ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத சூழ்நிலையில், முன்னிலை சோசலிசக் கட்சியின் பிறேம்குமார் குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவராக – அதன் முதலாவது மாநாட்டில் பொறுப்பேற்க பிறேம்குமார் குணரட்ணம் தயாராக இருந்தார். அந்த முதலாவது மாநாட்டுக்கு சில நாட்கள் முன்னதாகவே இந்தக் கடத்தல் இடம்பெற்றது. அவுஸ்ரேலியப் பிரஜையான பிறேம்குமார் குணரட்ணம் கடத்தப்பட்ட விவகாரத்தை அவுஸ்ரேலிய அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொண்டது.
புலம்பெயர் தமிழர்கள் பலர் இலங்கை வந்த போது கடத்தப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.ஆனால் எந்த நாடும் இவ்வளவு தீவிரமாக நின்றதில்லை.அதுபோல கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்டவரை இவ்வளவு விரைவாக எந்த நாடும் விடுவித்ததும் இல்லை.அவுஸ்ரேலியா எத்தகைய அழுத்தத்தைக் கொடுத்ததோ தெரியவில்லை.மந்திரத்தில் மாங்காய் விழுந்தது போல எல்லாமே, சில நாட்களுக்குள் நடந்து முடிந்தது.இரவு 10 மணியளவில் குணரட்ணம் கடத்தல்காரர்களால் விடுவிக்கப்படுகிறார்.நேரே அவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு செல்கிறார்.அடுத்த அரை மணிநேரத்தில் அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் அவரைப் பொறுப்பேற்கின்றனர்.அடுத்து மூன்று மணிநேரத்துக்குள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.சரியாக அவர் பொலிசில் சரணடைந்து, 10 மணி நேரத்துக்குள்ளாகவே நாட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.அவரை வெளியேற்றவில்லை, நாடு கடத்தவில்லை என்கிறது அரசாங்கம்.
ஆனால் நாட்டில் வீசா அனுமதிக்கு மேலதிகமாக தங்கியிருந்த ஒருவர், விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல்- தண்டப்பணம் செலுத்தாமல் இவ்வளவு சுலமாக வெளியேற முடியாது. அதற்கு நாட்டின் குடிவரவுச் சட்டங்கள் இடம்கொடுக்காது. இதுமட்டுமல்ல குடிவரவுச்சட்டத்தை மீறிய குணரட்ணம் மீண்டும் இலங்கை வந்தால், 40 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸ. சட்டத்தை மீறிய ஒருவரிடம், அவர் நாட்டை விட்டு வெளியேற முன்னர் தான் தண்டப்பணத்தை அறவிட்டிருக்க வேண்டும். இன்னொரு முறை வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எந்த நாட்டு சட்டத்திலும் கூறப்பட்டிருக்காது. பொலிசில் சரணடைந்த குணரட்ணம், அவர் எப்படி கடத்தப்பட்டார் அல்லது காணாமற்போனார் என்பது பற்றி எந்த விசாரணைகளும் நடத்தப்படாமல், அவசரமாக அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஒருவரைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்தால், அவரைக் கண்டுபிடித்தவுடன் அந்த விசாரணைகள் நின்று போவதில்லை.
திமுது ஆட்டிக்கல திரும்பி வந்த பின்னர் அவரை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பலமுறை துருவி விட்டனர். அதேபோல குணரட்ணத்திடம் விசாரிக்காதது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது. குணரட்ணம் கடத்தல் குறித்து உருப்படியான விசாரணைகள் ஏதும் நடத்தப்பட்டதாகவே தெரியவில்லை. அவர் கடத்தப்பட்டதாக கூறப்படுவதையே உறுதி செய்யமுடியவில்லை என்கிறது அரசாங்கம்.
அப்படியானால் அவர் தானாகவே காணாமற்போயிருந்தாரா?
அவ்வாறு தான் அரசாங்கம் சொல்லி வருகிறது.
அப்படியே வைத்துக் கொண்டால், கூட அதனால் அவருக்கு என்ன இலாபம் கிடைத்து விடப்போகிறது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருந்த அவர், தன்னை இப்படி நாட்டை விட்டே வெளியேற்றும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்க மாட்டார். அதாவது பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் அளவுக்கு குணரட்ணமோ அவரது கட்சியினரோ புத்திசாதுரியமற்ற தந்திரோபாயத்தைக் கையாண்டிருப்பர் என்று நம்பமுடியாது. குணரட்ணம் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கலாம் என்ற சந்தேகம் அரசுக்கு இருந்தது. அதையடுத்து அவரை அரசாங்கம் தேடி வந்தது. இந்தக் கட்டத்தில், அவர் கட்சி ஒன்றை தொடங்குவதை அரசாங்கம் விரும்பவில்லை. அது இன்னொரு மாற்று சக்தியாக வளர்ந்து விடலாம் என்ற அச்சம் அரசுக்கு இருந்தது. அதேவேளை, அவரை மடக்குவதற்கு ஜேவிபியின் தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற காரணம் வசதியாகவே இருந்தது. இதனால் சந்தர்ப்பம் பார்த்து அவர் தூக்கப்பட்டார்.
ஜேவிபியின் வழிவந்த தலைவர்கள் சொந்தப் பாதுகாப்பின் மீது அக்கறை செலுத்துவதில்லை என்பதற்கு இது இரண்டாவது உதாரணம்.
ஜேவிபி தலைவர் றோகண விஜேவீர எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தான் உலப்பனையில், குடும்பத்தோடு தங்கியிருந்த போது அகப்பட்டார். அதுபோலவே குணரட்ணமும் தனியாக வசித்து வந்த போது தான் கடத்தப்பட்டார். இது அவர்களின் பலவீனத்தைக் காட்டியிருக்கிறது. விடுதலையான குணரட்ணம் நாட்டின் சட்டத்தை மீறியவர் என்றால் அவரை விசாரிக்காமல், அரசாங்கம் ஏன் நாடு கடத்தியது? நாடு கடத்தவில்லை அவராகவே திரும்பிச் சென்றார் என்றால், அதெல்லாம் ஒரு சில மணி நேரங்களில் சாத்தியமானது எப்படி?
என்னதான், அரசாங்கம் அவரது கடத்தல் பற்றி மௌனம் காத்தாலும், அதற்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பில் இருந்து விலக முடியாது. குணரட்ணம் விடுதலையாகி விட்டார். ஆனால் அவர் கடத்தப்பட்டதால் ஏற்பட்ட தலைவலியில் இருந்து அரசாங்கம் விடுபடப் போவதில்லை. ஏனென்றால், குணரட்ணம் விவகாரம் சர்வதேச அளவுக்குப் பரவி விட்டது. அதுவும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடந்த கடத்தல்.
கடந்த 5 மாதங்களில் 56 கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக பட்டியலை நீட்டுகிறது ஐதேக.
இந்தக் கடத்தல்கள் போருக்குப் பின்னர், நிலையான அமைதியை எதிர்பார்த்த நாட்டில் மீண்டும் அச்சமான சூழலைத் தான் வெளிப்படுத்தியுள்ளது. எதிர்காலம் குறித்த நம்பிக்கையீனத்தையே உருவாக்கியுள்ளது. சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருக்க நினைத்தாலும் அரசாங்கம் அதற்கு விட்டுக் கொடுக்காது போலுள்ளது. ஏனென்றால்இந்தக் கடத்தல் அரச படைகளால் நிகழ்த்தப்பட்டது என்றே குணரட்ணமும், திமுது ஆட்டிக்கலவும் கூறியுள்ளனர். தாம் கடத்தவில்லை என்ற மறுப்பின் மூலம் மட்டும் அரசாங்கம் உலகத்தை நம்ப வைத்து விட முடியாது. ஒரு கடத்தலே நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது கடத்தியவர்களையாவது கண்டுபிடிக்க வேண்டும். எதையுமே செய்யாமல் இவ்வாறான மறுப்பின் ஊடாக சர்வதேசத்தை திருப்தி கொள்ள வைக்க முடியாது. இதேபோன்ற ஆட்கடத்தல்கள் தான் வடக்கில் போரின் போதும் நடந்தன. அப்போது இந்தளவுக்கு மனிதஉரிமைகள் பற்றி குரல் கொடுப்பதற்கு யாரும் இல்லை. கடத்தப்பட்டதை வெளிப்படுத்தவே அச்சம். இதன் காரணமாக பலநூறு பேர் இன்னும் காணாமற் போனவர்களின் பட்டியலில் இருக்கிறார்கள்.
போர் முடிந்து விட்டது, நாட்டில் அமைதி திரும்பி விட்டது, மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று அரசாங்கம் கூறுகின்ற போதும், அவையெல்லாம் பொய் என்பதை இது போன்ற கடத்தல்கள் உறுதி செய்கின்றன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறியது போன்று அரசாங்கம் போரில் வென்றது, ஆனால் அமைதியை வெல்ல முடியவில்லை. அது தான் உண்மை.
போருக்குப் பின்னரும் ஆண்டுக்கு 20ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது. ஆனாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடத்தல்களைத் தடுக்க முடியவில்லை. கடத்தப்பட்டவர்களையும் மீட்க முடியவில்லை. கடத்துபவர்கள் யார் என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படியானதொரு பலவீனமான நிலையில் 20ஆயிரம் கோடி ரூபா பாதுகாப்புக்கு எதற்கு என்ற எதிர்கட்சியினரின் கேள்வியில் அர்த்தம் இல்லாமல் இல்லை.
தொல்காப்பியன்
0 கருத்துரைகள் :
Post a Comment