அரசியலமைப்புக்கான பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் (13 +) என்ற கதை மீண்டும் வந்திருக்கிறது. இலங்கை வந்திருந்த இந்திய பாராளுமன்றக் குழுவினர் கடந்த சனிக்கிழமை காலை நாடு திரும்புவதற்கு முன்னதாக கொழும்பில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவி திருமதி சுஷ்மா சுவராஜ் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அதற்கப்பால் செல்வதற்கும் தயாராக இருப்பதாகவும் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். கடந்த ஜனவரியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடமும் இத்தகைய உறுதிமொழியொன்றை ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்திருந்த போதிலும் அவர் அவ்வாறு எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லையென்று அமைச்சர்கள் பின்னர் மறுத்திருந்தனர் என்பதை செய்தியாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோது அமைச்சர்கள் எதையும் கூறுவதோ அல்லது எதையும் நிராகரிப்பதோ இங்கு பிரச்சினை அல்ல. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பாலும் செல்லப்போவதாக ஜனாதிபதியே தன்னிடம் கூறியிருப்பதே முக்கியமானது என்று திருமதி சுவராஜ் பதிலளித்திருந்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ ஜனவரி 17 ஆம் திகதி அளித்த காலை விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு அவருடன் பேச்சு நடத்தியிருந்த கிருஷ்ணா பின்னர் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போது ஜனாதிபதி தன்னிடம் பதின்மூன்றாவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வது என்ற உறுதிமொழியை அளித்ததாகக் கூறினார். ஆனால், இரு வாரங்கள் கழித்து இலங்கையில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை அலரிமாளிகைக்கு அழைத்து காலை விருந்தளித்து நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடிய வேளை ஜனாதிபதி ராஜபக்ஷ தான் எந்தவித உறுதிமொழியையும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு அளிக்கவில்லையென்று மறுதலித்திருந்தார்.கடந்த சனிக்கிழமை செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் தனது தலைமையிலான தூதுக்குழுவின் சார்பில் அறிக்கையொன்றை வாசித்த இந்திய எதிர்க்கட்சித் தலைவி உள்நாட்டின் போரின் முடிவிற்குப் பிறகு தேசிய நல்லிணக்கத்தை நோக்கியும் அரசியல் தீர்வை நோக்கியும் நகருவதற்கு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஒன்று கிடைத்திருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போரின் விளைவாக ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்துவதற்கும் நிலையான சமாதானத்தை நோக்கி பயணஞ் செய்வதற்கும் பயனுடைய பல ஆக்கபூர்வமான விதப்புரைகளைச் செய்திருக்கிறது. இந்த விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில் துரிதம் காட்டப்பட வேண்டும். எமது விஜயத்தின் போது இலங்கை நண்பர்களுக்கு நாம் தெரிவித்த செய்தி அதுதான் என்றும் திருமதி சுவராஜ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.விரைவில் அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்பதற்காக இலங்கை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட நெருக்கடியில் பங்கும் ஈடுபாடும் கொண்ட சகல தரப்பினரும் பேச்சுவார்த்தைகளில் இறங்கவேண்டும் என்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான சூழ்நிலைகளைத் தோற்றுவிப்பதற்காக ஆலோசனைகள் நடத்தப்படவேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்வதாக ஏற்கெனவே இந்தியத் தரப்புக்கு இலங்கையினால் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருந்ததையும் தனது அறிக்கையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவி குறிப்பிடத் தவறவில்லை.
தங்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ அளித்ததாக திருமதி சுவராஜ் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்த விடயம் குறித்து இன்றுவரை இலங்கை அரசாங்கத் தரப்பிடமிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இந்தியாவிலிருந்து வருகின்ற எந்தவொரு அமைச்சரிடமோ, இராஜதந்திரியிடமோ அல்லது அரசியல்வாதியிடமோ புதுடில்லிக்கு திருப்தி தரக்கூடிய ஒரு பதிலை தயார் செய்து தெரிவிப்பதே கொழும்புக்கு வழக்கமாகிப் போய்விட்டது. இந்தியாவின் சிலுசிலுப்பைத் தணிப்பதற்கு 13 என்று சொன்னாலே போதும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் எண்ணமாக இருக்கிறது. இந்தப் 13 ஐ கடந்த கால் நூற்றாண்டு காலமாக இலங்கையில் பதவியில் இருந்திருக்கக்கூடிய அரசாங்கத்தின் சகல தலைவர்களுமே புதுடில்லிக்கு கூறிவந்திருக்கிறார்கள். ஆனால், அந்தத் திருத்தம் ஒருபோதுமே உருப்படியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இது இந்தியாவின் தலைவர்களுக்குத் தெரியாததும் அல்ல. ஆனால், அவர்களோ இலங்கைத் தலைவர்களினால் இத்தகைய 13+ உறுதிமொழிகள் கூறப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தங்களது கருத்துக்களுக்கு கொழும்பு மதிப்பளிக்க வேண்டுமென்று நினைக்கிறது என்ற ஒரு மெத்தனமான எண்ணத்துடன் காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள். இனிமேலும் கூட 13 ஐப் பயன்படுத்தி இந்தியாவின் பரபரப்புகளைத் தணித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை இலங்கைத் தலைவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இந்தியத் தலைவர்களுக்கு கொழும்பு அளிக்கின்ற எந்த உறுதிமொழியையும் அவர்கள் பொருட்டாக நோக்குவதில்லை. கடந்த கால் நூற்றாண்டு கால அனுபவம் இதற்கு சான்று பகருகிறது. இந்திய எதிர்க்கட்சித் தலைவியிடம் ஜனாதிபதி ராஜபக்ஷ 13+ பற்றி எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்ற அறிவிப்பை அரசாங்கத் தரப்பினர் விடுப்பதற்கு நீண்ட நாள் காத்திருக்கத் தேவையில்லை என்பதே எமது அபிப்பிராயமாகும்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment