“ராஜபக்சவின் தப்புக்கணக்கு” – தினமணி ஆசிரியர் தலையங்கம்


ராஜபக்சவுக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், வடக்கு மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!- என்கிறது தமிழ்நாட்டின் ‘தினமணி‘ நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்.

“அதிபர் ராஜபக்சவைப் பொருத்தவரை, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் புலியின் கலையாத தடங்களில் மனக்கலக்கம் கொள்பவராகவே இருக்கிறார் என்பதை அவரது சமீபத்திய நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன.

அண்மையில் இங்கிலாந்து சென்ற ராஜபக்ச, அங்கு வாழும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் கடும் எதிர்ப்பால் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டுத் திரும்பியதன் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வாழும் இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலை 2013 செப்டம்பருக்குப் பிறகு நடத்தலாம் என்கின்ற முடிவை அறிவித்திருக்கிறார்.

தேர்தலைத் தள்ளிப்போட அவர் அளித்துள்ள முக்கியக் காரணம் வாக்காளர் பட்டியல் தான். தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 30 ஆண்டுகள் பழமையானது.

தற்போது இப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதால், முன்பு புலிகளின் அச்சத்தால் வெளியேறிய தமிழர்கள் திரும்பிவந்து மெல்ல மெல்லக் குடியேறத் தொடங்கியுள்ளனர்.

ஆகவே புதிய வாக்காளர் பட்டியலைத் தயாரித்த பிறகு இங்கே முறையாகத் தேர்தல் நடத்தப்படும் என்கிறது ராஜபக்ச அரசின் அறிவிப்பு.

இது விவரமற்ற பேச்சா அல்லது திட்டமிட்ட சதியா என்பதுதான் நமது சந்தேகம். கடந்த மூன்று ஆண்டுகளில், வடக்கு மாகாணத்தில் இலங்கை அதிபருக்கான தேர்தல் நடந்தது. தமிழர்கள் வாக்களித்தார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தமிழர்கள் வாக்களித்தார்கள். அதிக இடங்களில் தமிழ் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றது.

சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போதும் தமிழர்கள் வாக்களித்தார்கள். இப்போது மட்டும் ராஜபக்சவுக்கு ஏன் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்கிற திடீர் அக்கறை?

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளைக் கொண்ட வடக்கு மாகாணத்தில் தமிழர்கள்தான் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றனர்.

ஆகவே வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றால், அங்கே ஒரு தமிழர் முதலமைச்சர் பதவிக்கு வருவார் என்பது நிச்சயம்.

அங்கே தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண அரசு இல்லாத நிலையில், இலங்கை அரசே நேரடியாக நிர்வாகம் செய்யும் தற்போதைய அதிகாரம் குன்றிப்போகும்.

மாகாண அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் சென்றுவிடும். இந்த அச்சம்தான் ராஜபக்சவைத் தேர்தலைத் தள்ளிப்போட வைக்கிறது.

இலங்கையில் தமிழர்கள் அரசியல் சக்தியாக மாறிவிட்டால், “மேலை நாடுகளின் தீயசக்திகள்”, வடக்கு மாகாணத்தைப் பயன்படுத்தி இலங்கையைப் பிளவுபடுத்தும் என்ற பொய்க்கருத்துகள் இலங்கைப் பத்திரிகைகளில் கசியவிடப்படுகின்றன. இது ராஜபக்சவை நியாயப்படுத்தும் ஏற்பாடுகள்.

இத்தகைய கருத்து, குறிப்பாக இங்கிலாந்து சென்று எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க முடியாமல் ராஜபக்ச நாடு திரும்பிய பிறகு உருவாக்கப்பட்டது.

அதாவது, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், தமிழர்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும் வடக்கு மாகாண அரசை இலங்கைக்கு எதிராகத் திருப்பிவிடுவார்கள் என்கின்ற அச்சத்தால் “மேலை நாடுகளின் தீயசக்திகள்” என்றெல்லாம் பேசுகிறார்கள்.

வடக்கு மாகாணத்தில் தமிழர் ஆட்சி ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சகோதரர்கள் வாழுரிமை பெற்றதற்காக மகிழ்வார்கள்.

எனினும், அவர்களில் பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலையில் இல்லை. இரண்டாவது தலைமுறையின் விழுதுகள் புலம்பெயர்ந்த மண்ணில் வேர் கொண்டிருக்கின்றன.

புதிய தொழில், வேலை என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டுவிட்ட அவர்களின் இன்றைய விருப்பம் ஈழ மண்ணில் எஞ்சியுள்ள தாயகத் தமிழர்கள், சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதுதான்.

தங்கள் சகோதரர்கள் துன்பத்தில் சாதல்கூடாது என்பதுதான் அவர்களது விருப்பமாக இருக்க முடியுமே தவிர, அரசியல் செய்வது அல்ல.

ராஜபக்ச சொல்லும் காரணத்தை உண்மையென்றே வைத்துக்கொண்டாலும், ஒரு தமிழரின் தலைமையில் வடக்கு மாகாணத்தில் ஆட்சி அமையும்போது மட்டுமே, புலம்பெயர்ந்த தமிழர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் தாயகம் திரும்புவார்களே தவிர, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படுவதற்காகத் தாயகம் திரும்ப மாட்டார்கள்.

அதிபர் ராஜபக்சவின் உண்மையான நோக்கமே வேறாக இருக்கக்கூடும்.ஏற்கெனவே, கடந்த மூன்றாண்டுகளில் வடக்கு மாகாணப் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றும் பணி அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாகாணத் தேர்தலுக்கு முன்னால் கணிசமாகக் குடியேற்றம் ஏற்பட்டுவிட்டால், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் குறைவாக இருக்கச் செய்துவிட முடியும் என்பதுதான் அதிபர் ராஜபக்சவின் திட்டமாக இருக்கக்கூடும்.

இலங்கையின் அரசியல் சட்டம் மாற்றப்பட்டு இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயக முறை அமலுக்கு வராதவரை, பெருவாரியான சிங்களர்களின் பிரதிநிதி மட்டுமே சர்வ வல்லமை பெற்ற அதிபராக முடியும் என்கிற நிலைமை தொடரும்வரை, இலங்கைவாழ் தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.

இதை வலியுறுத்த அங்கேயும் யாருமில்லை, இந்திய அரசும் தயாராக இல்லை, சர்வதேசத் தலைவர்களும் அக்கறை காட்டுவதில்லை.

இலங்கையின் அடிப்படைப் பிரச்சினையே இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் முழுமையான பங்கு அளிக்கப்படவில்லை என்பதுதான்.

அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டதால்தான், ஏன் மறுக்கிறீர்கள் என்று கேட்டவர்களை வன்முறையால் ஒடுக்கி, மனிதஉரிமைகள் மிதிக்கப்பட்ட போதுதான், அந்த மண்ணில் மிதிவெடிகள் பரவலாகின.இத்தனை காலத்துக்குப் பின்னர் அங்கே இயல்பான அரசியல் சூழல் தானாகவே எழுகிறது.

அதை ஏன் ராஜபக்ச மறுக்க வேண்டும்? அவருக்கு உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது மரியாதையும், தமிழர்கள் மீது அக்கறையும் இருக்குமேயானால், அவர் வடக்கு மாகாணத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் உடனடியாக நடத்த வேண்டும்.

நடத்தாமல் போனால்? ஒருவேளை, சரித்திரம் திரும்பக்கூடும்!”
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment