தமிழ் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்து அரசியல் தீர்வைக் கொடுத்தல் எடுத்தல் என்ற குறுகிய வட்டத்திற்குள் எதேச்சாதிகார தொனியில் நோக்கலாகாது எனத் தலையங்கமிட்டு 25.05.2011 ஆம் திகதி தினக்குரல் இதழுக்கு எழுதிய எனது கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
விடுதலைப்புலிகள் கேட்டவற்றைக் கொடுக்க மாட்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதி ராஜபக்ஷ ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறி வந்துள்ளார். அதாவது பிரச்சினைக்கான தீர்வு கொடுத்தல் எடுத்தல் என்ற எதேச்சாதிகாரத் தொனியிலேயே நோக்கப்படுவதாக இதனைக்கொள்ள வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டதால் பிரச்சிøனகள் முற்றுப்பெற்றுவிட்டது என்று கூறுபவர்களும் தமிழர் பலவீனப்பட்டுள்ள நிலையில் தாம் விரும்பிய தீர்வைத் திணித்து விடலாம் என்று எண்ணுபவர்களும் அரசாங்கத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவ்வியக்கம் தோற்றம் பெற்றதற்கான அடிப்படை பிரச்சினைக்கு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய தேவையினை ராஜபக்ஷ அரசா ங்கம் தட்டிக்கழித்த வண்ணமள்ளமை நிதர்சனம். உண்மையில் தமிழர் இந்த நாட்டின் இறைமையிலும் வளர்ச்சியிலும் பங்குதாரர்கள் என்ற வகையில் தமக்குறித்தான அதிகாரத்தை தலைநிமிர்ந்து வலியுறுத்த வேண்டுமே தவிர அடக்கி வாசிக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தேன்.
22.04.2012 ஆம் திகதி வார இறுதி ஆங்கில இதழொன்றில் (சண்டே லீடர்) எவ்வாறு அந்நிய தலையீட்டுக்கு முடிவு கட்டலாம் என்று மகுடமிட்டு தீட்டப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது. முற்றிலும் பெறுமதி வாய்ந்ததுமான அரசியல் கருத்தில்லை. மேற்கோள்காட்டுவது வெகுபொருத்தமானதாகும். விபரம் வருமாறு:
தமிழர் முன்வைக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தேவையானது பில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர்கள் கொண்ட அந்நிய முதலீடுகள் அல்ல. அதற்குத்தேவை அரசியல் மனஉறுதி.அதுவே காணப்படாமல் உள்ளது. அரசாங்கத்தினதும் அநேகமான சிங்களவர்களினதும் அப்பட்டமான தவறு என்னவென்றால் தமிழர்களுக்கு (தங்களால்)"உரிமைகள் கொடுத்தல்' என்பதாகும். தமிழருக்கு அரசாங்கத்தினாலோ சிங்களவர்களாலோ உரிமைகள்"கொடுக்க வேண்டும்'என்பதல்ல ஏன்? சிங்களவர் போலவே தமிழர், காலாதி காலமாக இந்த நாட்டின் பிரஜைகளாயிருந்து வந்துள்ளனர் என்பதால் தமிழருக்குரிய உள்ளார்த்தமான இயல்பான உரிமைகள் சட்ட ரீதியாக அமுல் செய்யப்பட வேண்டும்.
இலங்கைத் தேசிய இனப்பிரச்சினை என்பதைத் தீர்த்துக் கொள்வதற்கு புதுடில்லி, வாஷிங்டன், லண்டன், அல்லது வேறு மேற்கு நாடுகளிலிருந்து ஆசீர்வாதமோ அனுசரணையோ தேவையில்லை. தமிழ், சிறுபான்மையினர் சமத்துவமான பிரஜைகள் என்பதை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் பரிச்சினையை அணுக வேண்டும். ஏனென்றால் சிறுபான்மையினர் உரிமைகள் என்ற பிரச்சினையை சில அந்நிய சத்திகள் ஆயுதமாகப் பாவித்து நாட்டின் மீது தாம் கட்டுப்பாடுகள் வைத்திருப்பதற்குக் கொடுக்கும் அழுத்தம் மிக மோசமானதாயிருக்கும்
.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடப்பிலா?
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் (LLRC) பரிந்துரைகளில் ஒன்று தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வு அவசியம் என்பதாகும். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி ராஜபக்ஷ 04.02.2012 ஆம் திகதி ஆற்றிய சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர், அதாவது பெப்ரவரி 27 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் சபையின் (UNHR-C) 19 ஆவது அமர்வுகள் ஆரம்பமாகின. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டு வரப்போவதையிட்டு அதற்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் அரச தரப்பினால் முடுக்கிவிடப்பட்டிருந்தன. பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டதாகிய பகீரதப் பிரயத்தனம். பயனற்றதாகி 22.03.2012 ஆம் திகதி பிரேரணை நிறைவேற்றப்பட்டதும். அதற்கெதிரான பல்வேறு ஆக்ரோசமான கருத்துகள் அரச தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்டதை யாரும் அறிவர்.
இறுதியாக அதற்கெதிரான ஆர்ப்பாட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நடத்தப்பட்டது."இலங்கையின் விவகாரங்களில் எவரையும் தலையிட விடமாட்டோம்.' 'சர்வதேச சதிகளை தோற்கடிப்பதற்கு ஒன்றுபடுவோம்.' 'இந்தியாவுக்கு எதுவித பொருளாதார சலுகைகளையும் வழங்க வேண்டாம்.'அராஜகத்தை உருவாக்குவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் சதி அமெரிக்காவின் பிரேரணை முன்னெப்போதுமில்லாத அளவு ஆபத்தானது என்றெல்லாம் மனம் போன போக்கில் சுலோகங்கள் அள்ளி வீசப்பட்டன.
புத்திஜீவிகள் குழுவின் (Friday Forum) நிதானமான ஆலோசனைகள்
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு விரும்பாத அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் புறப்படுவது சாத்தியமானதா என்பது தான் இங்கே எழும் கேள்வியாகும். எனவே இழுத்தடிக்கும் தந்திரோபாயத்தையே ராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொள்ளப் போவதையே எதிர்பார்க்க முடியும். இது விடயமாக ப்றைடோ போறம் (Friday Forum) எனப்படும் புத்திஜீவிகள் குழு நிதானமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது, குறித்த குழுவின் சார்பில் முன்னாள் ஐ.நா. பிரதிச் செயலாளர் (ஆயுதக் குறைப்பு பிரிவு) ஜயந்த தனபால மற்றும் முன்னாள் கொழும்புப் பல்கலைக்கழக உபவேந்தர் சாவித்திரி குணசேகர அம்மையார் ஆகியோர் விடுத்த அறிக்கையில் சில காத்திரமான கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதாவது, இந்த நாட்டின் விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று பொதுமக்கள் மத்தியில் அடிக்கடி பரப்புரை செய்து வருவது துர்ப்பாக்கியமானதாகும். ஏனென்றால் சர்வதேச சமூகத்துக்கும் இலங்கைக்கும் பிணைப்பு எதுவும் இல்லையென்று அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. உண்மையில் சர்வதேச சமூகம் என்று வரும் போது இலங்கை அதன் ஒரு அங்கம் என்பதாலும், ஐ.நா. சாசனம் மற்றும் காலத்திற்குக் காலம் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதாலும், மனித உரிமைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையில் (UNHRC) மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை எழுப்பப்படுவது நியாயபூர்வமானதாகும் என்றும் மேற்குறித்த புத்திஜீவிகள் குழு அறிக்கையில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆக்க பூர்வமான செயல்திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள் எதிர்மறையானதும் முரண்பாடானதுமான பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டு வருவது கேடானது என்று அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) அறிக்கையை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசாங்கத்தினதும், ஜனாதிபதியினதும் நம்பகத்தன்மையானது சர்வதேச சமூகத்தின் மத்தியில் இழக்கப்பட்டுவிடும் என்றும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் வெற்றி நமதே என்று எமக்குத் தோல்வி இல்லை என்றொரு மமதையில் அரசாங்கம் மூழ்கியுள்ளதென மேற்குறித்த புத்திஜீவிகள் குழு வெளிப்படுத்தியுள்ளது ஆணித்தரமான கருத்தாகும். "இடிப்பானா இல்லா ஏரோ மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்' என்னும் வள்ளுவர் வாக்கு ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு மிகவும் பொருத்தமாயுள்ளது.
இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம்
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்டதொரு தீர்வை நோக்கி நகரலாம், நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தலாம்.
பொருளாதார அபிவிருதிமட்டும் நிரந்தர சமாதானத்தைக் கூடியதல்ல. அதற்கு அரசியல் தீர்வு இன்றியமையாதது என்றெல்லாம் இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் தலைமையில் வந்த இந்திய பல்கட்சி பாராளுமன்றக் குழு கருத்து வெளியிட்டிருந்தது. அரசாங்கத்தில் பல கட்சிகள் அங்கம் வகித்து வருவதால் அவர்களுடைய கருத்துகளையும் அலசி ஆராய்ந்து அவற்றின் ஆலோசனைகளையும் உள்வாங்கியே அரசாங்கம் செயற்பட முடியும் என்று சபை முதல்வரும் நீர்ப்பாசன அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா இந்திய தூதுக்குழு முன்னிலையில் அறிவித்தார்.
தூதுக்குழு நாட்டைவிட்டு ஏகியதும், இந்திய பாராளுமன்றக்குழுவின் (IPD) தாளத்திற்கு நாம் ஆடமுடியாது. இலங்கை அரசாங்கம் உள்நாட்டுத் தயாரிப்பான (Home Grown) தீர்வையே வழங்கும். அவசரப்பட்டு ஒன்றும் செய்ய முடியாது. படிப்படியாகவே முன்னேறிச் செல்ல முடியும் என்றெல்லாம் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) அறிக்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி தத்தம் நிலைப்பாட்டினை ஒரு நாளில் அறிவிக்குமாறு 21.04.2012 ஆம் திகதி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடம் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்குமிடத்து நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் பெரிதும் கவலையளிப்பதாயுள்ளன. அந்த வகையில் அரசாங்கம் திக்குமுக்காடிக் கொண்டிருக்கையில் வாழ்க்கைச் செலவைத்தாக்குப் பிடிக்க முடியாமல் பரந்து பட்ட மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அராஜகமும் அநாகரிகமும் தாண்டவ மாடிக் கொண்டிருக்கின்றன. பௌத்தத்திற்கு முதலிடம், பௌத்த புண்ணிய பூமி என்ற போர்வையில், சிங்கள பௌத்தம் முன்னிலைப் படுத்தப்படுகிறதே ஒழிய கௌதம பௌத்தம் குழி தோண்டிப் புதைக்கப்படும் பரிதாப நிலைமையே காணப்படுகிறது. 1992 இல் இந்தியாவில் பாப்ரி மஸ்ஜிட் பள்ளிவாசல் பாரத ஜனதா அதி தீவிர வாத சக்திகள் தலைமையில் இடிக்கப்பட்டதையே இலங்கையில் சமகால தம்புள்ள சம்பவம் ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது. சமாதான சகவாழ்வு சகிப்புத்தன்மை போன்ற சாதாரண ஜனநாயக விழுமியங்கள் சிங்கள பௌத்த சமூகத்தினால் பட்டவர்த்தனமாக மென்மேலும் புறந்தளளப்பட்டு வருவது கண்கூடு.
இத்தகைய இலட்சணத்தில் இலங்கைத் திருநாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பது தான் இன்றைய பில்லியன் டொலர் கேள்வியாகும்
வ.திருநாவுக்கரசு
தினக்குரல்
0 கருத்துரைகள் :
Post a Comment