"இந்த மாணவர்கள் இடம்பெயர்ந்ததால் 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் அவர்கள் தமக்கான கல்வியைப் சரிவரப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது எங்களால் இதன் தொடர்பாதிப்பை உணரமுடிகின்றது. இடப்பெயர்வின் பின் விளைவானது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது"
இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் அதன் செய்தியாளர் Maryam Azwer எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியாகிய க.பொ.த.சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்து சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலவரம் தொடர்பாக தீவிர அக்கறை காட்டவேண்டிய தேவை எழுந்துள்ளது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆண்டில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுள் மிகக் குறைவானவர்களே உயர்தரம் கற்பதற்கான அடிப்படைத் தகுதியைக் கொண்டுள்ளதை அண்மையில் வெளியிடப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் சுட்டிநிற்கின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில், 35.39 சதவீதமானவர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 40.16 சதவீத மாணவர்களும் உயர்தரக் கல்வி கற்பதற்குத் தேவையான அடிப்படைப் பெறுபேறுகளைக் கொண்டுள்ளனர். இதேவேளை கொழும்பு மாட்டத்தில் கடந்த ஆண்டில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 71.62 சதவீதமானவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான பெறுபேறுகளைப் பெற்றுள்ள நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை அதிகம் கொண்ட மாவட்டமாகக் கொழும்பு விளங்குகின்றது.
தமது மாணவர்கள் தமக்கான கல்வித் தேவையைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் கூறுகின்றனர். யுத்த காலத்தின் போது கல்வியைத் தொடர்வதில் பல பிரச்சினைகளையும் இடையூறுகளையும் எதிர்கொண்ட இந்த மாணவர்கள் அதன் விளைவாக யுத்தத்தின் பின்னான இக்காலப்பகுதியிலும் இவர்களின் கல்விநிலை பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றமை முக்கிய காரணியாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தளவில் நிரந்தர ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. தனது பாடசாலையில் கடந்த ஆண்டில் சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்கள் அதற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொண்ட அதற்கு முன்னைய ஆண்டுகளில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி அதிபர் சின்னத்தம்பி பாலகிருஸ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இந்த மாணவர்கள் இடம்பெயர்ந்ததால் 2008 மற்றும் 2009 காலப்பகுதியில் அவர்கள் தமக்கான கல்வியைப் சரிவரப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தற்போது எங்களால் இதன் தொடர்பாதிப்பை உணரமுடிகின்றது. இடப்பெயர்வின் பின் விளைவானது மாணவர்கள் மத்தியில் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது" எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த 180 மாணவர்கள் தோற்றியிருந்த போதிலும் இவர்களில் 53 பேர் மட்டுமே உயர்தரம் கற்பதற்கான பெறுபேறுகளைப் பெற்றுள்ளதாக பாலகிருஸ்ணன் மேலும் சுட்டிக்காட்டினார்.
அடிப்படையில் கிளி. இந்துக்கல்லூரியில் 220 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்காக விண்ணப்பித்திருந்ததாகவும், இதில் 90 பேர் 2010ல் சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி அதில் சித்தியடையாததால் மீண்டும் 2011ல் நடைபெற்ற பரீட்சைக்காக விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் வி;ண்ணப்பித்த அனைத்து மாணவர்களாலும் பரீட்சைக்குத் தோற்ற முடியாதிருந்ததாகவும் அதிபர் பாலகிருஸ்ணன் மேலும் தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில் சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள்களில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும், அவ்வினாத்தாள்கள் மிகச் சரியாகத் தயாரிக்கப்பட்டதாகவும், பரீட்சை வினாத்தாள்கள் தொடர்பில் தாம் திருப்தி கொண்டுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார். மாணவர்கள் பரீட்சையில் சித்தியடையாமைக்கு பரீட்சை வினாத்தாள்கள் காரணமல்ல. இதற்கான முக்கிய காரணங்கள் வேறு எனவும் அதிபர் தெரிவித்தார்.
தரம் 06 முதல் தரம் 13 வரையான வகுப்புக்களைக் கொண்ட இரண்டாம் நிலைப் பாடசாலையாக கிளிநொச்சி இந்துக் கல்லூரி விளங்குகின்றது. இங்கே தற்போது 986 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 47 ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபடுகின்றனர். ஆனால் இந்த ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் அல்லர் எனவும் அதிபர் தெரிவித்தார்.
"கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர்களும் உள்ளனர். ஆனால் போதியளவில் இல்லை. எனது பாடசாலையில் கற்பிக்கும் 70 சதவீதமான ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வருகின்றார்கள். இவர்களில் பலர் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு பிரயாணம் செய்கின்றனர். யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான தூரம் 85 கிலோமீற்றர் ஆகும். தற்போது ஏ-09 நெடுஞ்சாலையில் திருத்த வேலைகள் நடைபெறுவதால் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சியை வந்தடைவதற்கு கிட்டத்தட்ட மூன்று மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன.
ஆகவே யாழ்ப்பாணத்திலிருந்து ஒவ்வொரு நாளும் கிளிநொச்சி வந்து மீண்டும் அங்கு திரும்பிச் செல்லும் ஆசிரியர்கள் ஆறு மணித்தியாலங்கள் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் இந்த ஆசிரியர்கள் களைப்படைந்து விடுகின்றனர். அவர்கள் உள ரீதியாகவும் களைப்படைகின்றனர். யாழ்ப்பாணத்தைப் போல் கிளிநொச்சியில் அதிக வசதிகள் காணப்படாததால் இந்த ஆசிரியர்கள் கிளிநொச்சியில் தங்கி நின்று கற்பிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக நான்கு அல்லது ஐந்து ஆசிரியர்களுக்கு மட்டுமே என்னால் தங்குமிட வசதி செய்து கொடுக்க முடியும்" எனவும் அதிபர் பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
கிளிநொச்சி இந்துக் கல்லூரி, மாவட்டத்தில் உள்ள 'உயர் மட்டப் பாடசாலைகளில்' ஒன்றாகும் என அதிபர் தெரிவித்தார். இது 1952ல் நிறுவப்பட்டது. யுத்தம் உக்கிரம் அடைந்ததால் ஆகஸ்ட் 2008ல் இப்பாடசாலை மூடப்பட்டு, பின்னர் ஜனவரி 2010ல் இது மீண்டும் திறக்கப்பட்டது.
"எமது பாடசாலையில் கட்டட வசதிகளும் ஆய்வுகூட வசதிகளும் காணப்படுகின்றன. ஆனால் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது" என அதிபர் பாலகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். இப்பாடசாலையில் மனைப் பொருளியல் கற்பிப்பதற்கு ஆசிரியர் ஒருவர் கூட இல்லை எனவும், ஆனால் 2010ல் சாதாரதரப் பரீட்சைக்குத் தோற்றிய 33 மாணவர்கள் மனைப்பொருளியலை ஒரு பாடமாக எடுத்திருந்ததாகவும், இதே போல் 2011ல் 30 மாணவர்கள் இப்பாடத்தை எடுத்திருந்ததாகவும் அதிபர் மேலும் தெரிவித்தார். மனைப் பொருளியல் கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாது இந்த மாணவர்கள் எவ்வாறு இப்பாடத்தை தெரிவு செய்து கற்றார்கள் என அதிபரிடம் வினவியபோது, "எமது பாடசாலையில் கற்ற பழைய மாணவர்களின் உதவியுடன் நான் தனிப்பட்ட வகுப்புக்களை ஒழுங்குபடுத்தினேன்" என அதிபர் தெரிவித்தார்.
"மனைப் பொருளியில் பாடத்தில் சில மாணவர்கள் சித்தியெய்தியுள்ளனர். ஆனால் இவர்கள் சாதாரணதரச் சித்தியையே அடைந்துள்ளனர். சிலர் சிறப்புச் சித்தியையும் பெற்றுள்ளனர். மனைப் பொருளியல் பாடத்தைக் கற்பிப்பதற்கான ஆசிரியரை நியமிக்குமாறு மாணவர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுக்கின்ற போதிலும், இன்னமும் ஆசிரியரை ஒருவரை ஒழுங்குபடுத்திக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன். இது எம்மைப் பொறுத்தளவில் எமக்குப் பெரிய சவாலாக உள்ளது" எனவும் அதிபர் பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தமது பாடசாலையிலும் இல்லை என முழங்காவில் மகா வித்தியாலய அதிபர் சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
"எமது பாடசாலையில் சமயம், சித்திரம், தமிழ் இலக்கியம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் தற்போது இல்லை. இதேபோன்று தமிழ் மற்றும் கணித பாடங்களின் பெறுபேறுகளும் கவலை அளிக்கின்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட கணித பாடப் பெறுபேறு மிக மோசமாக உள்ளது. இந்தத் தடவை 26 சதவீதமானவர்கள் மட்டுமே கணித பாடத்தில் சித்தியடைந்துள்ளனர். இதேபோன்று தமிழ் மொழியில் 72 சதவீதமானவர்கள் மட்டுமே சித்தியடைந்துள்ளனர். மாணவன் ஒருவன் தனது தாய்மொழியிலும், கணித பாடத்திலும் சித்தியடையத் தவறுவதால் உயர்தரக் கல்வியைத் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றான்" எனவும் அதிபர் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையைக் கருத்திலெடுத்தே, தற்போது தமிழ் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடங்களும் மேலதிக வகுப்புக்கள் மூலம் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முழங்காவில் மகா வித்தியாலய அதிபர் மேலும் தெரிவித்துள்ளார். இப்பாடசாலையிலிருந்து 2011ல் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய 71 மாணவர்களில் 30 மாணவர்கள் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான பெறுபேற்றைக் கொண்டுள்ளனர். இதில் 18 மாணவர்கள் விஞ்ஞானப் பாடத்தையும், 12 மாணவர்கள் கலைப் பாடத்தையும் தெரிவு செய்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 117 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், இதில் 32 பேர் மட்டுமே உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாகவும் அதிபர் முத்துராஜா ரவீந்திரன் தெரிவித்துள்ளார். "வரலாறு தவிர்ந்த ஏனைய பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் எமது பாடசாலையில் உண்டு" எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
"பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில பாடத்தில் சித்தியடையவில்லை. ஆங்கில மொழியை இவர்கள் பிரதான மொழியாகப் பயன்படுத்தாமையே இதற்கான முக்கிய காரணமாகும்" என அதிபர் தெரிவித்துள்ளார்.
"எமது மாணவர்கள் ஆங்கிலத்தை வீடுகளில் பேசுவதில்லை. இதனால் இவர்கள் ஆங்கில மொழியில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இவர்கள் ஆங்கில பாடத்தில் சித்தியெய்துவது குறைவாகக் காணப்படுகின்றது" எனவும் அதிபர் ரவீந்திரன் மேலும் கூறினார்.
வழமையாக ஆங்கில மொழியில் தனது பாடசாலை மாணவர்கள் மிகக் குறைவான பெறுபேற்றைக் எடுத்த போதிலும், கடந்த ஆண்டு சற்று கூடிய சித்தியைப் பெற்றுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தைச் சேர்ந்த 60 சதவீதமான மாணவர்கள் அடிப்படைத் தகைமையைப் பூர்த்தி செய்யாது உள்ளதாகவும் இவர்களுள் பெரும்பாலானவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் வடமாகாண கல்விப் பணிப்பாளர் பரமனாதன் விக்கினஸ்வரன் தெரிவித்துள்ளார்.
2011ல் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1975 மாணவர்கள் தோற்றியதாகவும் இதில் 699 பேர் மட்டுமே உயர்தரம் கற்பதற்கான தகுதியைக் கொண்டுள்ளதாகவும், குறிப்பாக கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய இரு பாடங்களிலும் மாணவர்கள் குறைவான சித்தியடைந்துள்ளதாகவும் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தளவில் 20:1 என்ற விகிதத்தில் மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் எண்ணிக்கை காணப்பட்டாலும் பாட ரீதியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், "வார இறுதி நாட்களில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சிலரை கிளிநொச்சிக்கு அழைத்து அங்குள்ள மாணவர்களுக்கு மேலதிக கற்றல் செயற்பாடுகளை வழங்கி வருகின்றோம். அத்துடன் மாணவர்கள் சித்தியெய்துவதற்குத் தேவையான புதிய கற்றல் வழிகாட்டல் முறைமைகளையும் நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்" எனவும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் பணியாற்றும் ஒருவர் அங்குள்ள மக்களும் சிறுவர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் உரிய வகையில் அதற்கான வசதிகளைப் பெற முடியாதுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இப்பணியாளர் தனது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.
"அவர்கள் பாடசாலைக்குச் செல்கிறார்கள். ஆனால் இவர்கள் உரிய முறையில் கல்வியைப் பெறமுடியவில்லை. மேலதிக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். பெரும்பாலான பிள்ளைகள் தனியார் வகுப்புக்களுக்குக் கூட செல்ல முடியாதுள்ளனர். ஏனெனில் தனியார் வகுப்புக்கள் அதிக தொலைவில் நடைபெறுகின்றன. இவர்களிடம் அங்கு செல்வதற்கான துவிச்சக்கர வண்டிகள் காணப்படவில்லை. இவர்களால் தனியார் வகுப்புகளுக்கான கட்டணங்களை வழங்க முடியாது வறுமையில் உள்ளனர்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார். "இவ்வாண்டில் வெளிவந்த இந்த மாணவர்களின் சாதாரண தரப் பெறுபேறு முன்னைய ஆண்டுகளை விட மோசமாக உள்ளது. நாம் இதை நினைத்து வேதனைப்படுகின்றோம்" எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளையில், கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயை அல்லது தந்தையை இழந்துள்ளதுடன், 30 – 40 வரையான மாணவர்கள் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் இழந்து வாழ்வதாகவும் அதிபர் பாலகிருஸ்ணன் குறிப்பிட்டார்.
"எனது பாடசாலையில் புதிதாக இணையும் மாணவர்கள் சிலர் தமது கல்விச் செயற்பாடுகளில் ஆர்வம் இல்லாது காணப்படுகின்றனர். ஆனால் தாயை அல்லது தந்தையை இழந்து கல்வி கற்க வரும் இவ்வாறான மாணவர்களை எனது பாடசாலையில் அனுமதியாது எவ்வாறு அவர்களைத் திருப்பி அனுப்ப முடியும்? இவர்கள் குடும்பப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். அத்துடன் பல மாணவர்கள் தொலை தூரத்திலிருந்து பாடசாலைக்கு வருகின்றனர். இவ்வாறான மாணவர்களின் நிலையை எண்ணி நாம் வருந்துகின்றோம்" எனவும் அதிபர் பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.
0 கருத்துரைகள் :
Post a Comment