ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை பலவீனப்படுத்திய இந்தியா, அடுத்த கட்டமாக இலங்கையைத் தனது பிடிக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடந்தவாரம் திருச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட விழாவில், உரையாற்றிய இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பல தகவல்களைப் போட்டு உடைத்தார். ஜெனிவா தீர்மானத்தை தோற்கடிப்பதில் இந்தியா எத்தகைய பங்கு வகித்தது என்பதை அவர் அங்கு குறிப்பிட்டிருந்தார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் மிகவும் கவனமாக- இராஜதந்திரத்துடன் தயாரிக்கப்பட்டதாக சிதம்பரம் கூறியிருந்தார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் வெளியிட்ட அறிக்கை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்புநாடுகளுக்கு விடுக்கப்பட்ட செய்தி என்றும் அது இலங்கைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அறிக்கைகளின் பின்னர் அதுபற்றிய கருத்து என்ன என்று இலங்கைக்கு கடிதம் அனுப்பியதாகவும், ஆனால் அதற்கு இலங்கை பதிலளிக்காமல் சண்டித்தனம் செய்ததாகவும் ப.சிதம்பரம் விபரித்துள்ளார். இலங்கையை அடக்குவதற்கே ஜெனிவாவில் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல – ஜெனிவாவில் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளையும் இந்தியா தன் பக்கம் இழுக்க முயற்சி செய்யப் போவதாக அவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது.
ஏனெனில் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததுடன் நிற்கவில்லை. அதற்கு அப்பாலும், சென்று இலங்கைக்கு ஆதரவாக நின்ற நாடுகளையும் அந்த அணியில் இருந்து கழற்றி விடப் பார்க்கிறது. இது இலங்கைக்கு கடும் சவாலானதொரு செய்தி.
ஏற்கனவே ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளித்தது, இலங்கையை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன்காரணமாக புதுடெல்லி - கொழும்பு இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒருவித மந்தநிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் புலிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாக வந்த செய்தி, மகாத்மா காந்தி சிலை உடைப்பு என்பன கூட ஜெனிவாவின் தாக்கமே என்ற கருத்தும் வலுவாக உள்ளது. இந்தச்சூழலில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஒன்றை மெல்லியதாக அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சி ஏதோ ஒரு காரணத்துக்காக, இலங்கை அரசை தாக்கத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் எவருமே இப்போது, வெளிப்படையாக இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்துக்கூற முடியாத நிலைக்கு வந்துள்ளனர்.
தமிழரின் உரிமைகள் பற்றி அதிகமாகவே அவர்கள் பேசத் துணிந்துள்ளனர்.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், இந்தியாவை இலங்கை ஏமாற்றி விட்டதால் தான், ஜெனிவாவில் இந்தியா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது என்ற கருத்து வலுவாகவே உள்ளது. சிதம்பரத்தின் உரையில் நேரடியாக அதுபற்றிக் கூறப்படாவிடினும், இலங்கை அடங்கிப் போகாமல் ஆட்டம் போட்டது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவும் ஒருவகையில், இலங்கையுடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலையே வெளிப்படுத்துகிறது.
எங்களின் உறவில் எந்தக் கெடுதலும் இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினாலும், அதை நடைமுறையில் உண்மை என்பதை இரு அரசுகளாலும் வெளிப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு கொழும்புக்கு வந்தடைந்துள்ளனர். இந்தக் குழுவின் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்படுத்தும் என்று கூறப்பட்டாலும், அரசியல்தீர்வு குறித்த இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கே வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைக்கு வந்த, ரி.ஆர்.பாலு தலைமையிலான தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் இப்போது வந்திருக்கும் குழுவில் கூட, இலங்கை அரசைக் கடுமையாக விமர்சிக்கக் கூடியவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. ஆனாலும், இந்தக் குழு இலங்கை அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, நெருக்கடியையே கொடுக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதேவேளை, புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்பும் இராஜதந்திர முயற்சிகள் ஏதும் வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இந்தநிலையில், இந்தியாவைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள இறுக்கமான போக்கை இன்னும் நீடிக்கச் செய்வதற்கு முனையலாம்.
13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் தனது திட்டத்துக்கு இந்த இடைவெளியை ஒரு கருவியாக இந்தியா பயன்படுத்த முயற்சிக்கலாம். ஏனெனில் இந்தியாவுக்கு இது ஒரு மானப் பிரச்சினையாகவே மாறியுள்ளது. இந்தியாவின் காலடிக்குள் கிடக்கும் இலங்கையை, வழிக்கு கொண்டு வரமுடியாத நாடு தானே என்ற அலட்சியம் பிராந்திய நாடுகளிடையே வந்து விடக் கூடாது என்று கருதுகிறது. 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதியை இலங்கை காப்பாற்றவில்லை. இது இந்தியாவின் மதிப்பை கெடுத்து விடும் என்று புதுடெல்லி நம்புவதற்கு வாய்ப்புகள் அதிகம். திருச்சி பொதுச்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளிப்படையாகவே ஒரு விடயத்தைக் கூறியிருந்தார். ஜெனிவா தீர்மானத்தை இந்தியா எதிர்த்து வாக்களிக்க, அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், அது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பாக அமைந்திருக்கும் என்பதே அது. அத்துடன் இந்தியா எதிர்த்திருந்தாலும் தீர்மானம் நிறைவேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து இலங்கையோடு சேர்ந்த நின்று தோல்வியைச் சந்திக்க இந்தியா பயப்படுகிறது என்பதை உணர முடிகிறது.
இலங்கைக்காக தனது கையைச் சுட்டுக்கொள்ள அது தயாராக இல்லை. தனது கையை மீறி ஒரு காரியம் நடந்தேறுவதை இந்தியா விரும்பவில்லை. அது தனது இமேஜை உடைத்து விடும் என்று அச்சம் கொள்கிறது, இதனால், தனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்து, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள இலங்கையைப் பணிய வைத்தேயாக வேண்டிய நிலை ஒன்று இந்தியாவுக்கு உருவாகியுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தன்னாலான உச்சக்கட்ட அழுத்தங்களை இந்தியா கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதற்கு இலங்கையுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பதே ஒரே வழி. அடுத்து, இலங்கை பற்றிய தீர்மானத்தை ஜெனிவாவில் இந்தியாவே கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற கருத்து இந்தியாவில் அதிகளவில் வலியுறுத்தப்பட்டது. அதாவது அமெரிக்கா வந்து இதற்குள் கை வைப்பதை பலரும் விரும்பவில்லை. எனவே, இந்தியா அத்தகைய பழிச்சொல் எதிர்காலத்தில் ஏற்படாமல் தவிர்க்க முனையலாம். இந்தநிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ள மற்றொரு விடயம் இலங்கையை சற்று யோசிக்க வைக்கக் கூடியது.
ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்த நாடுகளையும் தன் வழிக்கு இழுக்க இந்தியா முனையும் என்பதே அது. இது ஜெனிவா தீர்மானம் முடிந்து போன ஒன்று அல்ல என்பதையே சுட்டிக்காட்டுகிறது. ஏனென்றால், ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும், எதிர்த்த நாடுகளை வசப்படுத்தப் போவதாக அவர் கூறியதை வெறும் அலங்காரப் பேச்சாக கருத முடியாது. ஜெனிவா தீர்மானத்தை திசை திருப்பிய முக்கியமான சிலரில் சிதம்பரமும் ஒருவர். எனவே, ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்த நாடுகளை வசப்படுத்த இந்தியா எதற்காக முனைகிறது என்ற கேள்வி எழுகிறது. இலங்கையுடன் ஒரு முரண்போக்கை - அதாவது அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியாவும் எடுக்கப் போகிறதா?
இந்தியாவைப் பொறுத்தவரையில் அமெரிக்காவைப் போன்று குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளைப் பற்றியெல்லாம் அது அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அதிகாரப்பகிர்வு குறித்து- 13வது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வு ஒன்று குறித்த அது கவலைப்படுகிறது. அதை நிறைவேற்றும் ஒரு கருவியாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தைப் பயன்படுத்தும் போலுள்ளது. அவ்வாறானதொரு நிலை உருவானால், ஒருபக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் இந்தியா என்று இருபுறமும் அடிவாங்கும் மத்தளத்தின் நிலைக்கு இலங்கை தள்ளப்படக் கூடும்.
கட்டுரையாளர் ஹரிகரன் இன்போதமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment