதச் செயல்களைக் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் தமது சகாக்களை வழி நடத்தி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
அதே போன்ற குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட இந்த மஞ்சள் அங்கிப் பிக்குவும் தொலைபேசி மூலம் தனது கையாள்களை வழிநடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிறைகளில் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்வதும் அங்கு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்படுவதும் வழமையாக இடம்பெறும் சம்பவங்கள். 
 
அப்படியானால் ஒவ்வொரு முறையும் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்ட பின்பு உணவுப் பொதிகள் கூடப் பரிசோதித்து அனுப்பப்படும் சிறைச்சாலைகளுக்கு உள்ளே எப்படி போய்ச் சேர்கின்றன? இந்தப் பிக்குவுக்கு எப்படித் தொலைபேசி கிடைத்தது?
 
இதிலிருந்தே இந்தப் பிக்குவுக்கு பாதாள உலகக் கோஷ்டித் தலைவர்களைப் போன்ற பல கையாள்களும் சிறை அதிகாரிகள் மட்டத்தில் செல்வாக்கும் உண்டு என்பது தெட்டத் தெளிவாகிறதல்லவா? மஞ்சள் அங்கிகளில் துறவிகளாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு சமூக பயங்கரவாதிகளாக விளங்குகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதில் என்ன தவறு இருக்க முடியும். 
 
இது மட்டுமன்றி மிகுந்தலை விகாரையின் பீடாதிபதி 9 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் அடைக்கப்பட்டதை நாம் மறந்து விட முடியாது. லண்டனில் வாழ்ந்து வந்த இலங்கைப் பிக்கு ஒருவருக்கு ஒரு சிறுமியைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
 
மேலும் புதையல் தோண்டும் குற்றச்சாட்டில் பல பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொன்மையான விகாரைகளின் பெறுமதிமிக்க புத்தர் சிலைகளைக் களவாடி வெளிநாட்டவர்களுக்கு விற்கவும் சில பிக்குகள் பின் நிற்பதில்லை. இங்கு உற்று நோக்கப்பட வேண்டிய சில முக்கிய விடயங்கள் உண்டு. 
 
1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தந்தை செல்வா தலைமையில் சத்தியாக்கிரகம் நடத்தியபோது நடத்தப்பட்ட சிங்களக் காடையர்களின் வன்முறைகளுக்கு புத்த பிக்குகளே தலைமை தாங்கினர். 1958 இல் பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு எதிராகப் பிரதமரின் வீட்டின் முன் சத்தியாக்கிரகம் நடத்தி பிக்குகளே தமிழ் மக்கள் மீதான இன அழிப்பைத் தொடக்கி வைத்தனர். 
 
1977, 1983 ஆகிய ஆண்டுகளில்கூட பிக்குகளே வீதியில் இறங்கி வன்முறைகளை வழிநடத்தினர். அனுராதபுரம் தர்கா இடிப்பு, தம்புள்ள பள்ளிவாசல் இடிப்பு, தெஹிவளை தர்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அனைத்துக்கும் பிக்குகளே தலைமை தாங்கினர்.
 
அதாவது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகளில் பிக்குகள் ஈடுபடும்போது அரசும் சிங்கள புத்திஜீவிகளும் அவர்களுக்கு ஆதரவு வழங்கினர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன்பலன் பிக்குகளின் சமூக பயங்கரவாதம் சிங்களப் பகுதிகளிலும் தனது கரங்களை விரிக்கின்றது.
 
ஆனால் சமூகப் பயங்கரவாதத்தை நீண்ட நாள்களுக்கு மஞ்சள் அங்கிகளால் மறைக்க முடியாது என்பது மட்டும் உண்மை. எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்டாரநாயக்காவைத் தோர்தலில் பெரும் வெற்றிபெற வைத்ததும் அவரைச் சுட்டுக் கொன்றதும் பிக்குகள் என்பதே வரலாறு.      

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment