மீண்டும் வலுப்பெறுகிறது தமிழீழக் கோரிக்கை


போரை வெற்றிகொள்ள களம் இருந்தால் மட்டும் போதாது. புறநிலைக் களம் மற்றும் மக்களின் ஆதரவுகள் இருந்தால்த்தான் போரை வெற்றிகொள்ள முடியும் என்பதுதான் நியதி. இறுதிப் போர் நடைபெற்ற வேளையில் தமிழகம் புறநிலைக் களமாக இருந்திருந்தால் தமிழீழத் தனியரசை பல ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கியிருக்க முடியும்.  1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்கள் தமிழீழம் அடையும் நோக்கத்திற்கு தடையாக இருந்தது. 1991-ஆம் ஆண்டுக் காலப் பகுதிகளுக்கு முன்னர் பல ஆண்டுகள் தமிழ் போராளி அமைப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் தமிழீழம் அமைக்கும் நோக்கம் பலிக்காமல் போனதற்கு ஒரு காரணமாக இருந்தது. 

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான ஈழத் தமிழர்களின் ஆயுதப் போர் தமிழீழக் கோரிக்கைக்கு தடைக் கற்களாகவே அமைந்தது. தமிழர்களுக்கென்று ஒரு கட்டுக்கோப்பான அரசியல் தலைமைத்துவம் இன்றுவரை இருந்ததில்லை. இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் தலைமைப் பண்புகளை கொண்டிருந்தார்கள். அரசியல் ரீதியாக தமது தலைமைப் பண்பை உருவாக்கி வரும் வேளையில் இறுதிப் போருடன் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது. 

ஏறத்தாள எட்டுக் கோடித் தமிழர்களைத் தன்னகத்தே வைத்துள்ள தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளின் பின்னுக்கு முன் முரணான நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக தமிழர்களை ஒற்றுமைப்படுத்தும் நிலையில் இல்லை. தமிழ்நாடு மற்றும் தமிழர் மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்ட எந்தவொரு நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுவிட்டால், ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளை வசைபாடி மக்களை பிழையான வழிக்கே அழைத்துச் சென்றுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. 

தலைமைப் பண்புகளுக்கு ஒவ்வாத செயற்பாடுகளையே கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்றவர்கள் இதுநாள் வரை செய்து வந்துள்ளார்கள். கொள்கை ஒன்றை வகுத்துவிட்டால் அதற்காக இறுதிவரை போராடும் தன்மை ஒரு தலைவருக்கு இருத்தல் வேண்டும். தொண்டர்கள் அக்கொள்கைகளில் இருந்து மாறாமல் இருக்க தலைவர் தொடர்ந்தும் அதற்காக குரல் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும். பெரியார், காமராஜர், அண்ணா மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற மறைந்த தமிழகத் தலைவர்கள் தமது கொள்கைகள் என்னவோ அதற்காக போராடி வெற்றியடைந்தவர்கள்.

போராட்டப் பாதைகள் மாறலாம் ஆனால் போராட்டம் மாறிவிடக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி கூறுவார். இவருடைய கூற்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையே. ஒற்றையடிப் பாதையில் சென்று போராட்டத்தை வெல்லலாம் என்பது மடத்தனம்.போராட்டத்தின் தன்மைகளை அறிந்து நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றவாறு போராட்டத்தை செய்தாலே வெற்றிகொள்ள முடியும். 

காலத்திற்கு ஏற்றவாறு மாறும் தலைமைகள்

முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் உயரிய தலைமைப் பண்பைக் கொண்டவர். தான் கொண்ட கொள்கையில் இறுதிவரை பற்றுக்கொண்டு வெல்லும் மனம் படைத்தவர் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்கு தமிழீழமே இறுதித் தீர்வு என்கிற கொள்கையை ஏற்றுக்கொண்டு தமிழீழப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் பல்வேறு உதவிகளைச் செய்தவரே எம்.ஜி.ஆர் என்பது உலகறிந்த உண்மை. 

1970 மற்றும் 1980-களில் தமிழ்ப் போராளிகள் தமிழகம் சென்றபோது அவர்களைப் பிடித்து சிறிலங்காவிடம் ஒப்படைத்த கலைஞர் பின்னர் தமிழீழப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறி ரெசோ என்கிற அமைப்பின் தலைவராக செயற்பட்டார். இயக்கங்களை ஒற்றுமைப்படுத்துவதற்குப் பதில் அவர்களை பிரித்துப் பார்க்கவே விரும்பினார் கலைஞர். டெலோ போன்ற போராளி இயக்கங்களுக்கு பண உதவிகளை செய்து விடுதலைப் புலிகளின் தலைமையை ஓரம்கட்ட வேண்டுமென்கிற வகையில் செயற்பட்டார் கலைஞர். 

காலத்திற்குக் காலம் மாறுபட்டக் கருத்துக்களைக் கொண்டு செயற்பட்டவரே கலைஞர். இராஜீவ் மரணத்திற்குப் பினனர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாறுதல் காரணமாக1991-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் பேசுகையில்,விடுதலைப் புலிகளின் தனி ஈழம் என்ற கோரிக்கையில் உள்ள சிரமங்களை எடுத்துரைத்தார். ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென்கிற வாதத்தை முன்வைத்துப் பேசிவந்தவர் கலைஞர். 

பிரபாகரன் இல்லையென்றால் தமிழர்கள் அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கூறி வந்தவரே ஜெயலலிதா. 1990-ஆம் ஆண்டில் கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலை நடத்தி அதன் மூலமாக தான் ஆட்சிக்கட்டில் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் பொய்ப் பிரச்சாரங்களை ஜெயலலிதா மேற்கொண்டார். 

சிங்கள அரச படைகளுடன் மீண்டும் 1990-ஆம் ஆண்டில் போர் ஆரம்பித்தவுடன் பல்லாயிரம் தமிழர்கள் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக படையெடுத்திருந்த காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் உட்புகுந்து விட்டதாகவும், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சீர்குலைந்து விட்டதாகவும் கூறி தமிழக ஆட்சியைக் கலைக்க உத்தரவிடும்படி போராட்டங்களை முன்னெடுத்த ஜெயலலிதா வெற்றியும் கண்டார். 

இந்திய மத்திய சர்க்கார் தமிழக அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தது. 1991-ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் படுகொலை செய்யப்பட்டார். இதனைச் சாட்டாக வைத்து கலைஞர் தலைமையிலான தி.மு.காவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று தமிழக முதல்வரானார். இதன் பின்னர் இயற்றப்பட்ட சட்டங்கள் ஈழத் தமிழர்கள் பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றியோ தமிழகத்தில் பேசுவதற்குக்கூட இடமளிக்கவில்லை. 

தமிழீழத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் சிறை அடைக்கப்பட்டனர். அப்பாவி ஈழத் தமிழ் அகதிகளை கைது செய்து புலி எனும் முத்திரை குத்தி பல்லாண்டு காலம் சிறைவாசம் அனுபவிக்க வழி அமைத்து கொடுத்தார் ஜெயலலிதா. காலங்கள் உருண்டோடின. பல்லாயிரம் ஈழத் தமிழர்கள் ஈழத்தில் அழியும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தார்கள் தமிழக அரசியல்வாதிகள்.தமிழீழ விடுதலைக்குப் போராடிய விடுதலைப் புலிகள் புறநிலைக் களமின்றி தவித்தார்கள்.

பல்வேறுபட்ட தடைகளை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மக்களை வதைப்படுத்தியது சிங்கள அரசுகள். தமிழ் நாடு பக்கபலமாக இருந்திருந்தால் எவ்வித தடைகளுமின்றி பொருட்களை கொள்முதல் செய்து பல்லாயிரம் மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். புறநிலைக் களம் இல்லாத காரணத்தினால்த்தான் ஈழத் தமிழர்கள் பல இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தது. ஈழத்திற்கு ஆதரவாக தாம் வாழும் நாடுகளில் உலகத் தமிழர்கள் போராட்டங்களைச் செய்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்ந்தார்கள். ஆனால், புறநிலைக் களம் இல்லாத காரணத்தினாலேயே நான்காம் கட்ட ஈழப் போர் தோல்வியில் முடிந்தது.

மீண்டும் ஈழத்திற்கான குரல்

ஈழப் போர் உச்சிக்கட்டத்தில் இருந்த போது ஜெயலலிதாவின் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தது. தமிழக மக்களின் எழுச்சியைக் கண்டு அவர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறிவிட வேண்டுமென்கிற காரணத்தினால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மூன்று வருடங்களுக்கு முன்னர் எடுத்தார் ஜெயலலிதா. கலைஞருக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொண்டு மீண்டும் அரச நாற்காலியைப் பிடித்துக் கொண்ட ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். தமிழீழமே ஈழத் தமிழர்களுக்கு இறுதித் தீர்வு என்று கூறாமல் இலங்கைத் தமிழர்கள் என்றே கூறிவருகிறார் ஜெயலலிதா.

கலைஞர் தலைமையிலான தி.மு.க. கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.அன்றிலிருந்து இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பேச்சுக்களை பேசி வருகிறார் கலைஞர்.பொதுக்கூட்டம் ஒன்றில் கலைஞர் சில தினங்களுக்கு முன்னர் பேசும்போது, “தமிழீழம் மலராததற்கு காரணம் நிறைய உண்டு. அது பற்றி ஆராய்ந்து சொல்ல விரும்பவில்லை. தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். தமிழீழத்துக்கு இன்றைய தினம் புதிய எழுச்சியை உருவாக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.நான் முன்பு சொன்னது போல் எனக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளோ தெரியாது. ஆனால் ஈழத்தின் எழுச்சியை உருவாக்காமல் உங்களை மட்டும் அல்ல இந்த உலகத்தை விட்டே போகமாட்டேன்"என்றார் கலைஞர். 

அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்கு நிறைவேறாத ஆசை உண்டா?என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு ஈழம் மலர வேண்டும் என்பதே என் ஆசை என்றேன். தமிழ் மலர பாடுபட நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மீண்டும் டெசோவை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதில் நானும்இ பேராசிரியர் அன்பழகன், கி.வீரமணி இடம்பெறுவோம்" என்றார் கலைஞர்.

கடந்த வாரம் சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜனும் இடம்பெற்று இருந்தார். நாடு திரும்பியதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான பல சொற்பதங்களை பாவித்தே வந்தார் இவர். குறிப்பாக தாம் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்ற போது தமிழ் மக்கள் தனித் தமிழீழம் கோரவில்லையெனவும், இலங்கை நாட்டிற்குள் சில அரசியல் அதிகாரங்களைப் பெற்று வாழ வேண்டுமென்பதே தமது விருப்பம் என்று தம்மிடம் தமிழ் மக்கள் கூறியதாக பத்திரிகையாளர்களிடம் கூறினார் ரங்கராஜன். இது குறித்து இவருடைய கருத்துக்களை நிராகரிக்கும் விதமாக அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்.

கலைஞர் தனது அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர், சுரேஷ் பிரேமச்சந்திரன், வாக்குறுதிகளை மீறுவதையே இலங்கை அரசு வழக்கமாக கொண்டிருக்கும் வரலாற்றினை சுட்டிக்காட்டி இருக்கிறார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தோலுரித்துக் காட்டியிருக்கும் இலங்கை அரசு தொடர்ந்து பின்பற்றி வரும் தமிழர் விரோத வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் பார்த்தால்; தற்போது சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவிடம் அதிபர் ராஜபக்சே அளித்திருக்கும் உறுதிமொழிகள் அனைத்தும் ஏமாற்றும் தந்திரோபாயங்கள் தான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்."

“டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள இன்னொரு தகவல் நமது உள்ளத்தை உலுக்குகிறது. மட்டக்களப்பு பகுதிகளுக்குச் சென்ற போது எங்களுக்கு வேதனையான நிலை ஏற்பட்டது. உண்மையிலேயே நான் கண்ணீர் விட்டேன்.இலங்கைப் போரில் 35,000 தமிழ்ப் பெண்கள் விதவைகளாகி உள்ளதைப் பார்த்தோம். இவர்களில்13,000 விதவைகள் 23 வயதுக்கும் குறைவானவர்கள் என்று அவர் சொல்லியிருக்கிறார்."

“தனி ஈழம் வேண்டுமென்று இலங்கையில் யாரும் வலியுறுத்தவில்லை என்று சொல்லியிருக்கும் டி.கே. ரங்கராஜன் கவனத்திற்கு ஒரு நிகழ்வினை நினைவூட்ட விரும்புகிறேன். 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு முன்பு, 1976-ல் வட்டுக்கோட்டை என்ற இடத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனைத்துத் தமிழ் மக்களின் விடுதலைக் கூட்டணி, மலையக மக்களுடைய அமைப்பு என எல்லோரும் ஒன்றிணைந்து ‘தனித் தமிழ் ஈழம்’ தான் என்ற முடிவினைத் தீர்மானமாக வடித்தெடுத்து அதனையே முன் வைத்து தேர்தலிலே போட்டியிட்டார்கள்.தமிழ்ப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், ஒரு தொகுதியைத் தவிர 18 தொகுதிகளில் அவர்கள் வெற்றி பெற்றார்கள்.”

“தனித் தமிழ் ஈழம் தான் என்பது 1977-ஆம் ஆண்டிலேயே தமிழ் மக்கள் முன்வந்து தந்த தீர்ப்பு.ஆனால் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள நிலை உலகெங்கிலும் பரவியிருக்கும் தமிழர்களின் உள்ளக் கிடக்கை தனித் தமிழ் ஈழம் என்ற ஒரே திசையை நோக்கியே மேலும் உறுதிப்பட்டிருக்கிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினையை அடக்குமுறை அடாவடிகளாலோ,அதிகார அத்து மீறல்களாலோ, சர்வாதிகார சதிராட்டங்களாலோ தீர்த்து விட முடியாது. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு மேலும் தாமதமோ தயக்கமோ இன்றி தீர்வு காணப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டளை. அதைக் கால வரையறையின்றி ஒத்தி வைத்து விட முடியாது" என்று தனது அறிக்கையில் கூறினார் கலைஞர்.

“தனி ஈழக் கோரிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியை விமர்சித்துள்ள கலைஞருக்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். இலங்கையில் பல்வேறு தரப்பினரும் கூறியுள்ள கருத்தைத்தான் டி.கே.ரங்கராஜன் தெரிவித்ததாக ஜி.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டார். இதுதொடர்பாக ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தனி ஈழத்திற்குக் குறைவான எதற்கும் இலங்கைத் தமிழர்கள் எதற்கும் சம்மதிக்க மாட்டார்கள் என்ற கருணாநிதியின் கருத்து குறித்து தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளேயே தீர்வு காண்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை சென்ற இந்திய எம்.பிக்கள் குழுவிடமும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார்."

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்தரங்கில் உரையாற்றுகையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதையே வலியுறுத்தினார்.இப்போதும் கூட அவர் தனி ஈழத்திற்குக் குறைவான எதையும் ஏற்கமாட்டோம் என்று கூறவில்லை.மாறாக, தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்றுதான் வலியுறுத்தியுள்ளார்.எந்த ஒரு பிரச்சனையிலும் சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் பிரதிநிதிகளின் கருத்தோட்டம் என்ன என்பதே முதன்மையானது. மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி, அர்த்தபூர்வமான அதிகாரப்பரவல் என்பதையே முன்பின் முரணின்றி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது" என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

தமிழீழம் அடையும் வரை ஓயமாட்டேன் மற்றும் வன்முறையின்றி ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்றவாறு தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இதற்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசு உதவ வேண்டுமென்று கருணாநிதி குரல் கொடுத்துள்ளதானது உலகத் தமிழர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது. ஆட்சிக் கட்டிலில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கலைஞர் பேசுவது நாடகம் என்று கருதுகிறார்கள் உலகத்தமிழர்கள். 

ஒன்றுபட்ட இலங்கைக்குள், மாநில சுயாட்சியும் அதிகாரப் பரவலும் வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு அதுவே தனது நிலைப்பாடும் என்று கலைஞர் தொடர்ந்து கூறிவந்தார். ஆனால் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளது வெறும் நாடகம் என்று கருத வேண்டியுள்ளது. சிங்களவர்கள் கோபப்படும்படி நடந்துகொள்ளக்கூடாது என்று சில வருடங்களுக்கு முன்னர் பேசியவரே கலைஞர். தனி ஈழம் என்கிற வாதத்தை இப்போது முன்வைத்துப் பேசும்போது மகிந்த ராஜபக்சாவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சா கலைஞரைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளார்.ஈழத்தை இந்தியாவில் அமைப்பதே சிறந்ததாகவும் கலைஞர்ருக்கு அறிவுரை கூறியுள்ளார் கோத்தபாய. 

பல்லாயிரம் தமிழ் மக்கள் ஈழத்தில் சாகும்போது ஆட்சியில் இருந்தவரே கலைஞர்.இந்திய மத்திய அரசில் கலைஞருடைய கட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. தனது கட்சியின் செல்வாக்கை பாவித்து மனிதாபிமான ரீதியிலாவது ஈழத் தமிழர்களின் துயரை துடைக்க முனையாமல் வெறும் கண்துடைப்பு நாடகங்களை நடத்தியதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை. இப்படிப்பட்டவர் தற்போது தொடர்ந்தும் ஈழம் பற்றி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். இவருடைய அறிக்கைகளுக்கு பதில் அறிக்கைகளை தொடர்ந்தும் வெளியிட்டுவரும் ஜெயலலிதா இது சம்பந்தமாக எதனையும் தெரிவிக்காமல் இருக்கிறார். 

தமிழீழ விடுதலைக்கான குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கிறது என்பது உண்மையே. தலைமைப் பண்புகள் இல்லாமல் வெறும் அரசியல் காய் நகர்த்தல்களுக்காக ஈழப் போராட்டத்தைப் பாவிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம். தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் தமிழீழமே சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு இறுதியும் அறுதியுமான தீர்வு என்று கூறி அறவழிப் போராட்டத்தை ஆரம்பிப்பதே தமிழீழ தனியரசை நிறுவ வழி வகுக்கும். இதுவே லட்சக்கணக்கான மக்களின் குருதி சிந்திய மண்ணுக்கும் மக்களுக்கும் அளிக்கும் ஆதரவாக அமையும்.

அனலை நிதிஸ் ச. குமாரன்
Share on Google Plus

About Eelapakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment