தமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும்


தமிழகத்தின் அனைத்து அமைப்புக்களும் தமது அட்டவணைகளுக்கு ஏற்றவாறே காய்களை நகர்த்துகிறார்கள். தமிழின முன்னேற்றத்திற்காக இவ் அமைப்புக்கள் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. சில அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாத்துறையினர் உட்பட பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களில் இறங்குவார்கள். பின்னர் அனைத்தும் மறைக்கப்படும் நிகழ்வுகளே அதிகமாக இருக்கிறது.
சுய காரணங்களுக்காக தமிழகத்தில் இயங்கும் அமைப்புக்கள் தமிழின அழிவுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் நிச்சயம் தமிழினத்தை யாரினாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இனியாவது தமிழகத் தமிழர்கள் உணர்வார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்து வரும் தோல்விகளிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களை சென்றடையக் கூடிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதனை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார் கலைஞர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வீராப்புப் பேசிய ஜெயலலிதா தற்போது ஆழ்ந்த மௌனம் காக்கிறார். முன் எப்போதும் இல்லாதவாறு ஈழத் தமிழர்கள் இப்போது பல்வேறுபட்ட அடக்குமுறைகளைச் சந்தித்து நிற்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஆயுதமுனையில் பலம்பெற்று இருந்த வேளையில் தமிழர்களைக் கண்டாலே பயந்து ஒதுங்கிய தமிழினப் பகைவர்கள் தற்போது தமிழர்களை வதைப்படுத்துகிறார்கள். தமிழர் காணிகளில் தங்கியிருந்தே தமிழினத்தை அழிக்கும் செயற்பாடுகளை செய்கிறது சிங்களம். சமீபத்தில் சிறிலங்கா சென்று திரும்பிய இந்தியக் குழுவினர் கூட ஈழத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறைக்குள்ளையே வாழ்கிறார்கள் என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
தொலைநோக்கு சிந்தனை அவசியம்
தமிழினம் அழியும்போது அவர்களைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இந்திய அரசு. அதற்கான அவசியமும் இந்திய மத்திய அரசுக்கு இல்லை. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒரு காலத்தில் தமிழர்களே அதிகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக தமிழர்களின் இருப்பை எப்படியேனும் குறைக்க வேண்டுமென்கிற வகையில் பல்வேறுபட்ட காரியங்களை மறைமுகமாக இந்திய அரசுகள் செய்தன.
திராவிடருக்கு பதிலாக ஆரியரை குடியேற்றுவதே இந்தியாவுக்கு சிறந்ததென நன்கே உணர்ந்து செயற்பட்டது இந்திய அரசு. இத்தீவுகள் தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. தமிழர்கள் அதிகளவில் இத்தீவுகளில் வாழ்ந்தால் ஒரு காலத்தில் தமிழ் நாட்டுடன் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய கடற்படையினரின் செல்வாக்கு பாதிக்கும் என்கிற பயம் இந்திய அரசுக்கு இருக்கிறது. இதன் காரணத்தினாலேயே தனக்கு விசுவாசமான வங்காளிகளை அதிகளவில் குடியேற்றி உள்ளது இந்தியா.
மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கிழக்கு பாகிஸ்தானை 1970-களில் பிரித்து பங்களாதேஷ் என்கிற நாட்டை அமைத்துக் கொடுத்தது இந்திய அரசு. பங்களாதேஷ் எப்போதும் இந்தியாவுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்பது இந்தியாவின் கருத்து. வங்காளிகள் தமது இனத்தை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்களுடன் தோழமை கொள்வது இந்தியாவின் நலனுக்கே நல்லது என்கிற கருத்தையே இந்திய அரசு வைத்துள்ளது.
ஒரு நேரம் சாப்பாடு இருந்தால் போதும், சினிமாப் படங்கள் தினமும் வெளிவந்தால் போதும், தூங்க ஒரு குடிசை இருந்தால் போதும், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ்ந்தால் மட்டும் போதும் என்கிற நிலைப்பாட்டையே வைத்துள்ளார்கள் பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள்.
இனம் அழியும்போது மௌனம் வேண்டாம்
தமிழகத்தின் குரல் சற்று ஒலிக்கத் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசுடன் பேசுவதும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது இந்திய அரசு. தமிழக மக்கள் சற்று கொதித்தெழுந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை ஜெனிவாவில் எடுக்க வேண்டுமென்றவுடன், இந்திய அரசு தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை அன்று எடுத்தது. இந்நிலைப்பாட்டினால் சிறிலங்கா அரசின் பகையை சம்பாதிக்க வேண்டி வந்தது.
சிறிலங்காவை எப்படியேனும் அமைதிப்படுத்த வேண்டுமென்கிற காரணத்தினால் பல காரியங்களை அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு செய்து வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், முன்னாள் குடியரசுத் தலைவர் உட்பட பல முன்னணி இராஜதந்திரிகளை சிறிலங்காவுக்கு அனுப்பி மகிந்தாவை சமாதானப்படுத்த முயன்றது இந்தியா. இந்தியாவினால் தெரிவிக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசு சீனாவுடன் அதி நெருங்கிய உறவுகளைப் பேண ஆரம்பித்தது. இவைகளை சரிசெய்யவே சிறிலங்காவுக்கு ஆதரவான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் போன்றவர்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்துகிறது இந்திய அரசு.
இனமொன்று சிறிலங்காவில் அழியும் போது தொப்புள்கொடி உறவான தமிழகம் வெறும் வாய்மூடி மௌனியாக இருப்பது தாய் தமிழகத்துக்கும் நல்லதில்லை.  உலகம் பூராகவும் பரந்துவிரிந்து வாழும் தமிழர்களுக்கும் நல்லதில்லை. குறைந்தது ஒரு மாநில அதிகார உரிமையையாவது வைத்துள்ள தமிழகம் இந்திய அரசை வற்புறுத்தி தன் இனம் சார்ந்த நலன்களுக்கு ஏற்றவாறான வேலைகளை செய்வதே சிறந்தது. அதைவிடுத்து மௌனம் காத்தால் நிச்சயம் தமிழரை காப்பாற்ற யாராலும் முடியாமல் போய்விடும்.
அதிகாரத்தில் இல்லாத போது ஏதாவது ஒன்றைக் கூறுவது பின்னர் அதிகாரத்துக்கு வந்தவுடன் மௌனம் காப்பது எந்தவிதத்திலும் நல்லது அல்ல. கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோது ஈழத் தமிழினம் அழிவதைக்கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். ஆட்சியில் இல்லாத போது தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்கிற பாணியில் இப்போது பேசிவருகிறார். அதைப்போலவே ஜெயலலிதாவும் ஆட்சியில் இல்லாதபோது ஈழத் தமிழருக்கு இன்னல் நேர்ந்தால் தரணியே தாங்காது என்கிற பாணியில் பேசினார். தற்போது ஆட்சியில் இருக்கும்போது சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இல்லை.
தமிழக சிறைகளில் ஏராளமான ஈழத் தமிழ் இளைஞர் யுவதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளர்கள். பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜெயலலிதா போன்றவர்களினால் எவ்வாறு தமிழீழத்தைப் பெற்றுத்தர உதவியாக இருப்பார்கள் என்கிற கேள்வியே மேலோங்கியுள்ளது.
தமிழகம் கிளந்தெழுந்து தமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவான நிலைப்பாடை எப்போது ஒட்டுமொத்தமாக எடுக்க முன்வருகிறார்களோ அதுவரை தமிழனுக்கு விடிவே இல்லை. தமிழகம் கிளந்தெழுந்து போராடினால் அடுத்த கணமே இந்திய அரசினால் தமிழீழத்தைப் பெற்றுத்தர முடியும். கள நிலைமைகள் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சிக்கு ஆதரவாக இருக்கும் போது அவர்கள் மௌனம் காப்பது தமிழினம் செய்த சாபக்கேடே.
அனலை நிதிஸ் ச. குமாரன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. மனித இனங்கள் தோன்றுவதும் அழிவதும் காலம் காலமாக நடந்து வரும் ஒரு நடப்புதான்.ஈழத்தமிழரும் இந்த விதிக்கு உட்பட்டவரே.முற்காலத்தில் இயற்கை மாறுபாடுகள் மனித இனம் அழிவதற்கு காரணமாக இருந்தது. தற்காலத்தில் இனப்பகையே ஒரு இனம் அழிவதற்கு காரணமாக இருக்கிறது.

    ReplyDelete