“பிரபாகரன்“ தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது.

இனப்போரால் பெற்ற ஆழந்த காயங்களைக் கொண்ட தமிழ்சமூகத்திற்கு ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளை சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஐபக்ச முன்வைக்கவில்லையானால்  எதிர்காலத்தில் 'இளைய பிரபாகரன்' தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது வடகிழக்கில் அழைந்துள்ள மிக அழமான கடற்கரைப் பிரதேசமான புதுமாத்தளன் என்ற இடத்தில் 2009 இல் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு ஒரு சமூகம் ஒன்று முற்றாக அழிக்கப்பட்டிருந்தது. அத்துடன் சிறிலங்காவானது மேலும் பிளவுபட்டது. 


மூன்று பத்தாண்டுகளாக சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரப்பட்ட யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அகப்பட்டுக் கொண்டனர். வடக்கே இந்து சமுத்திரத்துக்கும் ஏனைய திசைகளில் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் அழிவுகளைச் சந்தித்தனர்.


சிறிலங்காவில் இடம்பெற்ற இந்த யுத்தத்தில் அனைத்துலக சமூகத்தின் தலையீடுகள் இடம்பெற வேண்டும் எனபுலிகள் விரும்பியிருந்த போதிலும் அனைத்துலக சமூகமானது இந்த மக்களின் அழிவுகள் தொடர்பில் பாராமுகமாக இருந்தது.


1948ல் சிறிலங்காவானது பிரித்தானியாவின் கொலனித்துவ ஆட்சியின் கீழிருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து சிறிலங்காத் தீவின் ஆட்சி உரிமையை சிங்கள பெரும்பான்மை சமூகம் கைப்பற்றிக் கொண்டதன் பின்னர் சிறிலங்காவின் இரு இனங்களுக்கிடையிலும் மோதல் ஆரம்பாகியது.


இந்த வகையில் பௌத்த தேசியவாதம் சிறிலங்காவில் மீண்டும் புத்துயிர் பெற்ற போது 1956ல் சிங்கள மட்டும் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. 1956 வரை சிறிலங்காவின் உத்தியோகபூர்வ மொழியாக இருந்த ஆங்கிலம் நீக்கப்பட்டு சிங்கள மொழி உத்தியோகபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பொது நிர்வாக சேவைகளில் கடமையாற்றிய தமிழ் மக்கள் ஓரங்கட்டப்பட்டனர்.


இதனைத் தொடர்ந்து 1970ல் கல்வித் தரப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் தமிழ் இளையோர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்வதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்கான தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.


1970 களிலும் 1980களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக கலகங்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதன் விளைவாக 1970 களில் வடக்கு கிழக்கில் தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கத்தாலும், பல்கலைக்கழகங்களாலும் ஓரங்கட்டப்பட்ட தமிழ் இளையோர் தமது தாய்நிலமான யாழ்ப்பாணம் பேரினவாத அரசாங்கத்தின் அதிகாரத்துக்குள் கொண்டு செல்லப்படுவதாக கருதினர். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தினர் தமிழர்களை சித்திரவதைப்படுத்தினர். இதன் பெறுபேறாக கொதித்தெழுந்த தமிழ் இளையோர் சிறிலங்கா அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர்.


இதுவே பின்னாளில் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமாக பரிணாமம் பெற்றதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு உருவாகக் காரணமாகியது. 1976 ல் இவ் அமைப்பு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது தமிழ் மக்களுக்கு தனித் தாய்நாடு ஒன்றை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட கவர்ச்சிகரமான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவரின் தலைமையில் ஆயுதப் போராட்டம் உக்கிரம் பெற்றது.


1970 களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆட்சிக்கு வரும் சிறிலங்கா அரசாங்கங்களுக்கும் இடையிலான யுத்தம் தொடர்ந்தது. இவ்வாறு நீண்ட யுத்த காலப்பகுதிகளில் இடையிடையே யுத்த நிறுத்த உடன்பாடுகளும் சிறிலங்காவின் வடக்கு கிழக்கில் மூர்க்கத்தனமான பல தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் சிறிலங்காவின் தலைநகரிலும் வேறு சில பகுதிகளிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களும் குண்டு வெடிப்புக்களும் அரங்கேற்றப்பட்டன. மூன்று பத்தாண்டுகளாக தொடரப்பட்ட யுத்த காலப்பகுதியில் 1987-90 வரை இந்திய அமைதி காக்கும் படையின் தலையீடும் மற்றும் 2002-08 வரையான காலப்பகுதியில் நோர்வே அனுசரணையுடன் யுத்த நிறுத்த உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.


2007 தொடக்கம் யுத்தமானது புதிய பரிணாமத்தை பெற்றது. சிறிலங்காவில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமானது 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்' என்ற பெயரில் தமிழ் மக்களின் மீது யுத்த நடவடிக்கைகளை செறிவான முறையில் முன்னெடுத்தது. இதே நேரத்தில் அனைத்துலக சமூகமானது இந்த யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த மீறல்கள் தொடர்பில் பாராமுகமாக நடந்துகொண்டது. 



'பயங்கரவாத அமைப்பாக' கருதப்ப புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே அனைத்துலக நாடுகளின் விருப்பாக இருந்தது. சிறிலங்காவில் நோர்வே அனுசரணையுடன் 2002 ல் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் புலிகள் குறிப்பிடத்தக்க சில வளர்ச்சிகளை அடைந்திருந்தனர். அத்துடன் யுத்தம் முடிவடைவதற்கு சில ஆண்டுகளின் முன்னர், புலிகள் ஒன்பது விமானங்களை கொள்வனவு செய்திருந்ததுடன், அவற்றைப் பயன்படுத்தி கொழும்பில் சில வான்தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர். புலிகளின் விமானத் தாக்குதல்களைப் பார்த்த தென்னாசிய நாடுகள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தன.


இந்நிலையில், 2005 நவம்பரில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிங்கள தேசியவாத அதிகாரத்தைக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச சீனாவிடமிருந்து நிதி மற்றும் இராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்டார். சிறிலங்கா அரசாங்கத்துக்கான புலனாய்வுத் தகவல்களை புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்ட கேணல் கருணா வழங்கினார்.


சிறிலங்காவின் கிழக்கில் புலிகளின் நிர்வாக மையங்களாக இருந்த சில இடங்களைக் குறிவைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை மேற்கொண்டனர். இவ்வாறு கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இராணுவ ரீதியாக வெற்றியைப் பெற்றுக் கொண்டதுடன், ஒரு ஆண்டு காலத்துக்குள் இந்த யுத்தம் நிறைவுக்கு வந்தது. கிழக்கில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக 1.5இலட்சம் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


கருணா அமைப்பிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து புலிகள் குறிப்பிடத்தக்களவு சில பின்னடைவுகளைப் பெற்றிருந்தனர். இதனால் கிழக்கில் தாக்குதலை முன்னெடுத்த இராணுவம் மிக விரைவாக, தயவு தாட்சண்ணியம் எதுவுமின்றி யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தது. அம்பாறை மற்றும் மட்டக்களப்பு காட்டுப் புறக் கிராமங்களில் வாழ்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து ஐ.நா மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாங்களில் தஞ்சமடைந்தனர்.


கிழக்கில் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். சிறிலங்காவின் கிழக்கில் நிலைகொண்டிருந்த புலிகளை தோற்கடித்த இராணுவத்தினர் யுத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தினர். கிழக்கில் செயற்பட்ட புலிகளை அழித்தது போலல்லாது வடக்கில் அதாவது யாழ்ப்பாணத்துக்கு தெற்கே அமந்துள்ள வன்னியில் தமது நிலைகளைப் பலப்படுத்தியிருந்த புலிகள் மீது தாக்குதலைத் தொடுத்து வெற்றியைப் பெற்றுக் கொள்வதென்பது இராணுவத்தினருக்கு பெரும் ஆபத்தான, சிக்கலான பணியாக அமைந்திருந்தது.


1990 களிலிருந்து வன்னிப் பெருநிலப்பரப்பை புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். அத்துடன் இது புலிகளின் நிழல் நிர்வாகம் இடம்பெற்ற தனித்த சுதந்திரமான நாடு போன்று காணப்பட்டது. 1970 களின் மத்தியில் புலிகள் தோற்றம் பெற்றதிலிருந்து, 35 இற்கும் மேற்பட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒரு மில்லியன் வரையான தமிழ் மக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்கான பல கிளைகளைக் கொண்ட அனைத்துலக அமைப்பொன்று புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவந்தது.


புலிகள் இந்நிதியைக் கொண்டு ஆயுத விற்பனைகளில் ஈடுபடும் அனைத்துலக பாதாள உலக கும்பல்களுடன் மிகப் பலமான தொடர்பைப் பேணிவந்தனர். உலக நாடுகளில் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்களை வன்னியிலிருந்த தமது தலைமையகத்துக்கு கொண்டு செல்வதற்கான  எடுத்துச் செல்வதற்கான கப்பற் தொகுதிகளையும் புலிகள் தம்வசம் வைத்திருந்தனர். இக்கப்பல்கள் பனாமாவிலேயே அதிகம் பதிவு செய்யப்பட்டிருந்தன.


அனைத்துலக மட்டங்களில் நிதி சார் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் புலிகள் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்ததால், புலம்பெயர் தமிழர்களிடமிருந்து சேகரித்த நிதியை சொத்துக்கள், பங்குகள் போன்றவற்றில் மீள்முதலீடு செய்து தமது நிதியை பல மடங்காக பெருக்கிக் கொண்டனர். புலிகள் அமைப்பானது வன்னிக் காடுகளுடன் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை. இவர்கள் பல்வேறு தளங்களிலும் துறைகளிலும் தமது செயற்பாடுகளை விரிவாக்கிக் கொண்டனர்.


வன்னியில் வாழ்ந்த தமிழ்ப் பொதுமக்கள் புலிகளின் இரும்புப் பிடிக்குள் வாழ்ந்தனர். வன்னியிலிருந்த ஒவ்வொரு குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களாகவோ அல்லது புலிகளின் ஆதரவாளர்களாகவோ இருந்தனர். இந்த மக்கள் புலிகளின் கருத்தியலுக்குள் தம்மை இணைத்துக் கொண்டனர்.


இராணுவத்தைப் போலல்லாது, புலிகள் தமது மாவீரர்களை பெருமையுடன் நினைவுகூர்ந்து மதிப்பளித்தனர். வன்னியின் பல இடங்களில் புலிகள் தமது அமைப்பிலிருந்து போராடி மரணத்தைத் தழுவிக் கொண்ட மாவீரர் கல்லறைகளைக் கொண்ட துயிலுமில்லங்களை அமைத்திருந்தனர். இந்தக் கல்லறைகளில் மலர் மாலைகளை வைத்து வணக்கம் செலுத்தும் பெற்றோர்களும் உறவினர்களும் தமது அன்பிற்குரியவர்களின் இழப்பை எண்ணி அந்தக் கல்லறைகளின் அருகில் அமர்ந்து தமது மனங்களில் பூசித்துக் கொள்வர்.


இந்தக் கல்லறைகளின் மீது அவர்களின் உற்றோரும் பெற்றோரும் விடுகின்ற கண்ணீர்த் துளிகள் அந்த மாவீரர்களின் இழப்புக்காகவும் அதேநேரம் அவர்களின் ஈகத்துக்காகவும் செலுத்துகின்ற காணிக்கைகளாக காணப்படும். அதாவது இந்த மாவீரர்கள் தமிழீழம் என்ற கோரிக்கைக்காக தமது வாழ்வை தியாகம் செய்து உயிர் துறந்துள்ளனர் என்பது பெருமையுடன் நினைவுகூரப்படும்.




இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. கிட்டத்தட்ட வன்னியிலிருந்த மக்கள் அனைவரும் இம் மாவீரர் தினமன்று மாவீரர்களின் கல்லறைகளுக்கு சென்று வணக்கம் செலுத்துவதுடன், பிரபாகரனால் நிகழ்த்தப்படும் நேரடி உரையையும் செவிமடுப்பர். அதன் பின் மாவீரர்களாகிவிட்ட தமது அன்புக்குரியவர்களை நினைந்துருகி கண்ணீர் மல்குவர். இவ்வாறான நினைவுகூரல்கள் தமிழர்களின் வரலாற்றில் ஏற்கனவே பதியப்பட்டுள்ளன. அதாவது தமிழர்கள் தமது நாட்டைக் காப்பதற்காக தமது உயிர்களைத் தியாகம் செய்து மாவீரர் ஆகிய வரலாறுகள் தமிழர்களின் புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. 



யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் வளர்ந்த இளம் தலைமுறையினருக்கு புலிகளின் ஆட்சி மட்டுமே நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் புலிகளின் பரப்புரைகளால் வளர்த்தெடுக்கப்பட்டிருந்தனர். இதேபோன்று புலிகளின் பரப்புரைகளால் புலம்பெயர் தமிழ் சமூகங்களும் உந்தப்பட்டிருந்தனர். புலிகளின் ஊடகப் பிரிவினர் தாம் களங்களில் பெற்றுக் கொண்ட வெற்றிகளின் காணொலிகளையும் காட்சிகளையும் உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்றனர். 



ஆனால் தமிழ் சமூகம் மீது சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் சித்திரவதைகளையும் துன்புறுத்தல்களையும் மேற்கொண்டது. புலம்பெயர் தமிழ் சமூகத்தவர்கள் புலிகள் அமைப்புக்கு நிதி சேகரித்து வழங்கிய அதேவேளையில், தமிழர்கள் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்துக்கு உலக நாடுகள் தமது ஆதரவை வழங்குவதற்கான முயற்சிகளையும் பரப்புரைகளையும் இப்புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்கொண்டது. 



இவ்வாறான நிலைப்பாடு 9/11 வரை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. 9/11 அன்று 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்' பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரான காலப்பகுதியில், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், சிறுவர் ஆட்சேர்ப்புக்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்விடங்களில் தாக்குதல்களை மேற்கொண்ட புலிகள் அமைப்பை அனைத்துலக சமூகமானது வித்தியாசமான கோணத்தில் பார்த்தது. இந்நிலையில் புலிகளுக்கு எதிராக சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தமானது 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்' என தெரிவிக்கப்பட்டதுடன், இதனால் உலக நாடுகள் பல புலிகள் அமைப்பை தமது நாடுகளின் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் சேர்த்துக் கொண்டன. 



வன்னியில் வாழ்ந்த பொதுமக்கள் தமது உயிர்களைத் தக்கவைத்திருக்க பெரும்பாடுபட்டனர். வன்னியானது சிறிலங்காவில் மிகவும் வறுமைப்பட்ட குறை அபிவிருத்தியைக் கொண்ட மாவட்டமாக இருந்தது. இங்கு வாழ்ந்த குடும்பங்கள் தமது ஜீவனோபாயத்துக்காக மீன்பிடி மற்றும் விவசாயம், விலங்கு வேளாண்மை போன்றவற்றை சிறிய அளவில் மேற்கொண்டு வந்தனர். இங்கு வாழ்ந்த மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தி விடுவதற்கான தொழிற்சாலைகள் எதுவும் இருக்கவில்லை. 



மக்கள் அரசசார்பற்ற நிறுவனங்களினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் சில அத்தியாவசியமான உதவிகளைப் பெற்று வாழ்ந்ததுடன், குறிப்பிட்ட சில குடும்பங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த தமது குடும்பத்து உறவுகளால் அனுப்பப்பட்ட வருமானத்தைக் கொண்டும் வாழ்க்கை நடாத்தினர். உண்மையில் இந்த மக்களைப் பொறுத்தளவில் அவர்களின் நாளாந்தம் பெரும் போராட்டத்துக்கு மத்தியிலேயே கழிந்தது.


இது ஒருபுறமிருக்க, நீண்ட காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக மக்கள் பல தடவைகள் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் சில சந்தர்ப்பங்களில் இடம்பெயர்ந்தோர் முகாங்களிலும் வாழ்ந்தனர். ஆனால் இந்த மக்கள் சமூகம் நல்ல கட்டுக்கோப்புள்ள, அமைதியான வாழ்வை வாழ்ந்தனர். காடுகளின்ஊடாக செல்கின்ற மண் வீதிகளில் சிறுவர்கள் ஒருவரின் கைகளை ஒருவர் பற்றியபடி நடந்து செல்வார்கள்.


வன்னியில் செயற்பட்ட பாடசாலைகள் தற்காலிக கொட்டகைகளின் கீழ் இயங்கின. அத்துடன் பாடசாலைகளின் தற்காலிக கொட்டகைகளில் முன்னர் நடந்த யுத்த நடவடிக்கைகளின் போது துப்பாக்கி ரவைகளால் பதம் பார்க்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டன. ஆனால் அந்தப் பாடசாலைகள் மிகச் சிறப்பான முறையில் இயங்கியதுடன் மாணவர்களுக்கு சிறந்த கல்வியையும் வழங்கின. பெண்களும் ஆண்களும் வயல்களிலும், மீன்பிடியிலும் ஈடுபடுவதைக் காணலாம். உண்மையில் வன்னியில் வாழ்ந்த மக்கள் மனதளவில் மிக்க மகிழ்வுடனும் அமைதியுடனும் வாழ்ந்தனர். இவ்வாறானதொரு வாழ்வை தமிழ்நாட்டின் கிராமங்கள் சிலவற்றில் தற்போதும் காணமுடியும்.


தமிழீழ விடுதலைப் புலிகள் பெண்கள் தொடர்பாக காலங்காலமாக நிலவிவந்த சில மூடநம்பிக்கைகளை எதிர்த்ததுடன் பெண்ணியம் தொடர்பான மிகப் பலமான கருத்தியலை நடைமுறைப்படுத்தினர். புலிகளின் பெண்ணியக் கருத்தியல் தமிழ்ப் பெண்களை அமைப்பின் பால் ஈர்த்துக்கொண்டது. புலிகள் சீதன முறைமையை முடிவுக்கு வந்தனர். பெண்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கும், சுதந்திரமாக நடமாடுவதற்கும் ஏதுவான சூழலை வகுத்துக் கொடுத்தனர். இருட்டாகிய பின்னரும் கூட பெண்கள் சுதந்திரமாக நடமாட முடிந்தது.


புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பெண்களுக்கான பயிற்சி முகாங்கள் மற்றும் தங்குமிடங்கள் என்பன தனிப்பட அமைக்கப்பட்ட போதிலும், அவர்களுக்கான பயிற்சிகள் ஆண் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது போலவே வழங்கப்பட்டன. அத்துடன் யுத்த களங்களிலும் ஆண் உறுப்பினர்களுக்கு சமானமாக பெண் உறுப்பினர்கள் செயற்பட்டனர். தமது குடும்பத்தவர்களை இழந்த அல்லது இராணுவத்தினரின் அல்லது இந்திய அமைதி காக்கும் படைகளால் பாலியல் வன்புணர்வுக்கும், பாலியல் தொந்தரவுகளுக்கும் உட்பட்ட பெண்கள் பலர் புலிகள் அமைப்பின் கரும்புலிகள் அணியில் இணைந்து சிறப்பாக செயற்பட்டனர்.


இந்தப் பெண்கள் மிகப் பலமானமானவர்களாகவும், உறுதியுள்ள வீரமுள்ள பெண்களானவும் செயற்பட்டனர். ஆனால் இவர்கள் உளவியல் ரீதியாக ஆழமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். பழிதீர்க்கும் மனப்பாங்கை கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் தற்கொலைக் குண்டுத்தாரிகளாக தம்மை மாற்றிக் கொண்டு வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.


2007ன் இறுதிப் பகுதியில் கிழக்கில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்ப்பாணத்துக்கும் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வன்னிக்கும் இடையில் காணப்பட்ட முன்னணி பாதுகாப்பு நிலைகளில் புதிய யுத்த முன்னேற்பாடுகள் இடம்பெற்றன. சில மாதங்களின் பின்னர், ஆட்டிலறி தாக்குதல்கள் மிக செறிவாக மேற்கொள்ளப்பட்டதுடன், சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையிலான யுத்தம் தீவிரம் பெற்றது. இரு தரப்புக்களும் தமது நிலைகளை விட்டு சிறிதளவு கூட முன்னேற முடியாத அளவுக்கு யுத்தம் இறுக்கமடைந்திருந்தது. ஆனால் இழப்புக்கள் தொடர்ந்தன.


பொதுமக்களின் வாழிடங்கள் பாதிப்படைந்ததால் அவர்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் மீண்டும் மரங்களுக்கு கீழேயும் தற்காலிக கொட்டகைகளிலும் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட யுத்தமானது இராணுவத்தினர் பெற்றுக் கொண்ட வெற்றியுடன் முடிவுக்கு வந்த அதேநேரத்தில், இராணுவத்தினரின் முழுக் கவனமும் வன்னி நோக்கி திரும்பியது. இராணுவத்தினர் வன்னிப் பெருநிலப்பரப்பின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வட எல்லைகளிலிருந்து தமது யுத் முயற்சிகளை ஆரம்பித்தனர். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆட்டிலறிகள் மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் போன்றவற்றால் யுத்த நிலைகளின் எல்லைகளிலிருந்து மக்கள் தமது இடங்களை விட்டு நகரத் தொடங்கினர்.


இவ்வாறு மும்முனைகளிலிருந்தும் தொடரப்பட்ட யுத்த நடவடிக்கைகளால் மக்கள், புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியை வந்தடைந்தனர். பாடசாலைகள் மூடப்பட்டன. விவசாயிகள் தமது வயல்களையும் கால்நடைகளையும் கைவிட்டு வேறிடங்களுக்கு தப்பியோடினர். வன்னியிலிருந்த குடும்பங்கள் தமது உடைமைகளை மூட்டை கட்டிக் கொண்டு வேறிடங்களுக்கு நகர்ந்தனர். மக்கள் மூன்று திசைகளிலிருந்தும் இடம்பெயர்ந்ததால் வீதிகள் நிறைந்தன. செறிவாக வீசப்பட்ட எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக வேறிடங்களை நோக்கி சென்ற மக்களுக்கு குறிப்பிட்ட தூரத்தை அடைந்து கொள்வதற்கு நீண்ட நேரம் தேவைப்பட்டது. ஆனால் இந்த மக்கள் இராணுவத்தினரின் எறிகணைக்குள் சிக்கித் தவித்தனர்.


செப்ரெம்பர் 2008ல் கிளிநொச்சியில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மக்கள் வரை தங்கியிருந்தனர். அதிலிருந்து அந்த மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டியிருந்தனர். அவர்கள் சோர்வடைந்திருந்தனர். அவர்கள் குழப்பமடைந்தனர். ஆனாலும் தக்க வைத்திருந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தனர். அதாவது புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையில் இன்னுமொரு யுத்தம் நடைபெற மாட்டாது என்பதால் தாங்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும் இந்த யுத்தம் முடிவுக்கு வந்துவிடும் என்றும் தாம் தமது சொந்த வீடுகளுக்கு செல்ல முடியும் எனவும் அந்த மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கையில் அவர்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.


வன்னியில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஐ.நா அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற அமைப்புக்களை உடனடியாக வெளியேறுமாறும், அவர்களின் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தை தொடர்ந்தும் வழங்க முடியாது எனவும் செப்ரெம்பர் 2008ல் சிறிலங்கா அரசாங்கம் கட்டளையிட்டது. தாம் வன்னியை விட்டு வெளியேற விரும்பவில்லை என அரசசார்பற்ற அமைப்புக்களும் ஐ.நா அமைப்புக்களும் தமது சக்திக்கு உட்பட்ட வரை சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கியிருந்த போதிலும் அவர்களின் கோரிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் செவிசாய்க்கவில்லை.


தமிழ் பொதுமக்கள் , ஐ.நா அமைப்புக்களின் வளாகங்களுக்கு வெளியே ஒன்று கூடி அவ் அமைப்புக்களை வன்னியை விட்டு வெளியேற வேண்டாமென கேட்டுக் கொண்டார். அனைத்துலக சமூகத்தின் கண்காணிப்பு இல்லாவிட்டால் வன்னியில் யுத்த மீறல்கள் இடம்பெற்று மக்கள் கொல்லப்படுவர் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். ஆனால் இவ்வளவு தூரம் தாம் இழப்புக்களைச் சந்திக்க வேண்டிவரும் என அந்த மக்கள் அப்போது எண்ணியிருக்கவில்லை.


வன்னியில் யுத்தம் இடம்பெற்ற வலயத்துக்குள் அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் உதவி அமைப்புக்களின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாது தொடர்ந்தும் யுத்தம் மேற்கொள்ளப்பட்ட போது அது பிறிதொரு போர் உத்தியாக பார்க்கப்பட்டது. அரசாங்க ஆதரவு ஊடகங்கள் யுத்த களத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கமானது தனது அரச ஊடகங்களைப் பயன்படுத்தி பயங்கரவாத எதிர்ப்பு பரப்புரையை மேற்கொண்டது. யுத்தம் தீவிரம் பெற்றிருந்த அடுத்த ஆறு மாதங்களில் சிறிலங்கா அரசாங்கமானது வன்னியையும் புலிகளையும் அங்கு அகப்பட்டுக் கொண்ட பொதுமக்களையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.


பயங்கரவாதத்தின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்பதற்கான 'மனிதாபிமான நடவடிக்கை' என பரப்புரை செய்து கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக சமூகத்தின் மத்தியில் எந்தவொரு பொதுமக்களுக்கும் இழப்புக்கள் ஏற்படாத கோட்பாட்டை பயன்படுத்தியே யுத்தம் மேற்கொள்வதாக பரப்புரையில் ஈடுபட்டது. யுத்த வலயத்திற்குள் அகப்பட்டுத் தவித்த மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வந்த உதவி அமைப்புக்களைக் கூட அரசாங்கம் அனுமதிக்கவில்லை. பொதுமக்களுக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தடைகளும் விதிக்கப்பட்டன.


புலிகளுடன் யுத்தத்தை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் பாதுகாப்பாக தங்கியிருப்பதற்கான 'பாதுகாப்பு வலயங்களையும்' சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. எவ்வாறெனினும், பாதுகாப்பு வலயங்களை நோக்கி பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து தங்கியிருந்த போது அவற்றைக் குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல்களை நடாத்தினர். இப்பாதுகாப்பு வலயங்களில் அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. பாதுகாப்பு வலயங்களில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த உணவு வழங்கல் நிலையங்கள் மீதும் செறிவான எறிகணைகள் மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.


சிறிலங்காவின் வன்னிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தை அனைத்துலக சமூகத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையும் செய்மதிகள் ஊடாக கண்காணித்துக் கொண்டிருந்தன. உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எண்ணெய்க் கிணறுகளையும் கேந்திர செல்வாக்கையும் கொண்ட லிபியாவாக அது இருக்கவில்லை. தென்னை மற்றும் அழகான கரையோரங்களைக் கொண்ட சிறிலங்காவிலேயே இவ்வாறான உக்கிர போர் நடந்துகொண்டிருந்தது. இராஜ தந்திர வட்டாரங்களுக்கிடையில் இந்த யுத்தத்தின் பயங்கரம் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. ஆனால் புலிகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறான யுத்தத்தின் கோர விளைவுகள் தணிக்கை செய்யப்பட்டன.


சிறிலங்கா அரசாங்கத் தரப்பு யுத்த வலயத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட மக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை குறைத்து அறிவித்தது. மே 18, 2009 புலிகள் தலைமையின் மரணத்துடன் யுத்தம் நிறைவுக்கு வந்தது. இதன் பின்னர் யுத்த வலயத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட மக்கள் கடல்நீரேரிப் பகுதியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றனர். யுத்தத்தின் இறுதி நாட்கள் இரத்தக் கறைபடிந்த நாட்களாக காணப்பட்டன. முல்லைத் தீவுக் கரையோரம் மக்களின் குருதியால் செந்நிறமாகியிருந்தது. ஐ.நா, அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அனைத்துலக ஊடகங்களின் கண்காணிப்பின்றி சரணடைந்த புலிகளின் விடயத்தை இராணுவத்தினர் கையாண்டனர்.


பெண் புலிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ஆண் உறுப்பினர்கள் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர். இரு ஆண்டுகளின் பின்னர், இராணுவத்தால் எடுக்கப்பட்ட யுத்த கால மீறல்கள் தொடர்பான காட்சிகளும் காணொலிகளும் அனைத்துலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டன. இவ்வாறான யுத்த கால சாட்சியங்கள் புலிகளின் ஆதரவாளர்களால் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பரப்புரை நடவடிக்கை என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது.


ஓரிரவில் பெருந் தொகையான மக்கள் இடம்பெயர்ந்திருந்த மெனிக்பாம் முகாமானது உலகிலேயே மிகப்பெரிய இடம்பெயர்ந்தோர் முகாமாக காணப்படுகிறது. தமிழ் மக்கள் யுத்தத்தின் தாக்கத்தால் மனதளவிலும் உடல் ரீதியாகவும் பெரிதும் பாதிப்புக்களை சந்தித்துக் கொண்டனர். மீண்டும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக தொண்டர் அமைப்புக்கள் என்பன மெனிக்பாம் முகாங்களில் தங்கியிருந்த மக்களுக்கு தேவையான உதவிகளை முழுஅளவில் வழங்குவதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் இந்த முகாங்களில் பாலியல் வன்புணவுர்கள், சித்திரவதைகள், காணாமற்போதல்கள் என்பன தொடர்ந்தன.


வெற்றி மமதையிலிருந்த சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் படங்களைக் கொண்ட விளம்பரப் பலகைகளை நாடெங்கிலும் குறிப்பாக வடக்கில் மெனிக்பாம் முகாமைச் சுற்றி காட்சிக்கு வைக்கப்பட்டன. இவ் விளம்பரப் பலகைகளில் பயங்கரவாதத்தை ஒழித்தவர், சிறிலங்காவின் மீட்பர் என்ற பெயர்களில் சிறிலங்கா ராஜபக்ச போற்றப்பட்டிருந்தார். சிறிலங்கா அரசாங்கம் புலிகளை அழித்ததை அனைத்துலக சமூகம் வரவேற்றது. அரசாங்கத்தை பாராட்டியது. ஐக்கிய நாடுகள் சபையும் பயங்கரவாத அமைப்பொன்றை தோற்கடித்ததற்காக சிறிலங்கா அரசாங்கத்தை வரவேற்று அதன் யுத்த வெற்றியை மெச்சிக் கொண்டது.


யுத்தத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழ்ப் பொதுமக்கள் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் வரை சந்தேகக் கண்களுடன் நோக்கப்பட்டனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட தமிழர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தினருக்கு அல்லது காவற்துறையினருக்கு இலஞ்சம் கொடுத்து முகாங்களை விட்டு கொழும்பு, சென்னை, ஐரோப்பா, கனடா போன்ற இடங்களுக்கு தப்பிச் சென்றனர். வன்னியிலிருந்து தப்பி வந்த தமிழ் இளையோர்கள் புலிகள் என்ற சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டனர். முகாங்களிலிருந்த மக்கள் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றப்பட்ட பின்னரும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அவர்களைக் கண்காணித்துக் கொண்டது.


அத்துடன் வன்னியில் இராணுவ முகாங்கள், கண்காணிப்பு நிலையங்கள் போன்றவற்றை சிறிலங்கா இராணுவத்தினர் அமைத்துக் கொண்டதுடன் சில வீதிகளின் பெயர்களை சிங்களமாக மாற்றிக் கொண்டனர். அத்துடன் வடக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தமிழ் மக்களின் மீன்பிடி உரிமையில் சிங்களவர்கள் பங்குபோட்டுக் கொள்வதற்கான நிலைப்பாட்டையும் அரசாங்கம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. பெண்கள் இரவில் தனித்து நடாடிய பாதுகாப்பாக போக்குவரத்துச் செய்த இடங்கள் திடீரென பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்தைக் கொடுக்கின்ற இடங்களாக மாறியுள்ளன. பெண்கள் அந்த இடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்பட்டனர். ஆனால் இவற்றையெல்லாம் தமிழ் மக்கள் உண்மையில் எங்கு சென்று எவரிடம் முறையிட்டுக் கொள்வது, அதாவது இராணுவத்திடமா அல்லது காவற்துறையிடமா?


சென்னையிலும் வெளிநாடுகளிலும் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள் கண்காணிக்கப்படுகின்றனர். சிறிலங்காத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில், அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுப்பதில் அனைத்துலக சமூகம் மிகப் பலவீனமான நிலையில் உள்ளது. நிதி வளம் உள்ள லிபியா போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தட்டிக் கேட்கும் அனைத்துலக சமூகம் சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தட்டிக் கேட்க தயங்குவது ஏன்?


ஆனால் கடந்த ஆண்டு ஐ.நா வல்லுனர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் யுத்தத்தில் பங்கு கொண்ட சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில நாடுகள் இந்த அறிக்கையை வாசித்து அதன்படி செயற்பட்டுள்ளன.


ஆனால் பிரித்தானியாவின் சனல் 04 தொலைக்காட்சி சேவையால் 'சிறிலங்காவின் கொலைக் களங்கள்' என்ற ஆவணத் திரைப்படம் வெளியிடப்பட்ட போது பல உலக நாடுகள் அதனைப் பார்வையிட்டன. இத்திரைப்படத்தில் சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதி நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. யுத்தம் உக்கிர கட்டத்தை அடைந்த போது அங்கு உண்மையில் என்ன நடக்கின்றன என்பதை அரச ஊடகங்கள் இருட்டிப்புச் செய்தன. ஆனால் தற்போது யுத்த கால மீறல் காட்சிகள் வெளிவந்த பின்னர் உலக நாடுகள், சிறிலங்காத் தீவை கொடுமையான நாடாகப் பார்க்கின்றன.


முன்னர் உலக நாடுகளின் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த, தேனிலவை கழிப்பதற்குகந்த சிறிலங்காவின் மிக அழகிய கரையோரங்களில் அந்நாட்டு அரசாங்கமானது தனது சொந்த நாட்டு மக்களை படுகொலை செய்துள்ளது, தனது பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்துள்ளது. இரண்டு லட்சம் மக்கள் பட்டினிச் சாவை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் இவை தொடர்பான சாட்சியங்களும் காட்சிகளும் உலக நாடுகளின் மனச்சாட்சியை தடடியெழுப்பியுள்ளன. இதனால் இந்நாடுகள் திடீரென சிறிலங்காவைப் பற்றி கதைக்கத் தொடங்கியுள்ளன.


ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது, கடந்த வாரம் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அமெரிக்கா தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டது. அதாவது சிறிலங்காவானது தனது நாட்டில் யுத்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இத் தீர்மானம் முன்மொழியப்பட்டிருந்தது.


அத்துடன் சிறிலங்காவில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதுடன் அவர்கள் சமமாக நடாத்தப்படுவதுடன், நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான மீறல்களுக்கு பொறுப்புக் கூறுவதுடன், மீளிணக்கப்பாட்டு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதற்கான சட்ட நடவடிக்கைளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது கோரிக்கை விடுத்தது.


அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளைக் கருத்திற் கொண்டு பயனுள்ள நிறைவான திட்ட வரைபொன்றை சிறிலங்கா அரசாங்கம் பேரவையில் முன்வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. எவ்வாறெனினும், போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போரின் போது தமது உறவுகளையும் உடல் உறுப்புக்களையும் இழந்த மக்கள் அவர்களது கவலைகளிலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கைக்கு திரும்பும் போது நாட்டில் மீளிணக்கப்பாடு உருவாகும் என மகிந்த ராஜபக்ச நம்புகின்றார்.


அனைத்துலக சமூகத்திடமிருந்தும், பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களிலும் இராஜதந்திரியான அழுத்தத்தைப் பெற்றுக் கொண்ட இந்திய அரசாங்கம் கடந்த வாரம் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இந்தியாவானது ஐ.நாவின் மனித உரிமைகள் சாசனத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டதால், பேரவையில் மிகமோசமான யுத்த மீறல்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருந்தது. இது அனைத்துலக ரீதியில் இந்தியா பெற்றுக் கொண்ட அழுத்தமாகும்.


தென்னாசியாவின் வல்லரசாக உள்ள இந்தியாவானது சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை விசாரணை செய்து நீதி வழங்குவதில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஐ.நா கொள்கைப்பாடுகளை ஏற்று நடப்பதைக் காண்பிக்க வேண்டிய நிலையிலிருந்தது.


பிராந்திய அளவில், சிறிலங்காவானது இந்தியாவுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடாகும். சிறிலங்காவானது சீனாவின் மிகப் பெரிய முதலீடுகளை உள்வாங்கி யுத்தத்தின் பின்னான நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்வதால் ராஜபக்ச அரசாங்கத்துடன் நெருக்கமான உறவைப் பேண வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. ஆகவே சிறிலங்காவிலிருந்து தனிமைப்பட இந்தியா விரும்பவில்லை.


தேசிய அளவில், இந்தியாவானது திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற தமிழ்நாட்டு கட்சிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தது. சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்குமாறு இவை அழுத்தம் கொடுத்திருந்தன. இறுதியில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிப்பதற்கான முடிவை இந்தியா எடுத்துக் கொண்டது. சிறிலங்கா அரசின் இறையாண்மையைப் பாதிக்காது குறிப்பிட்ட வரையறுத்த தலையீட்டுடன் இத்தீர்மானத்தை மாற்றியமைப்பதற்கான முயற்சியில் இந்தியா ஈடுபட்டது.


தமிழ் மக்கள் உலகெங்கும் சிதறுண்டு வாழ்கின்றனர். இவர்கள் தமது வீடுகளை, கனவுகளை, அன்புக்குரியவர்களை இழந்து பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். தமிழ் மக்கள் தமது கலாசாரங்களை, விழுமியங்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.


புதுமாத்தளனின் அழகிய கரையோரத்தில் குருதி வெள்ளம் ஓடியதைக் கண்ட இந்த மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். யுத்தம் தொடர்பான சரியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். யுத்தத்தின் போது தமது உயிர்களை இழந்த, காணாமற் போன ஆயிரக்கணக்கான மக்களுக்கு சரியான பதில்கள் வழங்கப்பட வேண்டும்.


தமது சொந்த வீடுகளில், முன்னரைப் போல எந்தவொரு அச்சமுமின்றி, சிறிலங்கா இராணுவச் சிப்பாய் எந்த நேரத்தில் கதவைத் தட்டுவானோ என்ற பயம் கலைந்து தமிழ்ப் பெண்கள் சுதந்திரமாக தமது பாதுகாப்பைத் தாமே உத்தரவாதப்படுத்திக் கொள்ளக் கூடிய சூழல் ஒன்று, தமிழ் மக்கள் தமது நம்பிக்கையை இழக்க முன்னர், அதாவது இன்னுமொரு இளைய பிரபாகரன் தோற்றம் பெற்று, புதிய வழியில் யுத்தம் ஒன்றை நாட்டில் ஆரம்பிப்பதற்கு முதல் உருவாக்கப்பட வேண்டும். 


இல்லாவிடில் 'இளைய பிரபாகரன்' தோற்றம் பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. 



புதினப்பலகை



Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment