சிவந்தனின் ஐந்து அம்சக் கோரிக்கையும் கோபி அனனின் ஆறு அம்சத் திட்டமும் - வேல் தர்மா


இலங்கையில் ஒரு மக்கள் கிளர்ச்சி அடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கு அப்பாவித் தமிழர்களுகு எதிரான அடக்கு முறை உச்சக்கட்டத்தில் தொடர்கிறது. சிரியாவில் ஒரு மக்கள் கிளர்ச்சி அடக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சிரியாவில் நடக்கும் அடக்கு முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் பாது காப்புச் சபையில் தீர்மானம் 2043 நிறைவேற்றப்பட்டது. அதன் படி சிரிய மக்களின் பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை நடாத்தி சிரிய மக்களின் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள் சபையின் முன்னள் பொதுச் செயலர் கோஃபி அனன் ஐக்கிய நாடுகளுக்கும் அரபு லீக் நாடுகளுக்குமான தூதுவராக நியமிக்கப்பட்டார்.


இலங்கையில் போர் உச்சக் கட்டத்தில் நடந்த போதோ அல்லது இன்றுவரை தொடரும் மக்களுக்கு எதிரான அடக்கு முறையின் போதோ ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இலங்கையில் மக்கள் நாளொன்றிற்கு இருபத்தையாயிரம் பேர் வரை கொல்லப்பட்ட போது ஐக்கிய நாடுகளின் பாது காப்புச் சபை உறுப்பினர் நிலத்திற்கு கீழ் அறையில் இரகசியமாகக் கூடினர். மனித உரிமை அமைப்புக்களும் சில ஊடகங்களும் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கை செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதால் ஐக்கிய நாடுகள் சபை பான் கீ மூனின் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பியது. அவர் இலங்கை சென்று பின்னர் சாகவசமாக இந்தியாவும் சென்று நியூ யோர்க் திரும்பினார். இலங்கை நிலவரம் தொடர்ப்பாக அறிக்கை சமர்ப்பிக்கும் படி அவரை கேட்ட போது அவர் மாட்டேன் என்று அடம் பிடித்தார். ஐக்கிய இராச்சியம் விஜய் நம்பியார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டிய போது மீண்டும் நிலக் கீழ் அறையில் இரகசியமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.



சிரிய மக்களுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறைகள் தினசரி உலக ஊட்கங்கள் எல்லாவற்றிலும் பகிரங்கப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளை சிரியப் படையினர் தண்டனையாகசெய்வதாக ஊடகங்கள் அம்பலப்படுத்துகின்றன. இலங்கையில் இன்றும் தொடரும் அடக்கு முறைகளைப் பற்றி எழுதிய வாஷிங்டன் போஸ்ற் பத்திரிகை இலங்கையில் தமிழர்களின் வீடுகளில் படையினர் சமையல் கட்டுக்குள் சென்று அங்கு பெண்களிடம் காப்பி தரும்படி கேட்கிறார்கள் என்று எழுதியுள்ளது. இலங்கைப் படையினர் செயல்களில் மிகவும் உச்சமான மரியாதைக்குரிய நடத்தை சமையல் கட்டுக்குள் சென்று காப்பி கேட்பதுதான் என்று எமக்குத் தெரியும். பிரச்சனைகளைப் பற்றிய செய்திகளை மக்களுக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் எப்படி செய்திகளைத் திரிபு படுத்துகின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. சிரியாவில் ஒரு மக்களாட்சி வேண்டி மக்கள் புனிதமாகப் போராடுவதாகச் சொல்லும் ஊடகங்கள் இலங்கை அரசு ஒரு மாபெரும் பயங்கரவாத இயக்கத்தை ஒழித்துக் கட்டிவிட்டு மக்களிடை நல்லிணக்கம் ஏற்படுத்தாமல் மனித உரிமைகளை மீறுகிறது என்று தெரிவிக்கின்றன. பசியால் கதறும் குழந்தை முன் கிலுகிலுப்பை ஆட்டுவது போல் சில நாடுகள் 2012 மார்ச் மாதம் ஜெனீவாவில் ஒரு தீர்மானத்தை இலங்கை தொடர்பாக நிறைவேற்றின.

சிரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையினதும் அரபு லீக் நாடுகளினதும் தூதுவர் கோஃபி அனன் சிரியாவிடம் ஒரு ஆறு அம்சத் திட்டத்தை முன்வைத்தார்:

1. சிரிய மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் சிரிய மக்களால் முன்னெடுக்கப்படும் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கை எடுத்தல்



2. மோதல்களை நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் படைக்கலன்கள் ஏந்தாத 300கண்காணிப்பாளர்களைச் சிரியாவிற்குள் அனுமதித்து மோதல் நிறுத்தத்தை உறுதி செய்தல்.



3. மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல். மோதல் நடக்கும் இடங்களில் நாளொன்றிற்கு இரு மணித்தியாலங்கள் தொண்டர் நிறுவனங்களை சேவை செய்ய அனுமதித்தல்.



4. காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருப்பவர்களை உடன் விடுதலை செய்தல்.



5. நாடு முழுவதும் ஊடகவியலாளர்களை தடையின்றி பயணங்கள் செல்ல அனுமதித்தல்



6. சட்ட பூர்வமான அமைதியான ஆர்ப்பாடங்களை அனுமதித்தல்.



இந்த ஆறு அம்சத் திட்டத்தை நிறைவேற்றாவிடில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை சிரியாமீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு மனதாக எச்சரிக்க வேண்டும் என கோஃப் அனன் சொல்கிறார். இரசியா சிரியாவிற்கு படைக்கலனகள் அனுப்புவதை நிறுத்தி விட்டது. இலங்கைப் படையினருக்குப் பயிற்ச்சி அளிப்பதை இந்தியா இன்று வரை தொடர்கிறது. சிரியாமீது கடும் பொருளாதாரத் தடை அடுத்த கட்டமாக வரலாம். சிரியக் கிளர்ச்சியாளர்களின் ஒரு பிரிவினரை ஐக்கிய அமெரிக்க அரச உயர் அதிகாரிகள் சந்திக்கிறார்கள். அடுத்த கட்டமாக அமெரிக்கா சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு படைக்கலன்கள் வழங்கும். ஏற்கனவே துருக்கியூடாக சிரியக் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க அடக்கு முறையில் இருந்து விடுவிக்க எந்த ஒரு காத்திரமன நடவடிக்கையும் யாரும் எடுக்காத நிலையில் புலம் பெயர் அமைப்புக்கள் பிளவு பட்டு நிற்கும் நிலையில் சிவந்தன் என்னும் ஒரு இளைஞன் களமிறங்குகிறான் உலகத்தின் கவனத்தை ஈர்க்க. உலக விளையாட்டு வீரர்களும் இரசிகர்களும் அரசத் தலைவர்களும் கூடும் இலண்டன் ஒலிம்பிக் நிகழ்வை மையமாக வைத்து தனது அறப் போர்களத்தை திறக்கிறான். ஆம் சீரடி சிவந்தன் என்றழைக்கப்படும் கோபி சிவந்தன். கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
இக்காலப்பகுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார்.


1. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும்



2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இதில் தமிழீழ மக்களுக்கெதிராக நடாத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்திற்கெதிரான குற்றங்கள் மற்றும் தமிழனவழிப்பு நடவடிக்கை என்பன உள்ளடக்கப்படல் வேண்டும்.



3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நிலஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.



4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும். அவர்களின் மீதான வன்முறைத் தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட்டு அனைத்துலக அபய நிறுவனங்கள் அவர்களை தொடர்ச்சியாக சென்று பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படல் வேண்டும்.



5. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.

பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்ட சிரியாவின் பிரச்சனைக்கு கோஃபி அனனின் ஆறு அம்சக் கோரிக்கைகளுடன் ஒப்பிடுகையில் மூன்று இலட்சத்திற்கு மேல் கொல்லபப்ட்ட தமிழர்களின் பிரச்சனைக்கு சிவந்தன் வைத்த கோரிக்கை நியாயமானதே. இதை உலக நாடுகள் உணராத நிலையில் தமிழர்கள் அனைவரும் ஒன்று கூடி சிவந்தனின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அம்மியை நகர்த்தும் முயற்ச்சிகளைத் தொடரவேண்டும்.

எமது போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எமக்கு சட்ட ஆலோசனை வழங்கியவர் தலைமை தாங்கி நடாத்துவார் என்றோ எனக்கு நிதி திரட்டியவர்கள் தலைமை தாங்கி நடாத்திச் செல்வர் என்றோ அல்லது என்னுடன் இருந்த போராளிகள் ஐரோப்பா சென்று வழிநடத்துவர் என்றோ தேசியத் தலைவர் கூறவில்லை. புலம் பெயர்ந்து வாழும் இளைய தலைமுறையினர் தொடர்ந்து நடாத்துவர் என்று அவர் கூறியதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.


 -வேல் தர்மா-
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment