பலத்த சர்ச்சைகளுக்கு நடுவே இந்திய நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளது. இந்தப் பயணத்துக்கான திட்டம் தயாரிக்கப்பட்ட போது தொடங்கிய பிரச்சினை, முடிந்த பின்னரும் ஓயவில்லை. தமிழ்நாட்டின பிரதான கட்சிகள் இந்தக் குழுவின் பயணத்தால் பயன் ஒன்றுமில்லை என்று தமது பிரதிநிதிகளை விலக்கிக் கொண்டன. இதனால் 16 பேர் வருவதாக இருந்த குழுவில் 12 பேர் மட்டும் வந்தனர். இந்தக் குழுவின் பயணத்தை தமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் பெரிதும் நம்பியிருந்தது. அதுவும், ஜெனிவா தீர்மானத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இந்தக் குழுவின் பயணத்தை வைத்து நெருக்கடிகளில் இருந்து மீளலாம் என்று அரசாங்கம் கருதியது. ஆனால் இந்தக் குழுவின் பயணத்தின் தொடக்கம் அரசுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் அமைந்தாலும், முடிவு என்னவோ அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒன்றாகவே அமைந்து விட்டது.
இந்தியக்குழு கொழும்பு வந்த மறுநாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்தது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பீரிஸ், இந்தியக் குழு தமக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்று கூறியிருந்தார். அதேபோல, இந்தியக்குழு வடக்கில் பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவும், இந்தியக்குழு உண்மை நிலையை அறிந்து கொண்டுள்ளதாக கூறினார்.
ஆனால் கடைசி நேரத்தில், இலங்கை அரசாங்கம் விரும்பாத பல விடயங்களை இந்தியக்குழு வலியுறுத்தியது.
13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றைக் காண வேண்டும்.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.வடக்கில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்துப் பேசி அரசியல் தீர்வு காண வேண்டும்.
இப்படிப் பல விடயங்களை இந்தியக்குழு வலியுறுத்தியுள்ளது.
இவையெல்லாம் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் அல்ல என்றாலும், அதை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் அரசாங்கத்திடம் இல்லை. 13ஆவது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு பற்றி ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவுக்கும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. பின்னர் அப்படி வாக்குறுதி ஒன்றும் கொடுக்கப்படவில்லையே என்று அரசாங்கம் மறுத்தது. இப்போது மீண்டும் அதே வாக்குறுதி சுஸ்மா சுவராஜ்ஜிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் 13ஆவது திருத்தத்தையே நடைமுறைப்படுத்த விரும்பாத நிலையில், அதற்கு அப்பால் சென்று தீர்வு ஒன்றை வழங்கத் தயாராக இருக்குமா என்பது முக்கிய சந்தேகம்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயமும் அப்படித் தான். அதை நடைமுறைப்படுத்துவோம் என்கிறது அரசாங்கம். ஆனால் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு யாராவது கூறினால் அதை வெறுப்போடு பார்க்கிறது. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அரசாங்கம் இன்னமும் தெளிவான நிலையில் இல்லை. எல்லாப் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதில் மட்டும் தான் அரசு தெளிவாக இருக்கிறதேயன்றி, எவற்றை நடைமுறைப்படுத்துவது என்று தீர்மானிக்கவில்லை. எனவே இப்போதைய சூழலில், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கூறும் ஆலோசனையை அல்லது அழுத்தத்தை இலங்கை அரசு வேண்டாத ஒரு விவகாரமாகவே பார்க்கிறது.
போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இந்தியக்குழுவின் அடுத்த கோரிக்கை. இதைத் தான் அமெரிக்கா தொடக்கம் பல்வேறு நாடுகளும் கூறி வருகின்றன. ஆனால் அரசாங்கம் அதற்கெல்லாம் செவி சாய்க்கின்ற நிலையில் இல்லை. இதனால் தான் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கூட அரசாங்கம் தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போதைய நிலையில் மனிதஉரிமை மீறல்கள் பற்றி யார் பேச்சு எடுத்தாலும் அதை அரசாங்கம் விருப்புடன் பார்ப்பதில்லை. அந்த வகையில் தான் இந்தியக் குழுவும் மனிதஉரிமை மீறல்கள் குறித்த விசாரணையைப் பற்றிப் பேசப் போய் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது. அடுத்து, இந்தியக் குழுவினர் முன்வைத்த மற்றொரு முக்கியமான விடயம், வடக்கில் இருந்து படைகளை வெளியேற்ற வேண்டும் என்பதாகும். இதனை உடனடியாகவே நிராகரித்துள்ளார் மகிந்த.
வடக்கில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தான் இராணுவம் இருக்கிறது. வடக்கில் இருந்து மட்டும் துருப்புகளை அகற்ற முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவும் இதனைப் பலமுறை வலியுறுத்தியது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும் இது வலியுறுத்தப்பட்டது. ஆனால் அரசாங்கமோ, வடக்கில் இருந்து படைகளை விலக்குவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. அதேவேளை, இந்தியக் குழுவோ படைவிலக்கத்தை முக்கியமான கோரிக்கையாக முன்வைத்துள்ளது. தாம் விரும்பாத பல விடயங்களை கையில் எடுத்துக் கொண்டதால், இந்தியக் குழுவின் பயணத்தை அரசாங்கத்தினால் ரசிக்க முடியவில்லை. இந்தியக் குழுவின் பயணம் திருப்திகரமானதொன்று என வடக்கிலோ கிழக்கிலோ உள்ள எவரும் ஏற்கத் தயாரில்லை. சரியாகத் திட்டமிடப்படாத பயணம்- சுதந்திரமானதாக அமையவில்லை என்று பல்வேறு, குறைபாடுகள் உள்ளன. ஆனாலும் கூட, அவர்கள் பார்த்ததைக் கொண்டு வடக்கு இன்னமும் இராணுவ அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது என்று கூறியுள்ளனர். அங்கு நிலைமை இன்னமும் மோசம் என்றும் மக்கள் அச்சத்துடன் தான் வாழ்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்குத் தெரியவராத பல உண்மைகள் இன்னமும் உள்ளன.
இந்திய நாடாளுமன்றக் குழுவினர், இலங்கையில் தமிழர்கள் சுமுகமாக - சுதந்திரமாக வாழ முடியவில்லை என்று கண்டறிந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியக் குழுவின் பயணத்தினால், சீர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய - இலங்கை உறவுகளுக்கு புதியதொரு சிக்கல் வந்து நிற்கிறது. இப்போது. இந்திய நாடாளுமன்றக் குழுவின் கருத்துக்கு மதிப்பளித்து நடக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. ஏற்கனவே ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது கொழும்பை சீற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையுடன் நெருக்கத்தைப் பேண இந்திய அரசு, அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
ஏனென்றால், புவிசார் அரசியல் சூழலின்படி, கொழும்புடன் நெருக்கத்தைப் பேண வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு விடயமாக இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், இந்தியக் குழுவின் பயணமும் அவர்கள் கொண்டுள்ள கருத்தும். கொழும்புடன் நெருக்கத்தை ஏற்படுத்தத் தடையாகவே இருக்கும். ஏனென்றால், இந்தியக் குழு வலியுறுத்தும் சில விடயங்களை இலங்கை அரசால் சாதகமாக அணுகப்படக் கூடியவை அல்ல. இவை குறித்து இந்திய அழுத்தம் கொடுக்கும் போது, இருதரப்பு உறவுகளில் விரிசல் அதிகமாகும். இந்த விரிசலைக் கருத்தில் கொண்டு இந்தியா நழுவிக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால் இது ஒரு அனைத்துக் கட்சிக்குழு. அதன் பரிந்துரைகளைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட முடியாது. அதேவேளை, நாங்கள் இதை இத்தோடு விட்டு விடமாட்டோம் என்று சுஸ்மா சுவராஜ் கூறியுள்ளார்.எனவே அடுத்து பிஜேபி ஆட்சிக்கு வந்தாலும், அது அரசுக்குத் தலைவலி அதிகமாகும். அதைவிட இந்தியக்குழு குறைபாடுகளை கூறியுள்ள நிலையில், அதைக் கவனிக்காமல் மத்திய அரசு ஒதுங்கிக் கொண்டால், ஏற்கனவே தமிழ்நாட்டுக் கட்சிகளால் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையாகி விடும். இப்போது வந்துள்ள சிக்கல் தனியே இலங்கை அரசுக்கு மட்டும் அல்ல. இந்திய அரசுக்கும் தான்
கட்டுரையாளர் கே.சஞ்சயன் இன்போதமிழ் குழுமம்
0 கருத்துரைகள் :
Post a Comment