இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது 45 ஆயிரம் யுத்த விதவைகள் இருப்பதாகவும் அவர்களில் 23 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் காணப்படுவதாகவும் அதிலும் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு குறைந்தவர்கள் என்றும் அவர்களுடன் கதைத்த போது தான் கண்ணீர் விட்டு அழுததாகவும் இலங்கைக்கு வருகை தந்து திரும்பிச் சென்றுள்ள இந்திய பாராளுமன்றக் குழுவைச் சேர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம். பி. ரி.கே. ரங்கராஜன் தனது உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தான் மட்டுமன்றி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய எம். பி. க்கள் யாவருமே விதவைப் பெண்களின் நிலைமையைப் பார்த்து துயரடைந்திருப்பதாக கூறியுள்ளதுடன் அவர்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாக காணப்படுகிறது.
இந்த விதவைகளில் முதற்கட்டமாக 800 பேரைத் தெரிவு செய்து அவர்களுக்கு கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களில் பல்வேறு தொழில் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே கணினிப் பயிற்சி, உணவு பதனிடுதல், தையல் உட்பட பல்வேறு தொழில்துறை பயிற்சிகள் வழங்கப்பட்டு சுயவலுவூட்டப்படும் நடவடிக்கைகள் இடம்பெறுவதை தான் பார்த்துள்ளதாக ரங்கராஜன் கூறியுள்ளார். அதேவேளை சுய உதவிக்குழுக்களை அமைத்து இந்தியாவின் உதவியுடன் விதவைகளின் ஜீவாதாரத்தை மேம்படுத்துவதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் வெளியிட்டுள்ள செய்தி சிறிது ஆறுதலளிக்கக் கூடியதாகும்.
விதவைகளின் அவலநிலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு தாங்கள் கொண்டு சென்ற போது, யுத்தத்தில் பலியான படைவீரர்களின் 30 ஆயிரம் விதவைகள் இருப்பதாக ஜனாதிபதி கூறியதாகவும் இந்தியக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சுயதொழில் வாய்ப்புப் பெற்ற பெண்கள் சங்கத்தை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வலுவூட்டுவதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்று கொழும்பு டில்லிக்கு இடையே கைச்சாத்திடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த முன் முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியது உடனடித் தேவையாகக் காணப்படுகிறது.
"பார்வைக்குத் தென்படாத மறக்கப்பட்ட, துன்பப்படுவோர்' என்ற நூலொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் உலகளாவிய ரீதியில் 24 கோடி 50 இலட்சம் விதவைகள் இருப்பதாகவும் அவர்களில் 11 கோடி 50 இலட்சம் விதவைகள் வறுமைக் கோட்டின் கீழ் சமூக ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களாக பொருளாதார உதவிகள் கிடைக்காதவர்களாக அவல வாழ்வை முன்னெடுப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களின் அவலத்தை உலகம் கவனத்தில் ஈர்த்துக் கொள்வதற்காக ஜூன் 23 ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக ஐ.நா. பொதுச்சபை பிரகடனப்படுத்தியிருந்தது. யுத்தம் மற்றும் கடல்கோள் போன்ற இயற்கை அனர்த்தங்களால் விதவைகளானோரே இலங்கையில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அரசாங்கத்தின் புள்ளி விபரத்தின் பிரகாரம் வடக்கில் 40 ஆயிரம் யுத்த விதவைகளும் கிழக்கில் 45 ஆயிரம் விதவைகளும் இருக்கின்றனர். இவர்களில் வயது குறைந்த இளம் பெண்கள் மட்டுமன்றி முதிர்ந்தவர்கள், அங்கவீனர்கள் மட்டுமன்றி கணவர்மார் எங்கே இருக்கின்றார்கள் என்பது பற்றி அறியாதவர்களும் பெருந்தொகையினராக உள்ளனர். அத்துடன் சாதாரணமாக இரு பிள்ளைகள் கொண்ட குடும்பமொன்று அன்றாட வாழ்வை முன்னெடுக்க குறைந்தது ஆயிரம் ரூபாவாவது தினசரி தேவைப்படும் நிலையில் குடும்பத் தலைவன் இல்லாத இந்த விதவைப் பெண்கள் எவ்வாறு சீவிப்பது என்பது எம்முன்னால் உள்ள கேள்வியாகும். அதேவேளை "பாதுகாப்பு' என்பது வடக்கு, கிழக்கை சேர்ந்த விதவைப் பெண்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.
அத்துடன் தந்தையாகவும் தாயாகவும் செயற்படவேண்டிய நிலையில் இந்த விதவைகள் இருப்பதால் தமது பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் அநாதை இல்லங்களுக்கு அவர்களை அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.அரசாங்கம் மட்டுமன்றி அரசசார்பற்ற நிறுவனங்களும் விதவைப் பெண்களுக்கு சுய வலுவூட்டுவதற்காக தையல் இயந்திரங்கள் மற்றும் கைவேலைகள் போன்றவற்றுக்கான உபகரணங்களையும் உதவிகளையும் வழங்கி வருகின்ற போதிலும் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தி வருமானத்தை ஈட்டுவதற்கான வழிவகைகள் அவர்களுக்கு குறைவானதாகவே இருக்கின்றன.
இந்த விதவைப் பெண்களின் துன்பத்தைப் போக்குவதற்கான திட்டங்களை அறிவித்தால் மட்டுமோ அல்லது உதவிகளை வழங்கினால் மட்டுமோ போதாது. விதவைப் பெண்களை பொருளாதார ரீதியில் வலுவூட்டும் திட்டங்கள் செவ்வனே அமுல்படுத்தப்படுகின்றதா ? அவற்றின் பயன்கள் அவர்களைச் சென்றடைகிறதா? என்பதைக் கண்காணிக்கும் பொறிமுறையை அரசாங்கம் சிறப்பான முறையில் ஏற்படுத்த வேண்டும்.இலங்கையின் யுத்த விதவைகளை வலுப்படுத்த இந்தியா ஆரம்பித்துள்ள முன் முயற்சிகள் வரவேற்கப்படத்தக்கவையாகும். ஆனால் அவை செம்மையான முறையில் அமுல்படுத்தப்படுவது உறுதிப்படுத்தப்படவேண்டும்.அதேசமயம் வட, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த யுத்த விதவைகளின் மற்றொரு முக்கியமான பிரச்சினை "பாதுகாப்பு' என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment