சித்திரை 19 ம் நாள், அன்னை பூபதி நினைவு நாள். இந்நாளில் அன்னை பூபதி அவர்களுக்கு எமது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம். தமிழீழ விடுதலைப் போராட்டம் பல பரிணாமங்களைப் பெற்றுள்ளது, போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் நிலையில் விடுதலைப் போராட்டம் மாற்றமடைந்தவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களின் விடுதலையையும், பாதுகாப்பையும் தமது தோளில்சுமந்து களத்தில் பயணித்தது. இந்த இலக்குத்தவறாத பயணத்தில் இரண்டாம் கட்ட ஈழப்போர் என்ற நிலையில் இந்தியப் படையினருடான விடுதலைப் போர் அமைந்தது.
24 ஆண்டுகளுக்கு முன் எமது எண்ணங்களை கொண்டுசெல்கின்றவேளையில்,எமது மண்ணில் நிகழ்ந்த விடுதலைப்போரில் மக்கள்சக்தியாக களமிறங்கிய தமிழீழமக்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தையும்.விடுதலைப் புலிகள் போராளிகளையும் தங்கள் போர்வைக்குள் வைத்து பாதுகாத்தார்கள். அவ்வாறான நிலையில் இந்தியப் படையினரின் விடுதலைப் புலிகள் மீதான போர் நிகழ்ந்தபோது துணிந்து களமிறங்கி உணர்வையும்,உண்மையையும் வெளிக்காட்டினர்.
1988 ம் ஆண்டு மார்ச் மாதம் மட்டக்களப்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாமாங்கப் பிள்ளையார் ஆலயமுன்றலில் அமைக்கப்பட்ட மேடையில் அன்னையர் முன்னணியினர் இந்திய அரசுக்குதெளிவுபடுத்தும் விதத்தில் அகிம்சைப் போர் ஒன்றை ஆரம்பித்தனர்.
தமிழீழமெங்கும் தமிழ் மக்களுடைய பெரும்பாலான ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இருந்துவந்ததை சிங்கள அரசு,இந்திய அரசு நன்றாகவே அறிந்திருந்தது.இதனை விடுதலைப் புலிப் போராளி லெப். கேணல் திலீபன் அவர்களின் தற்கொடை வீரச்சாவின்போது நல்லூர் ஆலய முன்றலில் ஒன்று பட்ட மாபெரும் சக்தியாகத் திரண்ட மக்கள் வெளிக்காட்டியிருந்தனர்.மீண்டும் மொருமுறை போராளிகளின் பின்னால் மக்கள்சக்தி இருக்கின்றது என்பதை மட்டக்களப்பில் தமிழ் அன்னையர் ஒன்றிணைந்து போர்தொடுத்ததன்மூலம் இரண்டு அரசுகள் உட்பட்ட அனைத்துலகத்திற்கும் புரியவைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட அன்னையர் முன்னணி பலம் பொருந்திய அமைப்பாக மாறி அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அம்மக்கள் தேசியத் தலைவர் மீது கொண்டபற்றே காரணமாகும். மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் தேசியத் தலைவருக்கும்,விடுதலைப் போராளிகளுக்கும் ஆதரவை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.இதனை இந்திய அரசும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது. இதுமட்டுமல்லாமல் மாவட்டத்தின் முதல் நிலை விடுதலைப் போராளிகளான தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இவர்கள் மீது மக்கள் வைத்திருந்த மதிப்பும் ,பற்றும் மக்களை விடுதலைப் புலிகள் பின்னால் அணிதிரள வைத்திருந்தன.
இக் காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக மேஜர் பிரான்சிஸ் பணியிலிருந்தார்,இவருடன் இணைப்பை ஏற்படுத்திய விதத்தில் மட்டக்களப்பு நகரப்பகுதியில் இயங்கிய பல மக்கள் அமைப்புக்கள்,தொழிற்சங்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமது ஆதரவை வழங்கிய வண்ணமிருந்தன.
ஸ்ரீ லங்காவின் பகுதிகளில் அரசியல் கட்சிசார்ந்தாக தொழிற் சங்கங்கள்,மக்கள் அமைப்பு செயல்பட்டதுபோல தமிழீழத்தில் இவ்வாறான அமைப்புக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவுவழங்கி மக்கள் போராட்டமாக விடுதலைப் போராட்டத்தை மாற்றியிருந்தன. இதனால் மக்களை குறிவைத்ததாக இந்தியப் படையினரின் நடவடிக்கையும் அமைந்திருந்தது. இக் காலத்தில் இயங்கிய நிலையிலிருந்த மட்டக்களப்பு மாவட்ட தொழிற் சங்க சம்மேளனம் தனது முழுமையான ஆதரவை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வழங்கியிருந்தது .
அகிம்சைப் போராட்டத்தை உலகிற்கே அறிமுகப்படுத்திய காந்தி பிறந்த தேசத்தின் படைகள் எமது மண்ணில் நிலைகொண்டிருந்தவேளை மட்டக்களப்பு அன்னையர்கள் ஒன்றுதிரண்டு அகிம்சைப் போரை முன்னெடுத்தது முக்கியமான ஒன்றாகும்.அன்னையர் முன்னணி ஆலோசகர்களில் கிங்ஸ்லி இராசநாயகம் , மேஜர் வேணுதாஸ், வணசிங்கா ஐயா , பத்திரிகையாளர் கப்டன்.நித்தி போன்றவர்கள் பணியாற்றியிருந்தார்கள்.இவர்களில் மேஜர் . வேணுதாஸ், கிங்ஸ்லி இராசநாயகம், இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியப் படையினர் எமது மண்ணை விட்டு வெளியேறியபோது விடுதலை செய்யப்பட்டனர்.
அகிம்சைப் போர் மேடையில், ஆரம்பத்தில் சுழற்சி முறையில் அனனையர்கள் தொடர் உண்ணாவிரதத்தை மேற் கொண்டனர் பின்பு அன்னையர்முன்னணியினர் எடுத்துக்கொண்ட முடிவின்படி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட அன்னம்மா டேவிட் அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை மேற் கொண்டார், ஆனால் இந்தியப் படையினர் தமது வஞ்சகச் செயலால் அன்னையின் குடும்ப உறுப்பினர்களைப் பயன்படுத்தி அன்னம்மா டேவிட் அவர்களை போராட்டத்திலிருந்து வெளியேறச் செய்தனர்.இந் நிலையில் உறுதியோடு வீரத்தாய் அன்னை பூபதி அவர்கள் களமிறங்கினார்.
விருப்பத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களில் ஒப்பமிட்ட அடிப்படையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடந்தார்.போரை நிறுத்தி, எமது தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம்தான் தமிழ் மக்கள் உரிமையுடன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்ற வேண்டுகோளை முன்னிறுத்தி, தமிழீழத்தின் அன்னையர் சார்பாக மட்டக்களப்பில் துணிந்து,பணியாது போர்தொடுத்து தற்கொடைச் சாவைத் தழுவிய அன்னை பூபதி அவர்களை எமது மண் என்றும் மறக்காது.அன்னை பூபதி அவர்களின் உணர்வான உறுதியை எவராலும் அன்று அசைக்க முடியவில்லை.அன்னை பூபதி அவர்களின் அமைதி வழிப்போர் தமிழீழ மக்களை மாத்திரமல்ல உலகில் வாழும் அனைத்து தமிழ் மக்களின் குரலாகவும் வெளிப்பட்டது.
இந்தியப் படையினருடன் தமிழீழத்தேசத்துரோகிகளும் சேர்ந்து வலம்வந்துகொண்டிருந்த தாய்மண்ணில் தமிழீழத்தின் அன்னை பூபதி அவர்கள் தொடுத்த போரை எவராலும் தடுக்க முடியவில்லை,மாறாக காந்திதேசத்தவர்கள் மதிக்கத் தவறியதனால் பூபதி அம்மா அவர்களை புனிதமான வீரத்தாயாக, புறநானூற்று வரலாற்றை நினைவுபடுத்தும் தமிழீழ விடுதலைப்போர் வரலாற்றில் நாம் பெற்றிருக்கின்றோம்.
3 .11 .1932 அன்று பூபதி அம்மா கிரான் என்னும் ஊரில் பிறந்தார். அவர் வாழ்ந்தது நாவற்கேணி என்ற சிற்றூராகும்.இச் சிற்றூர் மட்டக்களப்பு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப மறைவிடங்களில் ஒன்றாகவும் நாவற்கேணி விளங்கியது.மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தின் முதல் மாவீரர்களான லெப். ராஜா (பரமதேவா), வீரவேங்கை ரவி (வாமதேவன்) ஆகியோர் உட்பட சில போராளிகள் நாவற்கேணி ஊரில் தங்கியிருந்தனர்.
இதனால் இவ்வூர் போராட்ட வரலாற்றில் முக்கிய இடத்தையும் பெற்றுள்ளது. பூபதி அம்மா அவர்களுக்கு ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகள் இருந்தபோதும், ஆண் பிள்ளைகளில் இருவர் சிங்கள இராணுவத்தினரால் அழிக்கப்பட்டனர். கடைசி மகன் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு கண்ணதாசன் என்னும் பெயருடன் களமாடியதையும் இங்கு குறிப்பிடுகின்றோம் .
தமிழர்களுடைய அமைதிவழிப் போராட்ட வரலாற்றில்,தமிழ்ப் பெண்களின்பங்கு தேர்தலில் வாக்குப் போடுவதில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இக் காலங்களில் தமிழ்ப்பெண்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை. ஆனால் கருவி ஏந்திய போராட்டமாக களத்தில் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் நின்றபோது தமிழ்ப்பெண்கள் அதிகளவில் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
இக் காலத்தில்தான் சாதாரண தமிழ்க் குடும்பப்பெண்ணான அன்னை பூபதி அவர்களும் அமைதி வழிப்போரில் ஈடுபட்டு, தற்கொடைச்சாவின்மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்கள் சார்பான பலத்தை மேலதிகமாக பெற்றுக்கொடுத்தார் இதன்மூலம் தமிழ்ப் பெண்கள் அதிகளவாக போராட்டத்தில் பங்கு பற்றிய காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட காலத்தைக் குறிப்பிடமுடியும். தமிழ் அன்னையர்கள் உட்பட்ட தமிழ்ப் பெண்கள் மக்கள் சக்தியாக, பக்க பலமாக விடுதலைப் போராட்டத்தில் அணிதிரண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்கள் போராட்டத்தோடு இணைந்திருந்த தமிழ் அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்ததையும் அதற்குப் பிறகு கருவி ஏந்திய போராட்டமாக விடுதலைப் பாதைமாறியபோது, தமிழ்மக்களின் பூரண ஆதரவு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இருந்ததையும் இங்கு பதிவு செய்கின்றோம். இதனால்தான் மட்டக்களப்பு மக்கள் ஒன்றுதிரண்டு தமது தேசிய விடுதலை இயக்கமான விடுதலைப் புலிகளை பாதுகாப்பதற்கு போராடமுற்பட்டனர்.
விடுதலைப் போராட்டத்தில் மக்கள் சக்தி பின் பலமாக விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்ததை ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்தப்பட்டதையும்,சிங்களப் படையினரின்,இந்தியப்படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் போராளிகளை மக்கள் எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பதையும் ஒவ்வொரு மாவீரரின் வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது.
அறிவாளர்கள்,சமூக சேவையாளர்கள்,அரசசேவையாளர்கள்,பாமரமக்கள் என பல்வேறு பட்ட பிரிவினர் மத்தியிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அமோக அதரவு இருந்ததை நாட்டுப் பற்றாளர்களின்வரலாற்றுக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.இது எல்லோராலும் அறியப்பட்ட விடயமாகும்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசியவிடுதலை இயக்கத்தை பாதுகாத்து நின்ற மக்கள் தம்மை முன்னிறுத்திக் கொள்வதற்கும், அரசியல் பதவிகளுக்கும் ஆசைப்படவில்லை இவர்கள் நாட்டுப்பற்றாளர்களாகவே மறைந்தும், மறையாமலும் வாழ்கின்றார்கள்.
. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக் கணக்கான நாட்டுப்பற்றளார்களை நாம் இழந்திருக்கின்றோம். தாய்மொழியை நேசித்த,தாய் நாட்டின் மகிமை உணர்ந்து அதன்மீது பற்றுக்கொண்ட இவர்கள் தங்களை இழந்து விடுதலைக்கு பலம் சேர்த்தனர்.
அறிவாற்றல் மிக்கபலர் இனப்பற்றோடு வாழ்ந்து தங்களை தாய்மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து நாட்டுப் பற்றாளர்களாக என்றும் எமது மக்களின் மனங்களில் மறையாது இருப்பதையும் உணர்கின்றோம்.
வயது முதிர்ந்ததாக இருந்த பலர்,தேசியத் தலைவர் காலத்தில் இளைஞர்களாக இருக்கவில்லையென்று ஏங்கிய பல சம்பவங்களைப் பார்த்திருக்கின்றோம். இவ்வாறான அனைத்து நாட்டுப் பற்றாளர்களையும் இந்நாளில் நினைவு கூர்ந்து,அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துவோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரர்களைப் பெற்றெடுத்த வீர அன்னையர்களுக்கு தலைசாய்த்து, தமிழ்ழன்னைசார்பான வணக்கத்தையும் இந் நாளில் தெரிவித்துக்கொள்வோம்.
எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும்,தமிழீழத் தனியரசில் வாழவேண்டும் என்ற உணர்வான எண்ணத்தில் விடுதலைப் புலிகளோடு கைகோர்த்து களத்தில் நின்றபோது,சிங்களப் படையினரின் இன அழிப்பு நடவடிக்கையில் தாய்மண்ணில் சாவடைந்த அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் இந்நாளில் தலைவணங்குகின்றோம்.
தொப்புள்கொடி உறவாக,தாய் தமிழகத்தில் அமைதி வழிப்போரில் ஈடுபட்டு தமிழீழப் விடுதலைப் போராட்டத்திற்கு வலு சேர்த்து,தமிழருக்கென்றோர் நாடு தரணியில் அமையப்பெறவேண்டும் என்ற உறுதியான இலட்சியத்திற்காக தம்மை அர்பணித்த அனைத்து இனப்பற்றாளர்களையும், இந் நாளில் நெஞ்சினில் நினைவாக ஏந்தி வீரவணக்கத்தைச் செலுத்துவோம்.
. பூபதி அம்மாவின் தற்கொடை தமிழர்களின் விடுதலைப் போருக்கு பலம் சேர்த்தது. குடும்பபாசம், குடும்பபற்று என்பதற்கப்பால் இனப்பற்று,மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்பவற்றுடன் தேசியத் தலைவர் மீதுபற்று,என்பவையும் இணைந்ததாக இந்தியப் படையினருக்கு தமிழ்மக்கள் சார்பான பாடத்தைப் புகட்டியிருந்தது.
உறுதியோடு இலட்சியத்தையடையும் உயர்ந்த குறிக்கோளோடு களத்தில் நின்ற விடுதலைப்புலிப் போராளிகள் தாம் அனைவரும் வீரச் சாவடைந்தலும் தமிழீழ விடுதலைப்போர் ஓயாது அதனை மக்கள் வென்றேடுப்பர்கள் என்றே, எப்போதும் எண்ணினார்கள். என்றும் பதவிக்காக,சுயநலத்துக்காக,வசதியான வாழ்வுக்காக போராளிகள் ஏங்கியதில்லை ,தேசியத் தலைவரும் ஏங்கியதில்லை என்பதனை இந்தியப் படையினருடனான போரின்போது வெளிப்படுத்தினார்கள்.
எண்ணற்ற போராளிகள், எண்ணற்ற மக்கள் சிந்திய செங்குருதியினால் சிவந்த மண்ணில் இருண்ட வாழ்க்கையில் எழுந்து நின்ற மக்கள் எப்போதும் தேசியத் தலைவர்மீது அளவற்றபற்று வைத்திருந்தார்கள் என்பதை அன்றும் இன்றும் கண்டு கொண்டிருக்கிறோம்.
.விடுதலைப் போராட்டத்தில் எழுந்தவள் அன்னை பூபதி.
தமிழர் வரலாற்றில் இணைந்தவர் அன்னை பூபதி.
மறைந்தும், மறையாத மக்கள் மனங்களில் வாழ்பவர் அன்னை பூபதி
தமிழீழத்தின் மக்கள் சக்தி அன்னை பூபதி.
உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் தமது வாழ்வோடு,தமக்கென்றோர் நாடு வேண்டும் என்ற உணர்வோடு, ஒலிக்கின்ற குரல் ஒருமித்து உரக்கின்றபோது உலகின் குரலும் இணைந்து உருவாகின்ற நாடாக தமிழீழம் என்ற எமது தாய் நாடு அமையும்.
உலகத்தை எம் பக்கம் திருப்புவதும்,
உலகத்தை எம் முடன் இணைப்பதுவும்,
தமிழர்களின் ஒற்றுமையான போராட்டம் சாதிக்கும்.
அடுத்த மாவீரர் தொடரில் ........
என்றும்
எழுகதிர் .
0 கருத்துரைகள் :
Post a Comment