சிறிலங்காவினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் புலியெனும் கிலி


ஏறத்தாள மூன்றாண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக பட்டாசு கொளுத்தி கொண்டாடியது மகிந்த அரசு. போர்க்குற்ற மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக நேரடிக் கண்டனங்களுக்கு உட்பட்டிருக்கும் மகிந்தாவின் அரசு பல்வேறு விதமான புரளிகளை கடந்த இரண்டு வருடங்களாக கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது. கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவிற்கு எதிராக 24 நாடுகள் வாக்களித்தன. சிறிலங்காவிற்கு எதிராக இந்தியாவும் வாக்களித்ததுதான் சிறிலங்காவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதன் காரணமாகத்தான் சிறிலங்கா அரசு கிளப்பிவிட்டிருக்கிறது மீண்டும் புலி எனும் கிலியை.

காலத்திற்குக் காலம் இந்தியாவின் அரசியலில் என்றாலும் சரி, சிறிலங்காவின் அரசியலில் என்றாலும் சரி “புலி" எனும் சொல் புகழ்பூத்ததாகவே இருந்து வந்துள்ளது. தமது சுய அரசியல் இலாபங்களுக்காக பல அரசியல் கட்சிகள் புலிகளை கேடயமாகவே பாவித்து வந்தார்கள். ஒரு காலத்தில் தாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்று தெரிவித்தால்த்தான் தேர்தல்களில் வெற்றி பெறலாம் என்கிற நிலை தமிழகத்தில் இருந்தது. ராஜீவ் காந்தி மரணத்தின் பின்னர் புலிகளுக்கு எதிராக அறிக்கைகளை விட்டும், மேடைகளில் பேசியும் வந்தால்த்தான் வெற்றி பெறலாம் என்கிற நிலை 2009-ஆம் ஆண்டு வரை நீடித்தது. 

மே 2009-இல் முடிவுற்ற நான்காம் கட்ட ஈழப் போருக்குப் பின்னர் தமிழகத்தின் நிலையில் பூரண மாறுதல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசினால்த்தான் மக்கள் மத்தியில் எடுபடும் என்கிற நிலை தற்போது நிலவுகிறது.சிறிலங்கா அரசியல் வட்டாரத்திலும் புலிகளை வைத்தே அரசியல் செய்தன பல அரசியல் கட்சிகள்.புலிகளின் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கூறியே இதுவரை காலமும் ஆட்சிக்கு வந்தார்கள் சிறிலங்காவின் முக்கிய இரு பிரதான அரசியல் கட்சிகளும். 

விடுதலைப் புலிகளுக்கு எதிராக பேசினாலே போதும் சிங்கள அரசுகளுடன் எவரும் இணையலாம் என்கிற நிலையே தொடர்ந்தும் சிறிலங்காவில் நிலவுகிறது. சிறிலங்காவின் அரச படையினருக்கு எதிராக செயற்பட்ட பல தமிழ் ஆயுதக் குழுக்கள் புலிகளுக்கு எதிராக செயற்பட்டே சிங்கள அரசுகளுடன் இணைந்தார்கள். 

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளான கருணா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டதன் காரணமாகத்தான் சிங்களக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று சுகபோக வாழ்க்கைகளை அனுபவிக்கிறார்கள். இதைப் போன்றேதான் டக்ளஸ் தேவானந்தா போன்ற பல எட்டப்பர்களும் புலிகளுக்கு எதிராக செயற்பட்டே ஆட்சி அதிகாரங்களில் தொடர்ந்தும் இருக்கிறார்கள். 

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாக முன்னர் கூறிய சிறிலங்கா, தனது நாட்டிற்கு எதிராக இந்தியா செயற்பட ஆரம்பித்துவிட்டது என்பதனை உணர்ந்து மீண்டும் புலி என்கிற புரளியைக் கிளப்பி விட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் சிறிலங்காவிற்கு எதிராக செயற்பட ஆரம்பித்ததைக் கண்டு ஆடிப் போய்விட்டது சிங்கள அரசு. 

திராவிடக் கழகத்தின் தலைவர் வீரமணி தமிழீழ ஆதரவு அமைப்பான “ரெசோ" என்கிற அமைப்பை மீண்டும் இயங்க வைக்க அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்னர் அழைப்பை விடுத்திருந்தார்.இந்நிலையில் சிறிலங்காவின் புதுக் கதை இந்திய அரசியல் வட்டாரத்தில் பேரதிர்ச்சியையே உண்டுபண்ணி உள்ளது. 

சிங்களத்தின் பரப்புரை இந்தியாவையே கலக்கியுள்ளது

தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப் பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு, கிழக்கில் மறைந்திருந்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் “த ஐலன்ட்” நாளிதழ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டது. 

குறித்த நாளிதழில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:“வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே இவர்களின் இலக்கு என்று சிறிலங்கா காவல் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. திருகோணமலை குச்சவெளியில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று விடுதலைப் புலிகள் மூவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.”

“சந்தேக நபர்கள் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தாம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக கூறியுள்ளனர். சிறிலங்கா திரும்ப முன்னர் இவர்கள் தமிழ்நாட்டில் மூன்று இரகசிய முகாம்களில் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுள்ளனர். மீனவர்கள் போன்று வேடமிட்டுக் கொண்டு வடக்கு, கிழக்கில் இரகசிய நடவடிக்கைளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற பல கொலைகளின் பின்னணியில் இவர்களே இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வு சேவைகள் சந்தேகம் கொண்டுள்ளன.”

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குறித்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக தீவிரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர். கொல்லப்பட்ட ஈ.பி.டி.பி. உறுப்பினரின் சடலத்துக்கு அருகே, கிடந்த துண்டுக் காகிதம் ஒன்றில், 'துரோகிகளுக்கு மரணம்: நாங்கள் மீண்டும் வந்துள்ளோம் – விடுதலைப் புலிகள்” என்று எழுதப்பட்டிருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்ததாக“த ஐலன்ட்” நாளெடு செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் புலியெனும் கிலியை உண்டுபண்ணுவதன் ஊடாக இந்திய அரசை தமிழக அரசிற்கு எதிராக திருப்பிவிடலாம் என்று சிறிலங்கா ஒரு புறம் கருதி இருந்தாலும், இன்னொரு புறம் சிறிலங்கா விடயத்தில் இந்தியா தற்போது கடைப்பிடித்து வரும் வெளிநாட்டுக் கொள்கையை தொடர்ந்தும் பேண வழிவகுக்கும் இது போன்ற புரளிகள் என்று சிறிலங்கா அரசு கருதுகிறது போலும். அத்துடன், புலிகளின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இருக்கிறது என்று கூறினால்த்தான் சிறிலங்கா அரசிற்கு தொடர்ந்தும் இந்தியா பலவிதமான உதவிகளை வழங்கும் என்கிற கருத்து சிங்கள ஆட்சியாளர்களிடம் நிலவுகிறது. 

சிறிலங்காவிற்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் மகிந்தாவின் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தனது வெளிநாட்டு அமைச்சில் பல முக்கிய மாற்றங்களை சிங்கள அரசு செய்து வருகிறது.இராஜதந்திர ரீதியில் சிறிலங்கா தோற்றதன் காரணமே சிறிலங்கா ஜெனீவாவில் தோல்வியடையக் காரணம் என்பதனையே சிறிலங்காவின் வெளிநாட்டு அமைச்சில் செய்யப்பட்டுவரும் பல மாற்றங்கள்.சர்வதேச மட்டத்தில் சிறிலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை உருவாக்க வேண்டுமாயின் மீண்டும் புலி என்கிற கிலியை தோற்றிவிப்பதன் மூலமாக சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது சிறிலங்கா அரசு. 

தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகள் சிறிலங்காவிற்குள் ஊடுருவி இருப்பதான செய்தி, வடக்குஇ கிழக்குப் பகுதிகளிலிருந்து சிங்கள இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்பதை கூறுவதுடன், மேலும் இராணுவ விஷ்தரிப்புக்களை தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளலாம் என்று கருதுகிறது சிங்கள அரசு.

விடுதலைப் புலிகளை இந்தியா மீண்டும் வளர்க்கிறது என்கிற வாதத்தை முன்வைத்து, இந்தியாவின் இரட்டை வேடத்தை உலக அரங்கில் தெரிவித்து இந்தியாவிற்கு அவப்பெயரை உருவாக்கலாம் என்று கருதுகிறது சிறிலங்கா. குறிப்பாகஇ இந்தியாவில் இயங்கும் விடுதலைப் போராளிகளை இந்தியா பயங்கரவாதிகள் என்று கூறி போர் செய்கிறது. அத்துடன், விடுதலைப் புலிகளை எப்படி வளர்க்க முடியும் என்கிற வாதத்தை உலக அரங்கில் முன்வைத்துப் பிரச்சாரம் செய்ய இவ்வாறான ‘புலி’ என்கிற புரளி உதவியாக இருக்கும். 

இந்தியாவை எதிர்த்து பிரச்சாரங்களை செய்வதனால் இந்தியாவின் பரம எதிரிகளான சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆதரவை தொடர்ந்தும் பெறலாம் என்கிற கருத்து சிறிலங்கா அரச தரப்பினருக்கு இருக்கிறது. எது எப்படியென்றாலும் சிறிலங்கா புதிதாக கிளப்பிவிட்டிருக்கும் கிலி நிச்சயமாக இந்தியாவைக் கலக்கியுள்ளது என்றால் மிகையாகாது.

இந்தியாவின் திடீர் மறுப்பு

சிறிலங்காவின் காவல் துறையினரின் அறிக்கை வெளிவந்த மறுகணமே அறிக்கைகளை விட்டார்கள் தமிழகத்தின் காவல் துறை, இந்திய மத்திய அமைச்சர்கள் மற்றும் இந்தியாவின் சிறிலங்காவிற்கான தூதரகம். இந்தியத் தரப்பினர் குறித்த செய்தியைக் கேட்டுவிட்டு தமது கோபத்தை அறிக்கை வாயிலாகத் தெரிவித்துள்ளார்கள். குறித்த குற்றச்சாட்டு இந்திய மத்திய அரசை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகளுக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சிறிலங்காவின் காவல் துறையினரை மேற்கோள்காட்டி வெளிவந்த செய்தியை தமிழக காவல் துறை அதிபர் அறிக்கை வாயிலாக மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: “இலங்கையைச் சேர்ந்த ஆங்கில நாளேடு ஒன்றில், 150 விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் மூன்று இரகசிய முகாம்களில் ஆயுதப் பயிற்சி பெற்று, பின்னர் அவர்கள்,மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்குத் திரும்பி, அந்நாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய ஆயுத பயிற்சி முகாம்கள் தமிழ்நாட்டில் எதுவும் இல்லை."

“சில காலத்திற்கு முன்பு இது போன்ற ஒரு தகவல் இலங்கையில் கிளப்பப்பட்டு பின்னர் அது வெளியானதற்கு பழியை இந்திய ஊடகங்களின் மீது தவறாக போட்டு, அச்செய்தி திரும்பப் பெறப்பட்டது. தமிழ்நாட்டில் தீவிரவாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு, மறைமுக அல்லது வெளிப்படையான தீவிரவாதச் செயல்கள் ஏதும் நடைபெறாதபடி கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. யாராவது தீவிரவாதி எனக் கண்டறியப்பட்டால், அவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள்," என்று தனது அறிக்கையில் தெரிவித்தார் தமிழக காவல் துறை அதிபர். 

சிறிலங்காவிற்கான இந்தியத் தூதரகம் இது குறித்து விடுத்த அறிக்கையில், “த ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்த ‘புலிகள் சிறிலங்காவின் உறுதித் தன்மையைப் பலமிழக்கச் செய்வதற்காக இந்தியாவிலிருந்து திரும்புகிறார்கள்’ என்கிற செய்தி எமது கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இந்தச் செய்தியிற் குறிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் இரகசிய முகாம்களில் பயங்கரவாதிகள் பயற்சியளிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய கருத்து முற்று முழுதாகத் தவறானதும்இ அடிப்படையற்றதுமாகும். இது சம்பந்தமாக இரு நாட்டினது பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து செயலாற்றுவதுடன் இத்தகையவொரு தகவல் அவர்களால் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்படவும் இல்லை," என்று அவ் அறிக்கையில் இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் இது குறித்து தெரிவிக்கையில், “இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக சிறிலங்காவில் இருந்து வெளியாகும் நாளிதழில் வெளியான செய்தி ஆதாரமற்றது".இது குறித்து மேலும் அவர் எதுவும் கூறவில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நல்ல உறவைக் கெடுக்க சில தீய சக்திகள் முயன்று வருவதாக குறிப்பிட்டார் சிதம்பரம்.ராஜீவ் - ஜெ.ஆருக்கு இடையில் இடம்பெற இந்திய - சிறிலங்கா ஒப்பந்தத்தின் போது சிதம்பரம் முக்கிய பங்கு வகித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

காலத்திற்கு காலம் சிங்கள அரசுகளினால் ஏவிவிடப்படும் இது போன்ற செய்திகளினால் உலகின் பல நாடுகள் சிறிலங்காவை நம்பியே ஆதரவுகளை வழங்கி வந்தன.அமெரிக்காவை சேட்டை செய்து பார்த்தது சிங்கள அரசு. சர்வதேசப் பயங்கரவாதத்தை முறியடிக்கப் போவதாக கங்கணம் கட்டி நிற்கும் அமெரிக்கா புலிப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டு அறிக்கைகளையும் மற்றும் பல ஆர்ப்பாட்டங்களையும் செய்தது சிங்கள அரசு. சிறிலங்காவின் கருத்துக்களை செவிமடுக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதனையே கடந்த மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகிறது.

தற்போதைய அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் சில வருடங்களுக்கு முன்னர் தெளிவாக ஒன்றைக் கூறினார். உலகில் இயங்கும் அனைத்து பயங்கரவாத அமைப்புக்களையும் ஒன்றாக பார்க்கக் கூடாதென்பதை ஆணித்தரமாகக் கூறினார் ஹில்லரி அம்மையார். சில இயக்கங்கள் உண்மையாகவே தமது மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்று கூறிய ஹில்லரி அவர்கள், மறைமுகமாக விடுதலைப் புலிகளையும் சுதந்திரத்திற்காக போராடும் இயக்கங்களின் பட்டியலில் சேர்த்தே பேசினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிங்கள அரசினால் புதிதாக ஏவிவிடப்பட்டிருக்கும் புலிகள் மீண்டும் தமிழகத்தில் பயிற்சி பெற்று வடக்கு, கிழக்குப் பகுதிகளிற்குள் புகுந்துள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டு என்பது இந்திய அரசிற்கு விசப் பரீட்சையாகவே உள்ளது. 

சிங்கள அரசின் புலியெனும் கிலியை இந்தியா எப்படிக் கையாளப் போகிறது என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அறிக்கை வாயிலாக மறுப்பைத் தெரிவித்துவிட்டு இந்தியா இருக்குமேயானால் சிங்கள அரசு இது போன்ற பல கதைகளை தொடர்ந்தும் வெளியிட்டுக் கொண்டே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அனலை நிதிஸ் ச. குமாரன்
Share on Google Plus

About அகிலன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment