அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும் - பகுதி V

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கடும் அழுத்தத்தை சிறிலங்காவுக்கு வழங்காவிட்டாலும், கனதியான ஒரு சேதியை சொல்லிநிற்கிறது. அது, படிப்படியாகவே, சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்பதாகும்.

தமிழர்களை தோல்வி மனப்பான்மையிலிருந்து வெளிக்கொணர்வதற்கான சில கருத்துப் பகிர்வுகள், இலங்கைத் தீவில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மையும் அது இந்தியா தேசிய நலனுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் மற்றும் அமெரிக்கா ஆசிய-பிராந்தியம் நோக்கி வகுத்துள்ள உபாயத்தின் ஒரு பகுதியை ஆய்வுக்குட்படுத்தியிருந்தேன். 'அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டமும், ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்' என்ற தொடரின் இறுதிப் பகுதியான இந்தப் பத்தியிலே, தத்தமது தேசிய நலன்களை மையப்படுத்தி ஒவ்வொரு நாடும் மேற்கொள்ளும் நகர்வுகளையும், அது தமிழர் தேசத்துக்கு சொல்லும் சேதியையும் ஆய்வுக்குட்படுத்துகிறேன். 

“இனிவரும் காலத்தில், சீனாவை பலவீனமாக்கும் நடவடிக்கைகள் ஆசியப் பிராந்தியத்தில் கூர்மையடைப் போகின்றன. ஆதலால், ஆசியாவிலுள்ள முக்கியமான சிக்கல்கள், இனக்குழும போராட்டங்கள், ஆயுதக்கிளர்ச்சிகள் எல்லாம் வல்லாதிக்க சக்திகளின் நலன்களுக்காக கருவியாக்கப்படக் கூடிய சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது” 

அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டம் என்றே எனது பத்தி விளித்து நின்றாலும், சீனாவின் வகிபாகம் தொடர்பாகவும் கணிசமான கவனத்தை செலுத்துகிறது. ஏனெனில், அமெரிக்காவின் உபாய திட்டத்தில் பிரதானமான இலக்கு சீனா என வாதிடமுடியும். ஆகவே, சீனாவின் வகிபாகத்தை எடுத்துக்காட்டாமல், அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் திட்டத்தை ஆய்வுசெய்வது இந்த கட்டுரையின் இலக்கினை வலுவிழக்கச்செய்துவிடும். 

அதேவேளை, சீனாவின் வகிபாகம் என்னும் போது, சீனாவின் முத்துமாலைத் உபாயம் முக்கிய கருப்பொருளாகும். ஆகவே, இலங்கைத் தீவுக்கு தேவையான சில முக்கிய விடயங்களை 'அடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் உபாய திட்டத்திலிருந்தும்', சீனாவின் 'முத்துமாலை உபாயத்திலிருந்தும்' கோர்வையாக்கி நகர்கிறது இறுதிப் பகுதியான இப்பத்தி. 

அத்துடன், தேவையேற்படும் தருணங்களில் இந்தியாவின் வகிபாகமும் சுட்டிக்காட்டப்படும். ஏனெனில், இந்தியா தனித்து இலங்கைத் தீவில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நாடு மட்டுமல்ல. மாறாக, அமெரிக்காவின் ஆசிய பங்காளிகளில் முக்கியமான ஒரு நாடு. இருந்தபோதும், ஒவ்வொரு நாடும் தமது தேசிய நலனுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து செயற்படுகின்றன. ஆதலால், கூட்டாளிகளின் உறவில் மாற்றம் அடையலாம். இதனால், குறித்த நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளிலும் தாக்கம் உண்டாகும். ஆனால், தேசிய நலன் என்ற விடயத்தில் உறுதிப்பாடு பேணி பாதுக்காக்கப்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் சக்திமிக்க நாடுகள் மேற்கொள்ளும். 

தமிழர் தேசத்தின் நகர்வுகளுக்கான அடிப்படை 

இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயம் யாதெனில், அனைத்துலக சமூகத்திற்கு என்று ஒரு தனி நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. ஓவ்வொரு நாட்டினையும் நோக்கிய வெளிவிவகாரக் கொள்கைகளை அதன் அடிப்படையிலேயே அவர்கள் திட்டமிடுவார்கள். அந்தக் கொள்கைக்கு சவாலாக ஏதாவது காரணிகள் மேற்கிளம்புமாயின், அதனை முறியடிப்பதற்கு தேவையான நகர்வுகளை மிக சாதுரியமாக மேற்கொள்வார்கள். அதன் ஒரு அங்கமாக இராஜதந்திர உறவுகளில் தலைகீழான மாற்றங்கள் ஏற்படலாம். இந்த மாற்றங்களை நிலையான மாற்றங்களாக கருதிவிடமுடியாது. ஆனால், கரையேறுவதற்கு வழிகோலும் ஒரு துரும்பாக பிடித்துக்கொள்ளலாம். 

1980 களில் சிறிலங்கா அரசாங்கத்தை தனது நிகழ்சி நிரலுக்குள் கொண்டுவருவதற்காக தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கு ஆதரவினை வழங்கியது இந்தியா. அதே இந்தியா அதற்கு நேர்மாறான கொள்கைகளை பின்னர் எடுத்திருந்தது இதற்கு ஒரு உதாரணம். 

தமிழ் மக்களை நோக்கி நகரும் உறவுகள் அனுதாப நிமிர்த்தமோ, அக்கறை நிமிர்த்தமோ உருவானவை என்பதை விட, இராஜதந்திர நோக்கம் கருதியது என்ற நோக்கில் பார்ப்பதுவே தமிழ் தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானது. 

இலங்கைத் தீவை பொறுத்தவரையில், சிறிலங்கா அரசாங்கமோ அல்லது தமிழர் தரப்போ தீட்டிய திட்டத்தில் விடயங்கள் நகர்த்தப்பட்டுவருவதிலும் பார்க்க, அனைத்துலக சக்திகளே, தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப காய்களை நகர்த்துகின்றன. இது, அவர்களின் தேசிய நலனை பிரதானப்படுத்தியதாகவே இருக்கும். அவர்களுடைய காய் நகர்த்தல்கள், ஒரு தரப்புக்கு சாதகமாகவும், மறு தரப்புக்கு பாதகமாகவும் அமையும். இது, காலத்திற்கு ஏற்ற வகையில், சூழலுக்கு ஏதுவான முறையில், நேர் எதிர்மாறாகவும் இடம்பெறக்கூடும்.

அதனை மேலும் குறிப்பிடுவதானால், அனைத்துலக சமூகம் இயக்கும் நாடகத்தில் தமிழர் தரப்புக்கு ஒரு வகிபாகமும் சில சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளன. கிடைத்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசத்துக்கான பணியை சரிவர செய்ய வேண்டியது தமிழ்தரப்புகளின் பொறுப்பு. இலங்கைத் தீவு தொடர்பாக அனைத்துலக சமூகம் எடுத்துள்ள அணுகுமுறைகளும், வகுத்துள்ள உத்திகளும், உபாயங்களும் இதனையே எடுத்துக்காட்டுகின்றன. 

ஆனால், கிடைத்தது ஒரு சந்தர்ப்பம். அது போராட்டத்தை முன்னகர்த்துவதற்கான ஒரு நெம்புகோலே தவிர, மாறாக போராட்டத்தின் இலக்கை அடைவதற்கான உத்தரவாதமோ அல்லது ஆதரவுத் தளமோ இல்லை என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லையேல், தமிழர் போராட்டம் மீண்டும் ஒருமுறை பின்னடைவ எதிர்நோக்க வேண்டிவரும் என்பதை கவனத்திற்கொள்க.

உத்திகளின் மோதலும், உபாயங்களின் போட்டியும் 

“உனது திட்டம் வெற்றியடைய வேண்டுமெனில் எதிராளியை முடக்கு. ஏதிராளியை முடக்க வேண்டுமெனில் அவனது எல்லை வரை முன்னேறி அவனை இயலுமான எல்லாமுனைகளாலும் சுற்றிவளைப்புச் செய். முடிந்தால், அவனது எல்லைக்குள் நுழைந்து அவனது மூலதனத்தில் தாக்கத்தை செலுத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளில் இறங்கு” என்பது இராணுவ விஞ்ஞானத்துக்கே அதிக பொருத்தமாக இருப்பினும், சக்திமிக்க நாடுகளின் இன்றைய பொருளாதாரப் போட்டிகளுக்கும் ஏற்றதாகவே உள்ளது. 

அந்தவகையிலேயே, அமெரிக்காவினதும், சீனாவினதும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. சீனாவின் முத்துமாலை உபாயம் இந்தியாவை முடக்க முயற்சிக்கிறது. இந்த கருத்துக்கு வலுச்சேர்ப்பது போலவே, பங்களாதேசின் சிட்டாங்கொங்கிலும், பாகிஸ்தானின் கவாடரிலும் [Gwadar] மற்றும் சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டையிலும் சீனா தனது தேவைக்கு ஏற்ற முறையில் துறைமுகங்களை கட்டமைத்து வருகிறது. இந்த மூன்று துறைமுகங்களும் ஆசியாவின் எண்ணைவள கடற்பாதையில் முன்னணி மிக்கவை. ஆதலால், சீனாவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக தற்போது திகழ்வதோடு, காலப்போக்கில் இராணுரீதியாகவும் கைகொடுக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் தென்படுகிறது. 

இந்தநிலையில், அமெரிக்கா எடுத்துள்ள நகர்வுகள் கவனத்திற்கொள்ளப்படுதல் பொருத்தமாகும். இந்த நகர்வென்பது, ஆசியாவை நோக்கி அமெரிக்கா பாதுகாப்பு உபாய மார்க்கத்தை தீட்டிய பின்னரே தீவிரமடைந்துள்ளமை அவதானிக்கத் தக்கது. 

இத்தகைய தருணத்தில், 1971ம் ஆண்டு பங்களாதேசில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விடயங்கள் தூசுதட்டப்படுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் விடயப்பொருள்களாக மாறுவது, தனித்து அமெரிக்காவின் நலன் சார்ந்த நடவடிக்கை மட்டுமல்ல, மாறாக எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும் போர்க்குற்றங்கள் மறுக்கப்படவோ, மறைக்கபடவோ முடியாதவை என்பதை சுட்டிக்காட்டுகின்றன. 

(போர்க்குற்றம் தொடர்பான விடயங்களையும், அது தொடர்பான அனைத்துலக அனுபவங்களையும் மற்றுமொரு பத்தியிலேயே விரிவாக ஆய்வுகுட்படுத்தி வாசகர்களோடு பகிரத் திட்டமிட்டுள்ளேன்) 

அடுத்து, பலோகிஸ்தான் [Balochistan] மக்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்யை பாகிஸ்தான் அங்கீகரிக்க வேண்டும் என்னும் தீர்மானம் 2012 பெப்ரவரி மாத ஆரம்பத்திலே அமெரிக்கா கொங்கிரசில் [US Congress] முன்மொழியப்பட்டது. பாகிஸ்தான் பலோகிஸ்தானை தனது ஒரு மாகாணமாகவே கருதிவருகிறது. அதற்கிணங்க, அங்கு பாகிஸ்தானின் ஆட்சியே இடம்பெற்று வருகிறது. ஆயினும், பலோகிஸ்தான் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு தாம் ஒரு தனித் தேசமாக மிளிர வேண்டும் என்ற விரும்புவதோடு, 1958 ம் ஆண்டிலிருந்து ஒரு போராட்டத்தையம் நடாத்தி வருகிறார்கள். 

பலோகிஸ்தானிற்கு வடக்கே ஆப்கானிஸ்தானும், மேற்கே ஈரானும் அமைந்துள்ளன. அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான இரு நாடுகள் பலோகிஸ்தானை எல்லையாகக்கொண்டு அமைந்திருப்பது மட்டுமல்ல, சீனா கட்டமைத்து வரும் ஆழ்கடல் துறைமுகம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலோகிஸ்தானின் கவாடர் [Gwadar] பிராந்தியத்திலேயே அமைந்துள்ளது. மேலும், பலோகிஸ்தான் எண்ணைவளங்களும், கனியவளங்களும் நிரம்பிய பகுதியாகும். 

சீனாவின் முத்துமாலை உபாயம் இந்தியாவை சுற்றிவளைத்துள்ள மூன்றாவதும், முக்கியமானதுமான துறைமுகம், சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை துறைமுகமாகும். இலங்கைத் தீவில் துரிதகதியில் அதிகரித்து வரும் சீனாவின் மேலாண்மையை, இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் கரிசனை கொள்ளத்தக்க வகையில் தூண்டும் பிரதான காரணி ஹம்பாந்தோட்டை துறைமுகமாகும். 

இவ்வாறான சூழலிலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எழுப்பியுள்ள பலவித விவாதங்களுக்கு அப்பால், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது காட்டாத அக்கறையை தற்போது அனைத்துலகத்தின் முக்கிய பகுதியான மேற்குலகு காட்டியுள்ளது என்பது மெய்நிலை. 

தமிழ், சிங்கள மக்களின் விருப்பு, வெறுப்புகளை தாண்டி, இலங்கைத் தீவின் விவகாரம் அனைத்துலக அரங்குக்கு மேற்குலகலகத்தால் இழுத்துவரப்பட்டுள்ளது. இது, அறுவடையில் தமிழர்களுக்கு எத்தகைய இலாபத்தை வழங்கும் என்பதற்கு அப்பால், ஆரம்ப விதை தமிழ்த் தரப்புகளுக்கும் ஒருவித வாய்ப்பினை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொண்டு ஆர்ப்பரிப்பதோ இல்லை முற்று முழுதாக எதிர்ப்பதோ தொலைநோக்கு அரசியல் பார்வையில் ஆரோக்கியமில்லை. 

முடிவுரைக்கான முகவுரை 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் கடும் அழுத்தத்தை சிறிலங்காவுக்கு வழங்காவிட்டாலும், கனதியான ஒரு சேதியை சொல்லிநிற்கிறது. அது, படிப்படியாகவே, சிறிலங்கா ஆட்சியாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும் என்பதாகும். அதற்குள், மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்கு சிறிலங்கா ஆட்சியாளர்கள் வளைந்து கொடுப்பார்களானால், இன்று தமிழ்த் தரப்புக்கு வாய்ப்பாக தென்படும் சூழல் எதிர்காலத்தில் பொறியாக மாறமாட்டாது என்பதற்கு உத்தரவாதம் எதுவுமில்லை. ஆயினும், சீனாவின் வலைக்குள் வீழ்ந்துள்ள சிறிலங்காவால், அதிலிருந்து விடுபட்டு மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் வருவது குறுங்காலத்திலோ அல்லது மத்திம காலத்திலோ அவ்வளவு இலகுவான விடயமல்ல. 

ஆகவே, அதுவரை போர்க்குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான குற்றங்கள் சிறிலங்காவை அச்சுறுத்துவதற்கான கருவிகளாக மேற்குலகத்தால் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றது. 

மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளினதும் [பங்களாதேஸ், பாகிஸ்தானிலுள்ள பலோகிஸ்தான் மற்றும் சிறிலங்காவின் ஹம்பாந்தோட்டை] விடயங்களில் அமெரிக்கா கொண்டுள்ள அக்கறையானது, ஆசியா பிராந்தியத்தின் மீது அமெரிக்கா குவித்துள்ள கரிசனையை வெளிப்படுத்துகிறது. 

அதேவேளை, அமெரிக்காவுக்கும் - சிங்கப்பூருக்குமிடையிலான பாதுகாப்பு விவகாரங்களை முதன்மைப்படுத்திய கூட்டுறவு நடவடிக்கைகள் அதிகரிப்பதோடு, பிலிப்பைன்சுடனும், தாய்லாந்துடனும் அமெரிக்கா மேற்கொளும் கடல்சார் நடவடிக்கைகளும், ஒப்பந்தங்களும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தீவிரமடைந்து வரும் பொருளாதராப் போட்டியை துல்லியமாக வெளிப்படுத்தி நிற்கின்றது. அதேவேளை, முன்னால் எதிரி நாடாக விளங்கிய வியட்னாமுடன் அமெரிக்கா வளர்த்துவரும் உறவும் சீனாவுக்கான ஒரு எச்சரிக்கையே. 

ஆசியாவில் ஆழக்காலுன்றும் அமெரிக்கா, சீனாவுக்கு மட்டுமல்ல, தன்னோடு ஒத்துழையாத அரசாங்கங்களுக்கும் கனதியான ஒரு சேதியை சொல்கிறது. ஏனெனில், அமெரிக்காவின் தேசிய நலன் என்பது ஆசியாவுடனான இறுக்கமான தொடர்பிலேயே தங்கியுள்ளது. அமெரிக்காவின் முன்னால் பாதுகாப்பு செயலாளர் ஒ வில்லியம்.எஸ்.கோகன் அண்மையில் குறிப்பிட்டது போல, ஆசியானுக்கும் [ASEAN] அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் மக்களுக்கும் மக்களுக்குமான உறவென்பது அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அடிப்படையானது. 

ஆகவே, ஆசியா எவ்வளவு அமெரிக்காவுக்கு அவசியமோ, அதற்கு இணையான வகையில், ஆசியாவிலுள்ள நாடுகளின் விவாகாரங்களும் அமெரிக்காவின் அக்கறைக்குரியதே. அந்தவகையில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவு இன்றியமையாத கவனத்திற்குரிய மாறியுள்ளதென்றால், அங்கு இழந்து போன இறமையும், உரிமையும் மீட்பதற்காகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியையையும் கோரி போராடும் தமிழ்மக்களும், அவர்களுடைய தாயகப்பிரதேசமும் தவிர்க்க முடியாததும், தாக்கமுடையதுமான விளைவுகளை உண்டாக்கவல்லன. அதனை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் தந்திரோபாய ரீதியாக காய்களை நகர்த்தி தமிழர் தேசத்தின் நலனை அடையவேண்டியது தமிழர் தேசத்தின் பிரதிநிதிகளாக பல்வேறு மட்டத்திலுமுள்ள உள்ள அனைவரினதும் வரலாற்று பொறுப்பும், தார்மீக கடமையுமாகும். 

*ஊடகவியலாளர் நிர்மானுசன் பாலசுந்தரம்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment