கடந்த காலங்கள் சில சமயம் எமக்கு வெட்கத்தைத் தரக் கூடியதாகவும் அமையக் கூடும். யுத்தம் முடிவடைந்த மூன்று ஆண்டுகளில் பொருளாதாரத்தில் நாடு சிறப்பான முன்னேற்றத்திற்கான தடத்தில் சென்று கொண்டிருப்பதாக வங்கிகளின் வங்கியான இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த வாரம் சென்னையிலிருந்து வெளியாகும் பிரபல ஆங்கில தினசரியான “இந்து“ வுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்த நிலையில் திங்கட்கிழமை வெளியிட்ட மத்திய வங்கியின் 2011 வருடாந்த அறிக்கையில் நாடு நெருக்கடியான தருணத்தை அரவணைத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வீடுகள் நிர்மாணிக்கப்படுவதாகவும்(வடக்கில்) பாடசாலைகள் இயங்குவதாகவும் மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாகவும் மீன்பிடித்தொழில் , விவசாயம் சிறப்பாக இடம்பெறுவதாகவும் வடபகுதி மக்கள் தென்னிலங்கைக்கு தமது உற்பத்திகளை கிரமமாக அனுப்பி வருவதாகவும் முதல் தடவையாக 8 சத வீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை நாடு கொண்டிருப்பதாக ஆளுநர் அளித்திருந்த பேட்டியைப் பார்க்கும் போது உற்சாகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால் 2012 இல் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாகவே இருக்கும் என்று 2011 ஆண்டறிக்கையில் மத்திய வங்கி எதிர்வு கூறியிருக்கிறது. வர்த்தக நிலுவை இடைவெளி அதிகரித்துச் செல்லும் நிலைமையில் இந்த வருடம் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து செல்லும் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதுடன், வர்த்தக நிலுவை இடைவெளியை குறைப்பதற்காகவே வட்டி வீத அதிகரிப்பு , நாணயப் பெறுமதிக் குறைப்பு, இறக்குமதி வரியை இரு மடங்காக உயர்த்தியமை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக மத்தியவங்கி தெரிவித்திருக்கின்றது. அத்துடன் நிச்சயமற்ற சர்வதேச பொருளாதார நிலைமையும் வர்த்தக நிலுவை இடைவெளி விரிவடைந்து செல்வதுமே நெருக்கடியான எதிர்காலத்துக்கு கட்டியம் கூறுவதாக இருப்பதாக மத்தியவங்கி கூறுகிறது.
இரண்டு மாதங்களில் வட்டி வீதம் இரண்டாவது தடவையாக கடந்த வாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கடன் வழங்குவது முடக்கப்பட்டிருக்கிறது. இதனால் உண்மையிலேயே மத்திய தர வர்க்கத்தினரும் சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களும் தாங்கிக் கொள்ள முடியாத கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் அதிகரித்துச் செல்லும் வர்த்தக நிலுவை இடைவெளியைக் குறைப்பதற்குமான அரசாங்கத்தின் உபாயமானது அந்நியச் செலாவணிக் கையிருப்பு தொடர்பாக எதிர்நோக்கும் அழுத்தத்தை குறைக்கும் என்பது உண்மைதான். ஆனால் கடந்த வியாழக்கிழமை மத்திய வங்கி தனது வட்டி வீதத்தை 0.25 %, 0.75% ஆகியவற்றால் 7.75%, 9.75% க்கு அதிகரித்திருக்கிறது. அத்துடன் கடன் வழங்குவதைக் கட்டுப்படுத்துமாறு வர்த்தக வங்கிகளுக்கு வலுவான அறிவுறுத்தலை மத்திய வங்கி கடந்த மாதம் விடுத்திருந்தது. ஆனால் இந்தக் கட்டுப்பாடுகளின் மத்தியிலும் கடன் பெறும் வீதம் அதிகரித்து வருவதனாலேயே வட்டி வீதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வட்டி வீத அதிகரிப்பாலும் எரிபொருள் விலை உயர்வாலும் சிறிய வர்த்தக நடவடிக்கைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதேவேளை நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கோழி வளர்ப்பில் ஈடுபடுவோரும் தமது தொழில் துறையில் தாக்குப்பிடிக்க முடியாத நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக வேதனையை வெளிப்படுத்துகின்றனர். சிறிய அரிசி ஆலை உரிமையாளர்கள் பலர் மேலும் இழப்புகளைத் தாங்கக் கூடிய சக்தியில்லை எனவும் அதனால் தொழில் துறையை மூடிவிடுவது உசிதமானதாகத் தோன்றுவதாகவும் விரக்தியை வெளிப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
ஆனால் பரும்படியாக்க பொருளாதார அடிப்படை அம்சங்கள் சிறப்பான வடிவத்தைக் கொண்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் “இந்து“ வுக்குக் கூறியிருக்கிறார். கடன் வீதத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாகவும் 110 சதவீதமாக இருந்த அரச கடன் வீதம் 80 சத வீதத்திற்கு குறைவானதாக இருப்பதாகவும் கையிருப்புகள் சுமார் 3 1/2 மாத காலத்துக்குப் போதியதாக 6 பில்லியன் டொலராக இருப்பதாகவும் சகல துறைகளுமே கடந்த காலத்தை விடச் சிறப்பானதாக இருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நாட்டுக்குக் கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அனுப்பும் பண வரவில் அதிகளவான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதை புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. 2010 இல் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர் அனுப்பும் நிதி 83 சதவீதமாக இருந்தது. ஆனால் 2011 இல் அத் தொகை 53 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பில் துண்டு விழுவதை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் தொகையையே பயன்படுத்தும் உபாயத்தை அரசாங்கம் பயன்படுத்தி வந்துள்ள நிலையில் இத்தொகையில் ஏற்பட்ட வீழ்ச்சி பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கமாகும்.
உள்சார் கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் பாரிய தொழில் முயற்சிகளுக்கு சலுகைகள் வழங்கி ஊக்குவிப்பதும் நீண்டகால அபிவிருத்தி இலக்கு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கையில் சிறப்பானதாகவே அமையும். ஆனால் இது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினரின் பொருளாதார நலன்களையே போஷிப்பதாகவே காணப்படுகிறது. சாதாரண மக்கள் குறிப்பாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளையே எதிர் நோக்குகின்றனர். நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களாக உள்ள மத்திய தர வர்க்கத்தினர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உபாயங்களை முன்னெடுப்பதே உடனடித் தேவையானதாகும். வாகன இறக்குமதிகளைக் குறைக்க வரிகளை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் அரச வருவாயை அதிகரிக்கச் செய்தாலும் அடிப்படைத் தேவைகளையாவது நெருக்கடிகள் இன்றி சாதாரண மக்கள் முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டியது தார்மீக கடப்பாடாகும்.
யுத்தத்திற்குப் பின்னரான கால கட்டப் பொருளாதாரத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது குறிப்பிடத்தக்க அளவுக்கு தாழ்ந்த மட்டத்தில் இருப்பதாக புதிய நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகிறது. பரந்தளவிலான ஊழல் மோசடிகள், பாரியளவிலான சமூக பொருளாதார சமத்துவமின்மை இடைவெளிகள் என்பனவற்றுடன் மனித உரிமை விவகாரங்களினால் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனத்தில் நாடு சிக்கியிருக்கும் நிலைமையில் வெளிநாட்டு நேரடி முதலீடு எதிர்பார்ப்புகள் சாதகமான பெறுபேற்றை ஏற்படுத்தாது. அடுத்த தசாப்தத்தில் உலக பூகோள அரசியலில் அமெரிக்க பொருளாதார வலயம் , சீன பொருளாதார வலயம் , இந்திய பொருளாதார வலயம் , என்பனவே மேலாதிக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர். இந்த பூகோள அரசியல் கள யதார்த்தத்திற்கமைய வியூகங்களை வகுத்து செயற்பட்டால் மாத்திரமே இலங்கை திட்டமிட்ட பொருளாதார இலக்கை எட்ட முடியும்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment