சிறிலங்காவில் வெளிநாட்டார் தலையீட்டை எப்படி தடுப்பது?


இந்தத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ 'வழங்க' வேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறிலங்காத் தீவின் குடிமக்கள். ஆகவே சிங்களவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பது போன்று சிறிலங்காத் தமிழ் மக்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு சட்டம் இடங்கொடுக்க வேண்டும்.இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The Sunday Leader ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஸ் தலைமையில் 12 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தமையானது, குதிரை லயத்தை விட்டுச் சென்ற பின்னர் அதன் கதவுகளை மூடுகின்ற செயலுடன் ஒப்பிடப்படுகின்றது. அதாவது இவ் இந்தியக் குழுவின் சிறிலங்காவுக்கான வருகையானது காலந்தாழ்த்தி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் எனக் கருதப்படுகின்றது.


சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் அரசாங்கமானது, அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளாது அதனைத் தவிர்க்கவே விரும்பியது. ஆனால் இத்தீர்மானது இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியா இதனை ஆதரித்து தனது வாக்கை அளித்தமையானது சிறிலங்காவை எரிச்சல் கொள்ள வைத்தது.


இந்நிலையில், தற்போது சிதைந்து போயுள்ள இந்தோ – சிறிலங்கா உறவை எவ்வாறு மீளவும் புதுப்பிக்க முடியும்? இவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்கனவே பேணப்பட்ட உறவானது சில காரணங்களின் நிமித்தம் மீளவும் புதுப்பிக்கப்படும் என இரு நாட்டு ஆய்வாளர்களும் நம்பிக்கை கொள்கின்றனர்.


சிறிலங்காவில் யுத்தம் இடம்பெற்ற போது சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமாக இருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு சிறிலங்கா அரசாங்கம் தான் பெற்றுக் கொண்ட வெற்றியை அறிவித்ததன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகின்றது என்பது கண்கூடு. இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் பீட அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் கீழ்ப்படிந்து நடந்ததுடன், இந்திய மத்திய அரசு தனது உதவிக்கரத்தை சிறிலங்காவுக்கு வழங்கியிருந்தது.


கடந்த வாரத்தில் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த இந்திய நாடாளுமன்றப் பிரதிநிநிதிகள் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவது என்ன? தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஆகியோர் தமது கட்சிப் பிரதிநிதிகளை சிறிலங்காவுக்குச் சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவிலிருந்து நீக்கியமையானது, உண்மையில் சிறிலங்காவுக்கு விழுந்த அடியாக உள்ளது.


சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஆகிய இருவரும் சிறிலங்காவுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதில் தமக்கிடையே முண்டியடித்துக் கொண்டதுடன், சிறிலங்கா விவகாரத்தை தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவப்படுத்தி அதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முனைகின்றனர். அத்துடன் சிறிலங்கா விவகாரம் தொடர்பாக தமக்கிடையே போட்டி போட்டுக் கொள்ளும் இவ்விரு தமிழ்நாட்டுத் தலைவர்களும் இதன் மூலம் தமது வாக்களர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான போட்டியில் இறங்கியுள்ளனர்.


சிறிலங்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தி, மேலும் முன்னேற்றும் நோக்குடன் தற்போது இந்திய நாடாளுமன்றக் குழுவினர் சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த நிலையில், தமிழ்நாட்டின் முக்கிய இரு பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இந்நிலையில், இவ் இந்தியக் குழு சிறிலங்கா வருகை தந்ததற்கான நோக்கம் அடையப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. யுத்த நடவடிக்கையில் அகப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக சிறிலங்காவுக்கு வருகை தந்த இந்தியப் பிரதிநிதிகள் விசாரணை செய்யவுள்ளனர். அத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறிலங்காவில் நிலவும் அமைதிச் சூழலில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எவ்வாறான விலைகளைக் கொடுத்துள்ளனர் என்பது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.


பல பத்தாண்டுகளாக யுத்தத்துக்குள் அகப்பட்டுக் கொண்ட தமிழ் மக்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்து, தமது வீடுகளை இழந்து, காயப்பட்டு, சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கின்ற நிலையில், தமது வாழ்வில் தாம் திருப்தியாகவும் மகிழ்வாகவும் வாழ்வதாக கூறுவார்கள் என சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்த இந்தியப் பிரதிநிதிகள் எதிர்பார்த்திருக்க முடியாது.


சிறிலங்கா அரசாங்கமானது நிலக்கண்ணிவெடிகளை அகற்றி பல ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றிய போதிலும், இன்னமும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத மக்களும் உள்ளனர். அத்துடன் சிறிலங்காவில் காணாமற்போதல், பொதுமக்கள் உயிரிழப்பு, விசாரணைகள் எதுவுமின்றி சந்தேகநபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுதல் தொடர்ந்தும் நடைபெறுவதாக ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கையிலும், சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இந்தியக் குழு கோரியிருந்தது.


சிறிலங்காவில் யுத்தம் முடிந்த பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் மட்டுமே ராஜபக்ச அரசாங்கத்துக்கு பெருமை தேடிக் கொடுக்கின்றன. பல பத்தாண்டுகளாக செய்கை பண்ணப்படாத விவசாய நிலங்களில் தற்போது பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளையில், வடக்கு கிழக்கில் வாழும் இளையோர் நிரந்தர வருமானத்தை ஈட்டித் தரும் தொழில் வாய்ப்பை எதிர்பார்த்து நிற்கின்றனர்.


சிறிலங்காவின் வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு என எந்தப் பகுதியில் வாழும் இளையோர்களும் விவசாயத்தில் ஈடுபடுவதை விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்தளவில் தொழிற்சாலைகளில் அல்லது அலுவலகங்களில் பணிபுரிவதையே விரும்புகின்றனர். யுத்தத்தால் அழிவடைந்த பிரதேசங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள், தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்றவற்றை மீளப் புனரமைக்கும் திட்டங்கள் மூலம் தற்போது சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவை சிறிலங்கா அரசாங்கத்தால் திருப்திப்படுத்த முடிந்ததா?


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டு சிறிலங்காவில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு தேட முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை வெளிநாடுகளால் சிறிலங்காவில் முதலீடு செய்யப்படும் பல பில்லியன் டொலர்களால் பூர்த்திசெய்து கொள்ள முடியாது. தமிழ் மக்களின் அரசியல் அவாக்கள் அரசியற் தீர்வு மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும்.


தமிழ் மக்களுக்கு 'உரிமைகளை வழங்குதல்' என்றே சிறிலங்கா அரசாங்கமும், சிங்கள மக்களும் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் சிறிலங்காத் தீவில் குடியுரிமை பெற்று, இந்தத் தீவில் காலாதி காலமாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு அவர்களது உரிமைகளை சிறிலங்கா அரசாங்கமோ அல்லது சிங்கள மக்களோ 'வழங்க' வேண்டிய தேவையில்லை. சிங்கள மக்களைப் போலவே தமிழ் மக்களும் சிறிலங்காத் தீவின் குடிமக்கள். ஆகவே சிங்களவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பது போன்று சிறிலங்காத் தமிழ் மக்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு சட்டம் இடங்கொடுக்க வேண்டும்.


சிறிலங்காவைப் பொறுத்தளவில் தனது நாட்டில் நிலவும் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசாங்கத்தினதோ அல்லது அமெரிக்காவினதோ அல்லது பிரித்தானியாவினதோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளினதோ அங்கீகாரமோ அல்லது ஆசிர்வாதமோ தேவையில்லை. சிறிலங்காவானது தனது நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினையை தானாகவே தீர்த்துக் கொள்ள முடியும். அதாவது தனது நாட்டில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரித்து அவர்களை குடிமக்களாக ஏற்று சமமாக நடாத்துவதற்கு ஏதுவான வழிமுறைகளை உருவாக்கி அதன் மூலம் தேசிய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும். ஒரு தேசத்தை நசுக்குவதில் இறுதி ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்ற சிறுபான்மையினரின் பிரச்சினையைப் போல, சிறிலங்காவில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்படும் போது உலகின் வல்லரசு நாடுகள் ஏனைய நாடுகளை அடக்கி, நசுக்குவதைப் போல சிறிலங்காத் தீவிலும் தமது அதிகாரத்தை நிலைநிறுத்துவர்.


சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட 'யுத்த மீறல்களை' காரணங் காட்டி, சிறிலங்கா மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுக்கின்றார். ஈழப் பிரச்சினை தொடர்பாக சிறிலங்காவில் கருத்து வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என தி.மு.க தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுக்கின்றார். இதேவேளையில், சிறிலங்காவின் கரையோரத்திலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் உள்ள தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.


Fukushima இல் ஏற்பட்ட அணுக்கசிவின் பின்னர் ஜேர்மன் மற்றும் யப்பான் போன்ற நாடுகள் கூட தமது நாடுகளில் அமைக்கப்பட்ட அணுமின் நிலையங்களை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்போது, கூடங்குளத்தில் அதாவது பாக்குநீரிணைக்கு குறுக்கே சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக அமைக்கப்படும் அணுமின் நிலையம் தொடர்பில் சிறிலங்காவில் உள்ளவர்கள் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கூடங்குள அணுமின் நிலையத்தில் அணுக் கசிவு ஏற்படும் பட்சத்தில், சிறிலங்கா முழுவதும் அணுக்கதிர் தாக்கத்துக்கு உட்பட்டுவிடும். இவ்வாறானதொரு அபாயம் நிலவுகின்ற நிலையில் சிறிலங்கர்கள் எவரும் இது தொடர்பாக வாய்திறக்காது உள்ளனர். தீவிர பௌத்த சிங்கள தேசியவாதி என தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் சம்பிக்க றணவக்க கூட கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக தனது எதிர்ப்பைக் காட்டவில்லை. ஜெனீவா கூட்டத் தொடரின் பின்னர் இந்தியாவுடனான மீளிணக்கப்பாட்டுக்கான விலையாக இதற்கான எதிர்ப்புக் காட்டப்படவில்லையா?


சிறிலங்கர்களாகிய நாங்கள் எமது சொந்த உரிமைகளை நாமாகவே கையாண்டு கொண்டால், அந்நிய சக்திகள் தமது தலையீட்டை சிறிலங்காவில் மேற்கொள்ள முடியாது. தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்க வேண்டும். இதன் மூலம் அந்நிய சக்திகளின் தலையீட்டை தவிர்க்க முடியும்.

புதினப்பலகை
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment