கொழும்புடன் அதிகரிக்கும் மோதல் – புதுடெல்லி எதிர்கொள்ளும் புதிய சவால்


“இந்தியாவைப் பொறுத்தளவில், ராஜபக்ச அரசாங்கத்துடன் நீடித்த தொடர்பைப் பேணுவதற்கான கொள்கைப்பாட்டை உருவாக்குவதை தவிர வேறொரு தெரிவையும் கொண்டிருக்க முடியாது” இவ்வாறு new indian express நாளேட்டில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சபை செயலகத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் Bibhu Prasad Routray எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


பூகோள வல்லரசாகும் இந்தியாவின் குறிக்கோளுக்கு அதன் அயல்நாட்டில் இருந்து தற்போது புதிய சவால்கள் ஏற்பட்டுள்ளதற்கு போதியளவு சாட்சியங்கள் காணப்படுகின்றன. 



அண்மைய காலங்களில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ளது சிறிலங்கா அரசாங்கத்துக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 



இந்தியா, சிறிலங்காவின் அயல்நாடாக உள்ளதற்கு அப்பால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுத் திட்டத்தின் உறுப்பு நாடாகவும் உள்ளது. 



ஒரு கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. இத்தகவலை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் யூன் 29 அன்று சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த போது தெரிவித்திருந்தார். 



மார்ச் 2012ல் கூட்டப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா மீது விசனம் கொள்ளக் கூடாது என்ற கட்டாயநிலைக்கு சிறிலங்கா தள்ளப்பட்டுள்ளது. 



அடுத்த கட்டத்தில், இந்தியாவின் அழுத்தமானது இராஜதந்திர ரீதியாகப் பார்க்கும் போது பலவீனமான நிலையில் காணப்படுகிறது. 



தற்போது சிறிலங்காவை ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த வெற்றி மட்டுமே அதன் சாதனையாக காணப்படுகின்றது. 



சிறிலங்காவில் தற்போதைய பொருளாதார நிலை மிகவும் பலவீனமடைந்துள்ளது. 



அதேபோன்று மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆளும் திறனும் பலவீனமாகவே உள்ளது.



அதிபர் ராஜபக்ச சிங்கள மக்களின் மீட்பராக உள்ளார் என்ற கருத்தை விதைப்பதற்கான முயற்சி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றது. 



13வது திருத்தச் சட்ட அமுலாக்கம், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியா கொடுக்கும் அழுத்தம் மற்றும் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் போன்றவற்றில் வெற்றி கொள்வதை நோக்காகக் கொண்டே 'மகிந்த ராஜபக்ச சிங்கள மக்களின் மீட்பர்' என்பதை முதன்மைப்படுத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 



மேற்குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு எல்லைக்கு அப்பால் செல்லவில்லை என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 



இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல், நேர்மையான மீளிணக்கப்பாட்டு நடவடிக்கைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. 



இவற்றுக்கப்பால், போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்கர்களுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 50 மில்லியன் டொலர் பெறுமதியான கடனுதவி மற்றும் 30 மில்லியன் டொலர் பெறுமதியான இந்திய அரசாங்கத்தின் பிறிதொரு மானிய உதவித் திட்டம் என்பன முற்றுமுழுதாக தமிழ் மக்களை சென்றடையவில்லை. 



தமிழர் பிரதேசங்களில் சிறிலங்கா அரசாங்கம் நில அபகரிப்பை மேற்கொண்டு சிங்கள குடியேற்றங்களை அமைத்து அவற்றில் சிங்களப் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை குடியேற்றி வருவதாகவும், இடம்பெயர்ந்த மக்களுக்கான இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டம் மிகமெதுவாக அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 



சிறிலங்கா மீதான இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் சிங்கள மனோநிலையால் தட்டிக்கழிக்கப்படுகின்றது என்பதே உண்மையாகும். 



'நாட்டில் 13வது திருத்தச்சட்டமும், அதற்கப்பாலான சட்டமும் அமுல்படுத்தப்படும் என சிறலங்கா அதிபர் இந்தியாவிடம் வாக்குறுதி வழங்கியிருந்தது. 



விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதில் இந்தியா இராணுவ உதவிகளை வழங்கியதாகவும், சிறிலங்கா அதிபர் அறிவித்திருந்தார். 



தற்போது இந்தியா எலும்பை வாயில் கவ்வி வைத்திருக்கும் நாய் போன்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது' என யூலை 09 அன்று வெளியாகிய 'த சண்டே ரைம்ஸ்' பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



சிறிலங்கா விடயத்தில் இந்தியா கவலை கொள்வதற்கு சில தெளிவான காரணங்கள் உள்ளன. 



சிறிலங்காவில் இந்தியா தொடர்பாக எவ்வாறான அபிப்பிராயம் காணப்படுகின்றது என்பதை வெளிக்காட்டுவதற்கான கருத்து வாக்கெடுப்புக்கள் எதுவும் இடம்பெறவில்லை. 



ஆனால் பாகிஸ்தானிய மக்கள் அமெரிக்கா தொடர்பாக எவ்வாறான எண்ணப்பாட்டைக் கொண்டுள்ளார்களோ அதேபோன்றே சிறிலங்காவில் வாழும் சிங்கள மற்றும் தமிழ் மக்களும் இந்தியா தொடர்பில் காழ்ப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என்பதை பல்வேறு பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களின் ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் மூலம் அறியமுடிகின்றது. 



சிறிலங்காவில், தமிழ் மக்களுக்கு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இந்தியா ஒற்றை நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. 



ஆனால் சிறிலங்காவின் ஆளும் அரசாங்கம் மீளிணக்கப்பாடு மற்றும் மீள்கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்மறை அணுகுமுறையைக் கொண்டுள்ள அதேவேளையில், பிரதான எதிர்க்கட்சி கூட இதற்கான மாற்றுவழி ஒன்றை வழங்கவில்லை. 



தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவை எடுகோளாக எடுத்துக் கொள்ளலாம். 



இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் போல் இவர் தன்னைத் தானே காண்பித்துக் கொண்டதுடன், ராஜபக்ச ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு 'அரேபிய மறுமலர்ச்சி' ஒன்றை நடத்த வேண்டும் எனவும் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 



ராஜபக்ச அரசாங்கத்தை விட, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை மறுப்பதில் பொன்சேகா உறுதியாக உள்ளார். 



இந்தநிலையில், இப்போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு பதிலளிக்கக் கூடாது என்பதில் பொன்சேகா உறுதியாக உள்ளார். 



கொழும்பிலிருந்து மேனன் புறப்பட்டு சில நாட்களுக்குள், சிறிலங்கா அதிபர் நாட்டிலுள்ள இராஜதந்திரிகளை ஒன்றிணைத்து முக்கிய கருத்தரங்கொன்றை நடத்தினார். 



மேற்குலகில் செயற்படும் புலிகளுக்கு சார்பான புலம்பெயர் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளை முறியடிப்பதற்கு 'இராஜதந்திர நகர்வுகளை மாற்றுதல்' என்பது தொடர்பாக இக்கருத்தரங்கில் கலந்துரையாடப்பட்டது. 



நிறைவேற்ற வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பில் மற்றையவர்களுக்கு உந்துதலை வழங்குவதில் இராஜதந்திரிகள் 'தயார்நிலையிலிருப்பதுடன், விருப்பத்துடனும், ஆளுமையுடனும்' செயற்பட வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் சிறிலங்கா அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 



சிறிலங்கா அரசாங்கம் 'மாற்றம் எதுவுமில்லை' என்ற செய்தியை உலக நாடுகளுக்கு வழங்க முயற்சிக்கிறது என்பது தெளிவாகும். 



இந்தியாவைப் பொறுத்தளவில், ராஜபக்ச அரசாங்கத்துடன் நீடித்த தொடர்பைப் பேணுவதற்கான கொள்கைப்பாட்டை உருவாக்குவதை தவிர வேறொரு தெரிவையும் கொண்டிருக்க முடியாது. 



சிறிலங்காவுக்கான சிறப்புத் தூதர் ஒருவரை நியமிப்பது இந்தியப் பிரதமரின் அலுவலகத்தைப் பொறுத்தளவில் மோசமான நிலைப்பாடாக இருக்கமாட்டாது.

நன்றி - புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. India has been ignoring the Tamil Nadu fishermen killed in the sea, trespassing of Sri Lankan Navy in the Indian territorial waters for the past 15-25 years. The purpose of this could be:

    The ignorance of the diplomats

    A covert plan to teach a lesson to Tamil Nadu which has been objecting for forced Hindi, etc.

    Not to hurt the feelings of Sri Lanka for the bribes received

    But the consequences are dangerous:

    Sri Lanka could try to attack Tamil Nadu from Sea or even invade Tamil Nadu

    Sri Lanka could start a war with India with the backing of others

    Tamil Nadu could launch its armed forces to defend from outsiders

    India and Tamil Nadu could be in war

    Will the Indian intellectuals think about this?

    ReplyDelete