இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும் நிறைந்த மழலையை எண்ணி மனம்நிறைந்த கனவுகளோடு சீராட்டி தாலாட்டி பாலுட்டி வளர்த்தனர். மழலையால் தன் குறும்புகளால் அனைவரையும் கவர்ந்தவள் வளர்ந்து சிறுமியானாள். அக்கா மூவரோடும் தங்கையோடும் அயலாவரோடும் அழகுபதுமையாக அன்றாட கடமைகளான பாடசாலை செல்லுதல் பள்ளி தோழிகளோடு விளையாடுதல் என கவலையில்லாமல் பொழுதுகள் கழிந்தன. இக்காலகட்டத்தில் அனைவரின் இதயத்தையும் கவர்ந்திழுக்கும் இதயத்தில் கோளாறு என்ற செய்தி இடியாய் வந்திறங்கியது.
இரக்ககுனத்தோடு அனைவரையும் அணுகும் இதயத்தில் ஓட்டை உண்டு என்றன மருத்துவ அறிக்கைகள். .மாறி மாறி பல சோதனைகள் இடம்பெற்றன. .மனவேதனையோடு இருந்த குடும்பத்தினருக்கு ஒருவழியாக மகிழ்ச்சியான செய்தி வந்தடைந்தது.இதயத்தில் ஓட்டை இருந்தாலும் இவருக்கு எந்த சிக்கலும் இல்லையென்று மருத்துவர்கள் கூறினர். ஆறுதல் அடைந்த சோபனாவின் குடும்பத்தினர் இவரை தொடர்ந்து படிக்க வைத்தனர். சோபனா ஐந்தாம் ஆண்டுவரை மானிப்பாய் கிரீன் மெமோரியல் பாடசாலையில் கல்வி கற்றாள். சிறுவயதில் இருந்தே அமைதியான பயந்த குணமுள்ளவர் சோபனா.தன வயதுக்கு மீறிய இரக்க குணமுள்ளவர், யாரவது துன்பபடுவதை பார்த்தால் மனமிரங்கி ஓடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்துவிடுவார். ஆடல் பாடலில் அதிகம் ஆர்வம் கொண்டவள். அவற்றை முறையாக கற்றுகொள்ளும் முன்னரே ஏற்கனவே பயின்றவள் போல் திறம்பட செய்துகாட்டி பலரையும் ஆச்சரியப்பட வைத்தாள்.
புலமை பரீட்சை எழுதி சித்தியடைந்தவள் .யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றால். அமைதியாக படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கையில் 1995 ஆம் ஆண்டு முன்றாம் கட்ட ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் மையம் கொண்டிருந்த வேளை அது. எதிரியானவன் பெருமெடுப்பிலான தாக்குதல்களின் ஊடாக யாழ் நகரை கைப்பற்றினான். தான் முன்னேறிச்செல்லும் பாதையெங்கும் காண்பவரையெல்லாம் அடித்தும், துன்புறுத்தியும் படுகொலை செய்தான். உயிரை காக்க ஊரையும் உடமையையும் விட்டுவிட்டு கையில் கிடைத்தவற்றோடு நடந்தும், ஓடியும், விழுந்தும், எழும்பியும் வன்னியை நோக்கி ஓடினர் மக்கள். அவர்களில் சோபனாவின் குடும்பமும் ஒன்று.ஒருவழியாக உயிரை கையில் பிடித்துகொண்டு சோபனாவின் குடும்பத்தினர் வன்னிக்கு சென்றனர்.வன்னி மண்ணும் வரவேற்பில் பேர்பெற்ற மக்களும் இவர்களை அன்புக்கரம் நீட்டி வரவேற்றனர்.
சோபனா தனது மேற்படிப்பை வன்னியில் தொடர்ந்தாள். வன்னி மண்ணுக்குள் சென்ற நாளிலிருந்து தமிழீழ விடுதலை போர் பற்றிய தேவையினையும் தன கடமையினையும் நன்கு உணர்ந்து கொண்டாள். தமிழீழ விடுதலை புலிகளின் பரப்புரை குழுவினரால் நடத்தப்படும் வகுப்புக்களில் அதிக ஈர்ப்பு கொண்டாள். ஒவ்வொரு தமிழனும் ஒவ்வொரு தீப்பந்தமானால்தான் ஓயாது ஒலித்துகொண்டிருக்கும் வெடியோசை ஓய்ந்து ஒளிமயமான எதிர்காலம் தமிழனுக்கு விடியும் என்று உணர்ந்தாள். 1999 ஆம் ஆண்டு பாடசாலைக்கு பரப்புரை செய்யவந்தவர்களோடு கடமையும் கண்ணியமும் நிறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளோடு தன்னை இணைத்து கொண்டாள்.சோபனா.
இயக்கத்தில் இணைந்துகொண்டால் இயக்க பெயர் ஒன்று சூட்ட வேண்டுமல்லவா...? சோபனா என்ற பெயர் இவரது தோற்றத்தோடு எவ்வளவு ஒத்துபோகின்றதோ அதைவிட அதிகளவில் பொருந்தக்கூடிய ஒரு பெயர் இவருக்கு இடப்படுகின்றது. இயல் இசை நாடகத்துறையில்தான் இவரது விடுதலை பயணம் இருக்கபோகின்றது என்பது தெரிந்தோ என்னவோ ''இசையருவி'' என பெயர்சூட்ட பட்டது இசையருவியாய் விடுதலை போராளியாய் தொடக்க பயிற்ச்சிகளை முடித்தாள்.சோபனா, தமிழின விடுதலைக்காக தன முழு நேரத்தையும் ஒதுக்கினாள். இசையருவியின் உடல்நிலை காரணமாகவும் இவரது கவர்ந்திழுக்கும் அழகான தோற்றமும் இவளை ஊடகத்துறை போராளியாக தெரிவுசெய்ய வைத்தது. இசையருவி என்ற அழகான தமிழ் பெயரோடு தன் பணியை தொடங்கியவளை .இசையின் மேல் இவளுக்கு இருந்த விருப்பம் காரணமோ என்னமோ தோழிகள் இவளை இசைப்பிரியா என்று அழைக்க தொடங்கினர்.
நிதர்சனத்தின் ஊடாக தன்னை அறிமுக படுத்தினாள். கணீர் என்ற இவள் குரலை கேட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் இடம்பெறும் விடுதலை தொடர்பான நிகழ்வுகள் புலம்பெயர் மக்கள் பார்ப்பதற்காகவும் உருவாக்கப்படும் ''ஒளிவீச்சு'' காணொளி சஞ்சிகையின் ஒளிபரப்பாளராக்கினர் . தாயகத்தில் இவளை எத்தனை பேர் அறிவரோ தெரியாது அனால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர் அநேகராலும் நன்கு அறியப்பட்டாள். கணீர் என்ற இனிமையான குரலும் அழகான தோற்றமும் அனைவரின் மனதிலும் பதிந்தது.இவரது பெயர் பலருக்கும் தெரியாது விட்டாலும் உருவத்தை நன்கு அறிந்தனர். இசைப்பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும் தன்னை தமிழீழ விடுதலை புலிகளோடு இணைத்துக்கொண்டு களத்திடை போராளியானார். இசைப்பிரியாவின் பணி ஒளிவீச்சு மட்டும் நின்றுவிடவில்லை ஊர் ஊரை சென்று போடப்படும் தெருக்கூத்துகளிலும் மேடைகளில் இடம்பெறும் கலைநிகழ்வுகளிலும் இவளது பங்கு இருந்தது.
அத்தோடு கள இழப்பு ஏற்படுவதற்கு முன்னர்வரை தமிழ்ழீழ தொலைகட்ச்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் தமிழீழத்தில் வெளியாகிய சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.2007 ஆம் ஆண்டு இசைப்பிரியாவுக்கு அகவை இருபத்து ஆறாக இருந்தபோது இவருக்கான திருமண ஏற்பாடுகள் இவரது பெற்றோரால் மேற்கொள்ள பட்டன. நீண்ட தேடலின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலி போராளி ஒருவரே இவருக்கு மாப்பிள்ளையாக இவரது பெற்றோரால் தெரிவுசெய்ய பட்டார்.கடற்புலிகளின் சிறப்பு தளபதி திரு சூசை அவர்களின் கீழ் இயங்கிய கடற்படைத் தளபதி சிறிராம் என்பவரே இசைப்பிரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து மகிழ்வானதும் சிறப்பானதுமான திருமண வாழ்வை வாழ்ந்தனர்.வெளிநாட்டில் வாழும் சகோதரனின் உதவியோடு புதுமனையில் குடிபுகுந்தனர்.
நாட்டுக்கானதும் வீட்டுக்கானதுமான இவர்களது கடமை நல்லமுறையில் நடந்தது.இவர்களது இலக்கணமாக இசைப்பிரியா தாய்மையுற்றாள். இதே காலப்பகுதியில் சிறிலங்கா படையினரின் வன்னி மீதான போர், இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்தது. தய்மையுற்றிருந்த இசைப்பிரியாவுக்கு குழந்தை பிறந்தது. இவர்களின் பெயர் சொல்ல ஒரு புலிமகள் பிறந்தாள். ''அகல்யா'' என்று அவளுக்கு பெயரிடப்படுகின்றது. கண்ணும் கருத்துமாக தன் மகளை வளர்த்து வந்தாள் இசைப்பிரியா. போராட்டம் உச்சகட்டத்தை அடைந்த வேளையது... குழந்தைக்கான பால்மாவை தேடித்தேடி ஓடியோடி வாங்கி வைத்திருந்தாள். குழந்தை அகல்யாவும் வழமைக்கு மாறாக முன்று அல்லது நான்கு மாதத்திலையே தன் அன்னையை பார்த்து ''அம்மா'' என்று அழைக்க ஆரம்பித்தாள். உயிருக்கு உயிராய் தம் குழந்தையை கவனித்து வந்தாள். அந்த வேளையில் ஒருநாள் குழந்தைக்கு காய்ச்சல் காய தொடங்கியது நாளுக்கு நாள் உடலின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே சென்றது. நெருப்பு காய்ச்சலில் குழந்தையின் உடல் நடுங்கியது மருத்துவ வசதிகளோ மருந்துகளோ சரியாக கிடையாத இனஅழிப்பு போர் சுழல் அது. நோய்க்கான மருந்து கிடைக்காத நிலையில் தன் உயிரென எண்ணியிருந்த நான்கு மாத குழந்தை அகல்யாவின் உயிர் பரிதாபமாக பிரிந்தது.
மழலையின் மொழியில் உலகையே மறந்திருந்தவளுக்கு திடீரென உலகமே இருண்டு போனது. பதறினாள் கதறி அழுதாள்... அனால் எதுவுமே அவள் குழந்தையை திருப்பி கொடுக்கவில்லை. சுவாசித்து கொண்டிருக்கும் நடைபிணமானாள். இருப்பினும் சிறு வயது முதல் இரக்ககுணம் கொண்டவள் அல்லவா... இசைப்பிரியா தன் சோகத்தை உள்ளே வைத்து வேதனை பட்டு கொண்டிருந்தாலும், இன அழிப்பின் உச்ச நடவடிக்கையால் வன்னி மண்ணின் மண்ணே தெரியாத அளவுக்கு பினக்குவியலும் காயம் பட்டவர்களுமாக துடித்துகொண்டிருக்கையில் ஓடிச்சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்தாள். ஆறுதல் கூற யார் வருவார் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அரவணைத்து முன்னின்று அவர்கள் வீட்டு மரண சடங்குகளை நடத்தி வைத்தாள்.
வன்னியில் இசைப்பிரியவோடு அவளது பெற்றோரும் அக்காவின் குடும்பமும் போராளி தங்கையும் இருந்தனர். வெளிநாட்டில் இருக்கும் இரு சகோதரிகளும் வயிற்றில் நெருப்பை கட்டியவர்களாக தன் குடும்பத்தை எண்ணி தவித்துக்கொண்டு இருக்கையில் அவர்கள் பயந்ததுபோல் குண்டு வீச்சுக்கு இலக்காகி பெற்றோரோடு இருந்த சகோதரியின் கணவன் இறந்துவிட முன்று குழந்தைகளோடு சகோதரி அபலையானால். இதுவரை இவர்கள் குடும்பத்தில் இரண்டு சாவு விழுந்து விட்டது மே திங்கள் நடுப்பகுதி அது இசைப்பிரியாவின் போராளி தங்கை படுகாயமுர்றாள். தன் பெற்றோரும் சகோதரி குழந்தைகள் அனைவரும் அவ்விடத்தை விட்டு செல்ல ஏற்பாடுகளை மேற்கொண்டாள் இசைப்பிரியா. தன் கையிலிருந்த தங்க வளையலை அம்மாவிடம் கொடுத்தவள் போகுமிடத்தில் இதை விற்று காயமடைந்த தங்கைக்கு மருத்துவம் பார்க்கும்படி கூறினாள்.
நீங்கள் சென்றுவிடுங்கள் நானும் எனது கணவனும் மற்றைய போராளிகளோடு இணைந்து சரணடைந்துவிட போகின்றோம் என்று கூறினாள். அவர்கள் தன் கண்ணிலிருந்து மறையும் வரை கைகளை அசைத்துக்கொண்டு இருந்தாள். அவர்களை இறுதியாக பார்ப்பது இதுதான் என்று எண்ணினாளோ என்னவோ அவர்கள் மறையும் வரை பார்த்திருந்தால்.மே திங்கள் 18 நாள் சிறிலங்கா அரசு போரில் வெற்றிகொண்டதாக அறிவித்தது.
வர்ணிக்க முடியாத கோரச்செயலால் வன்னிமுழுவதையும் கையாகப் படுத்தியது சிறிலங்கா அரசு. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சரணடைந்தனர்.காயப்பட்ட போராளிகள் மீதும், மக்கள் மீதும் பதுங்கு குழிகளுக்குள் இருந்தவர்கள் மேலும் சிங்கள வெறியர் புளுடோசர் கொண்டு ஏறி மிதித்தனர். தம் மண்ணோடு மண்ணாகி மடிந்து போயினர் தமிழர். சரணடைந்த போராளிகளில் இசைப்பிரியாவும் கணவர் தளபதி சிறிராமும் இருந்தனர்ஊடகத்துறையில் செயற்பட்டவர் என்பதினால் இசைப்பிரியா இலகுவாக அடையாளம் காணப்பட்டார். பல பெண் போராளிகளோடு இவளும் எங்கோ இழுத்து செல்ல பட்டாள். தளபதி சிறிராமும் கைதாகி வேறொரு இடத்திற்கு இழுத்து செல்லபட்டார். முள்வேலி கம்பிக்குள் குழந்தைகளும் பெண்களுமாக தமிழர்கள் அடைக்க பட்டனர். உலகத்தமிழர் எல்லாம் கதறியழ சிங்களம் வெற்றிமுரசு கொட்டியது. உலகெங்கும் தன் வெற்றி செய்தியை கொண்டாடியது.
இவ்வாறாக ஆண்டுகள் கடந்து விட்டது. 2010 ஆம் ஆண்டு மே திங்கள் ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் உலகத்தமிழினம் ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கையில் வெற்றி விழா கொண்டாடியது சிங்கள அரசு. சிறிது நாட்கள் கழிந்தன படுகொலை செய்யபட்ட பலரின் புகைப்படங்கள் வெளியாகின அன்று ஒரு நாள் மிக அருகில் நின்று சுடப்பட்ட நிலையில் முக்கின் அருகேயும் கன்னம், காதருகேயும் குருதி வழிந்தபடி இறந்த ஒரு பெண்ணின் படத்தை சிறிலங்கா அரசு வெளியிட்டது.இவர்தான் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என்று கூறியது. பார்த்தவர் அனைவருக்கும் குறைப்பட்ட செய்தி பொய்யென்று தெரிந்தாலும், படத்தில் இசைப்பிரியாவை பார்த்தனர் மனம் துடிக்க உறைந்து போயினர்.
இது உண்மையாக இருக்குமா அல்லது சிங்களத்தின் கபட நாடகத்தின் இதுவும் ஒன்ற... என்று கேள்விகள் இருந்தன.இந்த காலகட்டத்தில்தான் உலக நாடுகளினால் சிறிலங்கா மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட தொடங்கின.அதன் ஒரு வடிவமாக இங்கிலாந்தை தளமாக கொண்ட சனல் நான்கு தொலைகாட்சி தமிழர்கள் சிங்கள படைகளால் படுகொலை செய்யப்படும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை தோற்றுவித்தது.மார்கழி திங்கள் இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு சனல் நான்கு தொலைக்காட்சியால் இன்னுமொரு வீடியோ வெளியிட பட்டது.அதில் இசைப்பிரியாவும் இன்னும் சில பெண் போராளிகளும் கொடூரமாக கொல்லபட்டு கிடந்தனர்.அநாகரீகமான முறையில் ஆடைகள் களையப்பட்டு இறந்து கிடந்தனர்.கைகள் பின்னால் கட்டபட்டு கொடூரமாக சித்திரவதை செய்யபட்டு பாலியல் வன்புணர்வின் பின்னர் இவர்கள் படுகொலை செய்யபட்டு இருந்தனர்.
உலகத்தமிழினமே உறைந்துபோய் கண்ணீர் விட்ட நாள் அது!!! மிருகத்திலும் கொடூரமான சிங்களவர் இவர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்திருப்பான் என்று எண்ணுகையில் அவர்களின் அவலக்குரல் மனக்கண்ணில் பட்டது. ''அம்மா'' ''அம்மா'' என்று கத்தியிருப்பாள் வலியால் துடித்திருப்பாள் வாழ்வில் பல வலிகளோடு இருந்தவளுக்கு என்ன கொடுமையிது..?. தன் இனத்தின் விடுதலைக்காய் போரடியவளுக்கு சிங்களம் கொடுக்கும் தண்டனை இதுவா..? ''அம்மா'' ''அம்மா'' என்று கதறியவளை தம் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சேயும் கூறியதுபோல் இரையாக்கினார்கள். அருகில் சென்று முகத்தில் துப்பாக்கியால் சுட்டனர் தன் குழந்தையின் இறப்பாலும் தமிழ் இனத்தின் அழிவாலும் நடைபிணமாய் அலைந்தவள் துப்பாக்கியால் சுடப்பட்ட வேளையில் எந்த ஏக்கத்தோடு தன மூச்சை விட்டிருப்பாள்? இசைப்பிரியா கொல்லபட்டார், கணவன் சிறிராமின் பெயரும் சிறிலங்கா அரசால் வெளியிடபட்ட இறந்தோர் பட்டியலில் இடம்பெற்றது. தமிழனின் விடிவிற்காய் வாழ்ந்த இவரும் கோரமாக கொல்லப்பட இவர்களது குடும்பத்தில் மொத்தமாக நான்கு உயிர்கள் பலியாகின கதறி துடித்தவள் கடைசியில் என்ன நினைத்திருப்பாளோ..? காப்பற்ற யாரவது வருவாரா என்று எண்ணியிருப்பாளோ..? தாலட்டு பாடி தூங்க வைத்த தாயை, தன் தோள் சுமந்த தந்தையை, மகிழ்வாய் கூடிவிளையாடிய சகோதரிகளை, பிரிக்கமுடியாது இணைந்த கணவனை எண்ணியிருப்பாளோ..? உயிருக்கு உயிராய் பெற்றுவளர்த்த குழந்தையின் இறுதி கணங்களை எண்ணியிருப்பாளோ..?
வலியில் வழிகிறது கண்கள்.
ReplyDelete