இந்திய எம்.பி.க்கள் குழு வருகின்ற ஏப்ரல் 16ஆம் திகதி இலங்கைக்கு செல்கிறது. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மிக முக்கியத் தலைவருமான சுஸ்மா ஸ்வராஜ் தலைமையிலான இக்குழுவில் தமிழக எம்.பி.க்கள் பங்கேற்கிறார்கள். குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களான சுதர்ஸன நாச்சியப்பன், எம்.கிருஷ்ணசாமி, மாணிக் தாகூர், என்.எஸ்.வி.சித்தன் உள்ளிட்ட நான்கு பேர் இடம்பெறுகிறார்கள். வட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி. கிருஷ்ணசாமி என்றால், மீதியுள்ள மூன்று காங்கிரஸ் எம்.பி.க்களும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் சுதர்ஸன நாச்சியப்பன் ராஜ்ய சபை எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய அண்ணன் மகன்தான் மாணிக் தாகூர்.
இந்த நால்வருமே ராஜீவ் காந்தியின் படுகொலை இடம்பெற்றதிலிருந்து தமிழகத்தில் இலங்கை தமிழர் ஆதரவாளர்களுக்கு எதிரான கருத்துக்களை சொல்லி வந்தவர்கள். அ.தி.மு.க., தி.மு.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பி.க்கள் இக்குழுவில் இடம்பெற்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சி சார்பில் அதிக எம்.பி.க்கள் இடம் பெற்றிருப்பது பற்றியே இலங்கை தமிழர் ஆதரவாளர் மத்தியில் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் மொத்த எம்.பி.க்கள் குழுவில் தமிழகத்திலிருந்து ஏழு பேரும், வட மாநிலங்களில் இருந்து ஏழு பேரும் பங்கேற்கிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக எம்.பி.க்களும், வட மாநில எம்.பி.க்களும் ஒரே மாதிரியான கருத்தை கொண்டிருப்பார்களா என்ற கேள்வியும் தமிழக தலைவர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இலங்கைக்கு தமிழக மற்றும் இந்திய எம்.பி.க்கள் குழு செல்லவிருக்கின்ற நிலையில், சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் திருச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர்,
"ஐ.நா.வின் மனித உரிமை கவுன்ஸிலில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா - ராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டது. மற்ற நாடுகளை ஆதரிக்க வைப்பதற்கும் அது தேவைப்பட்டது. ஏனென்றால் ஒரு நாடு மாறி வாக்களித்திருந்தால் நாம் மைனாரிட்டி ஆகியிருப்போம். அண்டை நாடு (இலங்கை) மெஜாரிட்டி ஆகியிருக்கும்" என்று அதிரடியாக பேசினார்.
அது மட்டுமின்றி,
"இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விரும்புகிறது என்று அறிவித்தோம். அதற்கு என்ன அர்த்தம். அது மற்ற நாடுகளுக்கு நாம் விடுத்த செய்தி. குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு விடுத்த செய்தி. எச்சரிக்கை" என்றவர், "அந்த தீர்மானத்தில் ஒரு வார்த்தை தவறியிருந்தால், நாம் தப்படி போட்டிருந்தால், நிலைமை வேறு மாதிரியாக மாறியிருக்கும்"
என்றார் ஆணித்தரமாக.
ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பிறகு தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவருமான ப.சிதம்பரம் இப்படி ஆவேசமாகவும், அதிரடியாகவும் பேசியது மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இதுவரை இலங்கை தமிழர் பிரச்சினையில் துரோகம் செய்து விட்டது என்று காங்கிரஸ் கட்சி மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தன தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகள். அவர்களின் கைகளில் இருந்த அந்த பிரசார ஆயுதத்தை ஜெனிவா வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு எடுத்த நிலைப்பாடு பறித்துக் கொண்டு போய் விட்டது.
ஜெனிவா வாக்கெடுப்பிற்கு பிறகு தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் ஆதரவு அமைப்புகளின் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பது நின்றுள்ளது.
"மத்திய அரசு ஏதோ செய்ய முனைகிறது"
என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றியிருக்கிறது. அதை சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் காங்கிரஸ் கட்சி திருச்சியில் முதலில் இப்படியொரு கூட்டத்தை கூட்டி இலங்கை தமிழர் பிரச்சினையில் நாங்கள் படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்ற செய்தியை பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை எதிர்த்து பிரசாரம் செய்ய இதுவரை தயங்கி வந்த காங்கிரஸ் கட்சி, இப்போதெல்லாம் ஆங்காங்கே பேனர்கள் வைத்தும், கூட்டம் போட்டும் சீமான் மீது பாயத் தொடங்கியுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 14ஆம் அம்பேத்கார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றை தமிழக காங்கிரஸ் கமிட்டி சென்னையில் ஏற்பாடு செய்திருக்கிறது. அக்கூட்டத்திலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசப்போகிறார். அதிலும் இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய நிலைப்பாடு குறித்த பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர்,
"இதுவரை காங்கிரஸ் கட்சிதான் இலங்கை தமிழர்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளது. போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான மறு சீரமைப்பு பணிகளில் மத்திய அரசு - இலங்கை அரசுடன் இணைந்து பல உதவிகளை செய்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிகார பகிர்வு என்பதை இன்றும் உறுதியுடன் சொல்லி வரும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். அதற்காக நாங்கள் எங்கள் இளம் தலைவர் ராஜீவ் காந்தியின் கொலையை மறக்க முடியாது. அது வேறு. இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் உதவி செய்வது வேறு. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் எப்படியோ காங்கிரஸ்தான் இலங்கை தமிழர்களை கொன்றது என்ற ரீதியில் பிரசாரம் செய்து எங்கள் கட்சி தீண்டத்தகாத கட்சி என்பது போன்ற நிலைமையை தமிழகத்தில் ஏற்படுத்தி விட்டார்கள். அதற்கு அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் காரணம் என்றாலும், எங்களுடன் மத்திய அரசில் பங்கேற்கும் தி.மு.க.வும் காரணம். ஆகவே இப்போது ஜெனிவா வாக்கெடுப்பை நாங்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக்கிக் கொள்ள பாடுபடுவோம். விரைவில் பேச்சாளர் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப் போகிறோம். அதில் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவிகள் என்னென்ன என்பதை பட்டியலிட்டு பட்டி தொட்டியெல்லாம் தமிழகத்தில் பிரசாரம் செய்யப் போகிறோம்"
என்றார் வித்தியாசமாக.
தி.மு.க. சீனியர் தலைவர் ஒருவரோ,
"இதுவரை இலங்கை சென்றது தமிழக எம்.பி.க்கள் குழுவாக இருந்தது. இதுவும் வெறும் தமிழக எம்.பி.க்களை மட்டும் பங்கேற்கும் குழுவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. இப்போது இந்திய எம்.பி.க்கள் குழு என்ற நிலையில் நாங்கள் இலங்கை செல்கிறோம். ஆகவே இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களின் நிலைமைகளை பார்த்து வந்த பிறகே கருத்து எதுவும் சொல்ல முடியும். ஆனாலும் எங்கள் தலைமையைப் பொறுத்தமட்டில் இந்த குழுவினால் எல்லாம் எதுவும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்திலேயே இருக்கிறது. அது மட்டுமின்றி மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இந்தியா வாக்களித்த பிறகு இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை செல்கிறது. தமிழர்களின் வாழ்க்கை தரத்தை இந்திய எம்.பி.க்கள் குழுவே வந்து பார்வையிட்டு விட்டது என்று மற்ற உலக நாடுகளிடம் கூறி, இலங்கை நல்ல பெயர் வாங்கிக் கொள்ளவே இந்த எம்.பி.க்கள் குழுவின் பயணம் பயன்படும் என்றே எங்கள் தலைவர் கலைஞர் நினைக்கிறார். அதேபோல் நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று கூறுவதற்கு மத்திய அரசுக்கு ஒரு வாய்ப்பாக இது அமையும். இந்நிலையில், குழு பயணத்தை புறக்கணித்தோம் என்ற பெயர் வர வேண்டாம் என்ற எண்ணத்திலேயே எங்கள் கட்சி எம்.பி.யை பங்கேற்க வைத்துள்ளார் தலைவர்"
என்றார்.
ஆனால் இலங்கைக்கு இந்திய எம்.பி.க்கள் குழு செல்லவிருக்கின்ற நிலையில்
"ஜெனிவா வாக்கெடுப்பில் இந்தியாவின் நிலைப்பாடு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை"
என்ற ரீதியில் இந்திய உள்துறை அமைச்சரும், இலங்கை பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஆரம்ப காலம் தொட்டே ஈடுபாடு உள்ளவருமான ப.சிதம்பரம் கூறியிருப்பது, தமிழகத்தில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இக்குழு இலங்கை செல்வது இப்போது உகந்த நேரமல்ல என்று உள்துறை அமைச்சரே நினைக்கிறாரோ என்ற எண்ணத்தை இந்த பேச்சு தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற வாக்களிக்க வேண்டும் என்று தீவிரமாக போராடியவர் உள்துறை அமைச்சர் சிதம்பரம்.
ஆனால் இந்த இந்திய எம்.பி.க்கள் குழுவில் தமிழக காங்கிரஸில் உள்ள அவரது ஆதரவு எம்.பி.க்களான விஸ்வநாதன், கே.எஸ்.அழகிரி போன்றோர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.காசிநாதன் இன்போ தமிழ் குழுமம்
மறுபடியும் மறுபடியும் காங்கிரஸ் தமிழர்களை ஏமாற்றவே முயல்கின்றது. இவர்கள் ஜெனிவாவில் சிங்கள அரசுக்கு எதிராக வாக்களித்தது, தமிழகத்தின் கொந்தளிப்பினை அடக்கவே. அதுவும் கொலைவெறியருக்கு உதவு முகமாக தீர்மானத்தில் கடைசிநேரத்தில் பல தில்லுமுள்ளுகள் செய்துள்ளது இந்திய அரசு. இந்திய அரசு கொடுத்த நிதிஉதவிகள் எங்கு போய் சேர்ந்தன என்பது உலகறிந்த விடயம். இப்போது ஈழத்தமிழருக்கு எதிராக பேசித்திரிந்தவர்களையே அனுப்ப முயல்கின்றது. இதுவும் ஒரு கண்துடைப்பு முயற்சியே. அத்துடன் சிங்கள கொலைவெறி அரசை உலக நாடுகளின் எதிர்ப்பிலிருந்து காப்பற்ற எடுத்துக் கொள்ளும் ஒரு முயற்சியே. எத்தனை காலம் தான் இவர்கள் தமிழரை ஏமாற்றி அரசாளப் போகின்றார்கள்?????
ReplyDelete