இலங்கைக்கு வருகை தந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியை சென்னையிலிருந்து வெளியிடப்படும் “இந்து’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் 13+ குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் என்று ஆட்டப்பந்தய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறுவதாகத் தென்படுகிறது என்று இந்து குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இந்திய தூதுக்குழு சந்தித்த போது அதிகாரப் பகிர்வு தொடர்பாகக் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லையென இலங்கையிலுள்ள முன்னணிப் பத்திரிகையொன்று தெரிவித்திருக்கிறது.
2012 ஜனவரியில் கிருஷ்ணா ஜனாதிபதியைச் சந்தித்ததைத் தொடர்ந்து உடனடியாகவே இந்தியத்தரப்பு பத்திரிகை அறிக்கையொன்றை விடுத்திருந்தது.
வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள், அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியதாக 13 ஆவது திருத்த அமுலாக்கத்துக்கு ஜனாதிபதி இணங்கியிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயத்திலும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் கடந்த பின்னர் கிருஷ்ணாவுடன் 13+ பற்றி தான் கலந்துரையாடியிருக்கவில்லை என்று ஜனாதிபதியை மேற்கோள்காட்டி “ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்திருந்தது.
திருமதி ஸ்வராஜ் ஏப்ரல் 20 இல் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத காலை ஆகாரச் சந்திப்பை மேற்கொண்டிருந்ததுடன் ஏப்ரல் 21 இல் இந்திய எம்.பி.க்களுடன் மீண்டும் அவரைச் சந்தித்திருந்தார். இலங்கைத் தமிழர்களின் துன்பநிலை தொடர்பாக கடந்த மாரிகால பாராளுமன்ற அமர்வின் போது இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் பெறுபேறாக களநிலைவரத்தை அறிந்துகொள்வதற்காக இந்திய எம்.பி.க்கள் குழு கொழும்புக்கு வருகை தந்திருந்தது.
திருமதி ஸ்வராஜுக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போது 13+ ஐ அமுல்படுத்தும் விவகாரம் எழுப்பப்பட்டிருக்கவில்லை என்று “ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்திருக்கிறது. 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் அதற்கு அப்பாலும் செல்வதற்கு கூட தான் தயாராக இருப்பது தொடர்பாகவும் தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்து தமது தூதுக்குழு பெற்றிருப்பதாக சுஷ்மா விடுத்திருந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது’ என்று அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் இந்திய எதிர்க்கட்சித் தலைவியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்ததாகவும் ஆனால் இந்த மாதிரியான உறுதிமொழி ஒருபோதும் வழங்கப்படவில்லை அல்லது கேட்கப்பட்டிருக்கவில்லை என்று இலங்கை அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்ததாக அப்பத்திரிகையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அலரிமாளிகையில் சனிக்கிழமை இடம்பெற்ற காலை ஆகாரச் சந்திப்பின் போது, அச்சமயம் ஜனாதிபதியாகவிருந்த ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு 13 ஆவதுதிருத்தத்தை இந்தியா எவ்வாறு நிர்ப்பந்தித்தது என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார். சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இந்தியத் தூதுக்குழு உறுப்பினர்கள் யாவரும் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தாவும் கலந்துகொண்டனர். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் முழுமையாக ஈடுபட்டுள்ளனர்’ என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியென வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன. ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் அழுத்தம் கொடுக்கும் முயற்சியென ஐலன்டின் கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22 இல் இடம்பெற்ற ஜெனீவா வாக்களிப்பைத் தொடர்ந்து 13 ஆவது திருத்தம் தொடர்பான உறுதிமொழியை இந்தியா நாடியிருந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. உண்மையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் முதலமைச்சரின் கரங்களில் காணி, பொலிஸ் அதிகாரங்கள் செல்வதையிட்டு இ.தொ.கா. தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் கூட மகிழ்ச்சியடையமாட்டாரென சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்திருந்தார். “பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே இலங்கை அரசாங்கம் உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அத்தெரிவுக்குழுவே இணக்கப்பாட்டு யோசனையை முன்வைக்குமென்றும் சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டை அதன் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி நம்புகிறார்’ என்று பத்திரிகையின் முதல்பக்கச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது’.
இந்திய எம்.பி.க்கள் குழு விஜயத்தின் இறுதியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், சுஷ்மாவிடம் கேள்வியொன்று கேட்கப்பட்டது. “அரசியல் தீர்வு தொடர்பாக ஜனாதிபதி உங்களுக்கு உறுதிமொழி அளித்ததாக நீங்கள் கூறியுள்ளீர்கள். கிருஷ்ணா இங்கு வருகை தந்திருந்தபோது 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி இணங்கியுள்ளதாக இந்தியத் தரப்பு கூறியிருந்தது. பின்னர் அதனை ஜனாதிபதி மறுத்திருந்தாரே?’ என்று சுஷ்மாவிடம் கேட்கப்பட்டது.
13+ குறித்து ஜனாதிபதியே கதைத்திருந்தார். ஆதலால் அமைச்சர் ஒருவர் கூறுகிறார் என்பதோ அல்லது மறுக்கிறார் என்பதோ அல்லது உறுதிப்படுத்துவதோ இங்கு கேள்வி அல்ல. “13+ குறித்து ஜனாதிபதியே தெரிவித்துள்ளார்’ இது சுஷ்மாவின் பதிலாக இருந்தது.
பின்வரும் விடயத்தை இந்தக் கேள்வியை எழுப்பிய நிருபர் சுஷ்மாவிடம் சுட்டிக்காட்டியிருந்தார். 2009 மே யில் பான் கீ மூனுக்கு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அதிகாரப் பகிர்வு குறித்து இலங்கை உறுதியளித்திருந்தது. 2010 ஜூனில் மன்மோகன் சிங்கிற்கு உறுதியளிக்கப்பட்டது. 2012 ஜனவரியில் கிருஷ்ணாவுக்கு உறுதியளிக்கப்பட்டது. இலங்கை ஜனாதிபதியுடனான தங்களின் கலந்துரையாடல்களின் போது அதிகாரப் பகிர்வு தொடர்பாக அவர்கள் தீவிரமாக இருக்கிறார்கள் என்பது குறித்து நீங்கள் உணர்ந்து கொள்கிறீர்களா?’
இது திருமதி ஸ்வராஜின் பதில்: “இந்த விடயத்தை ஒவ்வொரு சந்திப்பின் போதும் நாங்கள் வலியுறுத்தினோம். இன்றும் கூட மகிந்த ராஜபக்ஷ ஜி யுடனான சந்திப்பில் வலியுறுத்தியிருந்தோம். இந்தியப் பிரதமருக்கு, இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு, எனக்கும் கூட நீங்கள் உறுதிமொழி அளித்திருக்கிறீர்கள் என்று அவர்களுக்கு நாங்கள் நினைவுபடுத்தினோம். எதிர்க்கட்சித் தலைவராக அவரை நான் சந்தித்த போது கூட நாங்கள் நினைவூட்டியுள்ளோம். ஆனால், பாராளுமன்றத் தெரிவுக்குழு இதனை ஆராயுமென அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் மிக மிகத் தீவிரமாக இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நீங்கள் 13 ஆவது திருத்தம் பற்றி மட்டும் கதைக்கவில்லை. 13+ பற்றியும் கதைக்கிறீர்கள் என்று நாங்கள் கூறினோம். இந்த விடயமானது அதிகாரப் பகிர்விலும் ஏதோவொன்று அதிகமானதாகும். முட்டுக்கட்டை ஏற்படுவது தொடர்பாக நாங்கள் அழுத்தியுரைத்தோம். பேச்சுவார்த்தையில் ஸ்தம்பித நிலை உள்ளது. இந்த முட்டுக்கட்டை நிலைமை அந்த சர்வகட்சி சந்திப்பில் அகற்றப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். முன்னோக்ச்கி செல்ல வேண்டும் என்று கூறினோம். இந்த முட்டுக்கட்டை நிலைமை அகற்றப்பட வேண்டும் என்று இன்றும் கூட ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு நாங்கள் கூறியுள்ளோம். பலவந்தமாக அவர்களை பேச்சுக்குக் கொண்டு வர முடியாது என்று அவர் கூறினார். “ஆம் அவர்களை பலவந்தமாக உங்களால் கொண்டுவர முடியாது. ஆனால், ஊக்குவிப்பளிப்பதன் மூலம் அவர்களை (பேச்சுக்கு) கொண்டுவர முடியும்’ என்று நான் தெரிவித்தேன். தமிழ்க் கூட்டமைப்பைத் தூண்டி ஊக்குவியுங்கள், ஐ.தே.க.வைத் தூண்டி ஊக்குவியுங்கள், பேச்சில் இணையுமாறு ஊக்குவிப்பு அளியுங்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழு செயற்படாவிடின் அது செயற்படும் வரை முட்டுக்கட்டை நிலைமை தொடர்ந்திருக்கும். ஆதலால் சகல சந்திப்பின் போதும் நாங்கள் இந்த விடயத்தை வலியுறுத்தினோம்’ என்று சுஷ்மா பதிலளித்திருந்தார்.
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment