“இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் மக்களின் ஒருபகுதியினர் தமிழ் மொழியைப் பேசுவதுடன், தமிழர்களாக உள்ளனர். இவ்வாறான இன அடையாளம் மூலம் கிடைக்கும் ஒற்றுமையை சீனாவால் சிறிலங்காவில் ஒருபோதும் ஈடுசெய்து கொள்ள முடியாது. “ இவ்வாறு globalpost ஊடகத்தில் ஜே.எஸ்.திசநாயகம் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனீவாவில், கடந்த மார்ச் 22ம் நாள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. எவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் இத்தீர்மானம் தொடர்பில் அரசியல் அவதானிகள் ஆச்சரியமடையவில்லை.
ஆனால், தென்னாசியாவில் உள்ள இந்தியா தனது அயல்நாடான சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மே 2009 இல் இறுதிக்கட்டத்தை அடைந்த போது, யுத்தத்தில் பங்கு கொண்ட சிறிலங்கா இராணுவத்தாலும், தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த கால மீறல்களை விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுக்கும் இத் தீர்மானம் பலவீனமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மற்றும் அனைத்துலக நாடுகள் பலவற்றால் விவாதிக்கப்பட்ட அனைத்துலக விசாரணை இத்தீர்மானத்தின் மூலம் அழுத்திக் கூறப்படவில்லை.
அமெரிக்காவால் வரையப்பட்ட இத்தீர்மானத்தில் இந்தியா சில மாற்றங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டதால், சிறிலங்காவுக்கு எதிராக பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் வலுவானதாக இருக்கவில்லை.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நாவால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கண்காணிப்பும் சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இத்தீர்மானம் நிச்சயப்படுத்திக் கொள்கின்றது.
சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததன் பின்னர், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில், 'பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எம்மால் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டதுடன், இத்தீர்மானத்தின் சரத்துக்கள் தொடர்பில் சமநிலையைப் பேணுவதிலும் நாம் முயற்சி எடுத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் சரத்துக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அதில் தளர்வைக் கொண்டு வருவது என முதலில் முடிவெடுத்த இந்தியா, பின்னர் தனது நாட்டுக்குள் தனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் காரணமாகவே சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பது என தீர்மானித்துக் கொண்டது.
சிறிலங்காவில் வாழும் தமது சகோதரரர்களான தமிழ் மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் மிகக் கொடூரமான மீறல்களை மேற்கொண்டதன் விளைவாகவே இந்தியாவின் தமிழ்நாட்டில் வாழும் மக்கள் தமது நாட்டு அரசாங்கம் மீது அழுத்தத்தை வழங்கினர்.
இந்த விடயத்தில் தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் ஒத்த நிலையைக் கொண்டுள்ளனர். இதில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள கட்சியும் ஒன்றாகும்.
ஜெனீவாவில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காவிட்டால், மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளும் அறிவித்திருந்தன. இந்த நிலையிலேயே இந்தியா பேரவையின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்திருந்தது.
தமிழ்நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம் இதற்கான பிரதான காரணமாக உள்ள அதேவேளையில், இந்தியாவின் வேறு சில தேசிய நலன்களும் காரணமாக இருந்துள்ளன. இந்த விடயத்தில் இந்தியா அனைத்துலக, பிராந்திய நலன்களைக் கருத்திற் கொண்டு செயற்பட்டுள்ளது.
அனைத்துலக ரீதியில் பார்க்கில், உலக நாடுகள் சிலவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக மற்றும் மனிதஉரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டங்களை இந்தியா ஆதரிப்பதில் தயக்கம் காட்டி வருவது சில பிழையான கற்பிதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொள்ள வேணடும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருப்பதாலேயே இவ்வாறான போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்குவதில் தயக்கம் காண்பிக்கிறது எனக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக நவம்பர் 2010 இல் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு சென்றிருந்த போது வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
சிறிலங்காவையும் இந்தியாவையும் பிரிக்கின்ற மிக ஒடுங்கிய கடற்பகுதியான மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் அகழ்வில் சீனாவின் செல்வாக்கு அதிகம் காணப்படுவது உட்பட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பல்வேறு தொடர் நிகழ்வுகளில் சீனா தலையீடு செய்வது இந்தியாவுக்கு பிராந்திய ரீதியில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமுத்திரத்தில் செல்வாக்குச் செலுத்துவதில் போட்டியிடும் ஆசியாவின் இரு பெரும் வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளையும் கையாள்வதில் ஆரம்பத்தில் சிறிலங்கா சிக்கல்களை எதிர்நோக்கிய போதிலும், அண்மைக்காலமாக சிறிலங்கா அரசாங்கம் சீனாவுடன் ஆழமான உறவைப் பேணிக் கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவில் குறிப்பாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கான வர்த்தக சந்தர்ப்பங்களை இழப்பது தொடர்பில் இந்தியா விருப்பங் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் மன்னார் வளைகுடாவில் சீனா தனக்கான செல்வாக்கை பலப்படுத்திக் கொண்டுள்ளது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இந்தியா கருதுகின்றது.
தமிழ்ப் புலிகளை அழிப்பதில் சிறிலங்காவுக்கு இந்தியா ஆதரவு வழங்கிய போது, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தையும் இந்தியா வழங்க விரும்பியது. ஆனால் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா அடியோடு ஏற்க மறுத்தது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனக்கான செல்வாக்கை விட்டுக் கொடுக்க விரும்பாத இந்தியா இதற்கான சந்தர்ப்பமாக பேரவையில் மேற்கொள்ளப்பட்ட வாக்களிப்பை பயன்படுத்திக் கொண்டது.
பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் தலைமையில் முன்வைக்கப்பட்டதால் அதனை ஆதரித்து இந்தியா வாக்களிக்க வேண்டிய அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தது.
2009 இல் கூட்டப்பட்ட பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை இந்தியா எதிர்த்து சிறிலங்காவை ஆதரித்திருந்தது. ஆனால் கடந்த தடவை போல் இந்தத் தடவை சிறிலங்காவை இந்தியா ஆதரிக்கவில்லை.
இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக சிறிலங்கா இருப்பதால், சீனா இந்த இடத்தை நிரப்ப முடியாது. சிறிலங்காவில் சீனா அதிக அளவில் முதலீட்டை மேற்கொண்டுள்ள அதேவேளையில், இந்தியா வழங்கும் உதவியை சிறிலங்கா மறுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
சிறிலங்காவுக்கு சீனா தொடர்ந்தும் இராணுவத் தளபாடங்களை வழங்கி வருகின்ற போதிலும், சிறிலங்காவுடனான இந்தியாவின் இராணுவ உடன்படிக்கைகள் பரந்துபட்டது. இதில் கூட்டு இராணுவ நடவடிக்கை, புலனாய்வு மற்றும் பயிற்சிகளை இரு நாடுகளும் தமக்கிடையில் பகிர்ந்து கொள்ளல் ஆகியனவும் உள்ளடங்குகின்றன.
இதனைவிட, சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களினதும், தமிழ்நாட்டு மக்களினதும் மொழி மற்றும் கலாசாரம் என்பன ஒத்துக் காணப்படுகின்றன. இவ்விரு நாடுகளும் 22 கிலோமீற்றர் நீளமான கடற்பிரதேசத்தால் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளிலும் வாழும் மக்களின் ஒருபகுதியினர் தமிழ் மொழியைப் பேசுவதுடன், தமிழர்களாக உள்ளனர்.
இவ்வாறான இன அடையாளம் மூலம் கிடைக்கும் ஒற்றுமையை சீனாவால் சிறிலங்காவில் ஒருபோதும் ஈடுசெய்து கொள்ள முடியாது.
இதனுடன் ஒப்பிடும் போது, பர்மாவை இந்தியா கையாளும் முறை வேறுபட்டதாகும்.
2007 இல் ஜனநாயகத்துக்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் மீது Naypyidaw வில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மற்றும் 2009 இல் ஆங்காங் சூயிக்கான வீட்டுக்காவற் காலம் மேலும் அதிகரிக்கப்பட்டது தொடர்பிலும், இந்திய மத்திய அரசு அமைதி காத்தது தொடர்பில் அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் இந்தியா மீது விசனம் கொண்டிருந்தன.
இந்த விடயத்தில் சீனாவின் இராணுவ மற்றும் மூலோபாய செல்வாக்கைக் கருத்திற் கொண்டே இந்தியா அமைதி காத்தது. இதனை மிகக் கவனமாகக் கையாள வேண்டும் என இந்தியா கருதியது.
சீனாவின் நண்பர்கள் எனத் தம்மை அடையாளங் காட்டிக் கொள்ளும் நாடுகளின் விடயத்தை இந்தியா வித்தியாசமான கோணத்திலேயே கையாளுகின்றது.
இதேபோன்று சிறிலங்காவைத் தற்போது அதன் போக்கில் விட்டுப் பிடித்து அதன் பின்னரேயே அதனைக் கையாள வேண்டும் என இந்தியா நம்புகிறது.
சிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் எதிர்கால அரசியல் உறவை நிர்ணயிப்பது என்பது சிறிலங்காவின் அரசியல் போக்கிலேயே தங்கியுள்ளது.
புதினப்பலகை
0 கருத்துரைகள் :
Post a Comment