இன்று வரலாற்றுப்புகழ்மிக்க குடாரப்பு/மாமுனைத் தரையிறக்கத்தின் 12 ஆம் ஆண்டு நிறைவுநாள். ஈழப்போராட்ட வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டிய சாதனைகளில் இது முக்கியமானது. மிகப்பெரிய நாடுகளின் படைத்துறைக்கு ஈடான உத்தியுடனும் வளத்துடனும் ஒரு மரபுவழித் தரையிறக்கத்தை தமிழரின் விடுதலைச்சேனை நிகழ்த்தியிருந்தது. அதன்மூலம் வெல்லப்பட முடியாததாக பலராலும் கருதப்பட்ட மிகமுக்கிய இராணுவத் தளமான ஆனையிறவும் அதைச்சுற்றியிருந்த மிகப்பெரும் படைத்தளமும் புலிகளால் மீட்கப்பட்டது.
சவால்களை ஏற்றுச் சமர் செய்யக்கூடாதென்பது கெரிலாப் போராளிகளுக்கான பொதுவிதி. ஓயாத அலைகள் மூன்று என்ற தொடர் நடவடிக்கையில் முதலிரு கட்டங்களும் வன்னியின் தெற்கு மற்றும் மேற்குமுனைகளில் முன்னேறியிருந்த படையினரை விரட்டி மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்டம் மூலம் வன்னியின் வடக்கு முனையில் கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி உள்ளடக்கிய கடற்கரைப் பகுதிகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து பரந்தன் படைத்தளமும் கைப்பற்றப்பட்டது.கைப்பற்றப்பட்ட கடற்கரைப் பகுதியிலிருந்து நாலாம் கட்டத்துக்கான பாய்ச்சல் தொடங்க இருந்தது.
26.03.2000 அன்று மாலை வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் போராளிகள் அணிவகுத்து நிற்கிறார்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, ஈழப்போராட்டத்தில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்திய போரியற் சாதனையொன்றை நிகழ்த்த அவர்கள் ஆயத்தமாகி நின்றார்கள். வெற்றிலைக்கேணியிலிருந்து கடல்வழியாக எதிரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் தாழையடி உட்பட்ட மிகப்பலமான கடற்கரையை மேவிச்சென்று குடாரப்புப் பகுதியில் புலிகளின் அணிகள் தரையிறங்க வேண்டும்; தரையிறங்கிய அணிகள் ஆனையிறவுத் தளத்துக்கான முக்கிய வினியோகப்பாதையான கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொள்ள வேண்டும் என்பதே திட்டம்.
தரையிறக்கம் செய்யப்பட வேண்டிய படையணி மிகப்பெரியது. ஆயிரத்து இருநூறு வரையான போராளிகளை ஒரேயிரவில் தரையிறக்க வேண்டும். தரையிறக்கத்தைத் தடுக்க எதிரி சகலவழிகளிலும் முயல்வான். கடலில் முழுக்கடற்படைப் பலத்தோடும் எதிரி தாக்குவான். கடற்கரையிலிருந்தும் டாங்கிகள் மூலம் நேரடிச்சூடு நடத்தி கடற்புலிகளின் படகுகளை மூழ்கடிப்பான். விடிந்துவிட்டால் எதிரியின் வான்படையின் அகோரத் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிவரும்.
மிக ஆபத்தான பணிதானென்றாலும் அதைச்செய்தே ஆகவேண்டும். கடற்புலிகள் அந்தப்பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்துமுடித்தனர். மாலை புறப்பட்ட படகணி ஆழக்கடல் சென்று இரண்டுமணிநேரப் பயணத்தில் தரையிறங்கவேண்டிய பகுதியை அண்மித்தது. எதிர்பார்த்தது போலவே கடலில் கடும்சண்டை மூண்டது. இரவு 8.30 க்கு கடலில் சண்டை தொடங்கியது. 16 டோறாப் பீரங்கிப் படகுகள் அடங்கிய தொகுதியுடன் சண்டை நடந்தது. தாக்குதலணிகளைத் தரையிறக்கவேண்டிய படகுகளுக்கு எதுவித சேதமும் ஏற்படாவண்ணம் கடற்புலிகளின் தாக்குற்படகுகள் சண்டை செய்தன. கடுமையான சண்டைக்கிடையில் விடிவதற்குள் வெற்றிகரமாக அணிகள் கடற்கரையில் தரையிறக்கப்பட்டன. முதற்கட்டமாக தரையிறக்க அணிகளைக் காவிச் சென்ற ஏழு வினியோகப் படகுகளும் வெற்றிகரமாகக அணிகளைத் தரையிறக்கின. தரையிறங்கிய அணிகள் தொண்டமானாறு நீரேரியைக் கடந்து அதிகாலைக்குள் கண்டிவீதியைக் குறுக்கறுத்து நிலைகொண்டனர். அவர்கள் தரையிறங்கிய நேரத்தில் ஏற்கனவே உட்புகுந்திருந்த கரும்புலிகள் அணி பளையிலிருந்த ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றி பதினொரு ஆட்லறிகளைச் செயலிழக்கச் செய்திருந்தனர். தரையிறங்கி நிலைகொண்ட அனைத்து அணிகளையும் கேணல் பால்ராஜ் நேரடியாக களத்தில் நின்று ஒருங்கிணைத்து வழிநடத்தினார். அவருக்குத் துணையாக துணைத்தளபதிகளாக சோதியா படையணித் தளபதி துர்க்கா, மாலதி படையணித் தளபதி விதுஷா, சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி (பின்னர் பிறிதொரு நேரத்தில் சாவடைந்த) லெப்.கேணல் ராஜசிங்கன், விக்ரர் கவச எதிர்ப்பணிக்குத் தலைமைதாங்கிக் களமிறங்கியிருந்த இளங்கீரன் ஆகியோர் செயலாற்றினர்.
புலிகள் இயக்கம் இப்படியொரு தரையிறக்கத்தைச் செய்யுமென்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். இவ்வகையான முயற்சிகள் புலிகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதோடு தற்கொலைக்கு ஒப்பானது என்றே எல்லோரும் கருதியிருந்தனர். உண்மையில் தற்கொலைக்கு ஒப்பானதுதான். வன்னித் தளத்தோடு நேரடி வழங்கலற்ற நிலையில் பெருந்தொகைப் போராளிகள் எதிரியின் பகுதிக்குள் சிறிய இடமொன்றில் நிலையெடுத்திருப்பது தற்கொலைக்கு ஒப்பானதுதான். தரையிறங்கிய அணிக்கான உணவு வினியோகத்தைக்கூடச் செய்யமுடியாத நிலை. கடலில் மிகக்கடுமையான எதிர்ப்பை எதிரி கொடுத்தான். தரையிறக்கம் தொடர்பான செய்தியை அறிந்தபோது முதலில் திகைத்தாலும், அவ்வளவு பேரையும் கொன்றொழிப்பது என்பதில் எதரி தெளிவாக இருந்தான். தன்னால் அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழிக்க முடியுமென்று எதிரி நம்பினான். புலிகளின் போரிடும் வலுவுள்ள முக்கிய அணிகள் அங்கிருந்ததும், முக்கியமான போர்த்தளபதிகள் அங்கிருந்ததும் அவனுக்கு வெறியேற்றியது. அந்தத் தரையிறக்க அணியை முற்றாக அழித்தால் புலிகளின் கதை அத்தோடு முடிந்துவிடுமென்று கணித்திருந்தான்.
வெற்றிலைக்கேணியிலிருந்து குடாரப்புவரை அரசபடையினரின் மிகவலுவான படைத்தளப் பகுதியாக இருந்தது. தரையிறக்கத்தின் முன்பே, கடல்வழியான தொடர்ச்சியான வினியோகம் சாத்தியப்படாதென்பது தெளிவாக உணரப்பட்டது. ஆகவே தரைவழியாக வினியோகத்தை ஏற்படுத்தவேண்டுமென்பதே நியதி. அதன்படி வெற்றிலைக்கேணியிலிருந்து கடற்கரை வழியாக குடாரப்பு வரை நிலத்தைக் கைப்பற்ற வேண்டும். தரையிறங்கிய அடுத்தநாளே தாளையடி, மருதங்கேணி, செம்பியன்பற்றுப் பகுதிகளைக் கைப்பற்றி குடாரப்பு வரை தொடர்பை ஏற்படுத்தும் சமர் தொடங்கிவிட்டது. இத்தாவில் பகுதியில் கண்டிவீதியைக் குறுக்கறுத்திருந்த புலியணிகளை முற்றாக அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த எதிரிப்படையோடு கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாவிலில் நிலைகொண்டிருக்கும் படையணிக்கு வினியோகத்தை ஏற்படுத்த புலியணிகள் கடுமையான சண்டையைச் செய்தன. இரண்டுநாள் எத்தனிப்பின் முடிவில் தாளையடி உட்பட்ட மிகப்பலமான படைத்தளங்களைக் கைப்பற்றி தரையிறக்க அணிக்குரிய தரைவழியான வழங்கலை உறுதிப்படுத்திக்கொண்டனர் புலிகள்.
அதுவரை சரியான வினியோகமில்லாது, இருந்தவற்றை மட்டும் பயன்படுத்தி நிலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த தரையிறக்க அணி ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அணிகள் சீராக்கப்பட்டு தொடர்ந்து சண்டை நடந்தது. கண்டிவீதியைக் குறுக்கறுத்திருக்கும் புலிகளை முற்றாக அழிப்பதற்கு எதிரி தனது முழுவளத்தையும் பயன்படுத்தினார். கவசவாகனங்கள், ஆட்லறிகள், படையணிகள் என்று சகலதும் பயன்படுத்தினான். மிகமிக மூர்க்கமாகத் தாக்கினான். ஆனாலும் புலிவீரரின் அஞ்சாத எதிர்ச்சமரில் தோற்றோடினான். கவசப்படைக்குரிய பல வாகனங்கள் அழிக்கப்பட்டன; சேதமாக்கப்பட்டன. புலியணி நிலைகொண்டிருந்த பகுதி சிறியதாகையால் மிகச்செறிவான ஆட்லறிச்சூட்டை நடத்துவது எதிரிக்கு இலகுவாக இருந்தது. புரிந்துணர்வு ஒப்பநம் ஏற்பட்டபின் அவ்வழியால் சென்றவர்கள் அப்பகுதியைப் பார்த்திருப்பர். அழிக்கப்பட்ட கவசவானங்கள் வீதியோரத்தில் நிற்பதையும் இத்தாவில் பகுதியில் ஒருதென்னைகூட உயிரோடின்றி வட்டுக்கள் அறுக்கப்பட்டு மொட்டையாக நிற்பதையும் காணலாம். அவ்வளவுக்கு அகோரமான குண்டுத்தாக்குதல் புலியணிமீது நடத்தப்பட்டது. ஆனாலும் அப்பகுதியைத் தொடர்ந்து தக்கவைப்பதில் உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர் புலிகள். ஆனையிறவுத்தளம் முற்றாகக் கைப்பற்றப்படும்வரை முப்பத்துநான்கு நாட்கள் இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு அதைத் தக்கவைத்துக்கொண்டனர் கேணல் பால்ராஜின் தலைமையிலான புலியணியினர்.
தரையிறங்கிய சிலநாட்களுக்குள் ஆனையிறவைக் கைப்பற்றும் முயற்சியொன்றைப் புலிகள் மேற்கொண்டு அது தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் சிலநாட்களில் வேறொரு திட்டத்தைப் போட்டு மிகஇலகுவாக, மிகக்குறைந்த இழப்புடன் ஆனையிறவுப்பெருந்தளம் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டனர் புலிகள். இயக்கச்சியைக் கைப்பற்றியதோடு தானாகவே எதிரிப்படை ஆனையிறவிலிருந்து தப்பியோடத் தொடங்கிவிட்டது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பின்வாங்கல் போலன்றி அனைவரும் தங்கள்தங்கள் பாட்டுக்குச் சிதறியோடினர். தாம் பயன்படுத்திய ஆட்லறிகள் முழுவதையும்கூட அழிக்க முடியாத அவசரத்தில் விட்டுவிட்டு ஓடினர். அவர்களுக்கு இருந்த ஒரே பாதையான ஆனையிறவு – கிளாலி கடற்கரைப்பாதை வழியாக ஓடித்தப்பினர்.
முடிவில் ஆனையிறவு தமிழர்களிடம் வீழ்ந்தது. ஆனையிறவு மட்டுமன்றி மிகப்பெரும் நிலப்பகுதி – கண்டிவீதியில் முகமாலை வரை – கிழக்குக் கடற்கரையாகப் பார்த்தால் சுண்டிக்குளம் முதல் நாகர்கோவில்வரை என்று மிகப்பெரும் நிலப்பகுதி மீட்கப்பட்டது. அனைத்துக்கும் அடிநாதமாக இருந்தது அந்தத் தரையிறக்கம்தான்.
சிங்களப்படையே அப்படியொரு தரையிறக்கத்தைச் செய்ய முனையாது. 1996 இல் அரசபடையால் அளம்பிலில் அவ்வாறு செய்யப்பட்ட தரையிறக்கமொன்று பெருத்த தோல்வியில் முடிவடைந்து இராணும் மீண்டும் தப்பியோட நேரிட்டது. ஆனால் புலிகள் மிகவெற்றிகரமாக படையணிகளைத் தரையிறக்கி ஒருமாதத்துக்கும் மேலாக மிகக்கடுமையான எதிர்த்தாக்குதலைச் சமாளித்து நிலைகொண்டிருந்ததோடு இறுதியில் எதிரியை முற்றாக வெற்றிகொண்டனர்.
நன்றி - வணங்காமண்
0 கருத்துரைகள் :
Post a Comment